சிவன் – இந்த பிரபஞ்சத்தின் மூலம்

article ஆன்மீகம் & மறைஞானம்
உங்களுக்குள் நீங்கள் எவ்வளவு அழகாய் இருக்கிறீர்கள் என்பதுதான் உங்கள் வாழ்வின் தரத்தை நிர்ணயிக்கும். யாரும் இதைப் பார்க்க முடியாது, யாரும் இதனை அங்கீகரிக்க தேவையில்லை, யாரும் இதனை கவனிக்கத் தேவையில்லை. ஆனால், இதுதான் வெகுமதிப்புள்ள ஒரு அம்சம்.

தனிப்பட்ட மனிதர்களின் உணர்திறனைப் பொறுத்து, வாழ்வினை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக உணர்ந்து கொள்கிறார்கள். ஒருசிலருக்கு உணவு அலாதி சுகத்தை தருகிறது, வேறு சிலருக்கு அது உடல் சுகமாய் இருக்கிறது. மற்றும் சிலருக்கோ, கலை, ஓவியம் போன்ற வாழ்வின் பிற அம்சங்கள் சுகமளிக்கிறது. ஆனால், அவற்றின் இயல்பில், வெளியிலிருந்து கிடைக்கும் சுகங்கள் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கச் செய்ய முடியாது. அனைத்து உயிரிகளின் அடிப்படை என்னவோ அதுதான், நீண்டு, நிலைத்த சுகத்தை அளிக்கும்.

துரதிர்ஷ்டவசமாக, வெகு சிலரே வாழ்வின் இந்த அடிப்படை பரிமாணமான “சிவன்” ஐ அனுபவப்பூர்வமாக உணர்கிறார்கள். வாழ்வின் இந்த அடிப்படை பரிமாணத்தில்தான், இந்தப் படைப்பிலுள்ள அனைத்தும் சித்திரமாக தீட்டப்பட்டிருக்கிறது. வாழ்வெனும் விளையாட்டு சுகமாகத்தான் இருக்கும், அதன் கட்டுப்பாடுகளை நாம் அறிந்திருக்கும் வரை. முழு வாழ்க்கையையும் அதிலேயே நாம் கழித்துவிட்டால், ஒரு நாள் நாம் வருந்தும் நிலை ஏற்படும். தங்களுடைய இளைய காலத்திலேயே இந்த மாயைகள் உடைக்கப்படுபவர்கள், ஒரு சிலரே – அவர்கள் அதிர்ஷ்டவான்கள்! மற்றவர்கள், தங்களது மரணப் படுக்கையில் மட்டுமே, தன் வாழ்க்கையை வீணடித்து விட்டோம் என்பதனை உணர்ந்து கொள்வார்கள்.

காலம்தாழ்ந்து போவதற்குள் இதனை நீங்கள் பார்க்கவேண்டும் என நான் விரும்புகிறேன். நீங்கள் இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே உயிர் வாழப்போகிறீர்கள் என கற்பனை செய்து பாருங்கள். பிறந்ததிலிருந்து இதுவரை நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள், அது பயனுள்ளதாய் இருந்திருக்கிறதா? இதைப் பார்ப்பதற்கு உண்டான புத்திசாலித்தனம் இப்போது உங்களிடம் இருந்தால், உங்கள் வாழ்க்கையை அழகாய் செதுக்கிக் கொள்வீர்கள். வாழ்வின் வர்ணங்கள் மட்டுமல்ல, அந்த வர்ணங்களின் அடிப்படை என்ன என்பதையும் உணர்ந்து கொள்வீர்கள். இல்லாதுபோனால், மனிதகுலத்தில் 95 சதவிகிதத்தினர் தன் வாழ்நாள் முழுதும், மனம் நிறைய கிறுக்குத்தனமான எண்ணங்களுடனேயே வாழ்ந்து போய்விடுகின்றனர்.

பிறர் முன் உங்களை எப்படி நடத்திக் கொள்வது என்று கல்வி உங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. உள்நிலையில் உங்களை எப்படி நடத்திக் கொள்வது என ஆன்மீக செயல்முறை சொல்லிக் கொடுக்கிறது. உள்ளுக்குள் திரும்பி, வாழ்வின் ஆழமான பரிமாணங்களை அறியச் செய்கிறது. மனதினை வேண்டியபோது திறக்கவும், வேண்டாதபோது மூடவும் தெரிந்தால், அதனால் பயனுண்டு. கட்டுப்பாடு இல்லாமல் அது எப்போதும் ஓடிக்கொண்டே இருந்தால், பைத்தியக்காரத்தனம்தான். இந்த நிலையில்தான் பெரும்பான்மையான மனிதர்கள் இன்று இருக்கிறார்கள்.

“நான் இதுதான்” என்ற எண்ணத்தைக்கூட துடைத்தழிப்பதே ஆன்மீகம் – ஏன் உங்கள் பாலினத்தைகூட அது அழிக்க வல்லது. இங்கு வெறுமனே ஒரு உயிராய் வாழ்வதைப் பற்றியது அது. பரிணாம வளர்ச்சியின் உச்சத்தை தொட்ட மனிதர்கள்தான், தன்னை கழிசடை போன்ற நிலையில் வைத்திருக்கிறார்கள். அவர்களால் கையாள முடியாத ஒரு மனது, அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. எண்ணங்களும் உணர்வுகளும் கூடி, முடிவில்லா ஒரு நாடகமாய் அவர்களது வாழ்க்கை அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

உங்களுக்குள் நீங்கள் எவ்வளவு அழகாய் இருக்கிறீர்கள் என்பதுதான் உங்கள் வாழ்வின் தரத்தை நிர்ணயிக்கும். யாரும் இதைப் பார்க்க முடியாது, யாரும் இதனை அங்கீகரிக்க தேவையில்லை, யாரும் இதனை கவனிக்கத் தேவையில்லை. ஆனால், இதுதான் வெகுமதிப்புள்ள ஒரு அம்சம்.

இந்த அர்த்தத்தில், “சிவ ஷம்போ,” உச்சாடனை செய்வது உங்களுக்கு அற்புதங்கள் செய்யும். சிவன் வருவான் என எதிர்பார்க்க வேண்டாம். அவன் உங்கள் வாழ்க்கையில் தலையிட மாட்டான். இது மதம் சம்பந்தப்பட்ட செயல் அல்ல. ஒரு சப்தத்தை, உங்கள் மனக்குப்பைகளை களைய ஒரு கருவியாய் நாம் பயன்படுத்திக் கொள்கிறோம். நீங்கள், “சிவா” என உச்சரித்தால், புது சக்தியும், எல்லையற்ற அருளும் அறிவுத்திறனும் உங்களுக்கு கிடைக்கப்பெறும்.

Dont want to miss anything?

Get the monthly Newsletter with exclusive shiva articles, pictures, sharings, tips
and more in your inbox. Subscribe now!