கேள்வி:

நமஸ்காரம் சத்குரு. நான் சில ஈஷா யோகப் பயிற்சிகளை கற்றேன். தியானப் பயிற்சிகளும் கொஞ்ச நாட்களாக செய்து வருகிறேன். Miracle Of Mind தியானம், தியான அனுபவமிக்க சாதகர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமா? இல்லை, இது தியானத்திற்கு புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களுக்கு மட்டும் தானா?

சத்குரு:

தியானமும் - முன் அனுபவமும்!

உங்களுக்கு தியானத்திற்கான தீட்சை கொடுக்கும்போது ஒரு அடிப்படையான குறிப்பு என்னவென்றால் - ஒருபோதும் சீனியர் மெடிடேட்டராக மாறாதீர்கள் என்பது தான். நான் இதை பலமுறை சொல்லியிருக்கிறேன். ஏன் என்றால் சீனியாரிட்டி என்பது மிகக் கொடுமையான பிரச்சனை. எல்லோருமே இதை செய்கின்றனர். உங்கள் பெற்றோர்கள் - அவர்களுடைய ஒரே தகுதி அவர்கள் உங்களுக்கு சில வருடங்களுக்கு முன்பே வந்துவிட்டார்கள் என்பது தான். ஆனால் எல்லாம் தெரிந்தது போல் அவர்கள் நடந்துகொள்வார்கள்.

உங்களுக்கு இருக்கும் அதே பிரச்சனைகள் அவர்களுக்கும் இருக்கிறது. ஆனால் எல்லாம் தெரிந்தது போல அவர்கள் நடந்துகொள்வார்கள். நீங்கள் ஒரு கல்லூரியில் போய் சேர்ந்துகொள்கிறீர்கள். உங்களுக்கு ஒரு வருடத்திற்கு முன் அங்கு சேர்ந்த ஒரு முட்டாள் சீனியர் - அவர் உங்களை அடிக்க நினைப்பார், துன்புறுத்துவார், எல்லாவிதமான விஷயங்களும் செய்ய நினைப்பார்.

உங்கள் மனம் ஏற்கனவே அதிசயமாக மாறியிருந்தால், எதையுமே செய்யத் தேவையில்லை. இன்னமும் மேலும் கீழும் போய்க்கொண்டு, இன்னும் முயற்சி தேவைப்பட்டால், நீங்கள் நிச்சயம் செய்ய வேண்டும்.

பல கல்லூரிகளில் இதுவே ஒரு கலாச்சாரமாக மாறிக்கொண்டிருக்கிறது. இது எப்படிப்பட்ட தகுதி? அவர் உங்களை விட ஒரு வருடத்திற்கு முன் அங்கு சேர்ந்துவிட்டார், அவ்வளவுதான். எல்லா இடத்திலும் இந்த சீனியாரிட்டி இருக்கிறது. ஒருபோதும் சீனியர் மெடிடேட்டராக மாறாதீர்கள் என்று நான் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன். ஏன் என்றால், தியானம் என்பது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் ஒரு அம்சம் - அது நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் எதிலிருந்தும் வரவில்லை.

நீங்கள் ஒரு இசைக்கருவியை வாசிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அதை 25 வருடம் வாசித்திருக்கிறீர்கள் என்றால், அதற்கு நாங்கள் உரிய மரியாதை தருவோம். ஏன் என்றால் அந்த அனுபவம் தான் இன்று இசையாக வெளிப்படுகிறது. நீங்கள் நேற்று முன்தினம் தான் கற்றுக்கொண்டீர்கள் என்றால், ஒரு சில இடங்களில் நன்றாக வாசிப்பீர்கள், ஆனால் மீதி உள்ள பெரும்பாலான பகுதியால் எங்களுக்கு தான் வேதனை. இசை மிகப்பெரிய சந்தோஷத்தையும் கொடுக்கும், வேதனையையும் கொடுக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இசை கலைஞர்கள் யாரேனும் உங்கள் பக்கத்து வீடுகளில் இருக்கிறார்களா? ஏன் என்றால் இசைக்கு சுற்றியிருப்பவர்கள் அனுபவமும் முக்கியமாகிறது. ஆனால் தியானம் அப்படிப்பட்டது அல்ல. அது அனுபவத்தால் இல்லாமல் தன்னார்வத்தால் நிகழ்கிறது. தனிப்பட்ட அனுபவத்தைப் பொறுத்து இருக்கும் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். இப்போது நாம் காதலைப் பற்றி பேசுகிறோம். நான் சீனியர் காதலன் - இதற்கு அர்த்தம் ஏதும் இருக்கிறதா? இது எப்படிப்பட்ட முட்டாள்தனம். உண்மையில் புதிய காதலர் தான் சிறப்பான காதலர்.

தியானம் - தனிப்பட்ட உள்நிலை அனுபவம்

இப்படி நடந்தது. எட்டு வயது சிறுமி பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்து தன் அம்மாவிடம், "அம்மா, தோட்டத்தில் ஒரு தவளையைப் பிடித்து முத்தம் கொடுத்தால், அது இளவரசனாக மாறிவிடும் என்று பள்ளியில் சொன்னார்கள்," என்றாள். அம்மா அவளை சோர்வுடன் பார்த்து, "முதல்முறை முத்தம் கொடுக்கும்போது, அவர்கள் எப்போதும் இளவரசனைப் போலத்தான் தெரிவார்கள். கொஞ்ச காலத்திற்குப் பின் அவர்கள் தவளையாகவே மாறிவிடுவார்கள்," என்றாள். அனுபவத்தைக் கொண்டு பார்த்தால், அது மேலும் சிறப்பானதாக மாறுவதில்லை.

தனிப்பட்ட அனுபவத்தை சார்ந்து இருக்கும் வாழ்க்கையின் எல்லா அம்சங்களும், அது புதிதாக இருக்கும்போது அற்புதமாக இருக்கிறது. அனுபவங்களை சேகரிக்கும்போது அது வழக்கமான ஒன்றாகிவிடும். தியானம் என்பது அப்படிப்பட்ட அம்சம் தான். 10 வருடங்கள் நான் தியானம் செய்திருக்கிறேன். நான் என்ன செய்தாலும் அது வேலை செய்யும். இல்லவே இல்லை. குறிப்பாக எப்போது நீங்கள் 10 வருடங்கள் நான் தியானம் செய்திருக்கிறேன் என்று கணக்கு வைத்துக் கொள்கிறீர்களோ நீங்கள் தியானம் செய்பவராக இல்லாமல் பணியாளர் போல ஆகிவிடுகிறீர்கள். பணியாளர் தான் நிமிடங்களையும் மணி கணக்கையும் பார்த்துக் கொண்டிருப்பார். அதை வைத்து தான் அவருக்கு ஊதியம் தரப்படுகிறது.

கணக்குப் போடுவது தியானம் அல்ல

எனவே, நான் நேரத்தை கணக்கிட்டுக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு அந்த மெஷின் தெரியும் இல்லையா? பணியாளர்கள் உள்ளே வரும்போது அதில் பதிய வேண்டும். வழக்கமான வேலைகளை செய்யும் மக்களை நீங்கள் வேலை செய்ய வைக்க வேண்டும். ஏன் என்றால் எப்போது நிறுத்தலாம் என்று அவர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் தியானம் அப்படிப்பட்ட விஷயம் அல்ல. நீங்கள் அதற்கு நேரம் குறித்து வைத்துக்கொண்டு 10 வருடங்கள் நான் தியானம் செய்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது.

எனவே முக்கியமானது என்னவென்றால், எல்லா சீனியர் மெடிடேட்டர்களும், நீங்கள் சம்யமா செய்திருந்தால் கூட, Miracle of Mind தியானம் செய்யுங்கள். உங்களுடன் தொடர்பில் இருக்கும் 100 நபர்கள் இதை செய்யும்படி உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.

நான் 10 வருடங்கள் தியானம் செய்திருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கும் அந்த கணமே, நீங்கள் தியானத்தில் இல்லை, எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தம். ஏன் என்றால் நீங்கள் கணக்கு போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். தியானத்தின் நோக்கமே காலம், வெளி என்று நாம் எதைக் குறிக்கிறோமோ அதைத் தாண்டிப் போகவேண்டும் என்பது தான். அதில் போய் நேரத்தை கணக்கு வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

சம்யமாவில் இருந்தவர்களுக்கு அவர்களுடைய கணுக்கால் நேரத்தை கணக்கு வைத்திருக்கும். உடலுக்கென்று சில பிரச்சனைகள் இருக்கிறது என்று எனக்கு புரிகிறது. உடல் காலத்திற்கு உட்பட்டது. சில விஷயங்கள் உடலைப் பாதிக்கும், சிறுநீர்ப்பை நிறைந்துவிடும், உங்களுக்கு பசிக்கும்.. இப்படி பல விஷயங்கள் இருக்கிறது.

நீங்கள் அதை கவனித்தாக வேண்டும். ஆனால் நீங்கள் கணக்கு வைத்துக் கொள்ளக்கூடிய வகையில் தியானம் இல்லை.

நீங்கள் கணக்கு வைத்துக்கொள்ளாத போது வருடங்கள் ஏன் முக்கியத்துவம் பெறப் போகிறது? ஷூன்யா, ஷாம்பவி, சக்தி சலன கிரியா, சம்யமா.. நான் சம்யமா செய்திருக்கிறேன் என்று சொல்லும்போதே அப்போது கணுக்காலுக்கும், இடுப்புக்கும், முதுகெலும்புக்கும் என்ன நேர்ந்தது என்று நினைத்தால் குரல் நடுங்குகிறது. உங்களை கொடுமைப்படுத்துவது நோக்கம் அல்ல. நீங்கள் மிகக் குறைந்த அளவில் உங்களை தயார்படுத்திக் கொண்டு நிகழ்ச்சிக்கு வந்துவிட்டீர்கள். நீங்கள் உங்கள் சாதனாவைத் தொடர்ந்து செய்துவிட்டு இங்கு வந்து உட்கார்ந்திருந்தால், அந்த செயல்முறையில் தொலைந்து போயிருப்பீர்கள்!

உடலுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி

உங்கள் உடலைக் கொஞ்சம் தள்ளி வைப்பது மிகவும் முக்கியமான பகுதி. உங்கள் உடலைப் பற்றி பொருட்படுத்தாமல் நீங்கள் வெறுமனே இங்கு உட்காரும் வகையில் உங்கள் உடலை தயார்படுத்தவில்லை என்றால், அது தன்னுடைய மொழியில் பேச ஆரம்பித்துவிடும். சில காலமாக தியானம் செய்து கொண்டிருப்பவர்கள் Miracle of Mind தியானம் செய்ய வேண்டுமா? உங்கள் மனம் ஏற்கனவே அதிசயமாக மாறியிருந்தால், எதையுமே செய்யத் தேவையில்லை. இன்னமும் மேலும் கீழும் போய்க்கொண்டு, இன்னும் முயற்சி தேவைப்பட்டால், நீங்கள் நிச்சயம் செய்ய வேண்டும். தியானம் செய்தால் மட்டும் போதாது. உங்களை சுற்றி ஒரு சூழலை உருவாக்க வேண்டும்.

உங்களை சுற்றியிருப்பவர்களை தியானம் செய்ய வையுங்கள்

ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் கொஞ்சம் முட்டாள்தனத்துடன் இருந்தால், அது உங்களை பல வழிகளில் தொந்தரவு செய்கிறது என்றால், நீங்கள் உங்களை சுற்றி இருப்பவர்களையும் தொந்தரவு செய்வீர்கள். மற்றவர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அவர்களும் கொஞ்சம் முட்டாள்தனத்துடன் இருந்தால், நீங்களும் சேர்ந்து துன்பப்படுவதை அவர்கள் உறுதி செய்வார்கள். அப்படி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால் அல்ல, இயல்பாகவே அப்படி செய்வார்கள். இந்த உயிர் துன்பத்தில் இருந்தால், அது துன்பத்தை தான் பரப்பும். இது மகிழ்ச்சியாக இருந்தால், மகிழ்ச்சியை பரப்பும்.

குடும்பத்திலும் நண்பர்களுடனும் கொஞ்சம் கசப்பான சூழல் இருந்தால் அதை சரியாக கையாள எவ்வளவு சக்தி தேவைப்படுகிறது என்று நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

அவர்கள் குறிப்பாக ஏதோ ஒன்றை செய்ய வேண்டும் என்பதில்லை. அவர்கள் நடக்கும் விதத்திலேயே உங்களை கொன்றுவிடுவார்கள். நீங்கள் முக்கியமான ஏதோ ஒன்றை செய்ய நினைக்கும்போது உங்களுக்கு பக்கத்தில் அவர்கள் நடக்கும் விதமே உங்களை கொன்றுவிடும்.

எனவே முக்கியமானது என்னவென்றால், எல்லா சீனியர் மெடிடேட்டர்களும், நீங்கள் சம்யமா செய்திருந்தால் கூட, Miracle of Mind தியானம் செய்யுங்கள். உங்களுடன் தொடர்பில் இருக்கும் 100 நபர்கள் இதை செய்யும்படி உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். அப்போது தான் ஒரு உகந்த சூழல் உங்களுக்கு உருவாகும். உகந்த சூழல் தேவைப்படும் நிலையில் தான் நீங்கள் இப்போதும் இருக்கிறீர்கள்.

நான் உங்களுடன் தான் இருக்கிறேன். நன்றாக தான் இருக்கிறேன். சுற்றி இருப்பவர்கள் பலவிதமான செயல்களை செய்கிறார்கள். ஆனால் என்ன நடந்தாலும் நான் இப்படித்தான் இருக்கிறேன். என்ன செயல் தேவைப்படுகிறதோ அதை நாம் செய்வோம், ஆனால் உள்நிலையை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது. எனவே எந்த பிரச்சனையும் இல்லை. நான் ஒரு ரகசியம் சொல்கிறேன். நான் Miracle of Mind தியானம் செய்வதில்லை. பாருங்கள், சத்குருவே தியானம் செய்வதில்லை என்று நீங்கள் நினைக்கலாம். அதனால் தான் நீங்கள் நிச்சயம் செய்ய வேண்டும். ஏன் என்றால் என்னுடைய மனம் அதிசயமான ஒன்றாகத்தான் இருக்கிறது.

நீங்கள் நிச்சயம் பயிற்சி செய்ய வேண்டும். அதோடு நீங்கள் தொடர்பில் இருக்கும், தினமும் பேசிப் பழகும் 100 நபர்களாவது இதை செய்வதை உறுதி செய்ய வேண்டும். இப்படி செய்தால் இப்போது இருப்பதைவிட உங்கள் வாழ்க்கை மிக சிறப்பாக மாறும். நீங்கள் எல்லோருமே உங்களுக்கு தெரிந்த 100 நபர்கள் இதை டவுன்லோடு செய்யும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஏன் என்றால் நீங்கள் வாழவேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் புத்திசாலியான, இனிமையான, அற்புதமான மனிதர்களுடன் வாழ்வது தான் நன்றாக இருக்கும்.

இதைத்தான் நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அதையேதான் நீங்களும் செய்ய வேண்டும்‌. உங்களிடம் இப்போது கருவி இருக்கிறது. அதை அவர்களுக்கு பரிசாக கொடுங்கள். ஏதாவது செய்து அவர்களை ஊக்கப்படுத்துங்கள். 7 நிமிடங்கள் தான். உங்கள் வாழ்க்கையும் நல்வாழ்வும் 7 நிமிடங்கள் முதலீடு செய்யும் அளவிற்குக் கூட தகுதியான ஒன்று இல்லையா? எனவே நீங்கள் தினமும் பேசிப் பழகும் 100 நபர்களாவது இந்த எளிமையான 7 நிமிட தியானம் செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இது எல்லாவற்றையும் மாற்றிவிடாது. குறைந்தபட்சம் யாரும் வந்து உங்கள் முகத்தை தினமும் கீறமாட்டார்கள். ஒரு சில நேரம் செய்வார்கள். நீங்கள் விரும்பும் நபர்கள் எப்போதும் உங்களை கீறிக்கொண்டு தான் இருக்கிறார்கள். உங்களை வெறுப்பதால் அல்ல, விரும்புவதால்.

அன்பும் வெறுப்பும்

ஏன் இப்படி என்றால் அன்பும் வெறுப்பும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஒரு பக்கம் தலை மறுபக்கம் வால். நீங்கள் நாணயத்தை இப்படி சுழற்றும்போது, ஒரு பக்கம் விழுந்தால் அன்பு, மறுபக்கம் விழுந்தால் வெறுப்பு. உங்களை சுற்றி இருப்பவர்கள் யாருமே ஒரே மாதிரி நிரந்தரமாக இருக்க மாட்டார்கள். சில நேரம் இந்த பக்கம், சில நேரம் அந்த பக்கம் சாய்வார்கள்.

அவர்களுக்குள் கொஞ்சம் தியானத்தின் தன்மை இருக்குமாறு நீங்கள் உறுதி செய்தால் அது உங்கள் வாழ்வையும் உலகத்தையும் இனிமையானதாக மாற்றும். மனிதர்கள் இனிமையான நிலையில் இருந்தால், அவர்களுக்குள் இருக்கும் ஆற்றலை, சிறப்பாக வெளிக்கொண்டுவர முடியும்.

அப்படி இல்லை என்றால் நிறைய நேரமும் சக்தியும் கசப்பான சூழ்நிலைகளை சமாளிப்பதிலேயே போய்விடும். குடும்பத்திலும் நண்பர்களுடனும் கொஞ்சம் கசப்பான சூழல் இருந்தால் அதை சரியாக கையாள எவ்வளவு சக்தி தேவைப்படுகிறது என்று நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? இனிமையான சூழலில், இன்னும் படைப்பாற்றல் மிக்க, சிறப்பான ஒன்றை உருவாக்குவதற்கு உங்களுக்கு சக்தி இருக்கும்.

இந்த நோக்கத்தில், எல்லோரும், எல்லா தியான அன்பர்களும் இந்த 7 நிமிட தியானப் பயிற்சியை செய்து, அது அவர்களுக்கு எப்படிப்பட்ட பயனைத் தருகிறது என்று உணர வேண்டும். நீங்கள் தினமும் பேசிப் பழகும் நபர்கள் தியானம் செய்வதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இது நிச்சயம் உதவும்.

குறிப்பு:

Miracle of Mind தியானம் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும், அதற்கான செயலியை (App) இலவசமாக டவுன்லோடு செய்யவும் இங்கே கிளிக் செய்யுங்கள்.