கேள்வி:

நமஸ்காரம் சத்குரு. நீங்கள் நிறைய பாரம்பரிய இசை கேட்கிறீர்கள். அதற்கு குணப்படுத்தும் சக்தி இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

சத்குரு:

இசை என்றால் என்ன?

முதலில் இசை என்றால் என்னவென்று நாம் புரிந்துகொள்வோம். இசை என்பது சப்தங்களின் ஒரு குறிப்பிட்ட அமைப்பு. சப்தங்களை ஒரு குறிப்பிட்ட விதத்தில் அமைத்தால், அது இரைச்சலாகிவிடும். சப்தங்களை வேறுவிதமாக அமைத்தால், அது இசையாக மாறும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வார்த்தைகள் என்றால் அது ஒரு உளவியல் சார்ந்த கட்டமைப்பு. சப்தம் என்றால் அது பிரபஞ்சத்தை சார்ந்த கட்டமைப்பு.

இசையா? இரைச்சலா?

இன்று இசை என்ற பெயரில் ஏராளமான இரைச்சல்கள் தான் வெளிப்படுகின்றன. பாரம்பரிய இசையைப் பற்றி உங்களுக்கு கொஞ்சம் தெரிந்திருந்தால், அதன் பின்னணியில் பிரம்மாண்டமான கணிதம் இருப்பது உங்களுக்குப் புரியும். அங்கே ஒரு கட்டமைப்பு இருக்கிறது – ஒரு கணிதக் கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது.

உண்மையில் யாராவது மிகச் சிறப்பாக பாடுவதை நான் பார்க்கும்போது, அந்த இசையிலிருந்து ஒரு முழுமையான வடிவியல் உருவாவதை பார்க்கிறேன். எனவே ஏதோ ஒரு வகையில், படைப்பை சப்தத்தின் வடிவத்தில் நீங்கள் மறு உருவாக்கம் செய்ய முயற்சி செய்கிறீர்கள். ஒரு குறிப்பிட்ட இசைக்கலைஞர் எந்தளவிற்கு ஆழமாக, எவ்வளவு தூரம் அதற்குள் செல்ல முடியும் என்பது கேள்விக்குரியது தான், ஆனால் நீங்கள் முயற்சி செய்வது அதைத்தான்.

இசையும் வடிவியலும்

நீங்கள் வடிவியல் அமைப்பை – படைப்பின் வடிவத்தில் சாத்தியமாகக்கூடிய அனைத்து சிக்கலான அமைப்புகளையும் ஆராய முயற்சி செய்கிறீர்கள். ஏனெனில் படைப்பு என்பது சப்தங்கள் அல்லது அதிர்வுகளின் ஒரு சிக்கலான கலவை மட்டுமே.

எனவே, உங்களுக்கு நிச்சயமாகத் தெரியும்... வார்த்தைகளை விட்டுவிடுங்கள். உணர்ச்சிமயமான வார்த்தைகள் இருக்கும் பட்சத்தில், மனிதர்கள் அதில் சற்று உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்றால், அது வேறு விஷயம் – அவர்கள் அதற்கு அர்த்தங்களைக் கொடுக்கிறார்கள். எந்த ஒரு வார்த்தையும் இல்லாமல், இசையால் கண்ணீரைக் கொண்டுவர முடியும், இசையால் ஆனந்தத்தைக் கொண்டுவர முடியும், இசையால் அன்பைக் கொண்டுவர முடியும்; வார்த்தைகளைப் பயன்படுத்தாமல், மனநிலை, உணர்ச்சி மற்றும் அனுபவத்தை வெறும் சப்தத்தின் மூலமாகவே மனிதர்களுக்குள் உருவாக்க முடியும்.

நம் மனதில் அர்த்தம் பெறும் வார்த்தைகள்

வார்த்தைகள் என்றால் அது ஒரு உளவியல் சார்ந்த கட்டமைப்பு. சப்தம் என்றால் அது பிரபஞ்சத்தை சார்ந்த கட்டமைப்பு. இதனால்தான், வார்த்தைகள் இல்லாத இசை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய இசையின் பெரும்பகுதி பெருமளவில் சப்தங்களை மையப்படுத்தி இருக்கிறது – ஆங்காங்கே சில வார்த்தைகள் இருக்கலாம், ஆனால் பெரும்பாலும் சப்தமே. ஏனெனில் சப்தம் என்பது பிரபஞ்சத்தை சார்ந்த அமைப்பு.

வார்த்தை – ஒரு வார்த்தையின் அர்த்தம் என்பது உளவியல் சார்ந்த ஒரு கட்டமைப்பு. உதாரணத்திற்கு, நான் தமிழில் ஒரு பாட்டு பாடினால், அது உங்களுக்கு எதையும் உணர்த்தப்போவதில்லை, ஏனென்றால் உங்களுக்கு அந்த மொழி புரியாமல் இருக்கலாம். எனக்கு தெரியாத வேறொரு மொழியில் நீங்கள் பாடினால், அது எனக்கு எதையும் உணர்த்தப்போவதில்லை, ஏனென்றால் எனக்கு அதன் அர்த்தம் புரியாது. ஆனால் சப்தத்தின் தன்மை அப்படிப்பட்டது அல்ல.

சப்தம் ஒரு குறிப்பிட்ட வடிவியல் அமைப்பில் பொருந்தி இருக்கும்போது, நீங்கள் யார் என்பது முக்கியமல்ல; அது உங்கள் உணர்ச்சிகளை மட்டும் தொடுவதில்லை, மாறாக உங்கள் உயிரின் ஆழத்தையே தொடுகிறது – இந்த படைப்பு என்னுள்ளே  எப்படி நிகழ்ந்துள்ளதோ அந்த அடிப்படை வழியில் தான் உங்களைத் தொடுகிறது.

எனவே, இது உயிரைத் தொடுவதற்கான ஒரு முயற்சி. இது வேறு ஒரு பரிமாணத்தில் உயிரை பிரதிபலிப்பதற்கான ஒரு முயற்சி, இது அசாத்தியமான ஒரு விஷயம். இதனால் மனிதர்கள் ஆரோக்கியமாகவும், நலமாகவும் மாறுவார்களா? நிச்சயமாக, சரியான ஸ்ருதியைத் தொட்டால் அது நடக்கும்.