சத்குரு: யோகத்தில் முழு பிரபஞ்சமும் ஒலியின் சிக்கலான ஒருங்கிணைப்பு என்று நாம் சொல்கிறோம். அதில், வெவ்வேறு பரிமாணங்களைத் திறக்கும் திறன் கொண்ட சில ஒலிகளை நாம் அடையாளம் கண்டுள்ளோம். குறிப்பிட்ட நோக்கத்திற்காக சில ஒலிகள் பயன்படுத்தப்படுகின்றன - இந்த முக்கிய ஒலிகள் பொதுவாக மந்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பல்வேறு வகையான மந்திரங்கள் உள்ளன. வெற்றி கொள்ளவும் பொருள் வளம் சொந்தமாக்கவும் மந்திரங்கள் உள்ளன. மகிழ்ச்சியையும் அன்பையும் கொண்டுவர மந்திரங்கள் உள்ளன. அனுபவத்தின் மற்ற பரிமாணங்களைத் திறக்கவும் மந்திரங்கள் உள்ளன.
இது அழிக்கும் கடவுளான சிவனின் மந்திரம். அவர் உங்களை அழிப்பதில்லை, மாறாக வாழ்க்கையின் உயர்ந்த சாத்தியங்களுக்கும் உங்களுக்கும் இடையே தடையாக இருப்பவற்றை அழிக்கிறார்.
சரியான விழிப்புணர்வுடன் ஒரு மந்திரத்தை திரும்பத் திரும்ப உச்சாடனம் செய்வது உலகின் பெரும்பாலான ஆன்மீகப் பாதைகளில் அடிப்படை சாதனாவாக எப்போதும் இருந்து வந்துள்ளது. பெரும்பாலான மக்கள் மந்திரத்தைப் பயன்படுத்தாமல் தங்களுக்குள் சரியான சக்தி நிலைகளுக்கு உயர முடியாதவர்களாக இருக்கின்றனர். தொண்ணூறு சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு தங்களை உயிர்ப்பூட்ட எப்போதும் ஒரு மந்திரம் தேவைப்படுகிறது என்று நான் பார்க்கிறேன். அது இல்லாமல், அவர்களால் நிலைத்திருக்க முடியாது.
யோகக் கலாச்சாரத்தில் மஹாமந்திரமாக கருதப்படும் அடிப்படை மந்திரம் "ஆஉம் நம ஷிவாய".
"ஆஉம்" என்ற ஒலியை "ஓம்" என உச்சரிக்கக் கூடாது. இதை வாயைத் திறந்து உச்சாடனம் செய்ய வேண்டும். "ஆஆஆ" என்று தொடங்கி, மெதுவாக வாயை மூடும்போது அது "உஉஉ" ஆகிறது, பின்னர் "மாா" ஆகிறது. இது இயற்கையாக நிகழ்வது, செயற்கையாக செய்யப்படுவதல்ல. நீங்கள் வாயைத் திறந்து மூச்சை வெளியிட்டால், அது "ஆஆஆ" ஆகும். வாயை மூடும்போது, அது மெதுவாக "உஉஉ" ஆகிறது, முழுவதுமாக மூடும்போது "ம்ம்ம்" ஆகிறது. "ஆஆஆ", "உஉஉ", மற்றும் "ம்ம்ம்" ஆகியவை இருப்பின் அடிப்படை ஒலிகள். இந்த மூன்று ஒலிகளையும் சேர்த்து உச்சரித்தால், "ஆஉம்" கிடைக்கும். "ஆஉம்" என்பது மிக அடிப்படையான மந்திரம். அதனால், மஹாமந்திரத்தை "ஓம் நம ஷிவாய" என உச்சரிக்காமல் "ஆஉம் நம ஷிவாய" என்றே உச்சரிக்க வேண்டும்.
உங்கள் உணர்வுநிலை மேம்பட்டு, வாழ்க்கையின் உயர்ந்த பரிமாணத்திற்கு உங்களைத் தயார்ப்படுத்த, கர்மாவின் சிக்கல்களை அகற்றும் வகையில் இந்த மந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது அழிக்கும் கடவுளான சிவனின் மந்திரம். அவர் உங்களை அழிப்பதில்லை, மாறாக வாழ்க்கையின் உயர்ந்த சாத்தியங்களுக்கும் உங்களுக்கும் இடையே தடையாக இருப்பவற்றை அழிக்கிறார்.
"ந-ம ஷி-வா-ய" என்பவை பஞ்சாட்சரங்கள் அல்லது ஐந்து எழுத்துக்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த மந்திரம் வெறும் ஐந்து எழுத்துக்களின் அற்புதமான ஒழுங்கமைப்பு, இது அசாதாரணமான விஷயங்களை செய்கிறது. காலத்தின் வரலாற்றில், இருப்பதிலேயே அதிகமான எண்ணிக்கையிலான மக்கள் இந்த ஐந்து எழுத்துக்கள் மூலம் தங்களின் முழு ஆற்றலை உணர்ந்திருக்கலாம்.
பஞ்சாட்சரங்கள் மனித உடலில் உள்ள ஐந்து முக்கிய மையங்களுடன் தொடர்புடையவை மற்றும் அவற்றை செயல்படுத்தும் ஒரு வழி. நாம் இந்த மந்திரத்தை, நம்மை தூய்மைப்படுத்தும் செயல்முறையாகவும், அதேநேரத்தில் நாம் அடையக்கூடிய அனைத்து தியான நிலைகளுக்கும் அடிப்படையாகவும் பயன்படுத்தலாம். இல்லையெனில், பெரும்பாலான மக்களால் தங்களுக்குள் மந்திரங்களின் கணிசமான அதிர்வுகளை உருவாக்காமல் தங்களின் தியான நிலையை தக்கவைத்துக்கொள்ள முடிவதில்லை. உங்கள் மனநிலைகள் மற்றும் உடல் சக்திகள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கீழே செல்வதைத் தடுக்க தேவையான அடித்தளமான அதிர்வுகளை வழங்க, ஒரு மந்திரம் என்பது உங்கள் வாழ்க்கையில் கொண்டுவர வேண்டிய, மிக முக்கியமான ஒரு செயல்முறை.
இந்த பஞ்சாட்சரங்கள் இயற்கையின் ஐம்பூதங்களையும் குறிக்கின்றன. "ந" என்பது பூமி, "ம" என்பது நீர், "ஷி" என்பது நெருப்பு, "வா" என்பது காற்று, மற்றும் "ய" என்பது ஆகாயம். நீங்கள் பஞ்சாட்சரங்களின் மீது ஆளுமை அடைந்தால், உங்கள் விழிப்புணர்வில் பஞ்சபூதங்களால் ஆன அனைத்தையும் கரைக்கலாம்.
சிவனின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், அவர் பூதேஸ்வரன் - பஞ்சபூதங்களின் மீது முழு ஆளுமை கொண்டவர். இந்த முழு படைப்பும் இந்த பஞ்சபூதங்களின் விளையாட்டே. வெறும் ஐந்து கூறுகளைக் கொண்டு இத்தகைய பெரும் படைப்பு! இந்த பஞ்சபூதங்களின் மீது சிறிதளவாவது ஆளுமை பெற்றிருந்தால், வாழ்வு மற்றும் மரணத்தின் மீதும், உங்களைச் சுற்றியுள்ள அனைத்தின் மீதும் ஆளுமை பெறமுடியும், ஏனெனில் அனைத்தும் இந்த பஞ்சபூதங்களால் ஆனவையே. யோகாவின் மிக அடிப்படையான பயிற்சி பூதசுத்தி - அதாவது உங்கள் உடல் அமைப்பிலுள்ள பஞ்சபூதங்களையும் தூய்மைப்படுத்தி அவற்றிற்கு பொறுப்பேற்பது.
நீங்கள் பஞ்சபூதங்கள் மேல் ஆளுமை பெற்றால், உங்கள் உடல் மீது முழுமையான ஆளுமை பெறமுடியும், ஏனெனில் உங்கள் முழு உடல் அமைப்பும் இந்த ஐந்து கூறுகளின் விளையாட்டே. இந்த பஞ்சபூதங்களும் அவை எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை உங்களிடமிருந்து பெற்றதென்றால், ஆரோக்கியம், நல்வாழ்வு, வெற்றி மற்றும் வாழ்க்கையின் மீதான ஆளுமை ஆகியவை இயல்பான விளைவுகளாக இருக்கும்.