கேள்வி: சத்குரு, நீங்கள் சிவனுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். ஏன் ஜென் குருமார்கள் போன்ற மற்ற குருமார்களைப் பற்றி நீங்கள் அதிகம் பேசுவதில்லை?
சத்குரு: ஏனெனில் சிவனைப் போல் தீவிரமிக்கவர் என்று எனக்கு வேறு யாருமில்லை. நாம் சிவனை யாருடனும் ஒப்பிட்டுப் பேசவில்லை. நீங்கள் சிவன் என்று குறிப்பிடுவது அனைத்தையும் உள்ளடக்கியது. மனிதகுலத்திற்கு பெரும் சேவை செய்த பல அற்புதமான மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் உணர்தலின் அடிப்படையில், அவரைப் போன்ற மற்றொரு உயிர் இருந்ததில்லை.
நீங்கள் ஜென் பற்றி பேசுகிறீர்கள். சிவனைவிட சிறந்த ஜென் குரு யார் இருக்க முடியும்? குட்டேய் என்ற ஜென் குருவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? குட்டேய் ஜென் பற்றி பேசும்போதெல்லாம், "எல்லாமே ஒன்று" என்பதைக் காட்ட தனது விரலை உயர்த்துவார். இந்த ஜென் மடாலயங்களில், சிறு பிள்ளைகள் நான்கு, ஐந்து வயதிலேயே துறவிகளாகி விடுவார்கள். இப்படி மடாலயத்தில் வளர்ந்த ஒரு சிறுவன் குட்டேய்யைப் பார்த்து, யாராவது ஏதாவது சொன்னால் அவரைப் போலவே தனது சுட்டுவிரலை உயர்த்த ஆரம்பித்தான். குட்டேய் இதைக் கவனித்தார், ஆனால் அந்தப் பையன் பதினாறு வயதை அடையும் வரை காத்திருந்தார். ஒரு நாள், குட்டேய் அந்தப் பையனை அழைத்து தனது விரலை உயர்த்தினார். அந்த பையனும் உடனடியாக அதேபோல செய்தான். குட்டேய் ஒரு கத்தியை எடுத்து அந்த பையனின் விரலை வெட்டிவிட்டார். அப்போது அந்த சிறுவன் ஞானம் அடைந்தான் என்கிறார்கள். உடனே அவன் இது “ஒன்று” பற்றியது அல்ல, “ஒன்றுமின்மை” பற்றியது என்பதை உணர்ந்தான்.
சிவன் வெகுகாலத்திற்கு முன்பே இதற்கும் மேலே சென்றார். ஒரு நாள், நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார். பத்து, பதினொரு வயதாகியிருந்த தனது மகனை அவர் அப்போது வரை பார்த்திருக்கவில்லை. அவர் வந்தபோது, ஒரு சிறிய சூலத்தை ஏந்தியிருந்த அந்த சிறுவன் அவரை தடுக்க முயன்றான். சிவன் அவனது சூலத்தை அல்ல, தலையையே துண்டித்தார். பார்வதி இதனால் மிகவும் வருத்தமடைந்தாள். இதைச் சரிசெய்ய, சிவன் ஒரு சிவ கணத்தின் தலையை சிறுவனின் உடலில் பொருத்தினார். பின்னர் அந்தச் சிறுவன் மிகவும் புத்திசாலியானான். இன்றும் கூட இந்தியாவில், மக்கள் கல்வியையோ அல்லது வேறு எதையோ தொடங்கும் முன் இந்தச் சிறுவனை வணங்குவார்கள். இப்போது மக்கள் இதை சற்று மாற்றிவிட்டனர், கணத்தின் தலை யானையின் தலையாக மாறிவிட்டது, ஆனால் அவன் அறிவுத்திறன் மற்றும் புத்திகூர்மையின் உருவகமாக மாறினான். அவனுக்குத் தெரியாதது எதுவுமில்லை என்று சொன்னார்கள்.
இந்த உலகில் எதுவும் சிவனின் இருப்பிலிருந்து விடுபட்டதல்ல. அவர் மிகவும் நுட்பமானவர் மற்றும் முழுமையானவர்.
அதுதான் முதல் ஜென் செயல். இந்த உலகில் எதுவும் சிவனின் இருப்பிலிருந்து விடுபட்டதல்ல. அவர் மிகவும் நுட்பமானவர் மற்றும் முழுமையானவர். அவர் போதனைகள் வழங்கவில்லை, வழிமுறைகளை மட்டுமே கொண்டிருந்தார். இந்த வழிமுறைகள் நூறு சதவீதம் விஞ்ஞானப் பூர்வமானவை. மனித உடலில் 114 சக்கரங்கள் இருப்பதால், ஒரு மனிதன் முக்தி அடையக்கூடிய 112 வழிகளை அவர் வழங்கினார். இரண்டு சக்கரங்கள் உடலுக்கு வெளியே இருப்பதால், மற்ற இரண்டும் பொருள்தன்மைக்கு அப்பாற்பட்டவர்களுக்கு மட்டுமே என்றார். மனிதர்களுக்கு முக்தியடைய 112 வழிகள் மட்டுமே உள்ளன. இந்த உயிர் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது என்பதன் 112 பரிமாணங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கான தெளிவான வழிமுறைகளை அவர் காட்டினார். ஒவ்வொன்றின் மூலமும் நீங்கள் மெய்யுணர முடியும்.
சிவன் பேசியது உயிரின் இயக்கம் பற்றியது, அது தத்துவம் அல்ல, போதனை அல்ல, சமூகத்தைப் பற்றி அல்ல – விஞ்ஞானம் மட்டுமே. இந்த விஞ்ஞானத்திலிருந்து, குருமார்கள் தொழில்நுட்பத்தை உருவாக்குகிறார்கள். அவர் அதன் விஞ்ஞானத்தை வழங்கினார். இன்று நீங்கள் அனுபவிக்கும் தொழில்நுட்பங்களுக்குப் பின்னால், அது ஸ்மார்ட்போனாக இருக்கலாம் அல்லது கணினியாக இருக்கலாம் அல்லது வேறு எந்தவித சாதனமாகவும் இருக்கலாம், அத்தனைக்கும் பின்னால் ஒரு விஞ்ஞானம் உள்ளது. அந்த விஞ்ஞானம் உங்களுக்கு தெரிந்த ஒன்று அல்ல. நீங்கள் தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்துகிறீர்கள். ஆனால் யாராவது விஞ்ஞானத்தைப் புரிந்துகொள்ளாவிட்டால், உங்களுக்கு தொழில்நுட்பம் கிடைத்திருக்காது.
எனவே சிவன் வழங்கியது தூய விஞ்ஞானம் மட்டுமே. தங்கள் முன் அமர்ந்திருக்கும் மக்களுக்கு ஏற்றவாறு தொழில்நுட்பத்தை உருவாக்குவதை அவர் சப்தரிஷிகளிடம் விட்டுவிட்டார். தொழில்நுட்பத்தை உருவாக்கலாம். நமக்கு என்ன தேவை என்பதைப் பொறுத்து, நாம் ஒரு குறிப்பிட்ட சாதனத்தை உருவாக்குகிறோம், ஆனால் அடிப்படை விஞ்ஞானம் ஒன்றுதான். இன்று உபயோகமாக உள்ள சாதனங்கள் நாளை உபயோகமற்றதாக இருக்கலாம். ஒரு காலத்தில் மிகவும் மதிப்புமிக்கதாகக் கருதப்பட்ட பல சாதனங்கள் இப்போது புதிய சாதனங்கள் வந்துவிட்டதால் மதிப்பற்றதாகிவிட்டன - ஆனால் விஞ்ஞானம் ஒன்றுதான்.
ஆதியோகியைப் பொறுத்தவரை, நாம் அடிப்படை விஞ்ஞானத்தைப் பற்றியே பேசுகிறோம். இன்றைய காலகட்டத்தில், பல்வேறு காரணங்களால் மனிதகுலம் இத்தகைய நிலையில் இருக்கும்போது, இந்த அடிப்படை விஞ்ஞானத்தை வலுப்படுத்துவது மிகவும் அவசியமாகிறது.