சத்குரு:

நமஸ்காரம், மதிய வணக்கம். மரியாதைக்குரிய மக்கள் சபையில் உரையாற்றுவது மதிப்பிற்கும் மகிழ்ச்சிக்கும் உரிய ஒன்று.

நாட்டின் முதல் மாநிலமாகவும், தேசத்திலேயே வணிகத்திற்கு மிகவும் உகந்த மாநிலமாகவும் டெலாவேர் திகழ்கிறது. ஏனென்றால், வெற்றிகரமான வணிகங்கள் தான் வெற்றிகரமான தேசங்களை உருவாக்குகிறது; டெலாவேர் அந்த திசையில் முதன்மையான மாநிலமாக நிமிர்ந்து நிற்கிறது. Fortune 500 என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் தலைசிறந்த நிறுவனங்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை டெலாவேரை தலைமையிடமாகக் கொண்டு இயங்குவது சாதாரண சாதனையல்ல. கடந்த சில தசாப்தங்களில் வகுக்கப்பட்ட தொலைநோக்கு பார்வையுள்ள கொள்கைகளுக்கு தான் இதற்கு நன்றி சொல்ல வேண்டும். அநேகமாக உங்களில் பலரும் அந்த கொள்கைகளை உருவாக்குவதில் பங்களித்திருப்பீர்கள்."

மனித வரலாற்றில் வேறு எந்த தலைமுறையும் கனவில் கூட பார்க்காத சௌகரியங்களையும் வசதிகளையும் நம் தலைமுறை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நாம் வாழ்க்கை என்று சொல்லும் இந்த செயல்முறை மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

எல்லாமே அதிசயம்!

நாம் இந்த பூமியில் வாழ்கிறோம், நாம் வாழும் இந்த படைப்பில், ஒரு பூ மலர்வதை பார்ப்பதற்கு நமக்கு கண்கள் இருந்தால், அது ஒரு அதிசயம் என்பதை நம்மால் உணர முடியும். நீங்கள் ஒரு செடியின் வேரில் சாணியை கொட்டினால், அந்த செடியில் ஒரு அழகான, வாசனைமிக்க பூ பூக்கிறது - இது ஒன்றும் சாதாரண அதிசயமல்ல. இப்படியே நம்மைச் சுற்றி இருக்கும் விஷயங்களை கவனித்து பார்த்தால், படைப்பின் ஒவ்வொரு துகளும் அதிசயம் தான், மனிதர்கள் உட்பட. இந்த உடல் வெறும் இரண்டு அணுக்களில் இருந்து பிறந்தது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இன்று நாம் இங்கே இருக்கிறோம் பாருங்கள்! நீங்கள் போதுமான கவனம் செலுத்தினால், இந்த பூமியில் சாதாரணமானது என்று நினைக்கும்படியான ஒரே ஒரு விஷயத்தை கூட உங்களால் கண்டுபிடிக்க முடியாது. எல்லாமே அதிசயம் தான். எல்லா அதிசயங்களிலும், மிகப்பெரிய அதிசயம் என்றால் அது மனிதனின் மனமும், புத்திசாலித்தனமும்தான்.

பரிணாம வளர்ச்சியின் சிகரம்

இன்று பலவிதமான தொழில்நுட்பங்களைப் பார்ப்பதில் நாம் ஆச்சரியமடைகிறோம் - நமது செல்போன்கள், அநேகமாக ஒவ்வொருவரும் வைத்திருக்கிறோம். நம்முடைய கம்ப்யூட்டர்கள், நம்முடைய விண்கலங்கள் என இன்னும் பலப்பல விஷயங்களில் பலவிதமான தொழில்நுட்பங்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். ஆனால் இவை எல்லாமே மனிதன் என்று நாம் அழைக்கும் அதிசயத்தில் இருந்து சிதறிய சிறு துளி தான். அதிசயத்தை நாம் உருவாக்கவில்லை, இந்த பூமியில் நடந்துள்ள பரிணாம வளர்ச்சி குவியலின் சிகரத்தில் இருப்பதை வெறுமனே ரசித்துக் கொண்டிருக்கிறோம், அவ்வளவுதான். படைத்தல் செயலை நாம் செய்யவில்லை, ஆனால் நம்மை எப்படி வைத்துக்கொள்கிறோம் என்பது 100 சதவீதம் நம்முடைய செயல் தான்.

எங்கே போனது ஆனந்தம்?

அதிசயமானதாக இருந்திருக்க வேண்டிய ஒன்று - மனித புத்திசாலித்தனம் - இன்று துரதிருஷ்டவசமாக மிகப்பெரிய வலியாக பலருக்கும் மாறிவிட்டது. நமக்கு உடல் ரீதியாக நடக்கும் துன்பத்தைத் தவிர மனிதர்கள் அனுபவிக்கும் மற்ற துன்பங்கள் எல்லாமே அடிப்படையாக மனித மனதில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. எது மிகப்பெரிய அதிசயமோ, அது துன்பத்தை உருவாக்கும் தொழிற்சாலையாக பலருக்கும் மாறியிருக்கிறது. அவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்பதற்கு ஒவ்வொருவரும் நிச்சயமாக ஒரு காரணத்தை வைத்திருக்கிறார்கள். ஆனால் நாம் எல்லோருமே குழந்தைகளாக இருந்தபோது எப்போதுமே ஆனந்தமாக சிரிப்போடு தான் இருந்தோம். உங்களுக்குள் துள்ளிக்கொண்டிருந்த உற்சாகத்தையும், உயிர்ப்போடு இருக்கும் மகிழ்ச்சியையும் அப்போது உங்களால் கீழே கொண்டுவரவே முடியவில்லை. ஆனால் மெல்லமெல்ல இறந்தவர்களைப் போல் இருப்பதற்கு நாம் பயிற்சி எடுப்பவர்களாகிவிட்டோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நாம் கற்க வேண்டிய உண்மையான கல்வி

மனித வரலாற்றில் வேறு எந்த தலைமுறையும் கனவில் கூட பார்க்காத சௌகரியங்களையும் வசதிகளையும் நம் தலைமுறை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நாம் வாழ்க்கை என்று சொல்லும் இந்த செயல்முறை மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. நம் பெற்றோர்கள், தாத்தா பாட்டி, முன்னோர்கள் என யாருமே கற்பனை கூட செய்து பார்க்க முடியாத சௌகரியமும் வசதியும் நமக்கு இருக்கிறது. ஆனால் அடிப்படையாக பல வழிகளிலும், மக்கள்தொகையில் பெரும்பாலானோர், குறிப்பாக இளைஞர்களின் மனங்கள் உடைந்து கொண்டிருக்கிறது. இது ஒரு பெருந்தொற்றுநோய் போல் பரவுவதற்கு முன் நாம் செயல்பட வேண்டும் - ஆனால் இதற்கான சிகிச்சை முறைகள், மனநல மருத்துவர்கள், மருந்துகளை அதிகரிப்பதன் மூலமல்ல. தங்களின் உடல், மனம், ரசாயன மாற்றங்கள், எண்ணங்கள், உணர்ச்சிகள் ஆகியவற்றை அவர்கள் விரும்புவது போல் நிர்வகிக்கும் வழிகளை அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். துரதிருஷ்டவசமாக இதற்கான வாய்ப்புகள் உலகிலுள்ள நம்முடைய கல்வி முறைகள் எதிலுமே இல்லை. சமூக அமைப்புகள் அதை புறக்கணிக்கிறது. நாம் அதற்கான விலையை கொடுக்கத்தான் போகிறோம்.

கருத்துக் கணிப்பை பொய்யாக்குவோம்

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு கணிப்பில், 2045 முதல் 2055 காலகட்டத்திற்குள், 20 சதவீத மக்கள் தற்கொலை செய்துகொள்ளக்கூடும் என்று சொல்கிறது. இந்த அபாயகரமான கணிப்பு தவறு என்று நாம் நிரூபிக்க வேண்டும். இது வல்லுநர்களின் கணிப்பு என்றாலும், எல்லா கணிப்புகளும் பழைய புள்ளி விவரங்களையே அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது. மனித இதயங்களுக்குள் இருக்கும் "நாளை நாம் என்ன செய்ய விரும்புகிறோம்" என்ற துடிப்பை கணிப்புகள் ஒருபோதும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. எனவே நம்முடைய நோக்கம், அடுத்த தலைமுறையினர் நம்மைவிட ஒரு படி மேலே நன்றாக வாழவேண்டும், மோசமாக அல்ல என்பதாக இருந்தால் -'நன்றாக வாழ்வது' என்றால் வெறும் பொருளாதாரமோ, சௌகரியங்களோ, தொழில்நுட்பமோ அல்ல. நன்றாக வாழ்வது என்றால், நாம் இன்னும் அமைதியானவர்களாக, இன்னும் ஆனந்தமானவர்களாக, இன்னும் அன்பானவர்களாக, இன்னும் அரவணைத்துக் கொள்ளும் தன்மையுடனும், இன்னும் கருணையுடனும் இருப்பது தான். இது நம்முடைய புத்திசாலித்தனத்தை நாம் எப்படி நிர்வகிக்கிறோம் என்பதை கற்றுக்கொண்டால் மட்டுமே சாத்தியமாகும்.

மனரீதியான நோய்கள் என்று நாம் அழைப்பவை எல்லாமும், நம்முடைய புத்தியை நிர்வகிக்கும் திறமை நமக்கு இல்லை என்பதை தான் குறிக்கிறது. யாரோ ஒருவர் வெளியில் இருந்து நம்மை குத்தினால், தற்காத்துக்கொள்ளலாம், நாம் பல விஷயங்களை செய்யலாம், அல்லது அங்கிருந்து சென்றுவிடலாம். ஆனால் நமக்குள் இருந்து நாமே நம்மை குத்திக்கொண்டால், அதிலிருந்து தப்பிக்க வேறு வழியே இல்லை, நமக்குள் திரும்பிப் பார்த்து அதற்கான தீர்வைக் கண்டறிவதை தவிர.

என்றும் இளைஞர்கள் நாம்

எனவே இந்த "Miracle of Mind" எல்லோராலும் மிக எளிமையாக செய்யக்கூடியது. எமது முழு வாழ்க்கையும் இதுபோன்ற‌வற்றுக்காகவே நடக்கிறது. இன்னும் நுட்பமான, பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய முறைகளையும் வழங்குகிறோம். ஆனால் அதற்கு இன்னும் கட்டுக்கோப்பு தேவை. அதனால் தான் இந்த “Miracle of Mind” கொண்டு வந்தோம். இன்று, உலகளவில் பல லட்சம் மக்கள் இதை பயிற்சி செய்கிறார்கள். இதை நாம் கட்டணமின்றி வழங்குகிறோம். இது எல்லோருக்குமானது என்றாலும், குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால், என்னைப் பொறுத்தவரையில், நாம் சுவாசித்துக் கொண்டு உயிரோடு இருக்கும் வரையிலும் போதுமான அளவுக்கு இளமையோடு தான் இருக்கிறோம். வயதாகிவிட்டால் நாம் இறந்து போயிருப்போம். நாம் உயிருடன் இருக்கும் அளவிற்கு இளமையாகத் தான் இருக்கிறோம். அப்படியென்றால் நாம் இளைஞர்கள் தான்.

தேவை ஆனந்த ரசாயன மாற்றம்

எனவே இங்கு இருக்கும் இளைஞர்களான நீங்கள் அனைவருமே - நம்முடைய எண்ணங்கள், உணர்ச்சிகள், ரசாயன மாற்றங்கள் இவை அனைத்தையும் எப்படி நடத்திக்கொள்வது என்று நாம் கற்றுக்கொள்வது முக்கியம். இன்று இதை பற்றி போதுமான ஆய்வுகள் நடந்திருக்கிறது. ஹார்வர்டு மருத்துவப் பள்ளியின் கற்பிக்கும் மருத்துவமனையான பெத் இஸ்ரேல் மருத்துவமனை இது பற்றிய விரிவான ஆய்வுகளை நடத்தி கண்டறிந்துள்ள முடிவுகளை நீங்களே இணைய தளத்தில் பார்க்கலாம். 6 வார கால பயிற்சியிலேயே ரத்தத்தில் குறிப்பிடத்தக்க ரசாயன மாற்றம் ஏற்பட்டு, அது இயல்பாகவே ஆனந்தமாக மாறுகிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. ஏனென்றால் மனித அனுபவங்கள் அனைத்துமே ஒரு ரசாயன அடிப்படையைக் கொண்டுள்ளது. நாம் அமைதி என்று எதை சொல்கிறோமோ அது ஒரு வகையான ரசாயன மாற்றம். எதை மகிழ்ச்சி என்று சொல்கிறோமோ அது ஒரு வகையான ரசாயன மாற்றம். நிம்மதி என்பது ஒரு வகையான ரசாயன மாற்றம், குழப்பம் ஒரு வகையான ரசாயன மாற்றம், வேதனை ஒரு வகை, பரவசம் மற்றொரு வகையான ரசாயன மாற்றம்.

அனைவரிடமும் உள்நிலை நல்வாழ்வுக்கான தொழில்நுட்பம்

எனவே, வெளிப்புற சூழலில் நன்மையை உருவாக்குவதற்காக எப்படி ஒரு அறிவியலும் தொழில்நுட்பமும் இருக்கிறதோ, அதேபோல உள்நிலையில் நன்மையை உருவாக்கவும் ஒரு முழுமையான அறிவியலும் தொழில்நுட்பமும் இருக்கிறது. இது மதம் சார்ந்ததல்ல, தத்துவம் அல்ல, ஏதோ ஒரு கருத்தியலும் அல்ல. இது வெறுமே ஒரு தொழில்நுட்பம் - நல்வாழ்வுக்கான கருவி. நான் ‘கருவி’ என்று சொல்லும்போது, மனிதர்களாகிய நாம் மற்ற எல்லா உயிரினங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துவது, கருவிகளை உபயோகிக்கும் திறமை நமக்கு இருப்பதால் தான். வெளிசூழல்களுக்கு ஏற்ப செயல்படும் கருவிகள் இருப்பது போல, ஒவ்வொருவரின் உள்நிலைக்கு ஏற்பவும் உபயோகிக்கக்கூடிய கருவிகளும் இருக்கிறது. இந்த கருவிகள் நீண்ட காலமாக பலவிதமான மனிதர்களின் கைகளில் இருந்துள்ளது. இந்த கருவிகள் இனிமேலும் ஒரு குருவின் (தன்னை குறிப்பிட்டு) கைகளிலோ, ஒரு நிறுவனத்தின் கைகளிலோ மட்டுமே இருக்கக்கூடாது.

இது வெறும் கருத்தல்ல, இது ஒரு கருவி

இந்த விஷயத்தை என்னிடம் சொன்னார்கள். அதாவது, 1865ம் வருடம் 45 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்க ஆண்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு பற்கள் இல்லாமல் போய்விட்டதாம். இன்று உங்களுக்கு என்ன வயது ஆகியிருந்தாலும், ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் இன்று உங்கள் எல்லோருக்குமே பற்கள் இருக்கிறது. இது பல் டாக்டர்கள் இருப்பதால் அல்ல. நம்முடைய தாய் நமக்கு பல் தேய்ப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்ததால் தான்.

எனவே உள்நிலைக்கான கருவிகளும் இதுபோல மாறவேண்டும், நம் குடும்பங்களில் இப்படி நடக்க வேண்டும். நம் தாய் நமக்கு டாய்லெட் போக கற்றுக் கொடுத்ததைப் போல, நம் மனதை எப்படி கையாள வேண்டும் என்பதையும் கற்றுத்தர வேண்டும் - ஒரு நம்பிக்கை முறையாகவோ, கருத்தாகவோ இல்லாமல் - ஏனென்றால் நம்பிக்கைகளையும் கருத்துகளையும் நாம் மறுக்கவோ எதிர்க்கவோ முடியும் - மாற்றத்திற்கான கருவிகளை கொண்டு கற்றுத்தர வேண்டும், இது இப்போது சாத்தியமே. இதற்காகதான் Miracle of Mind.

அரண்மனைகளில் வாழ்கிறோம்

நாம் Miracle of Mind அறிமுகப்படுத்திய முதல் 15 மணி நேரத்தில், 1 மில்லியன் மக்களுக்கும் மேல் இந்த Appஐ டவுன்லோடு செய்திருக்கிறார்கள். ChatGPTயை விட வேகமாக நம்முடைய App டவுன்லோடு செய்யப்பட்டிருக்கிறது என்று இன்று நம்முடைய தன்னார்வலர்கள் பெருமையாக பேசிக்கொள்கிறார்கள். ஆனால் அது முக்கியமில்லை. முக்கியமானது என்னவென்றால் தனிமனிதர் ஒவ்வொருவரும் இதை பயிற்சி செய்து இதை நிகழச் செய்ய வேண்டும். உள்நிலை நலனுக்கான ஒரே வழி - மனிதர்களின் நல்வாழ்விற்கான ஒரே வழி “உள்முகமாக திரும்புவது தான்”. வெளிசூழலை எந்த அளவுக்கு வேண்டுமோ அந்த அளவுக்கு நம்மால் அமைத்துக்கொள்ள முடியும். இப்போது நாம் அரண்மனைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆமாம்,‌ நிஜமாகவே நாம் அரண்மனைகளில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 200 வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை ஒப்பிட்டு பாருங்கள் - நாம் இப்போது அரண்மனைகளில் தானே வாழ்கிறோம்? 400-500 குதிரைகளின் சக்தியுள்ள வண்டிகளை ஒட்டுகிறீர்கள். மாவீரனான அலெக்சாண்டருக்கு கூட இப்படியொரு சக்திவாய்ந்த வண்டி கிடைக்கவில்லை.

நான் சொல்வது என்னவென்றால், மனிதகுல வரலாற்றில் எந்த ஒரு தலைமுறைக்கும் இல்லாத விஷயங்கள் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. துரதிருஷ்டவசமாக, மக்கள்தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீத மக்களுக்கு இன்னும் உணவு கிடைப்பதில் பிரச்சனையும் வேறு பிரச்சனைகளும் இருக்கிறது. பார்க்கப்போனால் மனிதகுல வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த பூமியில் 80 சதவீத மக்களுக்கு சிறப்பான பல விஷயங்கள் இப்போது கிடைத்திருக்கிறது. நிலைமை இப்படி இருக்கும்போது, நம் உள்நிலையில் நலமாக இருப்பதும், நாம் மகிழ்ச்சியான, அன்பான, அற்புதமான மனிதர்களாக இருப்பதும் மிகவும் முக்கியமாகிறது. அப்படி இல்லாமல் போனால் ஒரு தனிமனிதனையோ ஒரு சமூகத்தையோ அல்லது ஒரு தேசத்தையோ ஏழ்மையிலிருந்து செழுமைக்கு நகர்த்தும் எல்லா முயற்சிகளும் பெரும் பொருட்செலவுடைய மற்றும் மிகவும் கடினமான ஒரு பணியாகும். அப்படி செழுமையான ஒரு இடத்திற்கு வந்த பின், அங்கு நாம் மகிழ்ச்சியாக இல்லை என்றால் அது எப்படிப்பட்ட பேரழிவாக இருக்கும்! இந்த முயற்சிகள் எல்லாமே அந்த பேரழிவை தவிர்ப்பதற்கு தான்.

100% நம் கையில்

இன்னும் யாருக்கெல்லாம் நம்மால் உணவு வழங்க முடியவில்லையோ, இன்னும் யாருக்கெல்லாம் அமைதியான ஒரு சூழலை தர முடியவில்லையோ - அது முழுமையாக நம் கைகளில் இல்லை. ஆனால் யாருக்கு வயிறு நிறைந்துவிட்டதோ, குறைந்தபட்சம் அவர்களாவது அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். இது நிகழ வேண்டும், ஏனென்றால் நம் வாழ்க்கையை நாம் எப்படி உணர்கிறோம் என்பதுதான் ஒரு மனிதனுக்கு இருப்பதிலேயே மதிப்பானது. இதை நாம்தான் நிர்ணயிக்கிறோம், ஏனென்றால் ஒரு மனிதனின் அனுபவம் என்னவாக இருந்தாலும், அது உள்ளுக்குள் தான் நடக்கிறது. வெளிசூழ்நிலைகள் நடப்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. இந்த உலகம் எதை வேண்டுமானாலும் நம் மீது வீசலாம். அதை வைத்து நாம் என்ன செய்கிறோம் என்பது 100 சதவீதம் நம் கைகளில் தான் இருக்கிறது.

மக்களை ஆற்றல் மிக்கவர்களாக்குவதற்காக, இங்கிருக்கும் எல்லா இளைஞர்களும்.. சார் (சற்றே முதிர்ந்த ஒருவரை குறிப்பிட்டு).. நான் உங்களைத்தான் சொல்கிறேன்.. மற்ற எல்லா இளைஞர்களுக்கும் - என் ஆசியும் அருளும் என்னவென்றால், இந்த “Miracle of Mind” அனைவரின் வாழ்க்கையையும் தொடவேண்டும். இது கட்டணமின்றி வழங்கப்படுவதால், மக்கள் இதை பயன்படுத்திக்கொள்ள‌ முடியும். முக்கியமாக பள்ளி, கல்லூரிகளில், டெலாவேரில் இருக்கும் இளைஞர்கள் இந்த கருவிகளை நிச்சயமாக வைத்திருக்க வேண்டும் என்பது என் விருப்பம். அதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது அவர்கள் விருப்பம், ஆனால் கருவி அவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

சத்குருவிடம் கேளுங்கள்

மிக்க நன்றி. உங்களுக்கு கேள்விகள் இருந்தால், ஒரே ஒரு கேள்வியை மட்டும் என்னால் எடுத்துக்கொள்ள முடியும்.

கேள்வியாளர்: மேடம் ப்ரெசிடெண்ட், நாம் கேள்விகளை கேட்கலாம் என்பது எனக்கு தெரியவில்லை. இந்த வாய்ப்பை நான் எடுத்துக்கொண்டு, சத்குருவிடம் வெளிப்படையாக கேட்கிறேன், அவருடைய வார்த்தைகளை, விவேகத்தை, அவர் இங்கு வருகை தந்ததை பாராட்டுகிறேன். அதை பற்றி பிறகு பேசுகிறேன், இப்போது நேராக கேட்க வேண்டிய கேள்விக்கு வந்துவிடுகிறேன் - இன்று உலகத்தில் நாம் பல சவால்களை பார்க்கிறோம், அதில் பலவற்றை நீங்களே குறிப்பிட்டீர்கள், இப்படிப்பட்ட சூழலில், தங்களுக்குள் மட்டுமின்றி சிக்கல் நிறைந்த வெளி உலகத்திலும் நீங்கள் பேசிய முன்னேற்றம் மற்றும் பலன்களை அடைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எந்த வகையில் முயற்சி செய்து ஒரு சமநிலையை அடைய முடியும் என்பதைப் பற்றிய உங்கள் எண்ணங்களை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

ஜனநாயகம் எனும் அதிசயம்

சத்குரு: மனித சமுதாயம் ஜனநாயக ஆட்சி முறையை உருவாக்கியது தான் எல்லாவற்றையும் மிஞ்சிய அற்புதமான ஒரு விஷயம். ஜனநாயக முறை தோன்றுவதற்கு முன், பூமியில் இரத்தம் சிந்தாமல் ஆட்சி மாற்றம் நடந்ததே இல்லை. பல்லாயிரம் வருடங்களாக அப்படி தான் இருந்திருக்கிறது. ஜனநாயக முறையில் மக்கள் தங்களின் தலைவனை தேர்ந்தெடுக்கிறார்கள். தலைவர் என்ற ஒருவர் அவர்கள் மீது திணிக்கப்படுவதில்லை. நீங்கள் தான் தீர்வு என்று மக்கள் உங்களை தேர்ந்தெடுக்கும் போது - அது தான் மிகப்பெரிய பாக்கியம். அந்த பாக்கியத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுவது, அல்லது பதவியில் இருப்பதை “பொறுப்பில் இருக்கிறீர்கள்” என்றே அழைக்க விரும்புகிறேன் “அதிகாரத்தில் இருக்கிறீர்கள்” என்று அல்ல. இது அதிகாரத்தில் இருக்கும் பதவி அல்ல, இது பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் பதவி.

எனவே தலைமை ஏற்பது என்பது அதிகாரத்தைப் பற்றியதல்ல, அதிகார பலத்தை அனைவரின் மீது காட்டுவதும் அல்ல. அது ஒரு வகையில் தியாகம். உங்கள் நல்வாழ்வைப் பற்றி மட்டுமே யோசிப்பதற்கு பதிலாக, இயல்பாகவே உங்கள் சிந்தனை, உணர்ச்சி, செயல்கள் என எல்லாமே பரந்து விரிந்ததாக, எல்லோருடைய நல்வாழ்வையும் பற்றியதாக இருக்கிறது.

நம்மால் முடிந்ததும் முடியாததும்

எனவே நம்மால் எவ்வளவு செய்ய முடியும்? அப்படி பார்த்தால், நம் திறமைக்கு என்ன செய்ய முடியுமோ அதற்கு மேல் நம்மால் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது. ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், நம் வாழ்க்கையில் நம்மால் செய்ய முடியாததை நாம் செய்யவில்லை என்றால் அது பிரச்சனை இல்லை. ஆனால் நம் வாழ்க்கையில் நம்மால் செய்ய முடிந்ததையே நாம் செய்யாமல் இருந்தால், நம் வாழ்க்கையே தோல்வி தான்.

இதற்காகத்தான் நான் “Miracle Of Mind” பற்றி பேசுகிறேன். நீங்கள் உங்களுக்குள் நல்ல மனநிலையில் இல்லையென்றால் - ஒருவேளை நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், உங்களால் செய்ய முடிந்தது கூட பல நேரங்களில் நடக்காமல் போய்விடும். நீங்கள் அமைதியாக ஆனந்தமாக இருக்கும்போது உங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் நீங்கள் செய்வீர்கள். நம்மை உயர்ந்தவராக நினைக்கும் மக்களுக்காக நமக்கிருக்கும் அடிப்படை பொறுப்பு இது தான். நம்மால் செய்ய முடிந்த அனைத்தையும் நாம் செய்வோம். இதற்கு அர்த்தம் எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியும் என்பதல்ல. அப்படி அல்ல. நம்மால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். நம்மால் செய்ய முடியாதது எப்படியும் நடக்கப் போவதில்லை, அது பரவாயில்லை. ஆனால் நம்மால் செய்ய முடிந்தது நடக்காமல் போனால் அந்த வாழ்க்கை தோல்வி தான். அப்படிப்பட்ட தோல்வி இந்த மதிப்பிற்குரிய அவையில் நடக்கக்கூடாது என்பது தான் என்னுடைய ஆசியும் அருளும்.

கேள்வியாளர்: நீங்கள் பல் தேய்ப்பதைப் பற்றி சொன்னது போல, எனக்கு கிட்டத்தட்ட 6 வயதில் ஒரு குழந்தை இருக்கிறார். அவரை நாங்கள் பல் தேய்க்க வைக்க வேண்டி இருக்கிறது. “அவனுக்குள்ளே அமைதியாக இருப்பது” மாதிரியான ஒரு சில செயல்களை செய்ய வைக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

சத்குரு: நான் சொல்வது என்னவென்றால், தியானம் என்பது பல் தேய்ப்பதைப் போல ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு இயல்பான விஷயமாக மாறவேண்டும், அவ்வளவுதான்.

குறிப்பு: Miracle of Mind தியானம் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும், Miracle of Mind தியானம் செய்வதற்கான இலவச Appஐ டவுண்லோடு செய்யவும் இங்கே க்ளிக் செய்யுங்கள்!