logo
logo
கேதார்நாத், கேதார்நாத் கோயில் வரலாறு, Kedarnath in Tamil

கேதார்நாத் ஜோதிர்லிங்கம் கோவிலுக்கும் சிவனுக்குமான சக்திவாய்ந்த தொடர்பு

கேதார்நாத் ஜோதிர்லிங்கம் கோவிலின் ஆன்மீக முக்கியத்துவத்தையும் சிவனுடனான அதன் தொடர்பையும் அறிந்திடுங்கள். சத்குரு இந்த தொன்மையான மற்றும் சக்திவாய்ந்த கோவிலின் அம்சங்களைப் பற்றி விளக்குகிறார்.

கேதார்நாத் ஜோதிர்லிங்கமும் சிவனுடனான தொடர்பும்

சத்குரு: கேதார்நாத் ஒரு பிரம்மாண்டமான இடம். "ஷிவா" என்ற ஒலியின் உச்சரிப்பு இங்கு முற்றிலும் புதிய பரிமாணத்தையும் முக்கியத்துவத்தையும் அடைகிறது. இந்த குறிப்பிட்ட ஒலிக்காகவே விசேஷமாக உருவாக்கப்பட்ட இடம் இது. "ஷிவா" என்ற வார்த்தையை நாம் உச்சரிக்கும்போது, அது படைக்கப்படாதவைகளின் சுதந்திரம், படைக்கப்படாதவைகளின் விடுதலை. இதைச் சொல்வது சரியல்ல, ஆனால் கிட்டத்தட்ட இந்த கிரகத்தில், "சிவன்" என்ற ஒலி கேதார்நாத்தில் இருந்து தான் வெளிப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, மக்கள் அந்த இடத்தை அந்த ஒலியின் எதிரொலிப்பாகவே அனுபவித்துள்ளனர்.

நாம் "ஷிவா" என்று கூறும்போது, வாழ்க்கையில் அதிக செழிப்பையோ அல்லது சிறந்த விஷயங்களையோ நாம் கேட்க மேலும் ஒரு சிலையையோ அல்லது கடவுளையோ உருவாக்குவது பற்றியது அல்ல. “ஷிவா" என்ற சொல்லுக்கு "எது இல்லையோ அது" என்று பொருள். இன்று, நவீன அறிவியல், அனைத்தும் ஒன்றுமில்லாததில் இருந்து தோன்றி ஒன்றுமில்லாமைக்கே திரும்பிச் செல்கிறது என்பதை நமக்கு நிரூபித்து வருகிறது. இருப்பின் அடிப்படையும் பிரபஞ்சத்தின் அடிப்படை தன்மையும் பரந்த ஒன்றுமில்லாத்தன்மையே. விண்மீன் திரள்கள் ஒரு சிறிய நிகழ்வு – சிறு சிறுத் துளிகளே. மீதமுள்ளவை அனைத்தும் பரந்த வெற்றிடமாகும், இதுவே சிவன் என்று குறிப்பிடப்படுகிறது.

கேதார்நாத் ஒரு பிரம்மாண்டமான இடம். "ஷிவா" என்ற ஒலியின் உச்சரிப்பு இங்கு முற்றிலும் புதிய பரிமாணத்தையும் முக்கியத்துவத்தையும் அடைகிறது. இந்த குறிப்பிட்ட ஒலிக்காகவே விசேஷமாக உருவாக்கப்பட்ட இடம் இது.

கேதார்நாத் ஜோதிர்லிங்கம் மற்றும் பஞ்ச கேதார் ஸ்தலத்தின் கதை

குருஷேத்திரப் போருக்குப் பிறகு, பாண்டவர்கள் தங்கள் சொந்த சகோதரர்களையும் உறவினர்களையும் கொன்றதால் மிகவும் பாதிக்கப்பட்டனர் என்று ஒரு புராணக்கதை உள்ளது. இது கோத்ரவதம் என்று அழைக்கப்பட்டது. இந்தச் செயலால் அவர்கள் குற்ற உணர்ச்சியுடனும் கறையடைந்தவர்களாகவும் உணர்ந்தனர், மேலும் அதிலிருந்து விடுபட ஒரு வழியைத் தேடினர். எனவே அவர்கள் சிவனைத் தேடிச் சென்றனர். 

இந்த கொடூரமான செயலின் விளைவுகளிலிருந்து உடனே விடுவித்து அவர்களுக்கு மகிழ்ச்சியை வழங்க சிவன் விரும்பவில்லை, எனவே அவர் தன்னை ஒரு காளையின் வடிவமாக மாற்றிக்கொண்டு தப்பிக்க முயன்றார். ஆனால் அவர்கள் சிவனைப் பின்தொடர்ந்து அவரைப் பிடிக்க முயன்றனர். சிவன் பூமிக்கு உள்ளே சென்றார். அவர் மேலே வந்தபோது, உடலின் பல்வேறு பாகங்கள் வெவ்வேறு இடங்களில் தோன்றின.

காளையின் திமில் கேதார்நாத்திலும், இரண்டு முன் கால்கள் கேதார் செல்லும் வழியில் உள்ள துங்கநாத்திலும். இமயமலையின் இந்தியப் பகுதியில் மத்திய-மகேஷ்வர் என்று அழைக்கப்படும் ஒரு இடத்தில் தொப்புளும் தோன்றின. இது மிகவும் சக்திவாய்ந்த மணிப்பூரக சக்கர லிங்கம், மேலும் சிவனின் ஜடாமுடி கல்பேஷ்வரர் என்று அழைக்கப்படும் இடத்தில் தோன்றியது. இதுபோன்று, உடலின் பல்வேறு பாகங்கள் வெவ்வேறு இடங்களில் தோன்றின.

உடல் பாகங்களின் இந்த விளக்கத்திற்கும் ஏழு சக்கரங்களுக்கும் தொடர்பு உள்ளது. இந்த கோவில்கள் மனித உடலாக நிறுவப்பட்டன. ஒரு பெரிய உடலை உருவாக்கும் முயற்சியில் இது ஒரு மகத்தான முயற்சியாக இருந்தது - அத்தகைய ஒரு உடல் இந்திய இமயமலையின் திசையில் உருவானது. அதேபோல் மற்றொரு உடல், நேபாளத்தையே ஒரு உடலாக மாற்ற முயன்றதில் மேற்கு திசையை நோக்கி அமைந்தது.

கேதார்நாத் ஜோதிர்லிங்கம் - சக்திகளின் ஆற்றல்மிக்க கலவை

கேதார்நாத் என்பது சக்திகளின் ஆற்றல்மிக்க கலவை. ஆயிரக்கணக்கான யோகிகள் மற்றும் அனைத்து வகையான ஆன்மீகவாதிகளையும் கண்ட இடம் இது. நான் அனைத்து வகையான என்று சொல்லும்போது, உங்களால் அந்த வகைகளை கற்பனை செய்து பார்க்க முடியாது. அவர்கள் யாருக்கும் எதையும் கற்பிக்க முயற்சிக்காத நபர்கள். தங்கள் சக்திகளையும், தங்கள் பாதையையும், தங்கள் பணிகளையும்-எல்லாவற்றையும் - இந்த இடங்களில் ஒரு குறிப்பிட்ட வழியில் விட்டுச் செல்வதே உலகிற்கு அவர்கள் அர்ப்பணம் செய்யும் வழி.


ஆன்மீகப் பாதையில் செல்லும் ஒருவரைப் பற்றி நீங்கள் நினைக்கும் போது, குறிப்பிட்ட வகையான நடத்தை, உடை அல்லது பேச்சு ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட வகையான கட்டமைப்பிற்குள் அவர்களைப் பற்றி நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது அந்த வகையான ஆன்மீக நபருக்கான இடம் அல்ல. உங்கள் புரிதல் முறைகளுக்கு பொருந்தக்கூடிய வகை இங்கே உள்ளது. ஆனால் அங்கே பலர் முற்றிலும் காட்டுமிராண்டித்தனமாக உள்ளனர், அவர்களை நீங்கள் ஒருபோதும் ஆன்மீகவாதியாக அங்கீகரிக்க முடியாது. ஆனால் இவர்கள் வாழ்வின் உச்சத்தைத் தொட்டவர்கள். நாம் "ஒரு யோகி" என்று கூறும்போது, நாம் ஒரு குறிப்பிட்ட நடத்தை அல்லது அறநெறியைக் கொண்ட ஒருவரைக் குறிக்கவில்லை. ஒரு யோகி வாழ்க்கையுடன் முழுமையாக ஒத்துப்போகிறார். இதனால் அவர் உயிரை முழுமையாக பிரித்து அதை மீண்டும் ஒன்றாக இணைக்க முடியும். நீங்கள் என்ற அடிப்படை உயிரை, முற்றிலுமாக பிரித்து மீண்டும் இணைக்க முடிந்தால், நீங்கள் ஒரு யோகி. இப்படி நம்பமுடியாத மனிதர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். 

கேதார்நாத்திற்கு யாத்திரை

ஒருவித ஆன்மீக முன்னேற்றத்தை நாடும் ஒருவருக்கு, கேதார்நாத் ஒரு வரம். அதன் பரிமாணங்களை உங்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. இதை விளக்கிக் கூறுவது என்பது மிகவும் கடினம். எல்லாவற்றிற்கும் மேலாக, இது வெறும் ஒரு பாறையின் வெளிப்பகுதி. ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கு வாழ்ந்த வெவ்வேறு விதமான மக்களால் அந்த இடத்திற்கு என்ன செய்யப்பட்டுள்ளது என்பது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. எத்தனையோ யோகிகள் தங்கள் உடல்களைத் துறந்த இடம் இது. நீங்கள் நிச்சயம் சென்று தரிசிக்க வேண்டிய ஒரு இடம். இந்தியாவில் பிறந்த பிறகு, நீங்கள் மிகவும் வயதாகி, எதற்கும் இயலாதவராக ஆவதற்கு முன், இமயமலைக்கு ஒருமுறையாவது செல்ல வேண்டும். 

கேதார்நாத் ஜோதிர்லிங்கம் கோவில் மற்றும் ஆதிசங்கரர்

ஆதிசங்கரர் ஒரு அறிவார்ந்த மேதை மற்றும் மொழியியல் வல்லுநர். அவரது குறுகிய கால வாழ்நாளில், இந்த தேசம் முழுவதும் கிழக்கு எல்லையிலிருந்து மேற்கு எல்லைக்கும், வடக்கு எல்லையிலிருந்து தெற்கு எல்லைக்கும் நடந்தே தன் பணியைச் செய்தார். சங்கரர் காலடி என்ற கிராமத்திலிருந்து வந்தவர், அதாவது "பாதங்களுக்குக் கீழே" என்று பொருள். தெற்கில் நாம் பாரத மாதாவின் காலடியில் இருக்கிறோம். பாரதம் என்றால் நாம் எப்போதும் தெய்வீகத்தின் காலடியில் எப்படி இருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டுள்ளோம். தெய்வீகத்தின் பாதத்தில் இருப்பதன் மூலம் நாம் பரிணாமம் அடைந்தோம், மேலும் மலர்ச்சி அடைந்தோம். இது ஆடம்பரம் நிறைந்த கலாச்சாரம் அல்ல, இது இயற்கையான பக்தியின் கலாச்சாரம்.

ஆதிசங்கரர், “எல்லாம் மாயை” என்றார். மாயா என்றால் மாயை என்று பொருள். அதன் பொருள் நீங்கள் அது எப்படி இருக்கிறதோ அப்படியே பார்க்கவில்லை. இதோ நீங்கள் இந்த திடமான உடலுடன் இருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் உண்ணும் உணவு, நீங்கள் குடிக்கும் தண்ணீர் மற்றும் நீங்கள் சுவாசிக்கும் காற்றுடன், உங்கள் உடலின் செல்கள் தினசரி பரிமாறப்படுகின்றன. இதன் பொருள் சிறிது நேரம் கழித்து, நீங்கள் முற்றிலும் புதிய உடலைப் பெறுவீர்கள். ஆனால் உங்கள் அனுபவத்தில், இது ஒன்றே போல் தெரிகிறது - இது மாயை. அதேபோல, ஐந்து புலன்கள் மூலம் நீங்கள் இருப்பை உணரும் விதம், முற்றிலும் துல்லியமற்றது - இதைத்தான் சங்கரர் மாயை என்றார்.

ஒருமுறை சங்கரர் எப்படி காசியில் நீராடிவிட்டு அதிகாலையில் கோயிலுக்குள் நுழைந்தார் என்று ஒரு கதை உண்டு. அப்போது அவர் வழியில் ஒரு சண்டாளன் வந்தார். சண்டாளர்கள் சுடுகாட்டைப் பராமரித்த ஒரு குறிப்பிட்ட சாதியினர். அவர்கள் மிகவும் தாழ்ந்தவர்களாகவும், அமங்கலமானவர்களாகவும் கருதப்பட்டனர். சண்டாளனைக் கண்டால் மரணம் வரும் என்ற நம்பிக்கையும் இருந்தது. யாரும் அவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை, அவர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.

எனவே இந்த மனிதர் அவர் முன்னால் வந்தபோது, ​​​​சங்கரர், "விலகிப் போ" என்றார். அந்த மனிதன் அங்கேயே நின்று கொண்டு, "யார் விலகிச் செல்ல வேண்டும் - நானா அல்லது என் உடலா?" என்று கேட்டார். இது சங்கரரை மிகவும் பாதித்தது. “இந்த உடல் நீங்கள் அல்ல, இவை அனைத்தும் மாயை” என்பதை அனைவருக்கும் போதிக்கச் சென்றார். இப்போது அந்த மனிதன் இந்தக் கேள்வியைக் கேட்டபோது, ​​அது அவரை பாதித்தது. அதன் பிறகு, அவர் மீண்டும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, ஒரு போதனையும் கொடுக்கவில்லை. அவர் இமயமலைக்கு நடந்தார். கேதார்நாத்தில், இன்றும் அவருக்கு ஒரு நினைவுச்சின்னம் உள்ளது - அவரது கை மற்றும் கைத்தடி பளிங்குக்கல்லில் செதுக்கப்பட்டு, சுவருக்கு வெளியே உள்ளது. அதுதான் அவர் கடைசியாகப் பார்க்கப்பட்ட இடம். அவர் நடந்து சென்று சிவனுடன் இணைந்ததாகக் கதை கூறுகிறது.

இதுவே நம் தேசம் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படை இயல்பு. நாம் ஒருவரை தள்ளி விட்டு முன்னேறுவதில்லை – தலைவணங்குவதன் மூலம் உயருகிறோம். அது கடவுளாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், குழந்தையாக இருந்தாலும், விலங்குகளாக இருந்தாலும், மரமாக இருந்தாலும், பாறையாக இருந்தாலும் - எல்லாவற்றிற்கும் தலைவணங்கக் கற்றுக்கொண்டோம். இதுவே நமது பலமாக இருக்கிறது, இதுவே நமது வழியாக இருக்கிறது, இதுவே நமது பரிணாமம் மற்றும் மெய்யுணர்தலின் செயல்முறை மற்றும் முறையாகவும் இருக்கிறது.

சிவன் ஏன் பத்ரிநாத்திலிருந்து கேதார்நாத்திற்கு இடம்பெயர்ந்தார்?

பத்ரிநாத் இமயமலையில் சுமார் 13700 அடி உயரத்தில் உள்ள ஒரு அற்புதமான ஈர்க்கக்கூடிய இடம். பத்ரிநாத் பற்றி ஒரு புராணக்கதை உள்ளது. இங்குதான் சிவனும் பார்வதியும் வாழ்ந்தனர். ஒரு நாள் சிவனும் பார்வதியும் காலாற நடந்துசென்றனர். திரும்பி வந்து பார்த்தபோது, ​​வீட்டு வாசலில் ஒரு குழந்தை அழுதுகொண்டிருந்தது. மனமுடைந்து அழும் இந்தக் குழந்தையைப் பார்த்த பார்வதியின் தாய்மையுணர்வு மேலெழுந்ததால், குழந்தையைத் தூக்க விரும்பினாள். சிவன் அவளைத் தடுத்து, “அந்தக் குழந்தையைத் தொடாதே” என்றார். அதற்குப் பார்வதி, “எவ்வளவு கொடுமை. நீங்கள் எப்படி அவ்வாறு சொல்லலாம்?” என்றார்.

சிவன், “இது நல்ல குழந்தை இல்லை. ஏன் அந்த குழந்தை தனியாக நம் வீட்டு வாசலிற்கு வந்தது? சுற்றி யாரும் இல்லை, பனியில் பெற்றோரின் கால்தடங்களும் இல்லை. இது ஒரு குழந்தை இல்லை” என்றார். ஆனால் பார்வதி, “முடியாது! குழந்தையை இப்படியே விட்டுச்செல்ல என்னுள் இருக்கும் தாய்மை அனுமதிக்காது” என்று கூறிவிட்டு குழந்தையை வீட்டிற்குள் தூக்கிச் சென்றாள். குழந்தை பார்வதியின் மடியில் மிகவும் சௌகரியமாக இருந்தது, மேலும் சிவனை மிகவும் மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தது. இதன் பின்விளைவுகளை அறிந்த சிவன், "சரி, என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்றிருந்தார்.

பார்வதி குழந்தையை ஆறுதல் படுத்தி உணவு ஊட்டிவிட்டார். குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு சிவனுடன் அருகில் உள்ள வெந்நீர் ஊற்றிற்கு குளிக்கச் சென்றாள். திரும்பி வந்து பார்த்தபோது கதவுகள் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததைக் கண்டனர். பார்வதி வியந்தாள். "கதவை மூடியவர் யார்?" என்று கேட்டாள். அதற்குச் சிவன், “நான் தான் சொன்னேனே, இந்தக் குழந்தையைத் தூக்காதே என்று. நீ குழந்தையை வீட்டிற்குள் கொண்டுவந்தாய், இப்போது அது கதவைப் பூட்டிக்கொண்டது.

பார்வதி, “என்ன செய்வது?” என்றாள்.

சிவனுக்கு இரண்டு வழிகள் இருந்தன: ஒன்று தனக்கு முன்னால் இருக்கும் அனைத்தையும் எரிப்பது. மற்றொன்று வேறு வழியைக் கண்டுபிடித்துச் செல்வது. அதனால், சிவன் “வேறு எங்காவது போகலாம். ஏனென்றால் இது உன் அன்பான குழந்தை, என்னால் அதைத் தொடமுடியாது" என்று சொன்னார்.

இப்படித்தான் சிவன் தனது வீட்டையே இழந்தார், சிவனும் பார்வதியும் "வசிக்க அனுமதியில்லாத அந்நியர்கள்" ஆனார்கள்! அவர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடத்தைத் தேடி அலைந்து கடைசியில் கேதார்நாத்தில் குடியேறினர். அவருக்குத் தெரியாதா என்று நீங்கள் கேட்கலாம். உங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியும், ஆனால் நீங்கள் இன்னும் அவற்றை நடக்க அனுமதிக்கிறீர்கள்.

சிவன் எப்பொழுதும் மிகவும் சக்தி வாய்ந்தவராகக் காணப்படுகிறார், அதேநேரத்தில் உலகத்துடன் அவ்வளவு வஞ்சகமாகவும் இல்லை. எனவே சிவனின் ஒரு வடிவம் போலேநாத் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அவர் குழந்தையைப் போன்றவர். அவர் முட்டாள் என்பதல்ல, ஆனால் அவருக்கு அறிவை அற்ப விஷயங்களில் பயன்படுத்துவதில் விருப்பம் இல்லை.

தந்திரமுள்ள, அறைகுறை அளவிலான அறிவு மட்டுமே தொடர்ந்து இன்னொருவரை விட எப்படிச் சிறந்தவராவது என்று சிந்தித்துக்கொண்டே இருக்கும். நுண்ணறிவு மற்றும் தந்திரம் இரண்டும் வெவ்வேறு விஷயங்கள். சாமர்த்தியமாக இருப்பது என்பது எப்போதுமே வேறொருவருடன் ஒப்பிட்டுக்கொள்வது. நுண்ணறிவுடன் இருப்பது என்பது வேறு யாருடனும் ஒப்பிட முடியாது, அது அதன் சொந்த இயல்பிலேயே உள்ளது. நுண்ணறிவு முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனென்றால் நுண்ணறிவு ஒருபோதும் போட்டியில் இருப்பதில்லை, அது வெறுமனே வாழ்க்கையின் வெளிப்பாடு.

கேதார்நாத் ஜோதிர்லிங்கம் மற்றும் காந்த்திசரோவர் - அருளின் ஏரி

காந்த்திசரோவர் கரையில் சிவனும் பார்வதியும் வாழ்ந்ததாகவும், கேதாரில் அவர்கள் தரிசிக்கும் பல யோகிகள் வாழ்ந்ததாகவும் புராணக்கதை கூறுகிறது.  காந்த்திசரோவர் ஏரி, 2013-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது உடைந்து  கேதாருக்கு வந்தது. இன்று அது காந்திசரோவர் என்று அழைக்கப்படுகிறது. அது உண்மையில் காந்த்திசரோவர். காந்த்தி என்றால் அருள், சரோவர் என்றால் ஏரி. இது அருளின் ஏரி. யோகக் கலாச்சாரத்தில், சிவன் கடவுளாகப் பார்க்கப்படுவதில்லை. அவர் இந்த நிலத்தில் நடந்த ஒரு உயிர் மற்றும் யோக மரபுகளின் மூலமாக உள்ளார். அவரே ஆதியோகி அல்லது முதல் யோகி, மேலும் ஆதி குரு அல்லது முதல் குரு. யோக அறிவியலின் இந்த முதல் பரிமாற்றம் காந்த்திசரோவர் கரையில் நடந்தது.  காந்த்திசரோவரில் ஆதியோகி, இன்று சப்தரிஷிகளாகக் கொண்டாடப்படும் முதல் ஏழு சீடர்களுக்கு உள்தொழில்நுட்பத்தை முறையாகக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார்.

பல வருடங்களுக்கு முன்பு, இமயமலையில் வருடந்தோறும் ஓரிரு மாதங்கள் தனியாகப் பயணம் செய்தேன். அந்த நேரத்தில் தனியாக உள்ளூர் பேருந்தில் சென்றேன். மலைகளைத் தவறவிட விரும்பாததால் பொதுவாக நான் பேருந்தின் மேல் அமர்ந்து சென்றேன். இவை வினோதமான பேருந்துகள்! அவை ஹரித்வாரில் இருந்து அதிகாலை 4:00 அல்லது 4:30 மணிக்குக் கிளம்பி நேராக கௌரிகுண்ட் அல்லது பத்ரிநாத்திற்கு சென்றன. ஆட்களை ஏற்றி இறக்குவதற்குத் தவிர வேறு எங்கும் அவர்கள் நிறுத்தவில்லை – சாப்பாட்டிற்குக் கூட நிறுத்தவில்லை. அவை பூக் ஹர்த்தால் பேருந்துகள் என்று அழைக்கப்பட்டன, அதாவது "உண்ணாவிரதப் பேருந்துகள்". நீங்கள் மதிய உணவைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும் போது ஓட்டுநர் பேருந்தை ஓட்டிக்கொண்டே தனது சப்பாத்தியை சாப்பிட்டுக்கொண்டிருப்பார்!

கௌரிகுண்டில் இருந்து நீண்ட நடைப்பயணத்திற்குப் பிறகு நான் கேதாருக்கு வந்தபோது, ​​காந்த்திசரோவரைப் பற்றிக் கேள்விப்பட்டேன், அதனால் ஒரு நாள் மதியம் சுமார் 2:00 அல்லது 2:30 மணியளவில் புறப்பட்டு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்து அங்குச் சென்றேன். ஏரியும் அதைச் சுற்றிப் பனிபடர்ந்த மலைகளும் இருந்தன. இயற்கையைப் பொறுத்தவரை, இது அற்புதமானது - முற்றிலும் அசைவில்லாத நீரைக் கொண்ட இந்த பெரிய ஏரியில், தாவரங்கள் இல்லை, பனி மூடிய சிகரங்கள் அனைத்தும் இந்த அசைவில்லாத நீரில் பிரதிபலிக்கின்றன. அது ஒரு நம்பமுடியாத இடமாக இருந்தது.

நான் அங்கேயே அமர்ந்திருந்தேன், நிசப்தமும், அமைதியும், பரிசுத்தமும் என் விழிப்புணர்வில் ஊடுருவின. அந்த இடத்தின் ஏற்றம், உயரம் மற்றும் மனிதர்களின் சுவடுபடாத அழகும் என்னை மயக்கின. நான் அந்த அசைவற்ற சூழலில் ஒரு சிறிய பாறையில் கண்களைத் திறந்து உட்கார்ந்து, என்னைச் சுற்றியிருந்த அனைத்து வடிவத்தையும் உள்வாங்கினேன். சுற்றியிருந்தவை அனைத்தும் படிப்படியாக தங்கள் வடிவத்தை இழந்து, நாதா அதாவது ஒலி மட்டுமே இருந்தது. மலை, ஏரி மற்றும் என் உடல் உட்படச் சுற்றியிருந்த அனைத்தும் அவற்றின் வழக்கமான வடிவத்தில் இல்லை, எல்லாம் சத்தமாக இருந்தது. எனக்குள் ஒரு பாடல் எழுந்தது: "நாத பிரம்மா விஷ்வ ஸ்வரூபா."

நாத பிரம்மா விஷ்வ ஸ்வரூபா
நாத ஹி ஸகல ஜீவரூபா
நாத ஹி கர்மா நாத ஹி தர்மா
நாத ஹி பந்தன நாத ஹி முக்தி
நாத ஹி ஷங்கர நாத ஹி ஷக்தி
நாதம் நாதம் நாதம் நாதம்

நான் சமஸ்கிருத மொழியைக் கற்பதை எப்போதும் தவிர்த்து வந்தவன். எனக்கு சமஸ்கிருத மொழி மிகவும் பிடித்திருந்தாலும், அந்த மொழியின் ஆழம் தெரிந்திருந்தாலும், அதைக் கற்பதைத் தவிர்த்து வந்தேன். ஏனெனில் நீங்கள் சமஸ்கிருதம் கற்றால், வேதங்களைப் படித்தே தீருவீர்கள். எனது சொந்தப் பார்வை ஒரு ஷணம் கூட என்னை எதிலும் தவறவிட்டதில்லை. எனவே நான் என்னை இந்த வேதங்கள் மற்றும் பாரம்பரியங்களால் நிரப்ப விரும்பவில்லை. அதனால் சமஸ்கிருதத்தைத் தவிர்த்தேன்.

நான் அங்கு உட்கார்ந்திருந்தபோது, ​​​​என் வாய் நிச்சயமாக மூடியிருந்தது, என் கண்கள் திறந்திருந்தது. இந்தப் பாடலை நான் பெரிய அளவில், என் குரலில் கேட்டேன். அதை என் குரல் பாடியது, அது ஒரு சமஸ்கிருதப் பாடல். நான் அதைச் சத்தமாக, தெளிவாகக் கேட்டேன். மிகவும் சத்தமாக, முழு மலையே பாடுவது போல் இருந்தது. என் அனுபவத்தில் எல்லாமே ஒலியாக மாறியிருந்தது. அப்போதுதான் இந்தப் பாடலை உணர்ந்தேன். நான் அதை உருவாக்கவில்லை, நான் அதை எழுதவில்லை - அது என் மீது இறங்கியது. பாடல் முழுவதும் சமஸ்கிருதத்தில் வெளிவந்தது. அந்த அனுபவம் அதீதமாக இருந்தது.

சிறிது நேரம் கழித்து, எல்லாம் அதன் முந்தைய வடிவத்திற்குத் திரும்பியது. என் விழிப்புணர்வின் வீழ்ச்சி - நாதாவிலிருந்து ரூபாவிற்கான வீழ்ச்சி - என் கண்களில் கண்ணீரை நிரப்பியது.

நாத பிரம்மா என்றால் உலகத்தை ஒரு வடிவமாக அல்லாமல், ஒலியாக அனுபவிப்பது என்று பொருள். நவீன விஞ்ஞானமும், ஒவ்வொரு ஒலிக்கும் அதனுடன் ஒரு வடிவம் இணைக்கப்பட்டுள்ளது என்றும், ஒவ்வொரு வடிவத்திலும் ஒரு ஒலி இணைக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறது. இது ஒரு அறிவியல் உண்மை. அறிவியலைப் பொறுத்தவரையில் பொருள் என்று எதுவும் இல்லை என்பதை இன்று நாம் அறிவோம். அதிர்வு இருக்கும் இடத்தில், ஒலி இருக்க வேண்டும். எனவே யோகாவில், இருப்பு முழுவதும் ஒலி என்று சொல்கிறோம்.

அந்தப் பாடலுக்கு நீங்கள் உங்களை அப்படியே கொடுத்தால் போதும், அதற்கு ஒருவித சக்தி இருக்கிறது. நீங்கள் உண்மையிலேயே உங்களை அதற்குள் முழுமையாக வீசினால், ஒருவரைக் கரைக்கும் சக்தி அதற்கு உண்டு.

    Share

Related Tags

சிவ தத்துவம்சிவன் கதைகள்

Get latest blogs on Shiva

Related Content

சக்திவாய்ந்த சிவன் மந்திரம் & மந்திரத்தின் சக்தி