சத்குரு:

இப்போது நீங்கள் ஹடயோகப் பயிற்சியை செய்ய முயற்சிக்கும் போது, உங்கள் உடல்தான் உங்களுக்கு மிகப்பெரிய தடையாக இருக்கிறது. உண்மையில், மனிதர்கள் என்ன செய்ய விரும்பினாலும், அவர்களது உடலும் மனமும் தான் அவர்களுக்கு மிகப்பெரிய தடை. போதுமான அளவுக்கு ஆராயப்படாததால், எது படிக்கல்லாக இருக்க வேண்டுமோ, அதுவே ஒரு தடையாக மாறியிருக்கிறது.

84 ஆசனங்கள்

மனித உடலமைப்பைப் பற்றி ஆழமாகவும் முழுமையாகவும் ஆராய்ந்த பிறகு, யோக மரபில் 84 ஆசனங்கள் யோகாசனங்கள் என்று அடையாளம் காணப்பட்டன. இந்த 84 நிலைகள் மூலம், உங்கள் உடலையும் மனதையும் உங்கள் முழுமையான நல்வாழ்வுக்கான மகத்தான சாத்தியமாக மாற்றிக்கொள்ள முடியும். மற்ற பெரும்பாலான ஆன்மீக முறைகள் உடலை ஒரு தடை என்று கூறி அதனை ஒதுக்க வேண்டும் என்று பேசுகின்றன. நீங்கள் உட்கார்ந்து தியானம் செய்ய விரும்பினால், அப்போதுதான் உங்கள் கால்கள் "எனக்கு நீட்ட வேண்டும், நான் நடக்க வேண்டும்" என்று உங்களிடம் சொல்லும். காலையில் எழுந்து உங்கள் உடலை நன்றாக நீட்டி வளைக்கச் சொன்னால், "இல்லை, நான் ஓய்வெடுக்க விரும்புகிறேன்" என்கிறீர்கள். நீங்கள் ஏதோ ஒரு ஆசனம் செய்யும்போது உங்கள் உடலை இன்னும் கொஞ்சம் நீட்ட சொன்னால், "இல்லை, எனக்கு நீட்ட விருப்பமில்லை என்று சொல்கிறீர்கள். சரி அசையாமல் உட்காருங்கள் என்று உட்காரச் சொன்னால், உங்கள் உடல் நீட்டிக்கொள்ள விரும்புகிறது. இதேபோல, சாப்பிட வேண்டும், தூங்க வேண்டும், கழிவுகளை வெளியேற்ற வேண்டும் என்று உடல் பல விஷயங்களை செய்ய வேண்டியிருக்கிறது.

ஹடயோகா - உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் பொறுப்பு

நம் உடலமைப்புக்குள் எப்படிப்பட்ட தகவல்கள் போயிருக்கிறது என்பதை பொறுத்து, உடலில் பல்வேறு கட்டாயத்தன்மைகள் தொடர்ந்து வெளிப்படுகிறது. உங்கள் உடல் அமைப்பின் மீது பதிக்கப்பட்ட தகவல்களை தான் நாம் கர்ம உடல் என்று குறிப்பிடுகிறோம். இந்த தகவல்கள் தான் நீங்கள் எந்த அளவுக்கு கட்டாயத் தன்மைகளால் பாதிக்கப்படுகிறீர்கள், இயல்பாக எந்த அளவுக்கு சுதந்திரமாக உங்களுக்குள் உணர்கிறீர்கள் என்பதை நிர்ணயிக்கிறது. ஹடயோகாவில், நமது தந்தை யார், முன்னோர்கள் யார், எப்படிப்பட்ட மரபணுக்கள் மற்றும் கர்மாவை நீங்கள் அவர்களிடம் இருந்து பெற்றீர்கள், எதை உங்கள் வாழ்க்கை முறையில் உள்வாங்கிக் கொண்டீர்கள் என்பதை பற்றிய கவலை எதுவுமே இல்லை. இந்த க்ஷணம் வரை என்ன நடந்தது என்பதும் ஒரு பொருட்டே இல்லை - நம் வாழ்க்கையை நம் கையில் எடுத்துக்கொள்ள நாம் முடிவு செய்துவிட்டோம்.

யோகாசனம் என்பதற்கு இது தான் அர்த்தம் - உங்கள் வாழ்க்கையை உங்கள் கையில் எடுத்துக் கொள்கிறீர்கள். உங்கள் உடலையும் மனதையும் வாழ்க்கையில் ஒரு சாத்தியமாக மாற்றிக்கொள்கிறீர்கள்.

மூலக் கூக்குரல்

இந்தியப் பாரம்பரியத்தில், நீங்கள் யோகப் பயிற்சிகளை செய்பவராக இருந்தால், எந்த ஒரு ஜோசியரும் உங்களை பற்றிய கணிப்புகளை கொடுக்க விரும்பமாட்டார். ஏனென்றால், உங்கள் வாழ்க்கையை உங்கள் கைகளில் எடுத்துக் கொண்டுள்ளீர்கள் என்று அவருக்கும் புரிந்திருக்கிறது. யோகாசனம் என்பதற்கு இது தான் அர்த்தம் - உங்கள் வாழ்க்கையை உங்கள் கையில் எடுத்துக் கொள்கிறீர்கள். உங்கள் உடலையும் மனதையும் வாழ்க்கையின் சாத்தியங்களாக மாற்றிக்கொள்கிறீர்கள். உடலும் மனமும் தடைக்கல்லாக இல்லாமல் படிக்கல்லாக மாறுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உடலை மாற்றியமைப்பது, அதன் தன்மையை மாற்றுவது, குறிப்பிட்ட கட்டாயப் போக்குகளில் உடலைச் செயல்பட வைக்கும் அடிப்படைத் தகவல்களை மாற்றுவது — இதற்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட அளவு உறுதியும், தீவிரமான முயற்சியும், விடாப்பிடியான மனப்பான்மையும் தேவை. கட்டாயங்களின் சுழற்சியில் சிக்கிப்போக நீங்கள் தயாராக இல்லை. நீங்கள் விரும்பும் திசையில் நீங்கள் செல்கிறீர்கள்.

தேவை சரியான சூழல்

ஹ மற்றும் ட சூரியனையும் சந்திரனையும் குறிக்கிறது. ஹட என்பது இது இரண்டிற்கும் இடையே சமநிலையைக் கொண்டுவருவதைப் பற்றியது. உங்களுக்குள் இந்த இரண்டு தன்மைகளும் சமநிலையில் இருந்தால், உங்கள் உடல் இயல்பாகவே நீங்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக மாறும். உங்களைச் சுற்றியுள்ள இடத்தை நீங்கள் சரியாகப் பராமரிக்கவில்லை என்றால், வேறொரு இடத்திற்கு சென்றுவிடலாம். ஆனால், உங்கள் உடலுக்குள் இருக்கும் அமைப்பையே நீங்கள் சீர்குலைத்துவிட்டால், மரணம் ஏற்படும் வரை வேறெங்கும் செல்ல முடியாது. இந்த வாழ்நாளில் நீங்கள் உயிரோடு இருக்கும் வரை, உடல் தான் நீங்கள் உயிர் வாழும் இடம்.

உங்கள் உடல் எந்த நோக்கத்தில் செயல்பட வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள். நாம் அதற்கு தகுந்த யோகப் பயிற்சிகளை செய்ய முடியும்.

ஒரு சூழல் காட்டாயத் தன்மையுடன் இருப்பதை விட சாதகமாக இருப்பது தான் முக்கியமானது. உங்கள் வீடு உங்களை கட்டாயப்படுத்தும் இடமாக இருந்தால், அதில் இருப்பது உங்களுக்கு மூச்சு முட்டுவதாக இருக்கும். ஒவ்வொரு சூழலும் ஒவ்வொரு சூழ்நிலையும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உருவாக்கப்படுகிறது. உங்கள் வீடு ஒரு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆசிரமம் வேறு ஒரு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கலாம். ஒரு நிறுவனமோ தொழிலோ வேறு ஒரு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கலாம். ஒவ்வொரு சூழ்நிலையும் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதை நிறைவேற்ற வேண்டும்.

உங்கள் உடல் எந்த நோக்கத்தில் செயல்பட வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள். நாம் அதற்கு தகுந்த யோகப் பயிற்சிகளை செய்யலாம். ஒரு நல்ல வாழ்க்கை என்பது மற்றவர்களை விட ஒரு அடி முன்னால் இருப்பதுதான் என்று நீங்கள் நினைத்தால், நாம் ஒரு வகையான யோகாவை செய்வோம். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்ளாமல், செயல்களில் உங்கள் உச்சபட்ச திறனை கண்டறிய விரும்பினால், நாம் மற்றொரு வகையான யோகாவை செய்வோம். இந்த பிரபஞ்சத்தின் உச்சபட்ச தன்மையில் கரைந்துபோவது தான் உங்கள் விருப்பம் என்றால் நாம் இன்னும் வேறு வகையான யோகாவை செய்வோம். நாம் யோகாவை பல்வேறு வழிகளில் பயிற்சி செய்ய முடியும்.

மேம்பட்ட உணர்திறன்

ஒரு தனிமனிதர் என்னவாக ஆகிறார் என்பது, அவர்கள் எதை உணர்கிறார்கள் என்பதை பொறுத்தது. இதுவரை உங்கள் வாழ்க்கையில் என்ன உணர்ந்திருக்கிறீர்களோ, அதை வைத்துதான் நீங்கள் இப்போது இருக்கும் நிலையை அடைந்திருக்கிறீர்கள். இதேவிதமாக, வருங்காலத்தில் நீங்கள் யாராக இருக்கப் போகிறீர்கள் என்பதும் இனி நீங்கள் எதை உணரப் போகிறீர்கள் என்பதை பொருத்தே அமையும். ஒட்டுமொத்த யோக விஞ்ஞானமும் உணர்திறனை மேம்படுத்துவதைப் பற்றியது தான்.

84 யோகாசனங்கள் 84 ஒத்திசைவுகளைக் குறிக்கிறது. ஏனென்றால் நாம் அறிந்துள்ள இந்த பிரபஞ்சம் 84-வது படைப்பாக பார்க்கப்படுகிறது.

நீங்கள் உடலை சரியான முறையில் ஒரு ஆசனநிலையில் வைக்கும்போது, அது சரியான ஒத்திசைவோடு அமைந்தால், அது ஏதோ ஒரு வகையில் பிரபஞ்சத்துடன் ஒத்துப் போகிறது. நமக்கு தெரிந்த இந்த பிரபஞ்சம் 84-வது படைப்பாக கருதப்படுவதால், அந்த 84 ஆசன நிலைகளும் 84 ஒத்திசைவுகளை குறிக்கிறது. இந்த 84 படைப்புகளின் நினைவுகளும் நம் உடலிலும் பிரதிபலிக்கிறது. இந்த நினைவை விடுவித்து, செயல்படுத்த நாம் முயற்சி செய்கிறோம். ஒருவர் இந்த 84 ஆசன நிலைகளிலும் இருக்கும்போது அல்லது ஒரே ஒரு ஆசன நிலையில் ஆளுமை பெற்று அதன் மூலம் மீதமுள்ள 83 ஆசன நிலைகளை அணுகும்போது, இதுவரை படைப்பில் நடந்துள்ள அனைத்தையும் அவரால் அறிந்துகொள்ள முடியும்; ஏனெனில் அதன் நினைவுகள் ஒருவரின் அமைப்பினுள் மறை வடிவாக இருக்கிறது. இந்த நினைவு உங்களுக்கு வெளியே இருக்கும் மற்றொரு பரிமாணத்தை தொடும்போது, அதை செயல்படுத்தவும் உயிரூட்டவும் முடியும்.

யோகாசனம் என்பது தொடர்பை ஏற்படுத்துவதற்கான சக்தி வாய்ந்த வழிமுறை. யோகா என்றாலே ஒன்றி இருப்பது என்பதை மறக்க வேண்டாம். ஒன்றிப்போவது என்றால் இரண்டாக இருப்பது ஒன்றாக ஐக்கியமாகிவிடுகிறது. படைத்தலில் இரண்டு மட்டுமே இருக்கிறது - நீங்களும், பிரபஞ்சத்திலுள்ள மற்றவையும். பிரபஞ்சத்தில் நீங்கள் தனிப்பட்ட உயிர்களை கண்டுகொள்ள முடியும், ஆனால் அடிப்படையாக இரண்டு மட்டுமே இருக்கிறது‌ - நீங்களும், பிரபஞ்சத்தில் இருக்கும் மற்ற அனைத்தும் - ஏனென்றால் உங்களுக்குள் இரண்டு பரிமாணங்களில் மட்டுமே அனுபவம் ஏற்படுகிறது. இந்த பிரபஞ்சத்தில் எது மேலே, எது கீழே என்று உங்களுக்கு தெரியாது. எது முன்னே, எது பின்னே என்பதும் தெரியாது. இவையெல்லாம் நம் வசதிக்காக நாம் உருவாக்கிக் கொண்டவை. அடிப்படையில் அனுபவத்திற்கு இரண்டு பரிமாணங்கள் மட்டுமே இருக்கிறது - உள்நிலை அனுபவம், வெளிநிலை அனுபவம்.

சமநிலை இல்லாத ஒரே காரணத்தினால் ஒருவரிடம் இருக்கும் அற்புதமான குணங்கள் கூட வீணாக போய்விடும். இந்த சமநிலையைத்தான் ஹடயோகா உங்களுக்குள் கொண்டுவருகிறது.

யோகா என்பது இந்த இரண்டு பரிமாணங்களுக்கு இடையே ஒரு ஐக்கியத்தை ஏற்படுத்துவது பற்றியது - உள்நிலையிலும் வெளியிலும், உங்களுக்குள்ளும் எஞ்சிய அனைத்திலும், உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே. எப்போது இது நான், அது மற்றவர்கள் என்பது இல்லையோ, எப்போது எல்லாமும் நான்‌ என்று ஆகிறதோ அதுதான் யோகா. ஆசனங்கள் என்பது இந்த உச்சபட்ச ஐக்கியத்தை உடலின் வழியாக அடையும் அணுகுமுறை. ஏனென்றால் உடலை சுலபமாக இந்த தன்மைக்கு கொண்டுவர முடியும். இந்த ஐக்கியத்தை உங்கள் மனதின் மூலம் கொண்டுவர முயற்சி செய்தால், அது பல வித்தைகளைக் காட்டும். உடலை வைத்து செய்யும்போது அது சரியா தவறா என்பதாவது உங்களுக்கு தெரியும். அது ஒத்துழைக்கிறதா இல்லையா என்பதும் தெரியும். உங்கள் மனதை கடினமான செயல்முறைக்கு உட்படுத்தினால் அது உங்களை எல்லாவற்றையும் நம்பவைத்து அடுத்த நாளே கைவிட்டுவிடும். மனதை விட நம்பத்தக்கதாக உடல் இருக்கிறது. நீங்கள் உடலுடன் சற்று விவேகமாக செயல்பட்டால் யோகாசனங்கள் நிச்சயமாக உச்சநிலை ஐக்கியத்திற்கு உங்களை இட்டுச்செல்லும்.

இதற்கிடையில், உச்சபட்ச தன்மையுடன் ஏற்படும் ஒத்திசைவுக்கு முன்பாக, நீங்கள் ஒவ்வொரு யோகாசன நிலையில் இருக்கும்போதும், உள்நிலையில் ஒத்திசைவு ஏற்படுகிறது. இது இயல்பாகவே ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் ஆனந்தத்திற்கான ரசாயனத்தை உருவாக்குகிறது. இவை அனைத்திற்கும் மேலாக சமநிலையைத் தருகிறது. நவீன சமூகங்கள் சமநிலை என்னும் தன்மையை ஒதுக்கியே வைத்திருக்கிறது, அதற்கான விலையையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. எப்படிப்பட்ட புத்திசாலித்தனம், திறமை, கல்வி, தகுதிகள் உங்களிடம் இருந்தாலும் - தேவையான சமநிலை இல்லையென்றால் நீங்கள் வெற்றியடைய முடியாது. நீங்கள் வாழ்க்கையின் உச்சத்திற்கு போகமாட்டீர்கள்.

வெற்றியைத் தேடும் மனிதர்களுக்கு எது முக்கியமானது என்றால், தொழில் துறையோ, அரசியலோ, ராணுவமோ அல்லது எந்த துறையாக இருந்தாலும் சரி, சமநிலையோடு இருப்பது மிக முக்கியம். வெளிசூழ்நிலைகளால் பாதிக்கப்படாத சமநிலை இருந்தால் மட்டும் தான் உங்களுக்குள் இருக்கும் புத்திசாலித்தனத்தையும் திறமையையும் உங்களால் உபயோகிக்க முடியும். அப்படி இல்லாமல் போனால் ஒருவருக்கு இருக்கும் அற்புதமான குணங்கள் கூட சமநிலை இல்லாததால் வீணாகிவிடும். இந்த சமநிலையை தான் ஹடயோகா உங்களுக்குள் கொண்டுவருகிறது.

குறிப்பு:

ஈஷா ஹடயோகா நிகழ்ச்சிகள் பாரம்பரிய ஹடயோகாவை விரிவாக ஆராய்ந்து, இன்றைய உலகில் பெருமளவு காணப்படாத இந்த பண்டைய அறிவியலின் பல்வேறு பரிமாணங்களை மீட்டெடுக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் உப-யோகா, அங்கமர்தனா, சூரிய கிரியா, சூரிய சக்தி, யோகாசனம் மற்றும் பூதசுத்தி உள்ளிட்ட பல சக்திவாய்ந்த யோக முறைகளை ஆராய்வதற்கான இணையற்ற வாய்ப்பை வழங்குகிறது.

உங்களுக்கு அருகில் உள்ள ஹடயோகா நிகழ்ச்சிகளைப் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.