மண்பானை குயவனிடம் மனமிறங்கிய ஆதியோகி சிவன்!

article சிவனின் கதைகள்
பரவச அனுபவத்தில் ஆழ்ந்து போயிருந்தவர், தன் குழந்தை சேற்றுக்குள் இறங்குவதை கவனியாது, குழந்தையையும் சேர்த்து மிதிக்கலானார். குழந்தை மண்ணோடு மண்ணாய் கரைந்து போனது. ஆனால், அவரோ நேரமும் காலமும் அறியாமல், பரவச நிலையில் ஆழ்ந்து போயிருந்தார். மண்பானை குயவனிடம் மனமிறங்கிய ஆதியோகி சிவன்!

சத்குரு: பக்த கும்பாரா. கும்பாரா என்றால் மண்வேலை செய்யும் குயவன்.

பக்த கும்பாரா சிவன் மீது தீவிர பக்தியில் இருந்தார். அன்றும் தன் தினசரி வேலைகளை அவர் முழு ஈடுபாட்டுடன் செய்து கொண்டிருந்தார். தான் செய்யும் தொழிலை வயிற்றுப் பிழைப்பிற்காக செய்பவரில்லை அவர்; அவருடைய ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு சுவாசமும், ஒவ்வொரு இதயத்துடிப்பும், உடலின் ஒவ்வொரு அதிர்வும் சிவனின் நாமத்தையே உச்சரித்தன. அதனால், பக்தியில் சிவன் நாமம் சொல்லிக் கொண்டு, பாடல் பாடிக்கொண்டு, பானை செய்வதற்காக களிமண்ணை பிசைந்துக் கொண்டிருந்தார்.

சிவன் நாமம் சொல்லிக் கொண்டிருந்தவர் பேரானந்த பரவசத்தில் ஆழ்ந்து போனார். அங்கே விளையாடிக் கொண்டிருந்த அவரது குழந்தை, மெல்ல தவழ்ந்து, தந்தையை நோக்கி வந்தது. பரவச அனுபவத்தில் ஆழ்ந்து போயிருந்தவர், தன் குழந்தை சேற்றுக்குள் இறங்குவதை கவனியாது, குழந்தையையும் சேர்த்து மிதிக்கலானார். குழந்தை மண்ணோடு மண்ணாய் கரைந்து போனது. ஆனால், அவரோ நேரமும் காலமும் அறியாமல், பரவச நிலையில் ஆழ்ந்து போயிருந்தார். சிவனால் அவரது பக்தியை பொறுத்துக்கொள்ள இயலவில்லை. அவர் முன்தோன்றி, அவரது பக்தியை, அவரது பரவச நடனத்தை நிறுத்தினார். சிவனை பார்த்த பக்த கும்பாரா நெக்குறுகிப் போனார். சிவனின் பாதத்தில் விழுந்தார், பரவசத்தில் உருளத் துவங்கினார்.

“மண்ணை எடுத்து, அதில் ஒரு குழந்தை உருவத்தை உருவாக்கு” என்று சிவன் கும்பாராவிடம் சொன்னார். அங்கு என்ன நடந்தது என்பதை அறியாத கும்பாரா, அவர் சொன்னதைப் போலவே ஒரு பச்சிளங் குழந்தையை மண்ணில் பிடித்து வைத்தார். அந்த களிமண் பொம்மைக்கு சுவாசம் கொடுத்து, உயிரூட்டினார் சிவன். அதன்பின்னரே, கும்பாராவுக்கு நடந்தது என்ன என்று தெரிய வந்தது. அவரது பக்தியின் நிலை இப்படி, பக்தியின் உச்சம் தொட்டவர் அவர். பக்தியினால் நேரம் காலம் மறந்து, பரவச நிலையை அடைந்தவர்.

இந்தக் கலாச்சாரத்தில் இதுபோல் பல கதைகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும். யஷோதா, கிருஷ்ணர் வாயில் பிரபஞ்சத்தை கண்டது. சிவனின் உடல் இந்தப் பிரபஞ்சமாய் வர்ணிக்கப்படுவது போன்ற பல கதைகள் இந்தப் பாரம்பரியத்தில் உண்டு. யாரோ ஒருவர் யோகா செய்கிறார் என்று சொல்லும்போது, அவர் தலைகீழாய் நிற்கிறார், ஒற்றைக்காலில் நிற்கிறார் என நினைக்க வேண்டாம். அவர் இந்தப் பிரபஞ்சத்துடன் சங்கமமான நிலையில் இருக்கிறார் என்று அர்த்தம்.

யோகா என்றால் சங்கமம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஆன்மீக சாத்தியம் விதையாய் ஒளிந்து கிடக்கிறது. ஒருவர் முயற்சி செய்து மாற்றமடைய விரும்பினால், இந்தப் பேரண்டமே அவருக்காக திறக்கும்.

இதனை பல்வேறு வழிகளில் அடையலாம். அறிவுப் பாதை, உணர்ச்சி பாதை, சக்தி பாதை, சீரிய செயலின் மூலம் என பாதைகள் உள்ளன. தன்னை இழந்தநிலையில் ஒருவர் இருந்தால், “நான்” எனும் தன்மை உங்களிடம் சிறிதளவு கூட இல்லாத நிலையில், கர்மவினைகள் கரைந்துபோகும்.

Dont want to miss anything?

Get the monthly Newsletter with exclusive shiva articles, pictures, sharings, tips
and more in your inbox. Subscribe now!