logo
logo

சிவனின் இருப்பிடங்கள்

சிவன் வசித்த 4 முக்கிய இடங்களைப் பற்றியும், அவற்றின் மகத்துவம் பற்றியும் இந்தக் கட்டுரையில் சத்குரு விளக்குகிறார்...

சிவன் வசித்த 4 முக்கிய இடங்களைப் பற்றியும், அவற்றின் மகத்துவம் பற்றியும் இந்தக் கட்டுரையில் சத்குரு விளக்குகிறார்...



சத்குரு:


யோகக் கலாச்சாரத்தில் சிவனை ஒரு கடவுளாகப் பார்ப்பதில்லை. அவர் இந்த மண்ணில் வாழ்ந்த மிக உயர்ந்த மனிதர்; யோகக் கலாச்சாரத்தின் அஸ்திவாரம், யோகக் கலையை உருவாக்கிய மாபெரும் யோகி, ஆதி யோகி, அதாவது முதல் யோகி. அவரே ஆதிகுருவும் கூட. ஆதிகுரு சிவன் முதன்முதலில் யோக விஞ்ஞானத்தை தனது முதல் ஏழு சீடர்களுடன் பகிர்ந்து கொண்டது இந்த ஏரிக்கரையில் தான். இன்று சப்தரிஷிகள் என்று நாம் கொண்டாடும் அந்த ஏழு ஞானியருடன், உள்நிலை குறித்த தொழில்நுட்பத்தை, தெள்ளத் தெளிவாக, முறையாக சிவன் இங்கு தான் பகிர்ந்துகொண்டார்.

காந்த்தி சரோவர் - அருள் ஏரி



சிவனும் பார்வதியும் காந்த்திசரோவர் ஏரிக்கரையில் வாழ்ந்ததாகவும், அப்போது கேதாரில் வாழ்ந்துவந்த பல யோகியரை அவர்கள் அவ்வப்போது சந்திக்க வந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. 2013ம் ஆண்டு, இந்த ஏரிக்கரை உடைந்துதான், கேதாரில் வெள்ளம் ஏற்பட்டது. இன்று அதை காந்தி சரோவர் என்று அழைக்கிறார்கள், ஆனால் இது காந்த்தி சரோவர். ‘காந்த்தி’ என்றால் அருள், ‘சரோவர்’ என்றால் ஏரி. இது அருள் ஏரி.

"நீண்ட நடைபயணத்தின் முடிவில் கேதாரை அடைந்த நான், காந்த்தி சரோவர் பற்றிக் கேள்விப்பட்டேன். ஒரு மதியப் பொழுதில் அவ்விடத்திற்குச் செல்லத் தீர்மானித்தேன். மதியம் 2, 2.30 க்குப் புறப்பட்டு ஒரு மணி நேரத்தைவிட சிறிது அதிகமான நேரத்தில் காந்த்தி சரோவரை அடைந்தேன். அங்கு ஒரு ஏரி இருந்தது. சுற்றிலும் பனி படர்ந்த மலைகள். இயற்கை அழகில் தன்னிகரில்லா இடம். அந்த சலனமற்ற நீர்நிலை, தாவரங்கள் ஏதும் இல்லாத பனி படர்ந்த அந்த மலைகள் ஓவியமாய் அச்சலனமற்ற நீரில் பிரதிபலித்தது. மெய்சிலிர்க்க வைக்கும் இடம் அது.

நான் அங்கு அமர்ந்தேன். அங்கிருந்த அமைதி, நிசப்தம், தூய்மை என் விழிப்புணர்வை ஊடுருவியது. ஏறிவந்த களைப்பு, அமர்ந்திருந்த அந்த உயரம், யாருமற்ற அவ்விடத்தின் பேரழகில் நான் மூர்ச்சையானேன். அந்த நிசப்தத்தில் ஒரு பாறை மீது கண் திறந்து அமர்ந்து, சுற்றியிருந்த உருவங்களை எல்லாம் உள்வாங்கிக் கொண்டிருந்தேன். மெதுவாய் சுற்றி இருந்த ஒவ்வொன்றும் தன் உருவை இழக்க ஆரம்பித்தன. அங்கு 'நாதம்' - ஒலி மட்டுமே நிலவியது. அந்த மலைகள், இந்த ஏரி, சுற்றியிருந்த எல்லாமும், என் உடல் உட்பட வழக்கமாய் இருக்கும் உருவில் எனக்குத் தெரியவில்லை. எல்லாவுமே வெறும் ஒலியாக இருந்தது. எனக்குள் "நாதப் பிரம்மா விஷ்வ ஸ்வரூப்பா" என்ற பாடல் தோன்றியது.

நாத ப்ரம்மா விஷ்வ ஸ்வரூபா
நாத ஹி சகல ஜீவ ரூபா
நாத ஹி கர்ம நாத ஹி தர்ம
நாத ஹி பந்தன நாத ஹி முக்தி
நாத ஹி ஷங்கர நாத ஹி சக்தி
நாதம் நாதம் சர்வம் நாதம்
நாதம் நாதம் நாதம் நாதம்

என் வாழ்வில், ஸமஸ்க்ருத மொழியை நான் தவிர்த்தே வந்திருக்கிறேன். எனக்கு அம்மொழி பிடித்திருந்தாலும், அதன் ஆழத்தை நான் அறிந்திருந்தாலும், அதைக் கற்றுக் கொள்வதை தவிர்த்தே வந்திருக்கிறேன். காரணம், ஸமஸ்க்ருத மொழியை கற்றுக் கொண்டால், அடுத்த கணமே நமது சாஸ்திரங்களையும் படிக்க ஆரம்பித்துவிடுவோம். எதையுமே அது இருக்கும் படியே என்னால் கிரகிக்க முடிந்ததால், சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் கற்றுக் கொள்ள எனக்கு விருப்பமேற்படவில்லை. அதனால் ஸமஸ்க்ருத மொழியை தவிர்த்தேன்.

காந்த்தி சரோவரில் நான் அமர்ந்திருந்தபோது, என் வாய் மூடி இருந்தது, என் கண் திறந்தே இருந்தது, அப்போது "நாதப் பிரம்மா" என்னும் பாடல் மிக சப்தமாக என் குரலிலேயே கேட்க ஆரம்பித்தது. என் குரலிலேயே அப்பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது, அதுவும் ஸமஸ்க்ருத மொழியில். அந்த சப்தம் எனக்கு மிகத் தெளிவாக கேட்டது. அப்பாட்டை அம்மலைகளே பாடிக் கொண்டிருப்பதுபோல் அவ்வளவு சப்தமாகக் கேட்டது. என் அனுபவத்தில் எல்லாமே ஒலியாகிப் போயிற்று. அக்கணத்தில் தான் இப்பாடல் எனக்குக் கேட்க ஆரம்பித்தது. இப்பாடலை நான் அப்போது உருவாக்கிக் கொண்டிருக்கவில்லை, அதை நான் ஏற்கனவே எழுதி வைத்திருக்கவும் இல்லை. என் பங்கு ஏதும் இல்லாமல், அது தானாக எனக்குக் கேட்க ஆரம்பித்தது. அம்முழு பாடலும் ஸமஸ்க்ருதத்தில் வெளிவந்தது. இந்த அனுபவத்தில் நான் முழுவதுமாக மூழ்கிப் போனேன். சிறிது நேரம் கழித்து, மெல்ல மெல்ல, அனைத்துமே பழையபடி உருவம் கொள்ளத் துவங்கியது. என் விழிப்புணர்வின் அந்த இறக்கம் - நாத நிலையில் இருந்து ரூப நிலைக்கான அந்த இறக்கம், என் கண்களை குளமாக்கின.

இதுவோ அதுவோ, இப்படியோ அப்படியோ என்று யோசித்துக் கொண்டிருக்காமல், அப்பாடலில் முழுமையான ஈடுபாட்டுடன் இருந்தால், அது மிக சக்திவாய்ந்ததாக இருக்கும். இன்னும் சொல்லப் போனால், எவ்வகையிலும் உங்களை பிடித்து வைத்துக் கொள்ளாமல், அப்பாடலில் நீங்கள் முழுமையாக ஈடுபட்டால், உங்களை கரைத்தே விடும் அளவிற்கு அது சக்தி வாய்ந்தது.

கைலாயம்



இந்துக் கலாச்சாரத்தில், கைலாய மலையை சிவனது இருப்பிடம் என்று சொன்னார்கள். இன்றும் சிவன் அம்மலையில்தான் இருக்கிறார் என்றோ, தான் விரும்பும் நேரத்தில் நர்த்தனம் புரிந்து கொண்டிருக்கிறார் என்றோ, இதற்கு அர்த்தமல்ல. அங்கு பனிமூட்டத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்றும் கற்பனை செய்ய வேண்டாம். தன் சக்தி முழுவதையும் சிவன் கைலாய மலையில் சேர்த்துவிட்டதால், கைலாய மலையின் அதிர்வுகள் அவனை ஒத்ததாக இருக்கிறது என்பதுதான் இதன் பொருள்.

ஒரு மனிதன் ஞானமடைந்து, அவரது கிரகிக்கும் திறன் சாதாரணமானவர்களுக்கு இருப்பதை விட ஆழமாகும்போது, அவர் கிரகித்தது அனைத்தையும் எல்லா நேரங்களிலுமே சுற்றி இருப்பவர்களுக்கு அவரால் வழங்கிட முடியாது. மிகக் குறைந்த சிலவற்றை மட்டுமே அவரால் வழங்கிட முடியும். தன்னையே அவர் முழுமையாக வழங்கினாலும், அதையெல்லாம் கிரகித்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு திறமையான சிஷ்யர்கள் ஒரு ஆசானுக்கு அமைவது மிக மிக அரிது. பல ஆசான்கள் தாங்கள் அறிந்தவற்றை யாருக்கும் வழங்க முடியாமலே சென்றுவிட்டனர். என்னுடைய வாழ்க்கையிலும், இன்றுவரை நான் வழங்கி இருப்பதெல்லாம், நான் அறிந்தவற்றில் 2 சதவிதிகத்தைத்தான். நான் இறக்கும்முன், இதைவிட ஒரு சதவிகிதமேனும் அதிகமாக என்னால் வழங்கிட முடிந்தால், அதை ஒரு பெரிய சாதனையாகவே கருதுவேன்.

இந்த ஞானத்தை எல்லாம் எங்கு விட்டுச் செல்வது? இது யாருக்கும் பயன்படாமல் போவதில் நமக்கு உடன்பாடும் இல்லையே. அதனால் பல்லாயிரம் ஆண்டுகளாக, ஞானமடைந்த மனிதர்கள் கைலாய மலைக்கு பயணம் மேற்கொண்டு, கைலாய மலையிலேயே தங்கள் ஞானத்தை சக்தி உருவில் பதித்துவிட்டுச் சென்றனர். தங்கள் ஞானத்தை பதித்துவிட்டுச் செல்லும் முறையை அகஸ்தியர் வழங்கிச் சென்றதால்தான், தென்னிந்திய ஞானியர்கள் அகஸ்தியர் கைலாயத்தின் தென் முகப்பில் வாழ்கிறார் என்று சொல்லி வருகிறார்கள். புத்த மதத்தினரும், தங்கள் ஆசான்களில் முக்கியமான மூவர் கைலாயத்தில் வாழ்வதாகச் சொல்வார்கள்.

ஜைனர்களும் கூட தங்களின் 24 தீர்த்தங்கரர்களில் முதலாவதான ரிஷப், கைலாயத்தில் வாழ்வதாக சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, ஒரு தனி மனிதனால் கைலாயத்தை, அதன் முழுமையில் கிரகித்துக் கொள்ள முடியவே முடியாது. அங்கிருக்கும் ஞானம் மிக மிக அதிகம். அதிகமாக உள்வாங்கிக் கொள்ளலாம், ஆனால் எல்லாவற்றையும் உள்வாங்கிட முடியாது. கைலாயத்தை, அதன் முழுமையில் கிரகிப்பதற்கு ஒரே வழி, அதனுடன் கரைந்து போவதுதான்.

ஒரு ஆன்மீக சாதகருக்கு, கைலாயத்தை தொடுவது, இப்புவியின் மிக மிக அடிப்படையான மூலசக்தியையே தொடுவதுபோல். அத்தனைப் புனிதமானது, உயர்வானது அந்த அனுபவம். மறைஞானத்தை அறிந்திடும் ஆர்வம் உடையோர்க்கு, கைலாயமே அடைக்கலம். இதுபோல் வேறு இடம் கிடையாது.

8-12 ம் நூற்றாண்டின் சிவ சக்தி ஸ்தலங்கள்


நம் தேசத்தில், பழங்காலத்தில், பெரும்பாலான கோவில்கள் சிவனுக்காகவே கட்டப்பட்டன, வேறு யாருக்கும் இல்லை. கடந்த 1000 வருடங்களாகத்தான் வேறு கோவில்கள் வடிவம் பெற்றன. "ஷிவா" என்றால் எது இல்லையோ அது என்று பொருள். எனவே இந்தக் கோவில்கள் "எது இல்லையோ அதற்காகத்தான்" கட்டப்பட்டன. "எது இருக்கிறதோ" அது பொருள்தன்மையின் வெளிப்பாடு. "எது இல்லையோ" அது பொருள்தன்மைக்கு அப்பாற்பட்டது. ஒரு கோவில் என்பது "ஒன்றுமில்லாததற்குள் நீங்கள் நுழைவதற்கான ஒரு வாயில். இந்த தேசத்தில் ஆயிரக்கணக்கான சிவன் கோவில்கள் உள்ளன, அவற்றிற்கு எந்த ஒரு உருவமும் இல்லை. அதை வெளிப்படுத்துவதற்காக இருக்கும் ஒரே வடிவம்தான் லிங்க வடிவம்.

தென் கைலாயம்




தென் இந்தியாவில் நாம் வாழும் இடத்திற்கு மிக அருகில், மறைஞானத்திற்கு மற்றுமொரு உறைவிடம் உள்ளது, அது வெள்ளியங்கிரி மலை. இதை தென்கைலாயம் என்று வழங்குவர். இது ஒப்பற்ற இடம். கைலாயம் ஈடுஇணையில்லா பொக்கிஷம். ஆனால் தென்பகுதிகளில் வாழ்ந்த பல மறைஞானிகளும், யோகிகளும், வெள்ளியங்கிரியை தங்கள் ஞானத்தின் உறைவிடமாகப் பயன்படுத்தி, தங்கள் ஞானத்தை அதில் பதித்துச் சென்றிருக்கிறார்கள். ஞானப் பெட்டகம் என்று பார்த்தால், கைலாயத்திற்கு இணையே இல்லை. அங்கு பதியப்பட்டிருக்கும் ஞானத்திற்கு அளவில்லை. ஆனால் பதிவுகளின் தரம் என்று பார்த்தால் கைலாயத்திற்கு இணையாகவே இருக்கிறது வெள்ளியங்கிரி மலை.

வெள்ளியங்கிரி மலையை ஏழு மலைகளுடைய தொடர் என்றே குறிப்பிடுவர். வெள்ளியங்கிரி மலை ஒன்றுதான் என்றாலும், அதன் ஏற்றத் தாழ்வுகள் அது ஏழு மலைகளின் தொடர் என்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துகிறது. அந்தக் கடைசி சிகரத்தில், காற்றின் வேகம் மிகுதியாய் இருப்பதால், அங்கு புல் தவிர வேறெதுவும் வளர்வதில்லை. அவ்விடத்தில், மூன்று பெரும் பாறைகள், ஒன்றின் மீது ஒன்றாக சாய்ந்து, தங்குமிடம் போன்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இயற்கையாகவே, ஒரு கோவில்போல் அமைந்துவிட்ட அந்த இடத்தில் ஒரு சிறிய லிங்கம் இருக்கிறது. வார்த்தைகளால் விவரிக்க இயலாத, அதிதீவிர சக்திநிலவும் இடம் அது.

பல்லாயிரம் ஆண்டுகளாக, பலருக்கும் இவ்விடம் புனித இடமாக விளங்கி வருகிறது.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உண்மையை நாடி இங்கு வந்தவர்கள் எல்லாம், சிவன் இங்கு விட்டுச்சென்ற சக்தியை 'உண்மை அறிவதற்கான' ஒரு வழியாகப் பயன்படுத்தினர். இம்மலையினின்று இறங்கி வந்த யோகிகளும் சித்தர்களும் மிக மிக வித்தியாசமானவர்கள், மிக உக்கிரமான மனிதர்கள். இம்மலையில் வாழ்ந்து சென்ற அம்மனிதர்களைக் கண்டால் தேவர்களும் கூடப் பொறாமை கொள்வர். அப்படிப்பட்ட கருணையும் கண்ணியமும், மேன்மையும் கொண்ட உயர்ந்த மனிதர்கள் பலர் இம்மலையில் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த உயர்ந்த உயிர்கள், தாம் அறிந்தவற்றை எல்லாம் இம்மலையை உள்வாங்கிக் கொள்ளச் செய்தார்கள். அப்படி அவர்கள் விட்டுச் சென்றிருக்கும் ஞானம், காலத்திற்கும் அழியாது. அதுமட்டுமல்ல, எனது குருவும் தன் உடலை விட்டுச் செல்வதற்கான இடமாக இந்த மலையைத்தான் தேர்ந்தெடுத்தார். அவ்வகையில் இது வெறும் மலையல்ல. இது எனக்கு கோவில்.

காசி - ஒளியின் நகரம்



காசி நகரத்திற்கு உலகின் பல இடங்களில் இருந்து ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கௌதமர் தனது முழுமுதற் வகுப்பை வழங்க இவ்விடத்தையே தேர்ந்தெடுத்தார். கௌதமர் வந்தபிறகு, சீனர்களும் இந்நகரத்திற்கு வரத் துவங்கினர். கற்றுக் கொள்வதற்கு மிகச் சிறந்த இடமாக போற்றப்படும் நளந்தா பல்கலைக்கழகம், காசியில் இருந்து தளும்பிய ஒரு துளி ஞானம்தான். ஆர்யபட்டா போல் நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடிய மேதைகள் எல்லாம் இப்பகுதியிலிருந்து வந்தவர்கள்தான். இவர்கள் எல்லாம், உயிரோட்டம் நிறைந்திருந்த காசியின் கலாச்சாரத்தில் உருவானவர்கள்.

காசி என்ற கருவியை ஒரு நகரமாகவே கட்டினர். இது பிரபஞ்சத்தின் சிறு உருவமாக இருக்கும் நமக்கும், பரந்து விரிந்த இந்தப் பிரபஞ்சத்திற்கும் சங்கமிப்பு ஏற்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும் ஒரு கருவி. இந்தச் சின்னஞ்சிறு மனிதனும், இம்முழு பிரபஞ்சத்துடன் ஒன்றாகிக் கரைந்து போகும் அழகான மகத்தான வாய்ப்பு. அதன் இன்பம், பெருமிதம், பேரானந்தம், எல்லாமே அவனுக்குச் சாத்தியம். காசியின் வடிவமைப்பு, இப்பிரபஞ்சமும், அதன் சிறு அச்சான நாமும், ஒன்றோடு ஒன்று இணைவதற்கு மிகக் கச்சிதமான அமைப்பு. இதுபோல் பல கருவிகள் நாடெங்கும் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றாலும், காசி போன்ற ஒரு நகரத்தை உருவாக்குவது என்பது சாத்தியமில்லா பிரம்மாண்ட கனவு. அதையே அவர்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் செய்துவிட்டனர். காசியில் மட்டுமே 72,000 சக்திநிலைகள் உருவாக்கப்பட்டன. இது நம் உடலில் இருக்கும் நாடிகளின் கணக்கு. இவ்வாறு அந்நகரத்தை மேன்மேலும் உற்று நோக்கினால், அது மிக மிகப் பெரிய உயிரோட்டமுள்ள மனித உடலை, இப்பிரபஞ்சத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள உருவாக்கியது என்பது புரியும். இதனால் தான் நம் கலாச்சாரத்தில், "காசிக்குப் போனால், நம்மைச் சார்ந்த அத்தனையும் முடிந்தது" என்று வழங்க ஆரம்பித்தார்கள். அவ்விடத்திற்குள் ஒருமுறை நுழைந்து, இப்பிரபஞ்சத்துடன் தொடர்பு ஏற்பட்டுவிட்டால், வேறெங்கும் போவதற்கு எப்படி மனம் வரும்?

காசியின் வரலாறு, சிவனே இந்நகரத்தில் வாழ்ந்தார் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிலைநாட்டுகிறது. பனிக் காலங்களில், காசி, சிவனின் உறைவிடமாக இருந்தது. யாரோ சிலரை ஒருவர் மாற்றி ஒருவராக சிவன் காசிக்கு அனுப்பிக் கொண்டே இருந்தார் என்றும், சென்றவர்கள் அவ்விடம் அற்புதமாக இருந்ததால் திரும்பி வராமல் அங்கேயே இருந்துவிட்டனர் என்பதையும் விளக்கப் பல கதைகள் உண்டு. ஒருவேளை, இக்கதைகள் அவர்களை எல்லாம் சிவன், காசி நகரத்தை கட்டி முடிக்க அனுப்பினார் என்றும், கட்டி முடிக்க பல ஆண்டுகள் ஆனதால் அவர்கள் திரும்பவில்லை என்பதையும் கூடக் குறிக்கலாம். எது எப்படியோ, காசி நகரைக் கட்டி முடிந்தபின், சிவன் அங்கு வந்து, அந்நகரம் அவருக்கு மிகவும் பிடித்துப்போக, அங்கேயே தங்கவும் முடிவு செய்தார்.

கடந்த சில நூற்றாண்டுகளில், காசியை மூன்று முறை தரைமட்டமாக்கி இருக்கிறார்கள். அதனால், இன்றளவில் காசி எந்த அளவிற்கு உயிரோட்டத்துடன் இருக்கிறது என்பது கேள்விக்குறிதான் என்றாலும், காசி முழுமையாக அழிந்துவிடவில்லை. இன்றளவிலும் காசி நகரம் சக்தியோட்டமாய் இருக்கிறது. அதன் முழுப் பொலிவில் காசி இருந்தபோது நாம் வாழவில்லை என்பது நமது துரதிருஷ்டமே. மிக மிக அற்புதமான, சக்தியின் ஊற்றாய், பிரம்மாண்டமான ஒரு இடமாகத்தான் காசி நகரம் இருந்திருக்க வேண்டும். இதனாலேயே, உலகின் பல பகுதிகளில் வாழ்ந்த மக்களை தன்பால் ஈர்த்திழுத்துள்ளது காசி.



கடந்த காலத்தில் ஏற்பட்ட அத்தனை சூழ்நிலைகளையும் கடந்து நாம் வாழ்ந்துவிட்டோம், ஆனால் எதிர்காலத்தை தாங்குவோமா என்பது கேள்வி. 'நாம்' என்று சொல்லும்போது, நான் ஏதோ ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. இப்புவியில் 'உள்ளதை உள்ளவாறு' பார்க்கத் தயாராய் இருக்கும் மனிதர்களைப் பற்றிப் பேசுகிறேன். எதைப் பற்றிப் பேசினாலும் தன் அபிப்பிராயத்தை திணிக்கத் தவிக்காத மக்களைப் பற்றிப் பேசுகிறேன். இவ்வுலகிற்கு போதனைகளோ, தத்துவங்களோ, நம்பிக்கை முறைகளோ தேவையில்லை. 'நம்மால் முடியாது, அது உயர்ந்தவர்களுக்கு மட்டுமே' என்று ஒதுக்கி வைத்திருக்கும் சாத்தியங்களை, தம் ஐம்புலன்களையும் தாண்டி, மனிதர்கள் உள்வாங்க வேண்டும். இதுதான் இவ்வுலகிற்கு இன்று தேவை. தெரிந்து கொள்ளவேண்டும் என்ற வேட்கை இருப்பவருக்கு, இது ஒன்றுதான் வழி. இவ்வழியில் மட்டுமே மனித விழிப்புணர்வு வளர முடியும். இவ்வழியில் மட்டுமே, இன்று மனிதர்கள் பிளவுபட்டு சிற்சிறு குழுக்களாகப் பிரிந்திருக்கும் நிலையை மாற்ற முடியும்.

    Share

Related Tags

மறைஞானம்சிவ தத்துவம்

Get latest blogs on Shiva

Related Content

எல்லைகளை அழிப்பது