தேவலோகத்தில் சத்குரு - சத்குருவின் சுவாரஸ்யமான பயணம்
உறைபனிக் குளிரில் வெறும் டி-ஷர்ட்டுடன் பேருந்தின் மேற்கூரையில் ஒரு பயணம்... 1980-களில் சத்குரு தனியாளாக மேற்கொண்ட இமயமலை பயணத்தின் சவால்களையும், அங்கே அவர் வினோதமான முறையில் தரிசித்த தேவலோகத்தையும், இயற்கை அழகையும் நகைச்சுவையுடன் விவரிக்கிறது இந்தக் கட்டுரை.

தேவலோகத்தில் தரையிறங்கிய என் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்! அது அநேகமாக 1985 அல்லது 1986ம் வருடமாக இருக்கும், சரியாக நினைவில்லை, இரண்டில் ஏதோ ஒரு வருடம், இமயமலைக்குப் பயணமானேன். தனியாக சென்றிருந்தேன், அப்படியே மலையேற்றம் செய்வதாக திட்டம்.
தேவலோக பயணமும் கேன்வாஸ் ஜாக்கெட்டும்:
தென்னிந்தியாவில் வாழும் என்னிடம், கம்பளி உடைகள் எதுவும் இல்லை. கொஞ்சம் தடியான சில டி-ஷர்ட்களும், ஒரு பைக் ரைடிங் கேன்வாஸ் ஜாக்கெட் மட்டுமே இருந்தது. தென்னிந்தியாவில் பைக் ரைடிங் ஜாக்கெட் பெரும் உதவியாக இருந்தது, ஏனென்றால் இங்கு மழை அதிகம். மோட்டார் சைக்கிளில் அதிக பயணம் செய்ததால், மழை வந்தால் எப்போதும் கைவசம் இருக்கும் கேன்வாஸ் ஜாக்கெட்டை அணிந்துகொள்வது என் வழக்கமாக இருந்தது. உண்மையில், நான் செய்ய நினைத்த எந்த வேலைக்கும் மோசமான வானிலை ஒரு தடையாக இருந்ததில்லை. நான் விளையாடினாலும், மோட்டார் சைக்கிள் ஓட்டினாலும், அல்லது பயணம் செய்தாலும் — வானிலை எப்படி இருந்தாலும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டதில்லை. பருவமழை கொட்டித் தீர்த்தாலும், நான் என் மோட்டார் சைக்கிளில் தொடர்ந்து போய்க்கொண்டே இருப்பேன்.
இமயமலைக்கும் ஊட்டிக்கும் இடையேயான வித்தியாசம்
எனவே என்னுடன் எப்போதும் ஒரு கேன்வாஸ் ஜாக்கெட் இருக்கும். பெங்களூரில் இருப்பவர்களுக்கு Flying Machine ஜாக்கெட்டை நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் இமயமலைக்கு போகும்போது அங்கு கடும் குளிர் நிலவுவதால், அந்த கேன்வாஸ் ஜாக்கெட், சாதாரண துணிகளை விட அதிகமாகவே குளிர்ந்துவிட்டது. உண்மையில், காட்டன் ஆடைகளே அதைவிட நன்றாக இருந்திருக்கும். அந்த அளவுக்கு கேன்வாஸ் ஜில்லென்று ஆகிவிட்டது.
Subscribe
எனவே என்னால் அந்த ஜாக்கெட்டை அணிந்துகொள்ள வழியே இல்லாமல் போனது. அப்போதுதான், உயரமான மலைப்பகுதிகளில் கேன்வாஸ் ஜாக்கெட் பயனளிக்காது என்பதை முதன்முறையாக உணர்ந்தேன். தென்னிந்தியா முழுவதும் அது எனக்கு சிறப்பாக உதவியிருக்கிறது. அதுவரை நான் பார்த்திருந்த அதிகபட்ச உயரமான இடங்கள் ஊட்டியும் கொடைக்கானலும் தான். அங்கெல்லாம் அது போதுமான பாதுகாப்பைக் கொடுத்தது. ஆனால் இமயமலையில் நிலைமை அப்படி இல்லை. எனவே அந்த ஜாக்கெட்டைக் கழற்றிவிட்டு, -3, -4 டிகிரி செல்சியஸ் குளிரிலும் ஒரு சாதாரண டி-ஷர்ட்டை மட்டும் அணிந்தபடி எல்லாப்பக்கமும் போக வேண்டியிருந்தது.
அந்தக் காலத்தில் புக் ஹர்தால் என்று அழைக்கப்பட்ட பேருந்துகள் இருந்தன. புக் ஹர்தால் என்றால் உண்ணாவிரத போராட்டம் என்று அர்த்தம். அதிகாலை மூன்றரை மணிக்கு அவை ஹரித்வாரிலிருந்து புறப்படும். சிறிய சேஸிஸ் (Chassis) கொண்ட பழைய டாடா பேருந்துகள் அவை. இன்று இருப்பதைப் போல ரோடுகளும் அப்போது இல்லை. இருந்தாலும், அந்த மலைப்பாதைகளுக்கே உரிய தனித்துவமான அழகு இருந்தது.
என் அனுபவத்தில், அந்தப் பேருந்து பயணங்கள் அற்புதமானவை. ஏனென்றால், ஒவ்வொரு வளைவில் திரும்பும்போதும், அந்தப் பேருந்து இப்போதே கீழே விழுந்துவிடுமோ என்பது போலிருக்கும்!
பேருந்தின் மேற்கூரையில் ஒரு பயணம்
அதிலும், நான் எப்போதும் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்துதான் பயணம் செய்வேன். ஹரித்வாரிலிருந்து கோமுக், கேதார்நாத், பத்ரிநாத் என்று எங்கு சென்றாலும், கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் பேருந்திற்கு மேலே அமர்ந்தே பயணம் செய்திருக்கிறேன். அப்படியே, இமயமலை சாலையின் ஒவ்வொரு வளைவும் எனக்கு அத்துப்படியாகிவிட்டது. இப்போது சுமார் ஐந்து வருடங்களுக்கு முன், அதே மலைச்சாலைகளில் நான் காரை ஓட்டியபோது, என்னுடன் வந்தவர்கள் பீதியடைந்தார்கள், ஏனெ்றால் 130–140 கிலோமீட்டர் வேகத்தில் கார் அந்த மலைப்பாதையில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது. அந்த மலைச்சாலையின் ஒவ்வொரு வளைவும், ஒவ்வொரு பாறையும், ஒவ்வொரு மூலையும் எனக்கு ஏற்கனவே அத்துப்படியாகியிருக்கிறது. அது என் மனதில் ஒரு விடியோவைப் போல இருக்கிறது. அதை ஆன் செய்தால் போதும், அடுத்த இரண்டு வளைவுகளுக்குப் பிறகு உள்ள சாலையை நான் இப்போதே பார்ப்பது போலிருக்கும்.
பேருந்தின் கூரையில் அமர்ந்தபடி, இமயமலையின் பேரழகை முழுமையாக பருகிய அந்தத் தருணங்கள் இன்னும் என் மனதில் அப்படியே பதிந்திருக்கிறது. இன்றும் கூட, 12 முதல் 14 மணி நேரப் பயணத்தின் முழுப் பாதையும், எடிட்(edit) செய்யப்படாத ஒரு முழு வீடியோவாக என்னில் இருக்கிறது. இப்போது டெஹ்ரி அணை இருக்கும் பகுதியில் மட்டும் எனக்கு கொஞ்சம் குழப்பமாகும்.
ஏனென்றால், அந்த அணை சாலையின் பாதையை மாற்றிவிட்டது. அதைத் தவிர, என் மனதில் அந்த விடியோவை ஆன் செய்தால் அது இன்றும் அப்படியே ஓடும்.
அப்படியே பேருந்தின் மேல் உட்கார்ந்து கொண்டு அங்கே சென்று சேர்ந்தேன். அன்று பாதி வழியிலேயே பேருந்து ரிப்பேர் ஆகிவிட்டது. அதோடு, கொஞ்சம் நிலச்சரிவும் ஏற்பட்டிருந்தது. அதனால் பத்ரிநாத்துக்கு போக தாமதமாகிவிட்டது. மாலை ஆறு அல்லது ஆறரை மணிக்குள் அந்த கேட்டை கடந்துவிட வேண்டும். ஆனால் எங்களால் அந்த நேரத்திற்குள் போக முடியவில்லை. டிரைவர் எப்படியோ அங்கிருந்தவர்களிடம் கெஞ்சி கேட்டு கதவை திறக்க வைத்தார். இரவு சுமார் எட்டரை மணியளவில் நாங்கள் பத்ரிநாத்தை அடைந்தோம். அப்போது லேசாக மழை பெய்துகொண்டிருந்தது. குளிர் வேறு. என் கேன்வாஸ் ஜாக்கெட்டை போட்டுக்கொள்ள முடியாத நிலை. அதனால், டி-ஷர்ட்டை மட்டுமே அணிந்திருந்தேன். குளிரில் என் தசைகள் அனைத்தும் இறுகியிருந்தன. ஆனால் நான் இளைஞன். அதற்கு ஈடு இணை வேறு எதுவும் இல்லை! அதற்குப்பின் தங்குவதற்கு ஓர் இடத்தைத் தேடி புறப்பட்டேன்.
உருளைக்கிழங்கு விருந்து
குறைந்த செலவில் பயணம் செய்வது என் வழக்கம். சாதரணமாக நான் வேறு எங்கு போனாலும் - புதுதில்லியில் இருந்தபோதெல்லாம், எப்போதும் பேருந்து நிலையத்தில்தான் தூங்குவேன். ஐ.எஸ்.பி.டி. (ISBT) ஸ்டேஷனில் பல இரவுகள் தூங்கியிருக்கிறேன். ஹரித்வாரிலும் பேருந்து நிலையத்தில்தான் தூங்கினேன். ரிஷிகேஷில் இருந்தபோது, எப்போதும் கங்கை நதிக்கரையில் தூங்குவேன். உத்தரகாசியிலும் கூட வெளியில் தான் தூங்கியிருக்கிறேன். ஆனால் அதற்கும் மேலே, கடும் குளிர் நிலவும் பகுதிகளுக்கு போகையில், தங்குவதற்கு ஓர் இடம் தேவைப்பட்டது. அதனால், தலை சாய்த்து ஓய்வெடுக்க எங்காவது மலிவான ஒரு தங்கும் இடத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். மிகவும் களைப்பாக இருந்தேன். சாப்பிடுவதற்கு ஏதோ கொஞ்சம் உணவும் கிடைத்தது.
வட இந்தியாவில் இப்படித்தான். எங்கு போனாலும் ரொட்டியும் உருளைக்கிழங்கும்... உருளைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, உருளைக்கிழங்கு! நான்கு வகையான உருளைக்கிழங்கு. 20-25 நாட்கள் பயணத்தில் உங்கள் தலையில் உருளைக்கிழங்கு தொங்கிக் கொண்டிருப்பது போல இருக்கும். தென்னிந்தியாவிலிருந்து வந்திருப்பதால், எங்காவது கொஞ்சம் சாதமும் ரசமும் கிடைக்காதா என்று ஏக்கத்துடன் எதிர்பார்த்துக்கொண்டே இருப்பீர்கள். அப்படிக் கிடைத்து அதை உறிஞ்சிக் குடிக்கும்போதுதான், உண்மையில் உணவை உண்ட உணர்வே வரும்.
அப்படியே அந்த உருளைக்கிழங்கை தான் சாப்பிட்டேன். அந்த உருளைக்கிழங்கு விருந்துக்கு பின், தங்குவதற்கு ஒரு இடத்தைத் தேட ஆரம்பித்தேன். ஆனால் எங்கும் இடம் இல்லை. எல்லா விடுதிகளும் நிரம்பிவிட்டதாகச் சொன்னார்கள். அப்போது தங்குவதற்கு ஒன்றிரெண்டு இடங்கள் தான் இருந்தன. இப்போது இருப்பது போல் ஏராளமான விடுதிகள் இல்லை. அவை எல்லாமே நிரம்பியிருந்தன. அதற்கு பின், ஒரு ஆசிரமத்திற்கு சென்றேன், அதன் பெயர் இப்போது நினைவில் இல்லை. உள்ளே போய் அங்கிருந்தவர்களிடம், "ஸ்வாமிஜியை பார்க்க வேண்டும்," என்றேன். நீண்ட நேரம் வாக்குவாதம் செய்த பின் அவர்கள் என்னை உள்ளே அழைத்துச் சென்றார்கள். அவர்களால் புறக்கணிக்க முடியாத கண்கள் என்னிடம் இருந்தது.
தேவலோகத்தில் ஒரு இரவு
இப்போது என் கண்கள் அதேபோல் இல்லை, அதிக வேலைப்பளு உள்ளவரின் கண்களைப் போல் இருக்கிறது. ஆனால் அப்போது என்னிடம் தாடி இல்லை என்றாலும், அவர்களால் புறக்கணிக்க முடியாத கண்கள் இருந்தது. அதனால்தான் அவர்கள் என்னை உள்ளே அழைத்துச் சென்றார்கள். உள்ளே போனபோது, முழுவதும் காவி உடை அணிந்த, நீண்ட தாடியுடன் இரண்டு உயரமான, கம்பீரமான ஸ்வாமிகள் இருந்தனர். அவர்கள், "என்ன வேண்டும்?" என்பது போல பார்த்தார்கள். நான் அவர்களிடம், "நான் தென்னிந்தியாவில் இருந்து வந்திருக்கிறேன். படுத்து உறங்குவதற்கு எனக்கு எந்த இடமும் இல்லை. முழுவதும் நனைந்திருக்கிறேன். நான் அணிந்திருக்கும் டி-ஷர்ட்டும் நனைந்துவிட்டது, மாற்றிக்கொள்ள வேறு உடைகளும் இல்லை. என் தோள்பையிலிருந்த எல்லா துணிகளும் இப்போது நனைந்திருக்கும்.
அதனால், படுத்துக்கொள்ள எனக்கு ஒரு இடம் வேண்டும்," என்று சொன்னேன். அவர்கள் என்னைப் பார்த்து, "நீ என்ன செய்கிறாய்?" என்று என்னை பற்றி விசாரித்தார்கள். அதற்கு நான், "எனக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க தொடங்கியிருக்கிறேன்," என்றேன். அவர்கள் "ம்ம், இவனை தேவலோகத்தில் போய் போடுங்கள்" என்றார்கள். அதை கேட்டதும் நான், "ஆஹா! என்ன ஒரு அதிர்ஷ்டம் (என்னை தேவலோகத்திற்கு அனுப்புகிறார்கள்)” என்று மனதிற்குள் நினைத்தேன்.
'தேவலோகத்தில் போடு' என்று அவர்கள் சொன்னதும், தேவலோகம் பற்றி கேட்டிருந்த எல்லா கதைகளும் நினைவுக்கு வந்தன. அவர்களை பின்தொடர்ந்து போனேன். ஒரு கட்டிடத்திற்குள் அழைத்துச் சென்றார்கள். இப்படி... அப்படி... ஒரு சந்துக்கு பின் இன்னொன்று என பல சந்துகளை கடந்து உள்ளே அழைத்துச் சென்றார்கள். இறுதியில், ஒரு அறையைக் காட்டினார்கள். அந்த அறை முழுவதும் படுக்கைகளால் நிரம்பியிருந்தது. ஆனால் அங்கே யாரும் இல்லை.
நான், "நன்றி" என்று சொல்லிவிட்டு, என் பையை கீழே வைத்தேன். எனக்கு உடனே படுத்துத் தூங்க வேண்டும் என்றுதான் இருந்தது. அப்படியே ஒரு படுக்கையில் விழுந்தேன். "க்ஷ்ஷ்ஷ்..." படுக்கை முழுவதும் தண்ணீர்! "ச்ஷ்ஷ்ஷ்..." என்று தண்ணீர் பீறிட்டது. "அடக் கடவுளே!". சரி, இந்தப் படுக்கைதான் ஈரமாக இருக்கிறது என்று நினைத்து இன்னொரு படுக்கைக்கு மாறினேன், அதுவும் ஈரம். அதற்கடுத்த படுக்கை, அதுவும் ஈரமாகத்தான் இருந்தது. ஆனால், இவ்வளவு தண்ணீர் இருந்தும், இந்த மூட்டைப்பூச்சிகள் மட்டும் அதில் மூழ்கவில்லை. நான் படுத்தவுடன், இங்கே கடித்தது... அங்கே கடித்தது... இப்படியும் அப்படியும் புரண்டுகொண்டே இருந்தேன்.
அந்த அறையில் சுமார் எட்டு படுக்கைகள் இருந்தது என்று நினைக்கிறேன். இரவு முழுவதும், ஒரு படுக்கையிலிருந்து இன்னொரு படுக்கையாக, அந்த எட்டு படுக்கைகளிலும் புரண்டுகொண்டே இருந்தேன், எல்லா மூட்டைப் பூச்சிகளுக்கும் சமமாக உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக. குறைந்தபட்சம் ஒரே ஒரு படுக்கையிலேயே இருந்திருக்கலாம். அவை நன்றாக கடித்து திருப்தி அடைந்தபின், அவையும் தூங்கியிருக்கும். ஆனால், அவை தங்கள் நண்பர்களிடம் சொல்லிவிடும்; பிறகு எல்லோரும் கூட்டமாக வந்துவிடுவார்கள் என்று நான் நினைத்தேன். அதனால்தான், அவைகளைக் கொஞ்சம் குழப்பிவிடலாமே என்று நினைத்து, கொஞ்ச நேரம் இங்கே, கொஞ்ச நேரம் அங்கே என்று மாறி மாறி படுத்திருந்தேன்.
அதற்குப் பின், அதிகாலை 3.30 மணிக்கு மேல் என்னால் தூங்க முடியவில்லை. மூட்டைப் பூச்சிகளின் உபசரிப்பும், அந்த குளிர்ந்த படுக்கைகளும்... அதாவது, தண்ணீரில் ஊறிய படுக்கைகள், அவை குளிராக இல்லை, லேசான ஈரமாகவும் இல்லை, முழுதாக நனைந்திருந்தன. அந்தப் படுக்கையில் படுத்தால், நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகள் தண்ணீரில் ஊறிவிடும். உள்ளாடை உட்பட, எல்லாமே அந்தக் கடும் குளிரில் முழுவதுமாக நனைந்துவிடும்.
தேவலோக காட்சியை கண்டு நனைந்த கண்கள்
அதனால், அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்து வெளியே வந்தேன். அப்போதுதான் தேவலோகத்தைப் பார்த்தேன். தூக்கமே இல்லாமல், தேநீர் குடித்துவிட்டு வரலாம் என்று நினைத்து, அப்படியே மெதுவாக நடந்து கொண்டிருந்தேன். தற்செயலாக மேலே பார்த்தேன். முழுப் பள்ளத்தாக்கும் இருளில் மூழ்கியிருந்திருந்தது. ஆனால், மலை உச்சி மட்டும் எங்கோ வேறொரு திசையில் இருந்து வந்த சூரிய ஒளியில் நனைந்து, வெண்மையாகவும் பொன்னிறமாகவும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. என் கண்களில் கண்ணீர் பெருகியது. அப்போது, "நான் உண்மையிலேயே தேவலோகத்தில் தான் இருக்கிறேன்," என்று தெரிந்தது.
இல்லை, இது நம் உலகம், நாம் வாழும் இந்த லோகமே அவ்வளவு அழகானது, நீங்கள் தேவலோகத்திற்கு போக வேண்டிய அவசியமே இல்லை. இது தான் என் தேவலோக அனுபவம்.


