சத்குரு:
சிவனின் வாழ்க்கையில் ஒரு சூழ்நிலை உருவானது. ஒரு மிகப்பெரிய அநீதி நடந்தது. இதனால் அவருடைய மனைவி சதி, தீக்குளித்து தன்னையே எரித்துக்கொண்டார். இதனை அறிந்த சிவன் தன்னுடைய ஒரு மயிரிழையை எடுத்து வீரபத்ராவை உருவாக்கினார். ‘வீரா’ என்றால் உக்கிரமான ஒருவர், துணிவான ஒருவர் என்று பொருள். ‘வீரா’ என்ற வார்த்தை ‘வீர்யம்‘ என்ற வார்த்தையிலிருந்து வந்துள்ளது. ‘வீர்யம்‘ என்றால் விந்து, விதை என்று பொருள். வீர்யம் என்னும் இந்த விதையிலிருந்துதான் மனித இனம் பிறந்துள்ளது. சிவாவின் வாழ்க்கையில் முக்கியமான தன்மை என்னவென்றால் அவர் ஒருபோதும் தன்னுடைய விந்தை சிதறச் செய்ததில்லை.
சிவன் இந்த அடிப்படையான சக்தியை, இனப்பெருக்கத்திற்கு வழிவகுக்கும் உடல் தன்மையிலோ அல்லது காம உணர்வினாலோ வெளிப்படுத்தாமல், அதே சக்தியை விழிப்புணர்வின் உச்சநிலையை அடையப் பயன்படுத்தினார். அந்த செயல்முறையில் அவர் அதனை தன் உச்சந்தலையின் வழியாக பொழிந்தார். ஒருவர் தன் உச்சந்தலையின் வழியாக சக்தியை பொழியும் போதுதான் ‘யோகி’ என அழைக்கப்படுகிறார்.
எனவே வீரபத்ரா என்பது சிவனின் ஒரு மயிரிழைதான். அநீதியை ஏற்படுத்திய அரசனின் படைகளை அவர் ஒருவராகவே துவம்சம் செய்தார். இந்த கதை நமக்கு கூற முயற்சிப்பது என்னவென்றால், சிவா தன்னுடைய விந்தை உச்சந்தலையின் வழியாக பொழிந்ததால் அவருடைய முடிக்கு அவ்வளவு வல்லமை இருக்கிறது. ஒரு மயிரிழையினாலேயே முழு படையையும் அழிக்க முடிந்தது. ஒரு மனிதர் இனப்பெருக்க செயல் முறைகளில் ஈடுபடாமல் இருந்தால் இயற்கையாகவே உடலின் மீதுள்ள பற்று அவருக்கு குறைவாக இருக்கும். யாருக்கு உடலின் மீதுள்ள பற்று குறைவாக இருக்கிறதோ, அவருக்கு பய உணர்வு இருக்காது. பய உணர்வு இல்லையென்றால் இயற்கையாகவே அவர் ஒரு உக்கிரமான மனிதராக இருப்பார்.
எனவே இந்த பாரம்பரியங்கள் உக்கிரமான மனிதர்களை உருவாக்கியது சண்டையிடுவதற்காகவோ அல்லது போர் புரிவதற்காகவோ அல்ல. வாழ்க்கையை ஒரு அழமான நிலையில் அறிந்து கொள்வதற்காகவே அப்படி உருவாக்கின. ஏனென்றால் வாழ்க்கையை ஆழமாக அறிந்து கொள்வதற்கு துணிவு வேண்டும். துணிவில்லாதவர்கள் உண்மையை அறிய முடியாது.
மனித வாழ்க்கையில் மிகவும் பலவீனம் எதுவென்றால், ‘பயப்படுவது’ தான். வலியோ அல்லது வருத்தமோ கூட அவ்வளவு பலவீனமானதல்ல. ஒருமுறை நீங்கள் பயப்படத் துவங்கிவிட்டால் பிறகு இந்த பலவீனம் மற்ற பலவீனங்களைவிட முற்றிலும் வித்தியாசமான நிலைக்கு உங்களை எடுத்துச் செல்லும்.
யாரொருவர் கடுமையாக சாதனா செய்கிறார்களோ அப்போது சக்திகள் மேல் முகமாக நகர்கின்றன. அப்போது உடலின் மீதுள்ள கவனம் குறைந்து, அதன் மீதுள்ள அடையாளம் குறைகிறது. உடலின் மீதுள்ள அடையாளம் குறையும்போது அதிகபயமற்றவராக மாறுவார். பயத்தின் பிடியில் சிக்கியிருக்கும்வரை யாராலும் முழுத்திறமையோடு வாழ முடியாது. அவர் முடவனாக, பாதி மனிதராகத்தான் இருப்பார்.
எனவே ஈஷாவில் நாம் இந்த வீரபத்ர அக்காடாவை திறந்துள்ளோம். நிச்சயமாக நாம் இங்கு சில உக்கிரமமான, சக்திமிக்க மனிதர்களை உருவாக்கப் போகிறோம். அதற்கு உதவியாக அமைக்கப்பட்டுள்ள இந்த களரிப் பயிற்சி இந்த பூமியிலேயே பழைமைவாய்ந்த ஒரு வீர விளையாட்டாகும். இந்த வீர விளையாட்டுகள் அகஸ்திய முனிவரால் துவக்கி வைக்கப்பட்டன. இந்த வீர விளையாட்டுகள் உதைப்பது அல்லது குத்துவது பற்றி கற்றுத் தருவதில்லை. எனவே இந்த களரிப்பயிற்சி என்பது உடற்பயிற்சி, விரைந்து செயல்படும் தன்மை, வேகமாகக் குணப்படுத்துதல், உடலின் இரகசியங்களைத் தெரிந்து கொள்வது மற்றும் நம் சக்தி அமைப்பினை புரிந்து கொள்வது என்று இந்த உடலை எல்லா வழிகளிலும் பயன்படுத்தக் கற்றுத் தருகிறது.
களரியில் முக்கியமாக களரி சிகிட்சா மற்றும் களரி மர்மா ஆகிய முறைகள் உள்ளன. இதில் நீங்கள் போதுமான அளவு ஆழமாகச் சென்றால், இயற்கையாகவே நீங்கள் யோகாவை நோக்கி நகர்வீர்கள். ஏனென்றால் அகஸ்திய முனிவரிடம் இருந்து வந்த எதுவானாலும் அது ஆன்மீகத் தன்மை கொண்டதாகவே இருக்கும். இங்கேயும் அப்படி நிகழவேண்டும் என்று நாம் நிச்சயமாக விரும்புகிறோம்.
மக்களுக்கு உடல் என்றால் சாப்பிடுவது, தூங்குவது, சாதாரண இன்பங்கள் அனுபவிப்பது என்று மட்டுமே தெரியும். அவர்களுக்கு இந்த உடலைப்பற்றி வேறெதுவும் தெரியாது. இந்த உடலைப்பற்றி அறியப்படாத பரிமாணங்கள் பல உள்ளன. உங்களுக்கு தெரியுமா, சில கராத்தே வீரர்களால் தொடுவதன் மூலமாகவே ஒருவரை கொல்ல முடியும் என்று? ஒரு சாதாரணமான தொடுதலின் மூலம் ஒருவரை கொல்ல முடிவது உண்மையில் பெரிய விஷயமில்லை. ஒரு தொடுதலின் மூலமாக அவர்களை விழிப்பான நிலைக்கு உங்களால் கொண்டுவர முடிந்தால் அதுதான் பெரிய விஷயமாக இருக்கும். எனவே சாதாரணமாக தொடுவதன் மூலமாகவே மற்றவரைக் கூட அல்ல, உங்களையே ஒரு விதமாக தொடுவதன் மூலம் உங்களின் முழு அமைப்புமே விழிப்பான நிலைக்கு வர முடியும்.
பெரும்பாலான மனிதர்கள், சொல்லப் போனால் 99.99% பேர் மிகவும் பிரமாதமான இயந்திரமான இந்த உடலைப் பற்றிக் கூட முழுவதும் அறிந்துகொள்ளாமல் மடிகின்றனர். சிறிது இன்பமாக இருந்தாலே போதும் என்ற நிலையில் அவர்கள் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் உடலை நீங்கள் அறிந்து கொண்டால், இந்த உடலே ஒரு பிரபஞ்சமாக இருப்பதை அறிய முடியும். மிகவும் அற்புதமான அரிய செயல்கள் பலவற்றை இந்த உடலால் செய்ய முடியும்.
எனவே களரி என்பது யோகாவின் ஒரு பகுதி. மிகவும் அதிக செயல்கள் கொண்ட பகுதி. தற்கால கல்விமுறை அதிகம் சம்பாதிப்பது, வசதியாக வாழ்வது என்பது பற்றியே உள்ளது. யாரொருவர் தன்னுடைய உடலையும் மூளையையும் ஒரு குறிப்பிட்ட அளவு திறமையுடன் வளர்க்கிறார்களோ அவர்கள் வாழ்வதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. நீங்கள் ஒரு குறிப்பிட்ட தன்மையுடன் இருந்தால் பிழைப்பு ஒரு பிரச்சனையாக இருக்காது. பிழைப்பு தானாகவே நிகழும். ‘அடுத்த உணவு எங்கே, அடுத்த உணவு எங்கே’ என்று எப்போதும் நினைத்துக் கொண்டு உங்கள் வாழ்க்கையை வீணாக்கத் தேவையிருக்காது. ஆனால் மனிதர்கள் தங்களது முதல் 25 வருட காலத்தையும் அதிகம் சம்பாதிப்பதற்கேற்ற கல்வி பயில்வதிலேயே செலவளிக்கிறார்கள். இது மிகவும் அபத்தமானது.
எனவே அந்தக் கல்வி முறையிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றி, வீர்யமான மனிதர்களை உருவாக்க வேண்டும். அதற்காகவே இங்கு வீரபத்ர அக்காடாவை அமைத்திருக்கிறோம்.