logo
logo
தமிழ்
தமிழ்
காசி, Kashi

காசி - ஒளிரும் கோபுரமாக மிளிரும் சிவனின் மாநகர் (Kashi in Tamil)

உலகிலேயே மிகப் பழமையான நகரமான காசியின் ரகசியங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சத்குரு. அங்கே வாழ்வதைத் தேர்ந்தெடுத்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆன்மீக வாசலாக, ஒரு மாபெரும் யந்திரமாக திகழுமாறு காசி மாநகரம் முழுமையாக எவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பதையும் விளக்குகிறார்.

பொருளடக்கம்

காசி மாநகர் ஏன் உருவாக்கப்பட்டது?

சத்குரு:  "காசி" எனும் சொல், வெளிச்சமானது, அல்லது இன்னும் குறிப்பாக, ஒளியாலான தூண் என்று பொருள்படும். பிரபல ஆங்கில எழுத்தாளரான மார்க் ட்வைன், காசி மாநகரம் புராணங்களுக்கெல்லாம் பழமையானது என்று குறிப்பிடுகிறார். காசி மாநகரத்தின் வயதை ஒருவரும் ஒருபோதும் அளவிட முடியாது. ஏதென்ஸ் நகரம் பற்றிய எண்ணம் தோன்றுவதற்கு முன்பே காசி இருந்தது. மக்களின் மனங்களில் ரோம் நகரம் எண்ணமாக உருவெடுப்பதற்கு முன்பும் காசி இருந்தது. எகிப்து தோன்றுவதற்கு முன்பாகவும் காசி இருந்தது. அந்த அளவுக்கு பழமையானதாக இருந்தாலும், மக்கள் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு கருவியாக காசி நகரம் உருவாக்கப்பட்டது. இந்த பிண்டத்திற்கும் பேரண்டத்திற்கும் ஒன்றிணைதல் ஏற்படும் விதமாக - இந்த சின்னஞ்சிறிய மனிதன் பிரம்மாண்டமான பேரண்ட உண்மையுடன் இணையும்போது ஏற்படும் பேரானந்தத்தையும் அழகையும் அறிய உதவும் மாபெரும் சாத்தியத்தை தன்னகத்தே கொண்ட நகரமாக காசி உருவாக்கப்பட்டது.

எகிப்து தோன்றுவதற்கு முன்பே காசி இருந்தது. மக்களின் மனங்களில் ரோம் நகரம் எண்ணமாக உருப்பெறுவதற்கு முன்பும் காசி இருந்தது.

இந்த தேசத்தில் இதுபோன்ற பல கருவிகள் இருந்தது, ஆனால் இப்படி ஒரு நகரையே உருவாக்குவது என்பது கிட்டத்தட்ட பைத்தியக்காரத்தனமான குறிக்கோளாக இருந்தாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அதை அடைந்தும் காட்டிவிட்டார்கள். காசியில் 72,000 கோவில்கள் உருவாக்கப்பட்டது - மனித உடலில் உள்ள நாடிகளுக்கு இணையான அதே எண்ணிக்கையில். ஒட்டுமொத்தமாக பார்த்தால், பேரண்டத்துடன் தொடர்புகொள்ளும்படியான ஒரு "பிரம்மாண்டமான மனித உடலை" உருவாக்கியுள்ளதைப் போலவே காசி நகரின் வடிவமைப்பு அமைந்துள்ளது. இதனால் தான் காசிக்கு யாத்திரை சென்றவர்கள் திரும்பமாட்டார்கள் என்று ஒரு கலாச்சாரமே உருவானது. பிரபஞ்ச இயல்புடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு நீங்கள் இந்த இடத்தை விட்டு அகல விரும்பமாட்டீர்கள், ஏனென்றால் பேரண்ட இயல்புடன் ஏற்பட்டுள்ள தொடர்பை விட்டுவிட்டு நீங்கள் ஏன் வேறு எங்கோ சொல்வதை விரும்புவீர்கள்?

இன்று, அறிவியல்பூர்வமானது என்றால் புதிய ஐபோன் என்று நினைக்கிறோம். ஆனால் ஒரு மனிதனின் உச்சபட்ச நல்வாழ்வை நோக்கிய அறிவியல் என்று பார்த்தால், இதுதான் அந்த அறிவியல் என்பீர்கள். இதைவிட மிகச் சிறப்பாக நீங்கள் வேறு எதையும் செய்துவிட முடியாது. இது ஒரு மதமோ அல்லது நம்பிக்கை முறையோ அல்ல. தான் யார், தன் மூலம்‌ என்ன என்பதை அறிந்துகொள்வதில் மனிதனுக்கு உள்ள பேரார்வமே காசி மாநகரமாக வெளிப்பட்டிருக்கிறது. இந்த உலகில் நிகழ்ந்துள்ளதிலேயே பிரம்மாண்டமான முயற்சி என்றால் அது இதுதான். அதைப் பற்றி எந்த கேள்வியும் இல்லை.

காசி மாநகரின் விஞ்ஞானம்

சத்குரு: மனித வாழ்வின் மிக முக்கியமான அம்சமே, உங்கள் உடலுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளை அறிந்துகொள்வதுதான். நேற்று பிறந்த நீங்கள் நாளை புதைக்கப்படுவீர்கள். நீங்கள் வாழ்வதற்கு என்று இருப்பது இன்று மட்டுமே. இதுவே படைத்தலின் இயல்பு. மரணம் வருவதற்கு முன்பாக, இந்த உயிர் மலர வேண்டும். எனவே இந்த நோக்கத்தில் நாம் பயன்படுத்திக்கொள்ள சாத்தியமான எல்லா செயல்முறைகளையும் நம் தேசமெங்கும் ஏற்படுத்தினோம். இதுபோன்ற பல செயல்முறைகள் இருக்கிறது. துரதிருஷ்டவசமாக, அதில் பெரும்பாலானவை உடைக்கப்பட்டுவிட்டது. காசியும் பெருமளவுக்கு சீர்குலைக்கப்பட்டாலும், சக்திநிலையில் அதே உயிரோட்டத்துடன் இருக்கிறது. ஏனென்றால், இப்படிப்பட்ட இடங்களை பிரதிஷ்டை செய்யும்போது, தியானலிங்கம் உட்பட, பொருள்தன்மையிலான கட்டுமானங்கள் எல்லாமே ஒரு போர்வை போலதான் பயன்படுத்தப்படும். காசி நகரமானது, சிவனின் திரிசூலத்திற்கு மேல் அமைந்துள்ளது, நிலத்தின் மீது அல்ல என்று புராணங்கள் கூறுகிறது.

காசி நகரமானது, சிவனின் திரிசூலத்திற்கு மேல் அமைந்துள்ளது, நிலத்தின் மீது அல்ல என்று புராணங்கள் கூறுகிறது.

காசியின் உண்மையான அமைப்பானது தரைமட்டத்தில் இருந்து 33 அடிகளுக்கு மேலே இருப்பதாகவே எனது அனுபவத்தில் பார்க்கிறேன். நமக்கு உணர்வு என்பது சிறிதளவு இருந்தாலும் 33 அடி உயரத்திற்கு அதிகமாக எதையுமே நாம் கட்டமைத்திருக்கக் கூடாது. ஆனால் நாம் செய்திருக்கிறோம், ஏனென்றால் இந்த உலகில் உணர்வு என்பது அரிதான ஒன்றாக இருக்கிறது. வடிவியல் கணக்கீடுகளின் படி, சக்தி அமைப்பானது 7200 அடி வரையிலும் செல்லக்கூடும். எனவே தான் காசி மாநகரை ஒரு "வெளிச்சத் தூண்" "ஒளிரும் கோபுரம்" என்று அழைத்தார்கள். யாருக்கெல்லாம் இதை பார்க்கக்கூடிய கண்கள் இருந்ததோ, அவர்கள் இது மிக உயரமான ஒரு அமைப்பு என்பதை கண்டார்கள். அத்துடன் இது முடிந்துவிடவில்லை, பொருள்தன்மையைக் கடந்து எது இருக்கிறதோ, அதை உணர்வதற்கும் உங்களை அனுமதித்தது. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல மனிதர்களின் தன்னை அறிந்த அனுபவங்களின் சாரத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு மனிதன் தனக்குள் மட்டுமே உணரக்கூடிய சாத்தியத்தை ஏதோ ஒரு வகையில் அனைவரும் அடையும் நோக்கில் காசியைக் கட்டமைத்தார்கள். அனைத்தையும் நீங்களாகவே உணரவேண்டும் என்றால், முதன்முதலில் ஆதிமனிதன் சக்கரத்தைக் கண்டுபிடித்ததில் இருந்து துவங்கி அனைத்து தேவையற்ற வலிகளையும் வேதனைகளையும் கடந்து வரவேண்டும். ஆனால் பிறரது அனுபவங்களிலிருந்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றால் உங்களிடம் பணிவு இருக்க வேண்டும்.

மக்களை ஒரு பரிமாணத்தில் இருந்து இன்னொரு பரிணாமத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடுகளைச் செய்தார்கள். பல மனிதர்கள் காசிக்கு வந்து, அனைத்துவிதமான வழிமுறைகளையும் செயல்முறைகளையும் உருவாக்கி வைத்தார்கள். ஒரு சமயத்தில் 26,000-த்திற்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்தது - ஒவ்வொன்றுமே ஒரு மனிதன் தன் உச்சபட்ச சாத்தியத்தை அடைவதற்கான ஒரு தனி பாதையைக் கொண்டிருந்தது. இந்த 26,000 கோவில்களின் துணைக்கோவில்கள் உருவாக, ஆலயத்தின் பலவிதமான கோணங்கள் தங்களளவில் ஒரு சிறிய கோவிலாக அமைந்ததால் 72,000 கோவில்கள் என எண்ணிக்கை பெருக - காசி முழுமையாக ஜொலித்துக் கொண்டிருந்தது. இவை அனைத்தும் ஒரே இரவில் நடந்துவிடவில்லை. அனைத்திற்கும் அடிப்படையான மூலக்கட்டுமானம் எப்போது துவங்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முந்தையவராக கருதப்படும் சுனீரா இங்கே எதையோ தேடி வந்ததாக கூறுவார்கள். அப்போதே காசி செழிப்பான நகரமாக இருந்தது.

பழமை என்று பார்த்தால், காசி நகருக்கு என்ன வயது என்று யாருக்குமே துல்லியமாக தெரியாது. காசி எவ்வளவு அழகாக இருந்தது என்றால், சிவனே இங்கு வர விரும்பினார். அவர் வருவதற்கு முன்பாகவே காசி ஒரு பிரம்மாண்டமான நகரமாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன், நீண்ட காலமாக பூட்டப்பட்டிருக்கும் கோவிலின் கீழே மூன்று அடுக்குகள் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அப்படியென்றால் சில காலத்திற்கு முன் இந்த நகரம் மூழ்கியிருக்கிறது, மீண்டும் மீண்டும் அதன் மீதே புதிதாக நகரம் மறு-உருவாக்கம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. மூன்று முதல் ஐந்து அடுக்குகள் கொண்டதாக நகரின் அமைப்பு இருக்கிறது, ஏனென்றால் இந்த பூமி சில காலத்துக்குப் பிறகு தன்னைத்தானே மறுசுழற்சி செய்துகொள்கிறது.

காசி எப்படி சிவனின் நகரமானது

சத்குரு: காசியைப் பற்றிய பெருமைகளில் ஒன்றாக அடிப்படையில் சிவனே இங்கு வாழ்ந்தார் என்பார்கள். இது சிவனின் குளிர்கால நகரம். இமயமலையின் மேற்பகுதிகளில் சிவன் ஒரு துறவியாக வாழ்ந்து வந்தார், ஆனால் அவருக்கு ஒரு இளவரசியுடன் திருமணமானதும் சில சமரசங்கள் ஏற்பட வேண்டியிருந்தது. கருணைமிக்க ஒரு ஆணாக இருந்த காரணத்தினால், தான் சமவெளிப் பகுதிக்கு நகர்வதை தேர்வு செய்தார் சிவன், ஏனென்றால் அப்போதே காசி அற்புதமான கட்டமைப்புள்ள நகரமாக இருந்தது.

"நான் அரசனாக வேண்டுமென்றால், சிவன் இங்கிருந்து வெளியேற வேண்டும், ஏனென்றால் சிவன் இங்கேயே இருந்து, நான் அரசனாவது வேலை செய்யாது. மக்கள் எப்போதும் சிவன் பின்னால்தான் இருப்பார்கள்."

இது குறித்து ஒரு அழகான கதை இருக்கிறது. சில அரசியல் காரணங்களுக்காக சிவன் காசி நகரிலிருந்து வெளியேறினார். சரியான பராமரிப்பு இல்லாமல் காசி தன்னுடைய அதிர்வுகளை இழந்துவிடும் என்று தேவர்கள் அஞ்சியதால், திவோதாசனை காசி நகரின் அரசனாக கேட்டுக்கொண்டார்கள். ஆனால் அரச பதவியேற்பதற்கு முன் ஒரு நிபந்தனை விதித்தான் திவோதாசன். "நான் அரசனாக வேண்டுமென்றால், சிவன் இங்கிருந்து வெளியேற வேண்டும், ஏனென்றால் சிவன் இங்கேயே இருந்து, நான் அரசனாவது வேலை செய்யாது. மக்கள் எப்போதும் சிவன் பின்னால்தான் இருப்பார்கள்." எனவே சிவன் பார்வதியுடன் மந்தார மலைக்கு சென்றார், ஆனால் அவருக்கு அங்கேயே தங்குவதில் விருப்பமில்லை. அவர் மீண்டும் காசி நகருக்கு வர விரும்பியதால் முதலில் தூதுவர்களை அனுப்பினார். அவர்கள் வந்து பார்த்தார்கள், காசி மாநகரம் மிகவும் பிடித்துப்போகவே அப்படியே தங்கிவிட்டார்கள், திரும்பிச் செல்லவில்லை.

அடுத்ததாக சிவன் 64 அப்சரஸ் பெண்களை அனுப்பினார். அவர்களிடம், "எப்படியாவது அரசனை தவறு செய்யத் தூண்டுங்கள். நாம் அவனிடம் ஏதாவது குறை கண்டுபிடித்துவிட்டால், அவனை மூட்டை கட்டி அனுப்பி வைத்துவிட்டு நான் திரும்பி வந்துவிடுவேன்" என்றார். அவர்கள் வந்தார்கள், சமுதாயத்தில் பரலாக கலந்து கறை ஏற்படுத்த நினைத்தார்கள். ஆனால் அவர்களுக்கு காசி மாநகரம் மிகவும் பிடித்துப்போனதால் தாங்கள் எந்த நோக்கத்திற்காக வந்தோம் என்பதையே மறந்து அப்படியே தங்கிவிட்டார்கள்.

அடுத்ததாக சூரிய தேவரை அனுப்பினார். அவரும் வந்தார் - இங்குள்ள ஆதித்தன் கோவில்கள் அனைத்துமே அவருக்காகவே - அவைகள் அவருக்கு மிகவும் பிடித்துப்போனதால் அவரும் திரும்பிச் செல்லவில்லை. சிவனின் நோக்கத்தை நிறைவேற்ற முடியவில்லை என்பதால் மிகுந்த அவமானமும் அச்சமும் அடைந்தார் சூரிய தேவர். அவருக்கு சிவனின் இலக்கை நிறைவேற்றுவதில் இருந்த தீவிரத்தைவிட காசி மாநகர் மீதான காதல் பெரிதாக இருந்தது. எனவே அவர் வடக்கு முகமாக திரும்பி, ஒரு பக்கமாக சாய்ந்த நிலையில் இங்கே குடிகொண்டார்.

அடுத்து சிவன் பிரம்மனை அனுப்பினார். பிரம்மன் நேரே வந்து பார்த்தார், அவருக்கும் காசி மிகவும் பிடித்துப்போனது, அதனால் அவரும் திரும்பிச் செல்லவில்லை. இதையெல்லாம் பார்த்த சிவன், "இவர்கள் யாரையுமே நம்பமுடியாது" என்று முடிவு செய்து தனக்கு மிகவும் நம்பிக்கையான இரண்டு கணங்களை அனுப்பினார். இருவரும் வந்தார்கள் - அவர்களால் சிவனை மறக்க முடியவில்லை - ஆனால் அவர்களுக்கு இந்த இடம் மிகவும் பிடித்திருந்தது. எனவே, "சிவன் வாழவேண்டிய ஒரே இடம் இதுதான், மந்தார மலையில் அல்ல" என்று நினைத்தார்கள். பிறகு அவர்கள் இங்கேயே காசி மாநகரின் துவாரபாலகர்களாக ஆனார்கள்.

சிவன் இன்னும் இருவரை அனுப்பினார், கணேசனுடன் இன்னொருவரும் வந்தார். இருவரும் நகரத்தின் பொறுப்பை ஏற்றார்கள். நகரை தயார்செய்து, காவலாகவும் இருந்தவர்கள், "எப்படி இருந்தாலும் சிவன் இங்கே வரவேண்டி இருக்கிறது, எனவே திரும்பிச் செல்வதில் எந்த அர்த்தமும் இல்லை" என்று அவர்களும் காசியிலேயே தங்கினார்கள். பிறகு திவோதாசனுக்கு முக்தியடைய வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. எந்தவிதமான ஊழலுக்கும் உட்படாமல் கறை படியாதவனாக இருந்தாலும் திவோதாசன் முக்தியடைய வேண்டும் என்ற ஆவலில் முக்தியைத் தேர்ந்தெடுத்தார். பிறகு சிவன் காசி மாநகரம் திரும்பினார்.

இங்கே காசி மாநகரில் வாழ்வதற்கு மக்கள் எவ்வளவு ஏங்கினார்கள் என்பதை விளக்குவதற்காகவே இந்த கதைகள் எல்லாம் கூறப்பட்டன. மக்கள் இன்பத்திற்காக இங்கே இருக்க விரும்பவில்லை, இந்த நகரம் வழங்கும் சாத்தியத்திற்காகவே இங்கே வாழ ஏங்கினார்கள். வெறும் மக்கள் வாழும் இடமாக அல்லாமல் எல்லா கட்டுப்பாடுகளையும் கடந்து செல்வதற்கான ஒரு செயல்முறையாகவே காசி திகழ்ந்தது. இந்த சின்னஞ்சிறிய மனித உடல் பேரண்டத்துடன் தொடர்பு கொள்வதற்கான ஒரு சாத்தியமாகவே காசி மாநகரம் அமைந்தது.

காசி ஏன் வாரணாசி என்று அழைக்கப்படுகிறது?

சத்குரு: வாரணாசி, பனாரஸ் அல்லது காசி - இந்நகருக்கு பல பெயர்கள் இருக்கிறது. இந்த பூமியிலேயே மிகப் பழமையான நகரம் இதுதான். மனிதனின் ஞாபக சக்தி எவ்வளவு பின்னோக்கி சென்றாலும், அப்போதும் வருணா மற்றும் ஆசி நதிக்கரைகளில் அமையப்பெற்ற காசி மாநகரைப் பற்றி பேசுகிறார்கள்.

காசி விஸ்வநாதர் ஆலயம்

சத்குரு: ஒரு காலத்தில் இந்த தேசத்தில் வாழ்ந்த மக்களுக்கு, இந்த நகருக்கு வந்தாலே உங்களுக்கு முக்தி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது, ஏனென்றால் இந்த இடம் அவ்வளவு சக்திமிக்கதாக திகழ்ந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக நகரத்தின் இதயமாக விஸ்வநாதர் வீற்றிருந்தார். பல காலம் முன்பே கோவில் தகர்க்கப்பட்டுவிட்டாலும், ஆதியோகியே விஸ்வநாதரைப் பிரதிஷ்டை செய்ததாக கருதப்பட்டது. கடந்த சில நூற்றாண்டுகளில், அதிலும் குறிப்பாக கடந்த ஆறு அல்லது ஏழு நூற்றாண்டுகளில் மூன்று முறைக்கும் மேலாக காசி தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது. காசி நகரில் 26,000 கோவில்கள் இருந்தன, ஆனால் இப்போது 3000 மட்டுமே எஞ்சியிருக்கிறது. ஏனென்றால் படையெடுப்புகளின் போது ஒவ்வொன்றும் படிப்படியாக தரைமட்டம் ஆக்கப்பட்டன. காசி நகரின் மூலமாக விளங்கும் காசி விஸ்வநாதர் ஆலயம் ஒரு அற்புதமான இடமாக இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் உலகம் முழுவதும் வாழ்ந்த மக்களை இங்கே ஈர்த்திருக்கிறது. காசி மாநகரம், அதன் முழு பெருமையோடு திகழ்ந்தபோது நாம் வாழவில்லை என்பது ஒரு துரதிருஷ்டம் தான். மூன்று முறை இடிக்கப்பட்ட போதிலும், மூன்று முறையும் தங்களால் இயன்றவரையில் புனரமைத்திருக்கிறார்கள்.

பிறகு ஔரங்கசீப் வந்தபோது, இதை தரைமட்டமாக்கினால் இந்த மக்கள் மீண்டும் கட்டி எழுப்பிவிடுவதை பார்த்தான், ஏனென்றால் இது எங்கேயோ இருக்கும் தலைமையின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு இயங்கும் மதம் அல்ல; இங்கே வாழும் ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும், ஒவ்வொரு இல்லத்திலும் இது உயிரோட்டமாக வாழ்ந்து கொண்டிருந்தது. இதற்கென யாரும் எந்த ஒரு பிரச்சாரமும் செய்யவில்லை, மக்களாக இதனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். இது எந்த ஒரு நம்பிக்கையின் அடிப்படையிலும் செலுத்தப்படுவதாக இல்லாமல், பிரம்மாண்டமான பேரண்டத்துடன் ஏற்பட்ட ஆழமான அனுபவத் தொடர்பே மூலமாக இருக்கிறது. இதைக் கண்டதும் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் மையத்தில் ஒரு மசூதியை எழுப்ப ஔரங்கசீப் முடிவு செய்தான். கோவில் முழுவதையும் தரைமட்டம் ஆக்கிய பிறகு, இங்கு நடந்திருப்பதை உங்களால் சரிசெய்ய முடியாது எனும் விதத்தில் ஒரு எச்சரிக்கையாகவும், இந்த கலாச்சார மக்களுக்கு பாடம் புகட்டும் விதத்திலும் கோவிலின் ஒரு சிறு பகுதியை மட்டும் அப்படியே விட்டுவிட்டான். அங்கே தான் காசி விஸ்வநாதர் லிங்கம் இப்போது இருக்கிறது; இது கோவில் வளாகத்திற்கு வெளியே உள்ளது. முன்பு இந்த லிங்கம், காசி விஸ்வநாதர் ஆலயத்தின் கர்ப்பகிரகத்தில் இருந்தது. வடக்கு தெற்காக நீளும் இப்போதைய மசூதியின் மையப்பகுதிதான் கர்ப்பகிரகம் இருந்த இடம்.

லிங்கத்தை அகற்றி வெளியே வீசி எறிந்தபோது, அதை நீங்கள் மீண்டும் கண்டெடுக்க முடியாத ஒரு இடத்தில் வீச எண்ணினார்கள். லிங்கத்தை அப்படியே தூக்கி எறிந்தார்களா அல்லது உடைத்து தூக்கி எறிந்தார்களா என்பது நமக்கு தெரியாது. சிலர் இரண்டு துண்டுகளாக இருக்கிறது என்கிறார்கள். தங்கள் உணர்ச்சி பெருக்கினாலும் அன்பினாலும் மக்கள் இரண்டையும் ஒன்று சேர்க்க முயன்றார்கள். அதோடு, அங்கே ஞானவாபி எனும் கிணறு உள்ளது என்று ஒரு கதையும் உள்ளது. ஞானவாபி என்றால் அறிவு கிணறு. படையெடுப்பின் போது முற்றிலுமாக சிதைக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பதற்காக மக்கள் அந்த கிணற்றுக்குள் லிங்கத்தை பதுக்கி வைத்தார்கள் என்று கூறுவார்கள். ஓரளவு அமைதி திரும்பிய பிறகு லிங்கத்தை மீண்டும் வெளியே எடுத்து வடக்கு பகுதியில் ஒரு இடத்தில் நிலைநிறுத்தினார்கள். இது அதே லிங்கம்தானா என்பதுகூட எனக்கு தெரியாது. மக்களின் நம்பிக்கை தொடர வேண்டும் என்பதற்காக அதை மாற்றி இருக்கக்கூடும், இல்லையென்றால் காசி விஸ்வநாதரே போய்விட்டார் என்று மக்கள் மனநிலையில் உடைந்து போகக்கூடும். யாரோ ஒருவர் மாற்றியிருக்கலாம் அல்லது அவர்கள் உண்மையாகவே லிங்கத்தை பாதுகாத்திருக்கவும் கூடும். ஒருவேளை அவர்கள் உடைத்த பிறகு மக்கள் மீண்டும் லிங்கத்தை இணைத்திருக்கக் கூடும் அல்லது புதிதாக ஒன்றை உருவாக்கியிருக்கவும் கூடும், அது நமக்கு தெரியாது.

சப்தரிஷி ஆரத்தி

சத்குரு: நாம் காசிக்கு சென்றிருந்த போது மாலை வேளையில் விஸ்வநாதர் ஆலயத்தில் அவர்கள் செய்த ஒரு செயல்முறையை கண்டு பிரமித்துப்போனோம். ஆதியோகி சிவனின் முதல் சீடர்களான சப்தரிஷிகளைப் பற்றியது இந்த செயல்முறை. தங்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டதை உலகம் முழுவதும் சென்று பரிமாறுமாறு சிவன் கேட்டுக்கொண்ட போது அவர்கள் விடைபெறுவதற்கு முன், "நாங்கள் உங்களைப் பிரிந்து சென்ற பிறகு எப்படி உங்களை வழிபடுவது, எப்படி உங்களைத் தொடர்புகொள்வது?" என்று கேட்டார்கள். எனவே அவர்களுக்கு ஒரு செயல்முறையை வழங்கிய சிவன், "நீங்கள் எங்கே இருந்தாலும் இந்த செயல்முறையைச் செய்யுங்கள், நான் அங்கே உங்களுடன் இருப்பேன்" என்றார். அந்த செயல்முறை இன்றளவும் விஸ்வநாதர் ஆலயத்தில் அப்படியே தொடர்கிறது. சிவன் சப்தரிஷிகளுக்கு வழங்கிய அந்த செயல்முறைதான் சப்தரிஷி ஆரத்தி. இது ஒரு விரிவான செயல்முறை. இன்று இதை செய்யும் மக்களுக்கு இது எதுவும் தெரியவில்லை‌ என்றாலும், செயல்முறையை அப்படியே இன்றும் தொடர்கிறார்கள்.

இந்த அர்ச்சகர்களுக்கு தங்கள் சொந்த சக்திநிலைப் பற்றியோ அல்லது அவர்கள் இங்கு உருவாக்கும் சக்திநிலைப் பற்றியோ எதுவுமே தெரியாது. ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள செயல்முறையை அப்படியே பின்பற்றி மகத்தான ஒன்றை உருவாக்குகிறார்கள். உண்மையிலேயே இது அற்புதமான செயல்முறை தான்.

இது செல்போனை பயன்படுத்துவதைப் போன்றது - அது எப்படி வேலை செய்கிறது என்பது உண்மையிலேயே உங்களுக்குத் தெரியாது, ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது என்பதை மட்டும் நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள், அது உங்களுக்கு வேலையும் செய்கிறது. இதுபோலவே இந்த மக்களுக்கு இதன் தொழில்நுட்பம் பற்றி தெரியாவிட்டாலும், இதை எப்படி நிகழ்த்துவது என்பதை அறிந்திருக்கிறார்கள். இந்த செயல்முறை வழங்கப்பட்டபோது எப்படி இருந்ததோ, அதை அப்படியே பாதுகாத்து வந்திருக்கிறார்கள். மாலை வேளையில் சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த செயல்முறை நிகழ்கிறது. அடுக்கடுக்காக சக்தி அலையை அவர்கள் உருவாக்குகிறார்கள். நாம் அங்கே சென்று அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம், இந்த அர்ச்சகர்கள் இதை செய்கிறார்கள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. இவர்களால் இப்படி செய்யமுடியும் என்பதை நான் கற்பனைகூட செய்யமாட்டேன். இப்படிப்பட்ட சக்தி அலையை உருவாக்குவதற்கு என்ன தேவை என்பதை நாம் அறிவோம், ஆனால் இந்த முறையில் செய்ததில்லை. ஈஷாவில் இத்தகைய சூழலை ஏற்படுத்துவதற்காக நாம் பல செயல்களை செய்யவேண்டி இருக்கிறது, ஏனென்றால் நம்மிடம் அதுபோன்ற ஒரு செயல்முறை இல்லை. மக்களை அதுபோன்ற ஒரு நிலைக்கு உயர்த்திய பிறகு, இதை அனைவரும் அனுபவித்து உணரும் வகையில் சக்தி பிரவாகத்தை நாம் கட்டமைக்கிறோம். இந்த அர்ச்சகர்களுக்கு தங்கள் சொந்த சக்திநிலைப் பற்றியோ அல்லது அவர்கள் இங்கு உருவாக்கும் சக்திநிலைப் பற்றியோ எதுவுமே தெரியாது. ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள செயல்முறையை அப்படியே பின்பற்றி மகத்தான ஒன்றை உருவாக்குகிறார்கள். உண்மையிலேயே இது அற்புதமான செயல்முறை தான்.

கோவை ஈஷா யோக மையத்தில் ஆதியோகி முன்னிலையில் அமைந்துள்ள‌ யோகேஷ்வர லிங்கத்திற்கு சக்திவாய்ந்த சப்தரிஷி ஆரத்தியை நிகழ்த்த காசி விஸ்வநாதர் ஆலய அர்ச்சகர்களுக்கு சத்குரு அழைப்பு விடுத்தபோது என்ன நடந்தது என்பதை இங்கே காணுங்கள்.

விஸ்வநாத அஷ்டகம்

நமது செவிகளுக்கு விருந்தாக மலர்ந்திருக்கிறது சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவின் விஸ்வநாத அஷ்டக இசை அர்ப்பணம். 

சத்குருவுடன் காசி க்ரமா

ஈஷாவின் புனித யாத்திரையில் இணைந்து சத்குருவின் இருப்பில் காசி மாநகரை நடைபயணமாக உணரும் வாய்ப்பை வழங்குகிறது காசி க்ரமா. க்ரமா என்ற சொல் ஒவ்வொரு அடியாக என்று பொருள் தருகிறது. ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தரிசிப்பதுடன், காசி நகரில் சத்குருவுடன் ஒரு சிறப்பு சத்சங்கத்தில் பங்கேற்கும் வாய்ப்பையும் இந்த யாத்திரையில் பக்தர்கள் பெறுகிறார்கள். 

காசி க்ரமா பற்றி மேலும் தகவல் அறிய கிளிக் செய்யுங்கள்.

பிறப்பறுக்கும் காசி

சத்குரு: முக்தியடைய வேண்டும் என்ற பாதையில் இருக்கும்வரை, நீங்கள் முக்தி அடைவதற்காக என்ன செய்கிறீர்கள் என்பதும், எப்படி செய்கிறீர்கள் என்பதும் முக்கியமே இல்லை. உங்கள் அடிப்படையான நோக்கம் கரைந்துபோவதாக இருக்கும்வரை, அதை நீங்கள் எப்படி செய்தாலும் அது பொருட்டே இல்லை. காசியில் ஒரு குறிப்பிட்ட கோவில் இருக்கிறது. நீங்கள் முக்தியடைய வேண்டும் என்றால் அங்கே ஒரு மரம் அறுக்க பயன்படுத்தும் ரம்பம் வைத்திருக்கிறார்கள். அங்கே உள்ள மக்கள் இதை கர்வத் என்று அழைப்பார்கள். இன்றும் கூட அந்த லிங்கம் கர்வத் லிங்கம் என்றே அழைக்கப்படுகிறது. நீண்ட தூரங்களில் இருந்து மக்கள் பயணம் செய்து இங்கே கர்வத்தைத் தேடி வருவார்கள். அதாவது, அவர்கள் கோவிலில் உள்ள லிங்கத்தின் முன்பாக இரண்டு கூறுகளாக அறுக்கப்பட விரும்பினார்கள். இந்த லிங்கம் அந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. ரம்பத்தைப் பயன்படுத்தி அந்த மனிதரின் தலை உச்சியில் அறுக்கத் துவங்குவார்கள். ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட இடம் வரையில் மட்டுமே அறுத்து சகஸ்ராரத்தை திறந்தார்கள். இந்த உயிர் விடுதலை அடைவதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நன்றாக அறிந்திருந்தவர்கள் கவனமாக இதை செய்தார்கள். நீங்கள் யார் என்பதன் இரண்டு பரிணாமங்களைத் தெளிவாக இரண்டாகப் பிரித்து, உங்களுக்குள் இருந்து உங்களை விடுவிக்குமாறு இதை செய்தார்கள். இப்போது அதை முயற்சி செய்யாதீர்கள்! சில காலமாக இது தடை செய்யப்பட்டுள்ளது. முக்தியடைய மக்கள் எந்த எல்லைக்கும் செல்ல முயன்றிருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும், இந்த கலாச்சாரத்தில் முக்தி எவ்வளவு முக்கியமானதாக இருந்தது என்பதற்காகவே இதை இப்போது கூறுகிறோம் - இந்த பிறவியிலேயே நீங்கள் அடைந்துவிட வேண்டும்.

ரம்பத்தைப் பயன்படுத்தி அந்த மனிதரின் தலை உச்சியில் அறுக்கத் துவங்குவார்கள். ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட இடம் வரையில் மட்டுமே அறுத்து சகஸ்ராரத்தைத் திறந்தார்கள்.

பல சாதுக்களும் சன்னியாசிகளும் காசியின் ரம்பத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள், உதாரணத்திற்கு மீராபாய் மற்றும் சூர்தாஸ். மீராபாய் கிருஷ்ணரிடம் மிரட்டுகிறார், "நீ வரவில்லை என்றால் நான் காசி கர்வத்திடம் சென்றுவிடுவேன்" என்று மிரட்டுகிறார். "எனக்காக நீ தோன்றாவிட்டால், நான் சென்று என்னை நானே ரம்பத்தால் அறுத்துக்கொள்வேன்” என்று அச்சுறுத்துகிறார். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இதை தடை செய்தபிறகும் மக்கள் சென்று ரம்பத்தின் மீது விழுந்து கொண்டிருந்தார்கள். பிறகு அவர்கள் ரம்பத்தையும் அகற்றிவிட்டார்கள். இப்போது அந்த ரம்பம் ஏதோ ஒரு பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 

பஞ்சகுரோஷி யாத்திரை

புனிதமான காசி மண்டலத்தில் பக்தர்கள் பாத யாத்திரையாக வலம் வரும் முக்கியமான யாத்திரைகளில் பஞ்சகுரோஷி யாத்திரை மிகவும் குறிப்பிடத்தக்கது.

யாத்திரை செல்லும் பாதையில் அமைந்துள்ள 108 ஆலயங்களுக்கும் மக்கள் நடந்தே செல்கிறார்கள். வழியில் உள்ள ஐந்து பெரிய கிராமங்களில் இரவு நேரங்களில் ஓய்வெடுப்பதற்காக பக்தர்கள் தங்குகிறார்கள். சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு அரசர்களால் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சத்திரங்கள் இன்றும் செயல்பட்டு வருகிறது.

கடிகாரம் சுற்றும் திசையான வலஞ்சுழி பாதையில் ஒருவர் பஞ்சகுரோஷி யாத்திரை மேற்கொள்ளும் போது, அனைத்து ஆலயங்களும் சாலையின் வலது புறமாகவே, பஞ்சகுரோஷி வளையத்தின் எல்லையைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

கங்கை நதியில் மணிகர்ணிகா காட் என அழைக்கப்படும் பகுதியில் தீர்த்த நீராடுவதிலிருந்து யாத்திரை துவங்குகிறது. யாத்திரையின் முதலாவதாக வரும் குறிப்பிடத்தக்க கோவில் ஆதிகர்மதேஸ்வரர் ஆலயமாகும். இங்குள்ள லிங்கத்தை கர்மதேஸ்வர முனிவர் பிரதிஷ்டை செய்துள்ளார்.

காசியின் வரலாற்றைக் கூறும் காசி கந்த புராணத்தில், யக்ஷர்களும் கணங்களும் எப்போதுமே மரங்களின் மீதும் நீர்நிலைகளுக்கு அருகாமையிலும் வாழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த யாத்திரை பாதையில் அவர்களுக்கான ஆலயங்களும் அதேவிதமாக அமைந்துள்ளது.

யாத்திரையின் பாதையில் இரண்டாவதாக அமைந்துள்ளது பீமசண்டி ஆலயம். தேவியை வழிபட்டு வந்த ஒரு கந்தர்வன் இந்த துர்க்கை ஆலயத்தை நிறுவியதாக கூறப்படுகிறது. தன் அருளை வேண்டி வழிபடும் அனைவரையும் தனது குழந்தையாக பாதுகாத்து அவர்களுக்கு ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் அருளும் தன்மையுள்ளவள் தேவி என்கிறார்கள்.

மூன்றாவதாக தேகலி விநாயகர் ஆலயம். இது காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு நேர்கோட்டில், யாத்திரையின் பாதி தூரத்தை அடைந்துவிட்டதை குறிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. காசி நகருக்குள் நுழைவதற்கு முன்பாக ராமர் இங்கே தியானம் செய்ததாக கூறுவார்கள்.

நான்காவதாக இராமேஸ்வரம் ஆலயம் அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம் ஆலயத்தின் மறுபிரதியாக அமைந்துள்ளதாக கூறுகிறார்கள். வருணை நதியின் கரையில் அமைந்துள்ள இந்த ஆலயம் யாத்திரையின் வடகோடியைக் குறிக்கிறது.

காசி மண்டலத்தில் உள்ள அனைத்து லிங்கங்களுமே 42 வகைகளுக்குள் அடங்கும் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. கபிலதாரா ஆலயத்தில் 42 வகையான லிங்கங்களும் ஒரே உருவில் அமைந்துள்ளது. பாசபாணி விநாயகர் மற்றும் கபிலதாரா ஆலயங்கள் பஞ்சகுரோஷி யாத்திரையின் நிறைவு பகுதியாக அமைந்துள்ளது.

காலபைரவர்

சத்குரு: பயம் கடந்த நிலைக்கு உங்களை எடுத்துச் செல்பவரே பைரவர். காலபைரவர் என்றால் காலம் குறித்த பயம் - மரணம் பற்றிய பயமல்ல - ஏனென்றால் காலமே பயத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. உங்களுக்கு காலம் அளவற்றதாக இருந்தால் அது ஒரு பொருட்டாகவே இருக்காது, அப்படித்தானே? காலம் பற்றிய பயத்திலிருந்து நீங்கள் விடுபட்டீர்கள் என்றால் நீங்கள் பயத்திலிருந்தே முற்றிலுமாக விடுபட்டுவிட்டீர்கள்.

பல பிறவிகள் எடுத்து நீங்கள் அனுபவிக்க வேண்டிய அனைத்தும் நொடிக்கும் குறைவான நேரத்தில் உங்களால் தாங்கமுடியாத தீவிரத்துடன் நிகழும்.

சிவனின் கோர‌மான ரூபமே காலபைரவர். உங்கள் வாழ்க்கை முழுவதும் நீங்கள் எப்படிப்பட்ட ஒரு பிறவியாக வாழ்ந்திருந்தாலும், நீங்கள் காசி நகருக்கு வந்தால் முக்தி அடைவீர்கள் என்ற உத்திரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. எனவே எல்லாவிதமான உயிர்களும் காசிக்கு வரத் துவங்கினார்கள், ஏனென்றால் அவர்கள் மோசமாக வாழ்ந்திருந்தார்கள், ஆனால் அற்புதமாக இறக்க விரும்பினார்கள். எனவே இதற்கு ஏதாவது ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்ற சிவன், பைரவி யாதனா என்று அழைக்கப்படும் செயல்முறையை நிகழ்த்துவதற்காக காலபைரவர் ரூபத்தை எடுத்தார். அதாவது மரணம் நிகழும் வேளையில், இதுவரை நீங்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கும் அனைத்திற்கும் சேர்த்து, நீங்கள் எடுக்க வேண்டிய பல பிறவிகளும் ஒரே ஷணத்தில் பெரும் தீவிரத்தோடு உங்களுக்கு நிகழும். நீங்கள் அனுபவிக்க வேண்டிய எல்லாவிதமான ஆனந்தமும் வலியும் நிகழும். பல பிறவிகள் எடுத்து நீங்கள் அனுபவிக்க வேண்டிய அனைத்தும் நொடிக்கும் குறைவான நேரத்தில், ஆனால் உங்களால் தாங்கமுடியாத தீவிரத்துடன் நிகழும். யாதனா என்றால் உச்சபட்ச வேதனை. நரகத்தில் தான் அதுபோன்ற வேதனை நிகழும், ஆனால் சிவன் அதை இங்கேயே உங்களுக்கு நிகழ்த்திவிடுகிறார்.

இப்படி ஒரு செயலை நீங்கள் செய்ய வேண்டும் என்றால், அதற்கு பொருத்தமான வடிவம் தேவை. சிவன் இந்த செயலுக்குப் பொருந்தும் காலபைரவர் ரூபத்தில் பைரவி யாதனாவை உங்களுக்கு உருவாக்குகிறார். உங்களால் கற்பனை கூட செய்யமுடியாத அளவுக்கு அதீதமான வலியை அவர் உருவாக்குகிறார், ஆனால் அது ஒரு ஷணம் மட்டுமே, அதன் பிறகு இறந்தகாலத்தை சேர்ந்த எதுவுமே உங்களிடம் மிஞ்சாது.

காசியில் உள்ள காலபைரவர் ஆலயங்கள்

காசியின் எட்டு திசைகளிலும் எட்டு காலபைரவர் ஆலயங்கள் காசி மண்டலம் முழுவதையும் பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது. உன்மத்த பைரவர், குரோதன பைரவர், கபால பைரவர், அஷ்டாங்க பைரவர், சண்ட பைரவர், ருரு பைரவர், பிக்ஷான பைரவர் மற்றும் சம்ஹார பைரவர் எனும் திருப்பெயர்களுடன் எட்டு திசைகளிலும் எழுந்தருளி காசியின் காவலர்களாக அருள் பாலிக்கிறார்கள்.

காசி கந்த புராணத்தில், காசி ஷேத்திரம் சிவனின் திரிசூலத்தின் மீது அமைந்துள்ளதாக கூறப்படுகிறது - மூன்று முக்கியமான கோவில்கள் திரிசூலத்தின் மூன்று கூர்முனைகளாக அமைந்துள்ளது. காசி மண்டலத்தின் ஆதாரப் புள்ளிகளாக இந்த ஆலயங்கள் அமைந்துள்ளன. அவை, வடக்கில் ஓம்காரேஸ்வரர் ஆலயம், மையத்தில் விஸ்வேஷ்வரர் ஆலயம், தெற்கில் கேதாரேஷ்வரர் ஆலயம். ஒவ்வொரு ஆலயமும் தங்களது சொந்த கந்தத்தை அதாவது ஆளுமை வளையத்தை ஏற்படுத்துகின்றன.

காசியின் சடங்குகளின் முக்கியத்துவம்

சத்குரு: சடங்குகள் நிறைந்த நகரம் காசி. எல்லா சடங்குகளின் மையமாக காசி இருந்தது. உள்நிலையில் செய்யப்படுவதற்கு இணையாக வேறு எதுவுமே நெருப்பு போல பற்றிக்கொள்ளாது - எது செய்வதாக இருந்தாலும் அதுதான் சிறந்த வழி. ஏதோ ஒரு ஆன்மீக செயல்முறைக்கு நீங்கள் தீட்சை பெற்றுவிட்டால், நீங்கள் அதைத்தான் சார்ந்திருக்க வேண்டும். ஆனால் இந்த சடங்குகள் எல்லாம் பொதுமக்களுக்கானது. தங்களுக்கு தாங்களே என்ன செய்துகொள்ள வேண்டும் என்பதை அறியாதவர்கள் அவர்கள், ஆனால் தங்களுக்கு ஏதோ ஒன்று செய்யப்பட வேண்டும் என்பதை மட்டும் அவர்கள் போதுமான அளவு புரிந்திருக்கிறார்கள். இந்த நிலையில் இருப்பவர்களுக்கு காசி போன்ற ஒரு கருவியும், அதனுடன் இணைந்துள்ள பலவகை சடங்குகளும் ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கிறது. ஏனென்றால் பெருந்திரளான மக்களுக்கு ஒரே நேரத்தில் பயனளிக்கும் வகையில் இவை அமைந்துள்ளது.

கங்கா ஆரத்தி

சத்குரு: நீங்கள் உயிர்வாழ்வதற்கு தண்ணீர் அத்தியாவசியமான ஒரு மூலப்பொருள். உங்கள் உடலில் தண்ணீர் மட்டுமே 70% இருக்கிறது. ஒரு நாள் உங்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் அப்போது தண்ணீர் இயற்கையாகவே கடவுளாக தெரியும் தானே? எனவே நதியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை நாம் உயிர் பிழைத்திருப்பதற்கான ஆதாரமாக பார்க்கிறோம்.

ஒவ்வொரு நாளும் அந்தி சாயும் வேளையில் கங்கை நதிக்கரையில் நிகழும் கங்கா ஆரத்தி காசியின் பெருமைமிகு பாரம்பரியங்களில் ஒன்றாக திகழ்கிறது. கங்கை நதி பிரவாகமாக பொங்கி பாய்ந்தோடும் ஒரு அழகான சூழ்நிலையை ரசித்துக்கொண்டே, நீங்கள் அனுமதித்தால் ஒரு சக்திவாய்ந்த செயல்முறையாகவும் இது இருக்கும். யோகாவில் மிக அடிப்படையான ஒரு செயல்முறையை நாம் பூதசுத்தி என்கிறோம். பஞ்ச பூதங்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட சுதந்திரத்தைப் பெறும்வகையில் செய்யப்படும் செயல்முறை இது, ஏனென்றால் படைத்தல் என்பது இந்த பஞ்ச பூதங்களின் விளையாட்டு தான். நிலம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் ஆகாயம் என ஒவ்வொரு அம்சத்திற்கும் பூதசுத்தியில் மிகுந்த சாதனா உள்ளது. பஞ்சபூதங்கள் நம்மில் நல்லபடியாக செயல்பட வேண்டும் என்பதற்காக நாம் அவற்றை வணங்குவது மட்டுமல்லாது அவை நல்லபடியாக செயல்படுவதற்கு தேவையான தொழில்நுட்பத்தையும் நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த பஞ்சபூதங்கள் ஐந்தும் இணைந்து நல்லமுறையில் செயல்படும்போதுதான் சரியான ஒரு உடலும், சரியான ஒரு வாழ்க்கையும் உங்களுக்கு நிகழும்.

காசி பற்றி சத்குருவின் கவிதைகள்

#1. காசி

உயரத்தை அளவிடமுடியாத ஒளியின் தூண்
விண்ணைத் தொட்ட இந்த அருளின் நகரம்
அனைத்துவித மக்களையும் ஈர்த்தது.
கைவினையும் வர்த்தகமும் செய்வோர்,
அறிஞர்கள், புரோகிதர்கள், வியாபாரிகள், துறவிகள்,
கட்டுமானம் செய்வோர், படகு விடுவோர்,
அனைத்துவித தேடுதலிலும் இருப்பவர்கள்
நித்தியத்தின் நெஞ்சுப்பால் பருகிட இங்கே கூடினர்.
இப்புனிதத் தலத்தை ஆரத்தழுவிட
அன்னை கங்கையும் கூட விசித்திரமாக வளைகிறாள்.
மஹாதேவன் ஷம்போ, அவனையும் கூட
தன் அழகினால் வசீகரித்துவிட்டது.

மனித நினைவுகளின் நெளிவு சுழிவுகளில்
தொலைந்துபோன மாபெரும் காசி
படையெடுத்து வந்தவர்களாலும், புனிதமான கரங்களின்றி
கொடிய பேராசையோடு அக்கறையின்றி சேவிப்பவர்களாலும்
இப்போது அருளின்றி நிற்கிறது.

அருள் நிறைந்த காசி நகரம் மீண்டும் எழுச்சியுறட்டும்
அதன் புனிதமான ஒளியால்
அனைவரையும் தொடட்டும்

#2. காசி

கல்லாலும் உலோகங்களாலும் ஆன மாடங்களும்
இன்பத்திற்கும் செயல் நோக்கத்திற்குமான
அரண்மனைகள் மற்றும் பாராளுமன்றங்கள்.
இங்கிருப்பதையும் இதைக்கடந்ததையும் உணர்ந்திடப்
பள்ளிகள் மற்றும் கோவில்கள், இவையும் மற்றும் பலவும்
மனிதர்கள் கட்டும் ஒரு நகரத்தை உருவாக்குகின்றன.
ஆனால் ஒளியின் ஒரு தூணைக் கொண்ட ஒரு நகரம்
அதில் அணையாமல் எரியும் மயானப் படித்துறைகள்
கரைந்துபோகும் ஒரே நோக்கத்தில் கட்டப்பட்டன.
இங்கு மரணம் வாழ்வைவிடப் புனிதமானது.
மரணத்துக்கும் முக்திக்கும் கட்டமைக்கப்பட்ட நகரம்
நாளை என்பது இல்லை என்ற அறிவுடன்
இங்கு வாழ்க்கை நகர்கிறது.
இந்த ஒளியின் தூண்
இங்கிருக்கும் அனைத்துக்கும் ஒளியூட்டுவதோடு,
இல்லாததற்கும் ஒளியூட்டுகிறது
எது இல்லையோ அது - ஷிவா

மணிகர்ணிகா காட் கதை

சத்குரு: மணிகர்ணிகா காட் எப்படி உருவானது என்பதன் பின்னால் சில கதைகள் இருக்கிறது. சிவனின் சொற்படி பார்வதி தேவி தனது காதணியை இந்த இடத்தில் வீசியதாக கூறுவார்கள். இயற்கையாகவே உதவும் குணமுள்ளவரான விஷ்ணு அதை எடுக்க முனைந்தார். ஆனால் அது பூமிக்குள் சென்றது. எனவே தனது சக்ராயுதத்தைப் பயன்படுத்தி அந்த இடத்தைத் தோண்டினார். தோண்டினார், தோண்டினார், தோண்டிக்கொண்டே இருந்தார். பெருக்கெடுத்த வியர்வையில் அவர் தோண்டிய இடமே நிரம்பிவிட்டபோதும் எவ்வளவு முயற்சி செய்தும் அவரால் பார்வதியின் காதணியைக் கண்டெடுக்க முடியவில்லை. அவர் தோண்டத்தோண்ட அது இன்னும் ஆழமாக சென்றுகொண்டே இருந்தது. சிவன் விஷ்ணுவிடம், "மொத்த நகரமும் என்னுடையதாக இருந்தாலும் இந்த இடம் உங்கள் வியர்வையால் நிரம்பியிருப்பதால் இது உங்கள் இடமாகவே இருக்கட்டும்" என்றார். எனவே அந்த இடம் மணிகர்ணிகா ஆனது.

மணிகர்ணிகா காட் மயானம்

கேள்வி: மணிகர்ணிகா காட்-ல் எரியூட்டப்பட்டால், உங்களுக்கு ஞானம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது, இது உண்மையா?

சத்குரு: விளம்பரத்தை உண்மை என தவறாக புரிந்துகொள்ளாதீர்கள்! இது எல்லாமே விளம்பரம் இல்லை என்றாலும், எப்போது ஒரு பொருள் இருக்கிறதோ, அதற்கென ஒரு விளம்பரமும் இருக்கிறது. ஒரு சில நேரங்களில் பொருளைவிட விளம்பரமே சமுதாயத்தில் மிகப் பிரபலமாகிவிடுகிறது. இது உலகெங்கும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

காசியில் வாழ்வது என்றால் நீங்கள் உங்கள் குடும்ப நோக்கத்திற்காகவோ, ஏதோ ஒரு இன்பத்திற்காகவோ அல்லது அதே உணர்ச்சிமயமான வாழ்க்கையையோ வாழவில்லை. உங்கள் உள்நிலை சார்ந்த நல்வாழ்வை நோக்கி நீங்கள் வாழ்கிறீர்கள்.

நீங்கள் தயாராவதையும் இலக்கையும் குழப்பிக் கொள்கிறீர்கள். நீங்கள் மணிகர்ணிகாவில் எரியூட்டப்பட வேண்டும் என்று நாம் கூறும்போது, உங்கள் வாழ்வின் இறுதிப்பகுதி காசியில் கழியவேண்டும் என்கிறோம். அதுதான் தயாராவது. காசியில் வாழ்வது என்றால் நீங்கள் உங்கள் குடும்ப நோக்கத்திற்காகவோ, ஏதோ ஒரு இன்பத்திற்காகவோ அல்லது அதே உணர்ச்சிமயமான வாழ்க்கையையோ வாழவில்லை. உங்கள் உள்நிலை சார்ந்த நல்வாழ்வை நோக்கி நீங்கள் வாழ்கிறீர்கள். சக்திரீதியாக உங்களுக்கு உதவி செய்யக்கூடிய காசி மாநகரைப் பற்றி நாம் பேசுகிறோம். அதுமட்டுமல்லாது, அசாத்தியமான வல்லமை கொண்ட பல மனிதர்களும் காசி மாநகரில் இருந்தார்கள், மிகச் சிறந்த முறையில் நீங்கள் இங்கிருந்து விடைபெறுவதற்கு யார் உங்களுக்கு உதவி செய்வார்கள் என்பதை நீங்கள் அறியவும் புரிந்துகொள்ளவும் வேண்டும்.

கேள்வி: மணிகர்ணிகா காட்-ல் எரியூட்டல் நிகழாத அன்று உலகம் அழிந்துவிடும் என்று கூறப்படுகிறதே, இது உண்மையா?

சத்குரு: யாருமே இறக்கவில்லை என்றால் உலகம் முடிவுக்கு வந்துவிடுமே, அப்படித்தானே? ஒவ்வொரு நாளும் யாராவது ஒருவர் இறக்க வேண்டியிருக்கிறது - செயல்முறையின் ஒரு பகுதி அது. கௌதம புத்தர் இதை இப்படி புரியவைத்தார் - ஒரு பெண்மணி புத்தரிடம் வந்து, "தயவுசெய்து இறந்துவிட்ட என் மகனைக் காப்பாற்றுங்கள்" என வேண்டினார். அதற்கு புத்தர், "இதுவரை எந்த ஒரு வீடு இறப்பையே சந்திக்கவில்லையோ, அந்த வீட்டிலிருந்து சிறிதளவு கடுகு வாங்கி வா" என்று பணித்தார். மகனை இழந்த சோகத்தில் நகர் முழுவதும் அலைந்த பெண்மணி, ஒவ்வொரு வீட்டிலும் யாரோ ஒருவர் இறந்திருப்பதை உணர்ந்தார். இந்த உலகில் வாழும் யாரும் இறக்காத ஒரு காலம் வருமேயானால், அது நிச்சயமாக உலகம் முடிவுக்கு வருவதைக் குறிக்கிறது. மக்கள் இறக்க வேண்டும், ஏனென்றால் மக்கள் பிறந்திருக்கிறார்கள்.

காசியின் அகோரிகள்

கேள்வி: இறந்த உடலை வைத்து விசித்திரமான செயல்களை அல்லது பல்வேறு பொருட்களை வைத்து பரிசோதனைகளை செய்யும் அகோரிகள் காசியில் இருக்கிறார்கள். மக்கள் அவர்களை வெறுக்கிறார்கள்...

சத்குரு: மக்கள் அநேகமாக விஞ்ஞான பரிசோதனை கூடங்களுக்கும், உயிரியல் பரிசோதனை கூடங்களுக்கும் சென்று பார்ப்பதே இல்லை. அங்கே பல்வேறு உயிரினங்களையும் வினோதமான விசித்திரமான பரிசோதனைகளுக்கு உட்படுத்துகிறார்கள். அவை அனைத்துமே நல்வாழ்வு என்ற நோக்கத்தோடுதான் செய்யப்படுகிறது. எப்போதாவது ஒருமுறை பயனுள்ள ஏதாவது ஒன்று அதிலிருந்து கிடைக்கிறது, ஆனால் மற்ற நேரங்களில் நாம் பரிசோதனைக் கூடங்களில் மேற்கொள்வது அனைத்துமே விசித்திரமானதுதான். நீங்கள் பள்ளியில் உயிரியல் படிக்கும்போது கூட, ஒரு தவளையைப் பிடித்து அதை அறுத்து அது இது என்று பார்க்கிறீர்கள். மிகவும் விசித்திரமானதுதானே இது? ஆனால் நாம் அனைவரும் அதை செய்திருக்கிறோமே. அப்படி மட்டும் தான் கற்றுக்கொள்ள முடியுமா?

உடல் எரியத் துவங்கியதுமே பிராண சக்தி உடனடியாக உடலிலிருந்து வெளியேறியாக வேண்டும். அப்படி வெளிப்படும் உயிர்சக்தியைப் பயன்படுத்த விரும்பும் அகோரிகள் தங்களுக்கு சில செயல்களைச் செய்துகொள்கிறார்கள்.

உடலில் இருந்து உயிர் பிரிந்த பிறகும், இறந்த உடலில் பிராண சக்தி இருக்கிறது. இறந்த உடல்கள் எரியூட்டப்படும் மணிகர்ணிகா அல்லது அரிச்சந்திரன் காட் சென்றால், அங்கே அகோரிகள் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். அங்கே வரும் அனைவரிடமும், "இந்த மனிதருக்கு வயது என்ன? இவர் எப்படி இறந்தார்?" என்று விசாரித்துக் கொண்டிருப்பார்கள். இதை வெளிப்படுத்த விரும்பாத மக்கள் பிளாஸ்டிக் உறைகளால் யாராலும் பார்க்க முடியாதபடி உடலை மூடுகிறார்கள். யார் அவர்களிடம், "இந்த மனிதருக்கு எத்தனை வயது?" என்று கேட்டாலும் அவர்கள் பதில் கூறமாட்டார்கள். ஆனால் அகோரிகள் அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். அவர்களுக்கு இளம் வயதோடு, உயிரோட்டமாக இருந்த, ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் இறந்துவிட்டவர் தேவை. உடல் எரிய துவங்கியதுமே பிராண சக்தி உடனடியாக உடலிலிருந்து வெளியேறியாக வேண்டும். அப்படி வெளியேறும் உயிர்சக்தியைப் பயன்படுத்த விரும்பும் அகோரிகள் தங்களுக்கு சில செயல்களை செய்துகொள்கிறார்கள். இப்போது மக்கள் இறந்த உடல்களை அகோரிகளிடம் தரமாட்டார்கள், ஏனென்றால் தங்களுக்கு பிரியமான ஒருவர் இப்படி பயன்படுத்தப்படுவதை மக்கள் விரும்புவதில்லை. எனவே அகோரிகள் அதுபோன்ற உடல்களை பிடுங்கிக்கொண்டு ஓடுகிறார்கள்!

உயிரின் ஒரு பகுதியை அவர்கள் பயன்படுத்த நினைக்கிறார்கள். இறந்த உடல் எரியூட்டப்படும்போது வெளியேறும் உயிர்சக்தியை அகோரிகள் பயன்படுத்த எண்ணுகிறார்கள். உயிருடன் உள்ள ஒரு மனிதரிடம் இதை செய்ய அவர்கள் எண்ணவில்லை, அப்படி செய்தால் மனித உயிரை பலிகொடுக்க நேரிடும். எனவே யாராவது இறந்து வரும் வரை அவர்கள் காத்திருக்கிறார்கள். ஏதோவொன்றைப் பற்றிய விஞ்ஞானம் உங்களுக்கு தெரியவில்லை என்றால் அது எல்லாமே விசித்திரமானது என்று நீங்கள் நினைத்துக்கொள்ளத் தேவையில்லை. இது அதீதமான எல்லைக்குச் சென்று செய்யக்கூடிய ஒரு செயலாக இருப்பது உண்மைதான். இது அனைவருக்குமானதும் அல்ல. இது சமுதாயத்தின் கவனத்திற்கு வராமலே செய்யப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் எதிர்பாராதவிதமாக மக்கள்தொகை பெருக்கத்தினால் எல்லா இடங்களிலும் மக்கள் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் அகோரிகள் வாழ்ந்த இடத்தில் அவர்களுக்கு அருகில் யாருமே இருக்கமாட்டார்கள். எனவே அவர்கள் தங்கள் வளர்ச்சிக்கும் தங்கள் நல்வாழ்வுக்கும் என்ன தேவையோ அதை செய்து கொண்டிருந்தார்கள்.

கேள்வி: ஆனால் நீங்கள் அறிவியலைப் பற்றி பேசுகிறீர்கள் என்றால், "அந்த குரங்குகளை நாம் பயன்படுத்தி இருக்கிறோம், இறுதியில் நமக்கு சில மருந்துகள் அதனால் கிடைத்திருக்கிறது" என்று என்னால் கூறமுடியும். ஒரு மனிதனால் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களை செய்வதற்கு அகோரிகளுக்கு நாம் அனுமதியளிக்கும் வகையில் அவர்கள் இந்த உலகத்திற்கு என்ன கொடுத்திருக்கிறார்கள்? 

சத்குரு: இந்த சமுதாயத்திற்கு எது நல்லது, எது நல்லதல்ல என்பது வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களிலும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. மிகுந்த நன்மைகளை வழங்கும் அறிவியல் என்று இன்று பேசும் அனைத்தும் இன்றைய காலகட்டத்திற்கு மட்டுமே பொருத்தமானது. அறிவியல் பூர்வமானதாக கருதப்படும் அனைத்தையும் தடைசெய்ய வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்த்து போராடுவது இன்று நடக்க துவங்கிவிட்டது. ஏனென்றால் வளர்ச்சி என்ற பெயரில் நமது நல்வாழ்வுக்கான மூலாதாரத்தையே நாம் அழிக்கத் துவங்கியிருக்கிறோம் என்பதை மக்கள் புரிந்துகொள்ளத் துவங்கியிருக்கிறார்கள்.

சமுதாயத்தில், இன்று எது உண்மை என்று கருதப்படுகிறதோ, அது நாளையே கீழ்மையானதாக பார்க்கப்படும். இன்று எது மேன்மையானதாக தோன்றுகிறதோ, அதுவே மிக மோசமானதாக நாளை மறுநாள் தோன்றும். சமுதாய கட்டமைப்பில் இது எப்படியும் நிகழத்தான் போகிறது. இன்று இதுதான் மிகச் சிறந்தது என்று நீங்கள் நம்பும்படியான சூழ்நிலை இருக்கலாம், ஆனால் நாளையே உங்களுக்கு அடுத்து வரும் தலைமுறையினர், "நீங்கள் செய்ததுதான் மிகவும் முட்டாள்தனமானது" என்று உங்களைப் பார்த்துக் கூறுவார்கள்.

சமுதாயம் எப்படி பார்க்கிறது என்ற கோணத்தில் அகோரிகள் எதிலும் ஈடுபடுவதில்லை. அவர்கள் தங்களது உச்சபட்ச நல்வாழ்வைப் பற்றிய நோக்கத்தில் மட்டுமே செயல்படுகிறார்கள். இந்த சமுதாயம் என்ன நினைக்கிறது என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதால்தான் அவர்கள் சமுதாயத்தை விட்டு விலகியே இருந்தார்கள். ஆனால் இன்று சமுதாயம் அனைத்தையுமே ஆக்கிரமித்துவிட்டது. அவர்களுக்கென்று வாழும் இடம் இல்லை. அவர்கள் யாருக்கும் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை. எந்த ஒரு அகோரியாவது வேறு யாரையும் தாக்கியதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லை. அவர் தனக்குத்தானே ஏதோ செய்துகொள்கிறார். மக்கள் போதைப்பொருட்களை எடுத்துக்கொள்கிறார்கள், மதுபானங்களை அருந்தி தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள், புகைப்பிடித்து உங்கள் முகத்திலேயே புகையை விடுகிறார்கள். அகோரிகள் இது எதையுமே செய்வதில்லையே. எங்கோ ஆளரவமற்ற ஓரிடத்தில் வாழ்ந்தபடி, வேறு யாரையும் உபயோகப்படுத்திக் கொள்ளாமல் தங்களுக்குத் தாங்களே ஏதோ செய்துகொள்கிறார்கள்.

உங்களுக்கு எது மிகவும் வெறுக்கத்தக்கதாக, அகோரமானதாக தோன்றுகிறதோ அதனுடன் நட்பு ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு இடத்துக்கு நகர்வதற்கு அவர்கள் விரும்புகிறார்கள். ஏனென்றால் அது பிடிக்கும், இது பிடிக்காது என்று சார்பு எடுக்கும் கணத்திலேயே இந்த படைத்தலையே நீங்கள் இருகூறாக பிரித்துவிடுகிறீர்கள். எப்போது நீங்கள் படைக்கப்பட்டதையே இரண்டாக பிரித்துவிட்டீர்களோ, அதன்பிறகு உங்களால் அதை அரவணைத்துக்கொள்ள முடியாது. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றை அவர்கள் செய்வதற்கு காரணம், தங்களிடம் இருக்கும் விருப்பு-வெறுப்பை களைய அவர்கள் விரும்புகிறார்கள்; அவர்களைப் பொறுத்தவரை எல்லாமே ஒன்றுதான். இந்த பிரபஞ்சத்தை அரவணைத்துக்கொள்ள இது ஒரு வழி. இது உங்களுக்கும் எனக்கும் ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் யாரோ ஒருவருக்கு வேலை செய்கிறது. எது ஒன்று வேலை செய்தாலும், நான் அதற்கு எதிரானவன் அல்ல. எது வேலை செய்தாலும், என்னைப் பொறுத்தவரையில் அது சரியானது தான்.

காசியை எப்படி உணர்வது

கேள்வி: ஒருவர் காசிக்கு வருகிறார் என்றால், அவர் இங்கே நிச்சயமாக உணர வேண்டியது எது?

சத்குரு: அவர்கள் ஓரளவு தங்களை தயார் செய்துகொண்டு வரவேண்டும். நீங்கள் காசிக்கு யாத்திரை செல்ல விரும்புகிறீர்கள் என்றால், குறைந்தது மூன்று மாதங்களாவது ஏதாவது ஒரு எளிமையான தியான செயல்முறைக்கு தீட்சை பெற்று பயிற்சி செய்வது நல்லது. சில காலம் தியானத்தில் இருங்கள். உங்களை இன்னும் சற்று கூர்மையானவராக, உணரக்கூடியவராக தயார் செய்துகொண்டு வருவது நல்லது. உங்கள் நம்பிக்கைகள் அனைத்தையும் வீட்டிலேயே விட்டுவிட்டு திறந்த நிலையில் வாருங்கள். நீங்கள் எதையுமே நம்பவேண்டாம்.

காசியைப் புனரமைத்தல்

சத்குரு: காசி ஒரு அற்புதமான இடம். நாம் மீண்டும் காசியை அதன் முழு பெருமையும் வெளிப்படும் வகையில் மறு-உருவாக்கம் செய்யவேண்டும், ஏனென்றால் இதற்கு முன் இந்த பூமியில் யாருமே இவ்வளவு பிரம்மாண்டமான, இவ்வளவு ஆழமான ஒன்றை உருவாக்கும் கனவைக்கூட கண்டதில்லை. ஆனால் துரதிருஷ்டவசமாக, படையெடுப்புகளாலும் காலத்தாலும் காசி மாநகரில் பலவும் சேதமடைந்திருக்கிறது. மீண்டும் காசியை முழுமையாக சீர்செய்வதற்கான காலம் வந்துவிட்டது. இது ஒரு மதம் சம்பந்தப்பட்டது அல்ல. இது நமது பொறுப்பு. மனித நல்வாழ்வைப் பற்றி நாம் உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்கிறோம் என்றால், மனிதனின் நல்வாழ்வுக்காக உருவாக்கப்பட்ட வழிமுறைகளும், செயல்முறைகளும், கருவிகளும் மறு-உருவாக்கம் செய்யப்பட வேண்டும்.

    Share

Related Tags

சிவ தத்துவம்

Get latest blogs on Shiva

Related Content

மஹாசிவராத்திரி பற்றிய 5 உண்மைகள்