கேள்வி: ஆதியோகி வாழ்ந்ததற்கான ஆதாரம் ஏதேனும் உள்ளதா?
சத்குரு:
பொதுவாக ஆதியோகி 15,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக நாம் கணிக்கின்றோம். அந்த காலத்தில் யாரும் வரலாற்று பதிவுகள் செய்ததில்லை, அதனால் ஆதாரங்கள் ஏதும் இல்லை. ஆனால், ஆதியோகியை பற்றிய நினைவு தனித்துவம் ஆனது, ஆழமானது. மக்கள் தலைமுறை தலைமுறைகளை கடந்து இந்த நினைவுகளை விடாமல் சுமந்து வந்திருக்கின்றனர்.
இன்றும் சிவனை பற்றி அறிய வேண்டுமெனில் நீங்கள் ஏதோ ஒரு வரலாற்று புத்தகம் மூலம் அறிந்து கொள்வீர்களா? அல்லது மக்கள் தங்கள் மனதில் சுமந்து இருக்கும் நினைவுகளின் மூலம் அறிவீர்களா? அவரின் தாக்கம் அத்தகையது - காலங்கள் கடந்தும் மக்களால் அவரை மறக்க முடியவில்லை. தொடர்ந்து அவரைப் பற்றி பேசி வந்திருக்கின்றனர். அடுத்த தலைமுறைக்கு தன் பெற்றோரைப் பற்றி அதிகமாக கூறவில்லை, தன் மாமாக்கள் அத்தைகள் நண்பர்கள் பற்றி கூறவில்லை. ஆனால், பல நெடுங்காலங்களுக்கு முன் வாழ்ந்த இந்த மனிதனைப் பற்றி கூறி வருகின்றனர்.
நீங்கள் ஆதாரம் வேண்டினால் என்ன செய்வது? உங்கள் தாத்தா வாழ்ந்ததற்கு என்ன ஆதாரம் உள்ளது? அவர் பிறந்திருந்தால், புகைப்படம் கண்டுபிடிக்கும் முன் இறந்திருந்தால், உங்களிடம் எந்த ஆதாரமும் இருக்கப் போவதில்லை, சரிதானே? உங்கள் தாத்தா மகாராஜாவாக இருந்திருந்தால், அவர் செல்வச் செழிப்பாய் இருந்திருந்தால், தன் உருவப் படத்தை வரையச் செய்திருக்கலாம். அந்தப் படமும் திரித்து வரையப்பட்டதாய் இருக்கலாம். அவருக்கு பெரிய மீசை இல்லாமல் இருந்து இருக்கலாம்; ஆனால், ஓவியர் மகாராஜாவிற்கு அப்படி ஒரு மீசை தேவை என எண்ணி வரைந்து இருக்கலாம்.
ஒரு இளம் பெண்ணுக்கு புற்றுநோய் இருப்பதாக அறியப்பட்டது. “இன்னும் 6 மாதங்களே நீ வாழ்வாய்,” என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். “ஒரு சிறந்த ஓவியரை அழைத்து வாருங்கள். என்னை ஓவியமாய் வரைய விரும்புகிறேன்,” என்று தன் கணவனிடம் தன் விருப்பத்தை தெரிவித்தாள்.
ஓவியரிடம் தன் கழுத்தில் நேர்த்தியான ஒரு வைர ஆரத்தை தான் அணிந்திருப்பது போல வரையச் சொன்னாள். கணவன் கேட்டான், “உன்னிடம் இத்தகைய வைர நகை இல்லையே. பிறகு எதற்காக வரையச் சொன்னாய்?” அதற்கு அவள், “நான் இறந்த பிறகு ஒருவேளை நீங்கள் மறுமணம் செய்து கொண்டால் அந்தப் பெண் இந்த நகையை வீடு முழுக்க தேடியே சாக வேண்டும்,” என்றாள்.
எனவே, ஆதாரம் பற்றி எவர் அறிவார்? ஆனால், இவ்வளவு நெடுங்காலமாக பல கலாச்சாரங்களை கடந்து ஒரு துணைக் கண்டத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் இல்லாத ஒரு மனிதனைப் பற்றி பேசப் போவது இல்லை. இல்லாத ஒருவனை உருவாக்கும் வலிமை, ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டத்திற்கு மட்டுமே உண்டு. ஆனால், அவ்வாறு ஒரு ஒழுங்கு முறைக்குள் கட்டுப்பட்ட கலாச்சாரம் இதுவல்ல. அப்படி இருந்தும், அந்த ஒரு மனிதனைப் பற்றிய நினைவுகள் தொடர்கின்றன. ஏனெனில், நம் முன்னோருக்கு அவன் முக்கியமானவனாக இருந்திருக்கிறான்.