இலக்கை அடைய விரும்பினால், திசையை மாற்றிக்கொண்டே இருக்காதீர்கள்!
நாம் அடிக்கடி மனதை மாற்றி திசைமாறுவது ஏன்? உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு முடிவுகளை மாற்றிக்கொண்டே இருந்தால், வாழ்க்கையில் தொலைந்துதான் போவோம். அதனால், தெளிவான மற்றும் மகிழ்ச்சியான மனநிலையில் மட்டுமே முடிவுகளை எடுக்க வேண்டும். அப்படி எடுத்த முடிவில், நரக வேதனையே வந்தாலும் பின்வாங்காமல் உறுதியாக நிற்க வேண்டும். சஞ்சலமில்லாமல் இலக்கை அடைவதற்கான சூட்சுமத்தை அறிய இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்!

நீங்கள் எதைச் செய்ய விரும்பினாலும், முதலில் உங்களை ஒரு சந்தோஷமான, தெளிவான மனநிலைக்கு நீங்கள் கொண்டுவர வேண்டும். அந்த தருணத்தில் நீங்கள் எடுக்கும் முடிவை, உயிரே போனாலும் சரி, அதிலிருந்து பின்வாங்கக் கூடாது. உங்களுடைய உணர்ச்சிகள் அலைபாயும் போது, உங்கள் மனம் பல விஷயங்களைச் சொல்லும், அது முக்கியமில்லை. அது காலையில் ஒன்றைச் சொல்லும், மாலையில் வேறு ஒன்றைச் சொல்லும். இன்று ஒன்றைச் சொல்லும், நாளை வேறு ஒன்றைச் சொல்லும். அதையெல்லாம் நீங்கள் பொருட்படுத்தத் தேவையில்லை.
Subscribe
தெளிவான தருணத்தில் எடுக்கும் முடிவே சரியானது
தெளிவான, மகிழ்ச்சியான தருணம் என்று நான் சொல்வது ஏனென்றால், நீங்கள் சந்தோஷமாக இருக்கும்போது, நீங்கள் கட்டாயத்தன்மையில் இல்லை. நீங்கள் மிகவும் சந்தோஷமாகவும் தெளிவாகவும் இருக்கும்போது, "ஆமாம், இதுதான் எனக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது" என்று எது உங்களுக்கு தோன்றுகிறதோ, அதை மட்டும் செய்யுங்கள். அது நரகமாகத் தோன்றினாலும் பரவாயில்லை. நீங்கள் பத்து வருடம் நரக வேதனையை அனுபவித்தாலும் பரவாயில்லை, அதையே தொடர்ந்து செய்யுங்கள். ஏனென்றால், உங்கள் நல்வாழ்வு அதில்தான் இருக்கிறது. மாறாக, நீங்கள் வெவ்வேறு விதமான உந்துதல்களுக்கு ஆட்பட்டிருக்கும்போது, எந்த திசையில் திரும்ப வேண்டும் என்று முடிவெடுத்தீர்கள் என்றால், கடைசியில் எங்கு போவது என்றே தெரியாமல் தொலைந்து போய்விடுவீர்கள்.
திசையை மாற்றாதீர்கள்
நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது இங்கு முக்கியமல்ல, அதை எவ்வளவு உறுதியாக, சற்றும் தளராமல் செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். தினமும் முடிவை மாற்றிக்கொண்டே இருந்தால் எதுவும் நடக்காது. அது எந்த விஷயமாக இருந்தாலும் சரி, உங்கள் முடிவில் உறுதியாகவும் ஒருமுகப்பட்ட தன்மையோடும் இருந்தால், உங்களுக்கு அது கிடைப்பதை யாராலும் தடுக்க முடியாது. தினமும் உங்கள் எண்ணங்களும் உணர்ச்சிகளும் அங்கும் இங்கும் அலைபாயும்போது, மனதை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தால், ஒரே வட்டத்திற்குள் முடிவில்லாமல் சுற்றிக்கொண்டு தான் இருப்பீர்கள்.
ஏனென்றால், போகும் திசையை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பவருக்கு, உண்மையில் எங்கும் சென்றடைவதில் விருப்பம் இல்லை என்றுதானே அர்த்தம்? இந்த பூமி உருண்டையானது, அதனால் நீங்கள் எந்த திசையில் சென்றாலும் பரவாயில்லை; திசையை மாற்றாமல் தொடர்ந்து பயணிக்கும் வரை, அந்த பயணத்தை உங்களால் நிச்சயம் முடிக்க முடியும், அப்படித்தானே? ஆனால், திசையை மாற்றிக்கொண்டே இருந்தால், அது உங்களை நிரந்தரமாகத் தொலைந்து போகும் நிலைக்கு கொண்டு போய்விடும்.
அதனால், நீங்கள் அங்கே இருக்க விரும்பினால், அங்கேயே இருங்கள். பிரச்சனை இல்லை. இங்கே இருக்க விரும்பினால், இங்கேயே இருங்கள். காலையில் ஒரு முடிவு, மாலையில் ஒரு முடிவு என்று ஒவ்வொரு நாளும் மனதை மாற்றிக்கொண்டே இருக்காதீர்கள். அது உங்களுக்கும் உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் பெரிய தொல்லையாக மாறிவிடும். தொடர்ந்து மனதை மாற்றிக்கொண்டே இருப்பவர், தனக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பெரிய தொல்லையாகவே இருப்பார், உண்மைதானே? இப்போது நீங்கள், "நாளை காலையில் நான் நிச்சயமாக யோகா செய்யப் போகிறேன்" என்று நினைப்பீர்கள். நாளைக்கு காலை 5 மணிக்கு “டாங்க்” என்று சத்தம் கேட்கும்போது, உங்கள் உடல், "எந்த யோகாவும் வேண்டாம், எனக்கு தூக்கம் தான் முக்கியம்" என்று சொல்லும். இப்படி உங்களுடைய முன்னுரிமைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே தான் இருக்கிறது.
பேரானந்தத்தை உணரும் திறன் அனைவருக்கும் உண்டு
வாழ்வதற்கு வேறு ஒரு வழியும் இருக்கிறது. அந்த நிலையில், இதுவரை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உணர்ந்த மிகப் பெரிய சந்தோஷங்களும், இன்பங்களும் கூட ஒரு எறும்பின் சந்தோஷத்தைப் போல மிகச் சாதாரணமாகத் தோன்றும். இந்த உயிரால் அந்த நிலையை அடைய முடியும். உடலையும் மனதையும் பொறுத்தவரை, நம் ஒவ்வொருவரின் திறனும் மாறுபடும். எந்த இரண்டு பேரின் உடலும், மனதும் ஒரே அளவு திறன் கொண்டதில்லை. ஆனால் உயிரின் தன்மை என்று வரும்போது, இந்த பிரபஞ்சத்தையே தன்னுள் அடக்கும் திறன் ஒவ்வொரு உயிருக்கும் சமமாகவே இருக்கிறது.
இந்த பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே போகிறது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட ஒன்றை எப்படி நமக்குள் அடக்க முடியும்? அதுதான் இதிலுள்ள அழகே! முடிவில்லாத, என்றும் நிலைத்திருக்கும், எல்லையில்லாத, எப்போதும் விரிவடைந்து கொண்டே இருக்கும் ஒன்றை, உங்களுக்குள் இருக்கும் இந்த உயிரால் தனக்குள் அடக்கி வைத்துக்கொள்ள முடியும். அந்த விஷயத்தில் எந்த இரண்டு நபர்களுக்கும் இடையே வித்தியாசம் இல்லை; அந்த திறன் எல்லா மனிதர்களுக்கும் சமமாகவே இருக்கிறது.
நீங்கள் அடிக்கடி திசையை மாற்றுவதால் இது உங்களுக்கு நிகழ்வதில்லை. எங்கு உங்களுக்கு ஒரு சௌகரியமான சிறிய இடம் கிடைத்தாலும், அங்கேயே தங்கிவிடப் பார்க்கிறீர்கள். அது உடலளவிலோ, மனதளவிலோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ இருந்தாலும், அமைதியாக சாய்ந்து தூங்குவதற்கான ஒரு வசதியான இடத்தைத்தான் நாம் எப்போதும் தேடுகிறோம். அப்படி ஒரு சௌகரியமான இடம் கிடைத்து, அது மிகவும் இனிமையாகவும் சுகமாகவும் மாறிவிட்டால், அதை விட்டு வெளியேறி மீண்டும் பயணத்தைத் துவங்கும் தைரியம் உங்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது.
கடினமான நேரங்களில் மனம் உருவாக்கும் லாஜிக்
அதனால், நீங்கள் எதிர்பார்ப்பது ஒரு பிக்னிக் தான் என்றால்... பரவாயில்லை. அது அப்படித்தான் தோன்றும். ஏழாவது மலையை ஏற முயற்சி செய்கிறீர்கள் என்றால்... ஒரு குறிப்பிட்ட தூரம் ஏறியதும், உங்கள் முழங்கால்கள் சத்தம் போட ஆரம்பிக்கும்; நீராவி எஞ்சின் போல 'புஷ்ஷ்... புஷ்ஷ்... புஷ்ஷ்...' என்று வேகமாக மூச்சு வாங்கும். அப்போது நீங்கள் சுற்றிலும் பார்க்கிறீர்கள்... அந்த அழகான பாறைகள், உங்களைச் சுற்றியுள்ள மூங்கில்கள் என எல்லாமே மிகவும் அற்புதமாக இருக்கும். பள்ளத்தாக்கு அவ்வளவு ரம்மியமாக இருக்கும். 'இன்னொரு அடி எடுத்து வைப்பதில் என்ன பயன்? இது அற்புதமாக இருக்கிறது, இதுவே போதும்! உங்கள் மனம் உங்களிடம் 'இதுவே போதும்' என்று சொல்லும்.
அந்த இடத்தின் அழகையோ, அங்கு இருப்பதால் கிடைக்கும் சந்தோஷத்தையோ நான் குறைசொல்லவில்லை. ஆனால் இப்போது உங்கள் மனதிற்குள் இப்படி ஒரு விவாதமும், ஒரு புதிய கணக்கும் வந்திருப்பதற்கு காரணம், உங்கள் நுரையீரல் ஒரு ஸ்டீம் இன்ஜின் போல வேலை செய்வதும், உங்கள் கால்கள் எண்ணெய் விடாத மாட்டு வண்டி மாதிரி சத்தமிடுவதும் தான்.
அதனால், புதிய புதிய கணக்குகள் வந்துகொண்டே இருக்கும். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும், உங்களுக்கு ஏற்படும் சௌகரியம் மற்றும் அசௌகரியங்களுக்கு ஏற்ப, நீங்கள் புதிய கணக்கு ஒன்று உருவாக்குவதை கவனித்திருக்கிறீர்களா? உங்களிடம் இதை கவனித்திருக்கிறீர்களா? இது தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கும். அதனால்தான், நீங்கள் மிகுந்த சந்தோஷத்தோடும் தெளிவோடும் இருக்கும் ஒரு தருணத்தில், எது உங்கள் நல்வாழ்வுக்குச் சரியானது என்று உங்களுக்கு தோன்றுகிறதோ, அதையே உறுதியாக பிடித்துக்கொள்ள வேண்டும். நாளை அது உங்களுக்கு ஒரு பயங்கரமான விஷயமாகத் தோன்றினாலும் பரவாயில்லை, அதில் உறுதியாக இருங்கள். அது ஒரு நரகமாகத் தோன்றினாலும் அதிலிருந்து பின்வாங்காதீர்கள். அதுதான் நல்வாழ்வு. தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருந்தீர்கள் என்றால், எதுவுமே நடக்காது.


