வாழ்வு - இது கண் முன்னே நிகழும் கனவு!
மரணம் - அது பிறருக்கு மட்டுமே நிகழும் நிகழ்வு!
இப்படி தெளிவின்றி காலம் செல்ல நம்மை கண்விழிக்கச் செய்திட்ட யோகி...
மரணத்தின் விழிப்புணர்வை மனதில் பதித்திட்ட ஞானி!
தன் வாழ்நாளில் தான் உணர்ந்ததை எல்லாம் கவிதையாக இவ்வுலகிற்கு வழங்கினார் பசவண்ணா.
ஞானியாக கவிஞராக பக்தராக யோகியாக துறவியாக கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்த இவர் ஒரு அரசர். தன் அரச வாழ்வினைத் துறந்து பிச்சைக்காரராக வாழ்ந்தார்.
தன் உள்ளத்தில் நிறைந்த ஞானத்தை எல்லாம் நூற்றுக்கணக்கான கவிதைகளாய் உதிர்த்தார். அதிலும், முதன்மையாக மரணமும் வாழ்வின் நிலையாமையுமே இருந்தது. இவரது உள்ளத்தின் நிலையை, இவரது வாழ்வை இவரது கவிதைகளே வெளிப்படுத்தும்.
ஞானியாக கவிஞராக பக்தராக யோகியாக துறவியாக கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்த இவர் ஒரு அரசர். தன் அரச வாழ்வினைத் துறந்து பிச்சைக்காரராக வாழ்ந்தார்.
அவரது மொழியும் நடையும் ஆழமான சிந்தனைகளை மனதிற்குள் எளிதாக ஊடுருவிச் செல்ல செய்கிறது. ஆனால், அவை மொழிப்பெயர்க்கப்படும்போது அதன் சாராம்சம் குறைந்தாலும் ஆழமான சிந்தனைகள் பொருள் மாறாமல் இதோ உங்களுக்காக...
கொன்று விடுவார் இன்னும் சிறிது நேரத்தில்
நீயோ மென்று விழுங்கிக் கொண்டிருக்கிறாய்! ஆடே உன்னை
கொன்று விடுவார் இன்னும் சிறிது நேரத்தில்
மென்று விழுங்கிக் கொண்டிருக்கிறாய் பச்சை இலை தன்னை!
இலை தன்னை கொண்டுவந்தார் உன்னை அலங்கரிக்க
கொலை தன்னை அறியாமல் நீயும் அதனை உண்டு களிக்க
அன்று பிறந்தாய் இன்று இந்த நாளில் இறந்திட நீ
அன்று பிறந்தாய்! உன் குடலை நிரப்பிட மட்டுமே விழைந்தாய்!
ஓ கூடல சங்கம தேவா! கொலை செய்யும் அந்த மனிதன்
இந்த மண்ணில் நிரந்தரமாய் வாழ்ந்திடுவானோ?
ஆணியடித்ததைப் போல மரணம் என்ற உண்மையை மக்கள் மனதில் பதிந்திடச்செய்தார்.
அறியாமையில் இருப்பவனுக்கே மரணம் ஏற்படுகிறது. விழிப்புணர்வில் இருப்பவருக்கோ மரணம் இருக்கிறது. எப்படி வாழ்வு இருக்கிறதோ அதேவிதமாய் மரணமும் இருக்கிறது. இந்த விழிப்புணர்வு ஒருவருக்கு ஏற்பட்டால் அதுவே மிகவும் உயர்ந்த நிலை. வாழ்வின் மிகத் தீவிரமான நிலை.
இவரது பாடல்களில் சில நேரங்களில் இவர் சிவனை “என் தந்தையே” என அழைக்கிறார். இவரது பக்தி நிலையின் தீவிரம் இவரது வார்த்தைகளில் வெளிப்படுகிறது. “என் தந்தையே” என அழைக்கும் அதே நேரம் இன்னொரு பாடலில் “என் அன்பு தோழனே” என அழைக்கிறார். தன் பக்திநிலையின் உச்சத்தினால் சிவனை சில நேரம் தந்தையாக சில நேரம் தோழனாக அழைக்கிறார்.
இங்கே பார், என் தோழனே!
உனக்காகவே இந்த ஆணின் ஆடையினை அணிந்திருக்கிறேன்.
சில நேரங்களில் நான் ஆணாக!
சில நேரங்களில் நான் பெண்ணாக!
ஓ கூடல சங்கமதேவா!
என்கிறார்.
எல்லையில்லா தன்மையுடன் ஒன்றாகக் கரைந்து போய்விட வேண்டும் என்ற ஆர்வத்தை நீங்கள் உருவாக்க வேண்டியதில்லை. அது ஒவ்வொரு உயிருக்குள்ளும் இயல்பாகவே இருக்கும் தாகம். அது விழிப்புணர்வற்ற நிலையில் வெளிப்படுவதால் ஆசையாக வெளிப்படுகிறது.
அதனால் எல்லையில்லாததுடன் கலந்துவிட நீங்கள் தவணை முறையில் முயற்சிக்கிறீர்கள். இப்படி தவணை முறையில் செல்வதன் முட்டாள்தனத்தை எவரேனும் உணர்ந்தால் அது இப்படித்தான், கவிதையாக வெளிப்படும்...
அறியாமை என்னும் இருளில் நான்
தெரியாமல் தாயின் கருவில் என்னை கொண்டு சேர்த்தாய்!
அறியாமை என்னும் இருளில் நான்
தெரியாமல் தாயின் கருவில் என்னை கொண்டு சேர்த்தாய்!
பிறப்பதே தவறோ
தாயின் கருவில் உதிப்பதே தவறோ!
பிறப்பதே தவறோ
தாயின் கருவில் உதிப்பதே தவறோ
இந்தப் பிறவியில் எனக்கு கருணை செய்யுங்கள்
இந்தப் பிறவியில் எனக்கு கருணை செய்யுங்கள்
நான் வாக்களிக்கிறேன் கூடல சங்கம தேவா!
இனி பிறவேன்
நான் வாக்களிக்கிறேன் கூடல சங்கம தேவா!
இனி பிறவேன்
இப்படி எண்ணிலா யோகிகள் முக்தியை நோக்கி பயணித்த கலாச்சாரம் நம் கலாச்சாரம்.
அவரெல்லாம் “கருணை செய்யுங்கள்” என தெய்வத்திடம் மன்றாடி முக்தி என்ற ஒன்றை வேண்டிப் பெற்றனர்.
ஆனால், இன்றைய நிலை அப்படி இல்லை. ஒவ்வொரு படியிலும் வழிகாட்டிட, வழித்தவறிப் போனால் மீண்டும் நம்மை அன்பால் ஈர்த்திட, தன் உயிரையே உயிர்சக்தியாய் நம்முள் விதைத்திட, குரு என்ற ஒரு அம்சம் போராட்டம் இல்லாமல் நம்மை சுகமாய் அதனை நோக்கி அழைத்துச் செல்கிறது.
இனி திறக்க வேண்டியது நம் வாசல்கள் மட்டுமே.
குறிப்பு: இந்தக் கட்டுரை சத்குருவின் "யோகாவும் யோகிகளும்" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. புத்தகத்தை வாங்குவதற்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்!
Photo Credit: Basava image from Wikimedia