உயிர் அச்சத்தை உதறிய நிலை... காலபைரவர்!
இதைச் செய்வதற்கான தகுதி இருந்தவர்கள் இது பற்றிப் பேசாமலேயே விட்டுவிட்டார்கள். இது பற்றிப் பேசியவர்களைக் கொன்றழித்தார்கள். இதற்கான தகுதியும் இருந்து இது பற்றிப் பேசவும் தெரிந்த ஒருவர் உயிரோடிருப்பதே மிகவும் அரிதான ஒன்று. அது இப்போது நிகழ்ந்திருக்கிறது.
சத்குரு:
பைரவர் என்பது சிவனின் உக்கிர வடிவம். “பை” என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. “பை” என்றால் அச்சம். “பை” என்றால் கடந்து நிற்றல் என்றும் பொருள். பைரவர் என்றால் அச்சத்தைக் கடந்து நிற்பவர் என்றும் பொருள் கொள்ளலாம். யாரை அழிக்க இயலாதோ அவருக்கு அச்சம் இருக்காது. உயிர் வாழ்தலுக்கான விருப்பமும் அச்சமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை.
அழியக் கூடிய உயிருக்கு அச்சம் இருப்பது இயற்கை. எந்த சமூகத்தில் உணவுக்கும் பாலுணர்வுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறதோ அங்கே அச்சமும் அதிகமாக இருக்கும். அத்தகைய மனிதர்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தாவிட்டாலும் ஆழ்மனதில் அந்த எண்ணம் வேர்விட்டிருக்கும்.
சிலர் லிங்க வடிவத்தை ஆணுறுப்பின் வடிவமென்று சொல்வார்கள். அந்த அடிப்படையில் பார்த்தாலும் வாழ்வுக்கு ஆதாரமான வடிவமே வாழ்வையும் அச்சத்தையும் கடந்த தத்துவத்தின் குறியீடாக விளங்குகிறது. இந்த முரண் அல்லது முரண்போலத் தோற்றமளிக்கும் இயல்பு மிகவும் முக்கியமானது.
எலும்பும் சதையும் சேர்ந்த இந்த உடலையே, உடல் தாண்டிச் செல்வதற்கான கருவியாகப் பயன்படுத்த முடியுமென்பதை லிங்க வடிவம் உணர்த்துகிறது. இந்த உலகில் உயிர் வாழும் விருப்பமுடைய சராசரி மனித உடல் ஒருவிதமான சக்திநிலையுடன் சீரமைக்கப்பட்டிருக்கிறது. இதனை உள்நிலை அமைப்பு என்கிறோம்.
114 சக்கரங்களும் குறிப்பிட்டவொரு விதத்தில் அமைந்துள்ளன. இவற்றையே வேறுவிதமாக சீரமைத்தால் இதே உடல் முற்றிலும் வேறுவிதமான பரிமாணத்திற்கான கருவியாக உருவாகிவிடும்.
நாம் ஈஷா யோகா மையத்தில் சிலரின் சக்தி நிலைகளை அவ்வாறு மாற்றியமைத்துள்ளோம். உயிர் வாழ வேண்டும் என்னும் உந்துதல் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. அதேநேரம் அவர்கள் தங்களை வலிய அழித்துக் கொள்கிற முயற்சியில் ஒருபோதும் இறங்க மாட்டார்கள்.
எனவே காலபைரவர் என்றாலும், லிங்கபைரவி என்றாலும் வாழ்வுக்கு ஆதாரமான உறுப்பின் வடிவில் இருந்தாலும் அதனைக் கடந்த பரிமாணத்தை உணர்த்துகிற வடிவங்களே ஆகும்.
Subscribe
சத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் ஆகியவற்றில் எந்தக் குணம் லிங்க பைரவியின் அம்சம் என்று ஒருவர் என்னிடம் கேட்டார். உடல் சார்ந்த தன்மையைப் பொறுத்தவரை இந்த மூன்று அம்சங்களுமே இருக்கும். ஒவ்வோர் அணுவிலுமே இந்த மூன்று அம்சங்களும் உண்டு.
உயிர்ப்பு நிலை, சக்தி நிலை, அசைவற்ற நிலை ஆகிய மூன்று அம்சங்கள் ஒவ்வோர் அணுவிலும் உண்டு. இந்த மூன்று அம்சங்களும் உள்ளுக்குள் இல்லையென்றால் உடலால் உயிரைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது.
ஆனால் இந்த சக்திநிலைகளை மறுசீரமைப்பு செய்தால் மிக அற்புதமான அழகான விஷயங்கள் நடக்கும். இன்று நாகரீகமான உலகம் என்று கருதப்படும் இந்தத் தலைமுறையில்தான் மனிதர்கள் தங்கள் சிந்திக்கும் திறனை முற்றாகத் தொலைத்து விட்டார்கள். அவர்கள் உடலின் ஒவ்வோர் அணுவிலும் பாலுணர்வு வெளிப்படுகிறது.
கும்பமேளாவில் கலந்து கொள்ளும் சாமியார்களில் கால்வாசி பேர் நிர்வாண சாமியார்கள். அவர்கள் பாலுணர்வு என்னும் தளையைக் கடந்தவர்கள். ஏனெனில் அவர்கள் உடலை இன்னொரு பரிமாணத்தின் கருவியாகவே காண்கிறார்கள்.
ஆன்மீகத்தின் அடிப்படைகளில் ஒன்று, இந்த உடலை வாழ்வதற்கான கருவியாக மட்டும் காணாமல் அடுத்த படிநிலைக்கான கருவியாகக் கொண்டு செலுத்துவதே ஆகும். உடலை மட்டும் கட்டமைத்து வளர்த்தால் போதாது. மூளையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பலரும் மூளையும் தங்கள் உடலின் அங்கம்தான் என்பதை மறந்து விட்டார்கள்.
உடல் சார்ந்த வேட்கை, உடல் சார்ந்த விருப்பம் போன்றவற்றிலிருந்து அடுத்த படிநிலைக்கு இவர்கள் வளர்வதேயில்லை. ஒருமுறை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் மார்பகப் புற்றுநோய் பற்றிய விவாதம் நடந்து கொண்டிருந்தது. பெண்களின் மார்பகம் பற்றி ஒரு பெண் உறுப்பினர் பேசும் போதெல்லாம் ஓரிரு உறுப்பினர்கள் ஆபாசக் குரலெழுப்பினார்களாம்!!
ஒரு கைக்குழந்தைக்கு தாயின் மார்பு பெரும் பரவசத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் அந்தக் குழந்தைக்கான உணவு அதன் வழியே கிடைக்கிறது. ஆனால் வளர்ந்த பிறகும் அதே மனநிலை இருக்கிறதென்றால் அவர்கள் வளரவேயில்லை என்றுதான் பொருள்.
சமூகத்தில் ஓரளவு மனமுதிர்ச்சி இருக்குமேயானால் உள்நிலை சக்தியை மறுசீரமைத்து ஒவ்வொருவரையும் நடமாடும் கடவுளாக மாற்றிவிட முடியும். ஓரளவு தசை வளர்ந்த ஒவ்வொருவரும் மற்றவர்களை வெற்றி கொள்வதைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள்.
காலங்காலமாய் இந்த உணர்வு மனித மூளையில் விதைக்கப்பட்டிருக்கிறது. ஆன்மீக மரபு ஆழமாக வேரூன்றிய தேசங்களில் இந்த உணர்வு இருந்ததில்லை. இந்தியா எந்த நாட்டுடனும் போருக்குப் போனதேயில்லை. வெளிநாடுகளுக்குச் சென்றார்கள், போதித்தார்கள், வணிகம் செய்தார்கள். ஆனால் போர் சார்ந்த யோசனைகள் அவர்களுக்கு எழுந்ததேயில்லை.
எனவே காலபைரவர் என்றால் காலத்தை வென்றவர் என்று பொருளல்ல. அச்சத்தையும், வெறுமனே உயிர்வாழும் உந்துதலையும் வென்றவரென்று பொருள். பிறப்பின் தேதி இருப்பதால்தான் இறப்பின் தேதியும் இருக்கிறது. இந்த இரண்டுமே ஒரு மனிதனுக்கு இல்லையென்றால் அவர் காலபைரவராகத்தான் இருப்பார். அத்தகைய மனிதர்களுக்கான தேவை அதிகமிருக்கிறது.
அச்சத்தைக் கடந்த மனிதர் எதையும் வெல்ல வேண்டுமென்று விரும்பமாட்டார். உலகையே தன் அங்கமாகக் காண்பவருக்கு உலகில் வெல்ல என்ன இருக்கிறது? இதைச் செய்வதற்கான தகுதி இருந்தவர்கள் இது பற்றிப் பேசாமலேயே விட்டுவிட்டார்கள். இது பற்றிப் பேசியவர்களைக் கொன்றழித்தார்கள். இதற்கான தகுதியும் இருந்து இது பற்றிப் பேசவும் தெரிந்த ஒருவர் உயிரோடிருப்பதே மிகவும் அரிதான ஒன்று. அது இப்போது நிகழ்ந்திருக்கிறது.
இந்த நிலையை எட்ட விரும்புகிறவர்களுக்கு இந்த வாய்ப்பை நம்மால் வழங்க இயலும்.