தியானத்தின் அமைதி சவாலான நேரங்களில் ஏன் நிலைப்பதில்லை?
தியானம் செய்யும்போது எனக்குள் அமைதி இருக்கிறது. சவாலான சூழ்நிலைகளில் என் பழைய நிலைக்கே திரும்பி விடுகிறேன். இதனை சரிசெய்வது எப்படி? - சாதகரின் கேள்விக்கு பதிலளிக்கிறார் சத்குரு.

கேள்வியாளர்:
நான் தியானம் செய்யும்போது, எல்லாமே அமைதியாகவும் நிசப்தமாகவும் இருக்கிறது; நான் ஏதோ ஒரு நிலையை அடையப்போவது போல உணர்கிறேன். ஆனால் சவாலான சூழ்நிலை வரும்போது தான் உண்மையான பரீட்சை துவங்குகிறது. அப்போது நான் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, மீண்டும் பழையபடியே விஷயங்களை கையாள ஆரம்பிக்கிறேன். நான் செய்யும் பயிற்சிகள் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்த துவங்கியுள்ளதை நான் உணர்ந்தாலும், ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கும்போது, நான் மீண்டும் அதே பழைய நிலைக்கே போய்விடுகிறேன்.
சத்குரு:"மீண்டும் பழைய நிலைக்குப் போகிறேன்" என்று ஏற்கனவே இரண்டு முறை சொல்லிவிட்டீர்கள். பழைய நிலைக்குப் போவது என்றால் என்ன? ஒரு பதற்றமான வாழ்க்கை முறைதான் உங்களுடைய இயல்பு, இல்லையா? அதுதான் உங்கள் உண்மையான இயல்பா?
கேள்வியாளர்: ஆமாம்.
கேள்வியாளர்: அப்படியென்றால் அதை ஏன் இழக்க நினைக்கிறீர்கள்?
Subscribe
கேள்வியாளர்: இல்லை. 'இயல்பு' என்று நான் சொல்வதற்கு அர்த்தம் - இப்படித்தான் வாழ்நாள் முழுவதும் விஷயங்களை கையாள்கிறோம் என்பது தான்.
கேள்வியாளர்: அந்த பதற்றமான தன்மையோடு நாம் அவ்வளவு தீவிரமாக அடையாளம் கொண்டிருக்கும்போது, அதை எப்படி நாம் இழக்க முடியும்? "பயிற்சி செய்யும்போது நான் மிகவும் அமைதியாக இருந்தேன், ஆனால் சவாலான சூழ்நிலை வரும்போது, நான் என் இயல்பை விட்டு விலகிவிடுகிறேன்" என்று நீங்கள் சொன்னால், அதுவே நன்றாக இருக்கும், இல்லையா? அது நன்மைக்காக மட்டுமல்ல, "நான் என் இயல்பிலிருந்து விலகிச் செல்கிறேன்" என்று புரிந்துகொள்வது மிகவும் அவசியமானது. அப்போதுதான் நீங்கள் உங்களுடைய உண்மையான தன்மைக்கு இயல்பாகவே திரும்பி வர விரும்புவீர்கள். ஆனால் "பதற்றம் தான் என் இயல்பு நிலை, அமைதி என்பது என்னுடைய யோகாவின் அலங்கார இயல்பு என்று நீங்கள் உங்களுக்குள் தெளிவாக சொல்லிக்கொள்கிறீர்கள். எனவே, இயல்பாகவே நான் என் தன்மைக்கே திரும்பிப் போகிறேன்" என்கிறீர்கள். சொந்த வீட்டுக்கு திரும்பிச் செல்வது இயல்பான ஒன்றுதானே?
இதை உங்களுக்குள் நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். இப்போது, நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்களோ அதுபோலவே தான் மாறுகிறீர்கள். வெறும் யோசிக்கும் விதத்தை மாற்றுவதன் மூலம் உங்கள் மனதின் ஒட்டுமொத்த குழப்பத்தையும் மாற்றிவிட முடியும். "என் இயல்பு பதற்றம்தான்" என்று நீங்கள் சொல்லும்போது, அந்த பதற்றம் உங்களுக்குள் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சி செய்கிறது. அதற்கு பதிலாக, "என் இயல்பு அமைதிதான், ஆனால் நான் அதை இழந்துவிட்டேன்" என்று நீங்கள் பார்க்கும்போது, இயல்பாகவே உங்கள் உண்மையான தன்மைக்கு திரும்ப நினைப்பீர்கள்.
உங்கள் இயல்பான தன்மை
எது உங்கள் உண்மையான இயல்பு? இது என்னுடைய போதனை அல்ல. நீங்களே சொல்லுங்கள், உங்கள் உண்மையான இயல்பு என்ன? அல்லது இந்த "இயல்பு" என்றால் என்னவென்றே உங்களுக்குத் தெரியவில்லை என்றால், குறைந்தபட்சம் ஒன்றைச் சொல்லுங்கள்; நீங்கள் குழந்தையாக இருந்தபோது, பதற்றமாக இருந்தீர்களா அல்லது அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருந்தீர்களா? எது நம் உண்மையான அடிப்படையான இயல்போ அதற்கு நம்மால் திரும்பிப் போக முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் ஆரம்பப் புள்ளிக்காவது திரும்பிப் போவோமா? அங்கிருந்தே விளையாட்டை ஆரம்பிக்கலாமா? உங்களுக்கு ஐந்து வயது இருக்கும்போது எப்படி இருந்தீர்களோ, குறைந்தபட்சம் அப்படி மாறுங்கள். அந்த அளவுக்கு அமைதியும் ஆனந்தமும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
அது பெரிய அளவு என்று சொல்ல முடியாது. நிறைய பேர் குழந்தையாக மாறுவதுதான் உலகிலேயே மிக உயர்ந்த விஷயம் என்பது போல் பேசுகிறார்கள். இல்லை, பெரியவர்களாக வளர்வதற்கு அவ்வளவு முயற்சி தேவைப்பட்டிருக்கிறது. குழந்தையாக மாறுவது மிக உயர்ந்த விஷயம் அல்ல. தங்களை முற்றிலும் சீர்குலைத்து அழித்துக் கொண்டவர்களுக்கு, குறைந்தபட்சம் ஆரம்பப் புள்ளிக்காவது திரும்பிப் போங்கள் என்று சொல்கிறோம். குறைந்தபட்சம் அங்கிருந்தாவது ஆரம்பியுங்கள். அங்கிருந்து கீழே விழுந்துவிடாதீர்கள்.
எனவே, தியானத்தின் போது நீங்கள் அனுபவித்ததை, ஏதோ ஒரு விதத்தில் நீங்கள் சாதித்துவிட்ட ஒரு விசித்திரமான தருணம் என்று உங்களுக்குள் சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள். அது ஒன்றும் சாதனை அல்ல. உங்களை நீங்களே குழப்பிக்கொள்ளாமல் இருந்தால், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் நீங்கள் இருக்கும் இயல்பான நிலை அது தான். அதுதானே உண்மை?
குழப்பமான நிலையில் இருப்பது உங்களுடைய இயல்பா, அல்லது உங்களை எதுவுமே குழப்பாதபோது நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அது உங்களுடைய இயல்பா? இதில் எது குறைந்தபட்சம் உங்களுடைய இயல்புக்கு நெருக்கமாக இருக்கிறது? குழப்பமில்லாத நிலைதானே?
உங்கள் வாழ்க்கையை திரும்பிப் பார்த்து நீங்கள் உணர்ந்த மிக அமைதியான ஆனந்தமான தருணம் எதுவென்று பாருங்கள். அங்கிருந்தே ஆரம்பிக்கலாம். இப்போதைக்கு அதையே உங்களுடைய இயல்பாக வைத்துக்கொள்வோம். அப்படி இல்லை என்றாலும், குறைந்தபட்சம் மனதளவில், “நான் இப்படித்தான் இருக்கிறேன், ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் நான் தொலைந்து போய்விட்டேன்” என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் தொலைந்து போய்விட்டீர்கள் என்பதை உணர்ந்த உடனே, உங்களுக்குள் இருக்கும் எல்லாமே மீண்டும் திரும்புவதற்கான வழியைத் தேட விரும்பும்.
சரியான உள்ளீடு
உங்கள் மனம் எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். அதனிடம் ஒரு குறிப்பிட்ட விதத்தில் ஏதாவது சொன்னாலோ, தவறான ஒரு விஷயத்தை அதற்குள் செலுத்தினாலோ, மனதின் ஒட்டுமொத்த ஆற்றலும் அந்தத் திசையிலேயே செயல்படத் துவங்கிவிடும். ஏதோ ஒரு தவறான எண்ணத்துடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டதால், இந்த உலகத்தில் ஏராளமான மனிதர்களின் வாழ்க்கை முற்றிலும் விஷமாக மாறியிருக்கிறது. ஏறத்தாழ மொத்த உலகமுமே இந்த நிலையில்தான் இருக்கிறது என்று நான் சொல்வேன். அவர்கள் ஒரு குறிப்பிட்ட வகையான சிந்தனையோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள்; இந்த அடையாளங்கள் பொதுவாக அவர்கள் மிகச் சிறிய வயதில் இருக்கும்போது, குறிப்பிட்ட சில விஷயங்கள் ஆதிக்கம் செலுத்தும் தருணத்தில் ஏற்படுகின்றன. இப்போது உங்களால் அதைத் தாண்டி யோசிக்க முடியாமல் போய்விடுகிறது.
உங்களுடைய உடலில் இருந்து எல்லா ஆண், பெண் ஹார்மோன்களையும் நான் எடுத்துவிடுகிறேன் என்று வைத்துக்கொள்வோம். நான் உடல் சார்ந்த அம்சத்தைப் பற்றி பேசவில்லை. மாறாக உங்கள் மனப்பான்மையிலும், உங்கள் வாழ்க்கையை நீங்கள் பார்க்கும் விதத்திலும் அந்த அம்சத்தை எடுத்துவிட்டால், மூன்று நாட்களில் எப்படி மாறுவீர்கள் தெரியுமா? நீங்கள் நிச்சயம் கவலை இல்லாத குழந்தையைப் போல முழுமையாக மாறிவிடுவீர்கள். உங்கள் உடல் உறுப்புகளைப் பற்றிய உணர்விலேயே தொடர்ந்து இருக்கமாட்டீர்கள். நீங்கள் உட்காருவது, நடப்பது, நீங்கள் இருக்கும் விதம் என எல்லாமே முற்றிலும் மாறுபட்டு இருக்கும்.
இயற்கையின் ஒரு குறிப்பிட்ட தேவையைப் பூர்த்தி செய்வதற்காக உடலில் நடந்த ஒரு சிறிய ரசாயன மாற்றம், வாழ்க்கையைப் பற்றிய உங்கள் முழு பார்வையையும் எப்படி சிதைத்திருக்கிறது பாருங்கள். இது மட்டுமே விஷயம் அல்ல. இதுபோல இன்னும் லட்சக்கணக்கான விஷயங்கள் இருக்கின்றன. நீங்கள் எதனுடன் உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்களோ, அது வாழ்க்கையை பற்றிய உங்கள் பார்வையை முற்றிலும் சிதைத்துவிடுகிறது. சரியான உணர்திறன் இருக்கும் விதத்தில் மனதை வைத்து, எல்லைகளுடன் இருக்கும் உங்களுடைய அடையாளங்களை மனதளவில் அகற்றி, உங்களுடைய சக்தியை இப்போது இருக்கும் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிப்பதுதான் ஒட்டுமொத்த 'ஈஷா யோகா’வின் நோக்கம்.
இதன் மூலம் மட்டுமே கட்டுப்பாடுகள் மொத்தமும் விடுவிக்கப்பட்டுவிடாது; ஆனால் நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ள அந்த சின்னச் சின்ன அடையாளங்களிலிருந்து உங்களை விடுவித்துக்கொண்டால், அதை நோக்கிய முதல் அடி எடுத்து வைக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம்.
கரைவதற்கு நேரம் எடுக்கும் ஒரு பெரிய கர்ம கட்டமைப்பு இருக்கிறது. ஆனால் இந்த செயல்பாட்டை நீங்கள் ஆரம்பிக்கவில்லை என்றால், அதை நீங்கள் கரைப்பதற்கு பதிலாக மேலும் மேலும் சேர்த்துக் கொண்டு தான் இருப்பீர்கள்.
உங்களை சுற்றியுள்ள எல்லைக்குட்பட்ட விஷயங்களோடு நீங்கள் கொண்டிருக்கும் தீவிரமான அடையாளங்களை எடுத்துவிட்டீர்கள் என்றால், கர்மக் கட்டமைப்பை கரைப்பதற்கான அடிப்படை செயல்பாட்டை நீங்கள் ஆரம்பித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.