logo
logo
தமிழ்
தமிழ்

விஷத்தை பருகினாலும் சிவனுக்கு ஏன் பாதிப்பதில்லை?

சிவனின் தொண்டைக் குழி நீல நிறத்தில் இருப்பதற்கும், அவரை நீலகண்டன் என அழைப்பதற்கும் காரணமாய் ஒரு புராணக் கதையை கேள்விப்பட்டிருப்போம்! இங்கு சத்குரு யோக விஞ்ஞானத்துடன் அதற்கான காரணத்தை விளக்குகிறார்!

சத்குரு:

சிவனின் ஸ்தானம், தொண்டைக்குழி. யோகத்தில் இது விஷுத்தி என்று அழைக்கப்படுகிறது. விஷுத்தி என்றால் வடிகட்டி என்று பொருள். அதாவது நீங்கள் உங்கள் விஷுத்தியில் உறுதியாக நிலைத்திருந்தால், உங்களுக்குள் செல்லும் விஷமெல்லாம் அங்கேயே வடிகட்டப்பட்டுத் தங்கிவிடும். அதற்குமேல், அவை செல்லாது.

உங்களுக்குத் தெரிந்திருக்கும் சிவனுக்கு நீலகண்டன், விஷகண்டன் என்ற பெயரும் உண்டு. அவர் தொண்டையிலேயே அனைத்து விஷங்களையும் நிறுத்திவிடுவான். விஷம் என்று சொன்னால், நாம் உண்ணும் உணவில் இருப்பதை மட்டும் சொல்லவில்லை; தவறான எண்ணங்கள், தவறான உணர்வுகள், வாழ்வைப் பற்றிய தவறான முடிவுகளும், கருத்துகளும்கூட, உங்கள் உயிரை விஷப்படுத்தக் கூடும். உங்கள் விஷூத்தி உறுதியாகவும், நிலையானதாகவும் இருந்தால், எல்லா விஷங்களையும் அங்கேயே நிறுத்திவிட முடியும்.

சிவனின் தொண்டை நீலமாக இருப்பது போன்ற குறியீடுகள், அவர் எல்லா விஷங்களையும் அங்கேயே நிறுத்திவிட்டார் என்பதை உணர்த்தத்தான். அவருடைய வடிகட்டி மிகத் துரிதமான ஒன்று. அவருக்குள் அணுவளவு விஷம் நுழைவதைக்கூட அவர் அனுமதிப்பதில்லை.

சிவன் என்பது ஏதுமில்லா தன்மை. அதனால்தான், அவர் விஷத்தைக் குடித்தார். யோக மரபில் இப்படி சொல்லப்படுகிறது... சிவனிடம் இருந்துதான் அனைத்தும் வந்தது. கடைசியில் அவனையே அனைத்தும் சென்றடைகிறது. சிவன் என்றால், மலைகளில் நடனம் ஆடுபவனையோ அல்லது சொர்க்கத்தில் அமர்ந்து இருப்பவனையோ, நான் குறிக்கவில்லை. சிவன் என்றால், நாம் இங்கு, எது படைத்தலின் மூலம் என்கிறோமோ அதைக் குறிக்கிறோம். அதனால், ஏதும் இல்லா தன்மைக்குள் விஷம் போட்டால், என்ன பிரச்சனை?

நீங்கள் ஏதோ ஒன்று இருக்கும் தன்மைக்குள் அமுதையோ, விஷத்தையோ போட்டால், அதனால், அதில் வெவ்வேறு தாக்கங்கள் ஏற்படலாம். ஏதும் இல்லாத ஒன்றினுள் விஷத்தைப் போட்டால், அதனால் அதற்கு எந்த தாக்கமும் ஏற்படாதுதானே? யாருமே விஷத்தைக் குடிக்க முன்வரவில்லை. ஏனென்றால், அவர்கள் இருப்பவர்கள். அவர், இல்லாதத் தன்மை. அதனால், அவர் விஷத்தைக் குடித்தார்.

    Share

Get latest blogs on Shiva

Related Content

சிவனின் தலைமுடியிலிருந்து தோன்றிய வீரபத்ரா...