logo
logo
தமிழ்
தமிழ்
சிவன் மந்திரம், sivan manthiram, Shiva, Adiyogi

ஆதியோகி – முக்திதரும் சக்தி

இந்த சத்குரு ஸ்பாட்டில், மஹாசிவராத்திரிக்கு முன்பு நடக்கவிருக்கும் யோகேஷ்வர லிங்கம் பிரதிஷ்டை மற்றும் மஹாசிவராத்திரி அன்று நடக்கவிருக்கும் ஆதியோகி பிரதிஷ்டை குறித்து சத்குரு நம்முடன் பகிர்ந்துள்ளார்.

சத்குரு ஸ்பாட்டில் ஆதியோகி குறித்து, “நோய்கள், பிணிகள், ஏழ்மை, எல்லாவற்றுக்கும் மேலாக பிறப்பு-இறப்பிலிருந்துமே உங்களுக்கு முக்தியளிக்க ஆதியோகி இங்கே வருகிறார்” என்று சத்குரு கூறுகிறார் .

மஹாசிவராத்திரி என்பது, ஈஷா யோகா மையத்தில் எப்போதுமே பிரம்மாண்டமான கொண்டாட்டமாக இருந்துவந்துள்ளது. ஆதியோகியின் மகிமை பொருந்திய திருமுகம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கத் துவங்கிவிட்டது. அதனால் “ஆதியோகியுடைய இவ்வளவு பெரிய முகத்தை ஏன் உருவாக்கினோம்? இது வெறும் அழகுணர்வு சார்ந்ததா?” என்ற கேள்வி எழுவது இயல்பானது. ஆதியோகியின் திருவுருவைப் பார்த்தால், நிச்சயம் அதில் வடிவியல்ரீதியாக அழகுணர்ச்சி ததும்புகிறது. எந்தவொரு பொருளிலும் வடிவியல்ரீதியான கச்சிதம் இல்லாவிட்டால் அதில் உள்ளம்கவரும் அழகு மிளிராது. ஆதியோகியின் முகம் வெறும் அழகுணர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது அல்ல, வடிவியல்ரீதியாக அதற்கு மகத்துவம் இருக்கிறது. ஆதியோகியுடன் ஒரு யோகேஷ்வர லிங்கமும் மஹாசிவராத்திரிக்கு முந்தைய நாட்களில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. லிங்கத்தின் இருப்பு மூலம், ஆதியோகி நாளுக்கு நாள் மிகுந்த சக்திவாய்ந்தவராக உருவெடுப்பார். வடிவியல்ரீதியாக அதற்கேற்ற உருவம் கொண்டிருப்பதால், அவர் லிங்கத்தின் சக்தியை சிறப்பாக உள்வாங்கிக்கொள்வார். நீங்களும் வடிவியல்ரீதியாக சரியான உடல்நிலையை வைத்துக்கொண்டால், நீங்களும் அதன் சக்தியை சிறப்பாக உள்வாங்கிக்கொள்ளலாம். யோக அறிவியலே இது பற்றியதுதான்.

ஆதியோகியின் முகம், உலக மக்களை அவர்களின் முக்தி நோக்கி திருப்புவதற்கு ஒரு முத்திரையாக விளங்கப்போகிறது. மனிதகுலம் மதத்திலிருந்து பொறுப்பு நோக்கி நகர்வதற்கு ஆதியோகி ஒரு நினைவூட்டலாகத் திகழ்வார். வெளி உலகைப் பொருத்தவரை, அனைத்தையும் நாம் புரிந்துகொண்ட அளவு அறிவியல்பூர்வமாக நடத்த முயற்சிக்கிறோம். ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட தொழில்நுட்பமும் கருவியும் பயன்படுத்துகிறோம். ஆனால் உள்நிலை நலனைப் பொருத்தவரை, எல்லாம் சொர்க்கத்தில் முடிவுசெய்யப்படுவதாக மக்கள் கருதுகிறார்கள். இது நமது தனிப்பட்ட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் வெளிப்படுகிறது. நீண்டகாலமாக திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக மக்கள் நினைத்துவந்தார்கள். அல்லது நட்சத்திரங்களும் கிரகங்களும் திருமண வாழ்வை முடிவுசெய்கிறது என்று நினைத்தார்கள். சமீபகாலமாகத்தான், பொறுப்பாக நடத்தி சிந்தித்து செயல்பட்டால்தான் உறவுகள் வேலைசெய்யும் என்பதை மக்கள் உணர்ந்து வருகிறார்கள். ஆரோக்கியம், அமைதி, ஆனந்தம் என்று எதுவும் சொர்க்கத்தில் முடிவாவதில்லை, உங்களுக்குள் முடிவாகிறது. சரியான புரிதலுடன் அதை அணுகினால், அதை அறிவியல் என்கிறோம். அதைக் கையாளுவதற்கு கருவிகள் உருவாக்கினால், அதை தொழில்நுட்பம் என்கிறோம். இதை நாம் உள்நிலை தொழில்நுட்பம் என்கிறோம். ஆதியோகியின் மகிமை பொருந்திய முகம், உள்நிலை நல்வாழ்வுக்கான அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் அறிகுறியாக விளங்கப்போகிறது.

ஆதியோகி பற்றி நாம் வெளியிட்டுள்ள புத்தகம், ஆதியோகி வழங்கிய அறிவியலையும் அதன் மகத்துவத்தையும் விளக்குவதாக இருக்கும். அடுத்த பத்து முதல் பதினைந்து ஆண்டுகளில், உலகம் முழுவதும் தங்கள் நல்வாழ்வுக்காக மேலே பார்ப்பதை விடுத்து உள்நோக்கிப் பார்க்கத் துவங்கப்போகிறது. உள்நிலையில் மட்டுமே உங்கள் நல்வாழ்வை நீங்கள் உறுதிப்படுத்த முடியும்.

இந்தியாவில் முப்பத்து முக்கோடி கடவுள்கள் உள்ளார்கள், ஏனென்றால் தெய்வத்தை உருவாக்கும் தொழில்நுட்பத்தை நாம் தெரிந்திருந்தோம். ஒரு பிரதிஷ்டை செய்யப்பட்ட உருவம், சுற்றியுள்ள இடத்தை எப்படி மாற்றுகிறது என்பதை நீங்கள் கண்கூடாகக் காணமுடியும். இந்த சாத்தியத்தின் அடிப்படையிலேயே நம் கலாச்சாரத்தின் எல்லா தெய்வங்களையும் பழங்காலத்தில் உருவாக்கினார்கள். வடிவியல்ரீதியாக மிக கச்சிதமான ஒரு உருவத்தை நாம் உருவாக்கினோம், அதற்கு ஒரு குறிப்பிட்ட விதத்தில் சக்தியூட்டினோம், அதன் சக்தியை உள்வாங்கிக்கொள்வதற்கான வழிமுறைகளையும் நாம் உருவாக்கினோம். சிவன் என நாம் அழைக்கும் உருவமில்லா சக்தி, பல விதங்களில் தன்னை வியாபித்துக்கொள்ள முடியும். சிவன் சித்தரிக்கப்படும் பல வடிவங்களிலும் இது பிரதிபலிக்கிறது. நர்த்தனமாடுபவராக நடராஜர், வைத்தியராக வைத்தீஷ்வரர், ஆசிரியராக தக்ஷிணாமூர்த்தி, பயம் நீக்குபவராக பைரவர், என்று எல்லாம் ஒரே சக்தியே. நம் கலாச்சாரத்தில், குறிப்பிட்ட தேவைகளுக்கேற்ப பிரதிஷ்டைகள் செய்யப்பட்டன. நோய், பிணி மற்றும் ஏழ்மையிலிருந்தும், எல்லாவற்றிற்கும் மேலாக பிறப்பு-இறப்பிலிருந்துமே உங்களை விடுவித்து முக்தியளிக்க ஆதியோகி வருகிறார். யோகேஷ்வரர், அடிப்படையில் முக்திக்கானவர். அதனால்தான் அவரை ஈஷா யோகா மையத்திற்கு சற்று வெளியே வைக்கிறோம். அங்கே அவர் விரும்பும் விதங்களிலெல்லாம் செயல்படுவதற்குத் தேவையான வெளியும் சுதந்திரமும் அவருக்கு இருக்கும். ஆதியோகியின் உருவம் உங்கள் உள்ளத்தில் தன்னை பதித்துக்கொள்ளும். நீங்கள் எங்கு சென்றாலும் சரி, அவர் முகம் உங்களுக்குள் பதியும் விதம், உங்களை இயல்பாகவே உள்முகமாகத் திரும்பச்செய்யும். அவர் எண்ணத்தையும் உணர்வையும் கடந்த தன்னிலை மாற்றம் ஏற்படுத்தவல்லவர்.

தியானலிங்கம் – யோகேஷ்வரலிங்கம், இரண்டுமே முக்தியை நோக்கமாகக் கொண்டிருக்கும். பொதுவாக, பெரும்பாலான மனிதர்கள் முக்தியைத் தேடினாலும், அவர்கள் இதிலும் அதிலும் சிக்கிக்கொள்கிறார்கள். அவர்களின் மனநிலையும் அவர்களை சமுதாயம் பழக்கப்படுத்தியுள்ள விதமும், அவர்கள் ஏதோவொன்றில் தங்களைப் பிணைத்துக்கொண்டால் மட்டுமே பாதுகாப்பாக இருக்கமுடியும் என்று நினைக்கவைக்கிறது. உலகில் இதை நாம் மாற்ற விரும்புகிறோம். பிணைப்பினால் நீங்கள் பாதுகாப்பாக இருப்பதில்லை. நீங்கள் சுதந்திரமாக இருக்கும்போதுதான் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். ஆனால் பயம் நிறைந்த மனதிற்கு, சுதந்திரம் என்பது அச்சுறுத்தும் ஒன்றாகத் தோன்றும், ஏனென்றால் எதைப் பிடித்துக்கொள்வதென்று தெரியாமல் போகும். நீங்கள் சமநிலையில்லாமல் இருந்தால், ஏதோவொன்றைப் பிடித்துக்கொள்ளத் தேவையிருக்கும். நீங்கள் முற்றிலும் சமநிலையாக இருந்தால், எதையும் பிடித்துக்கொள்ள நினைக்கமாட்டீர்கள். துடிப்பாக இருப்பவர்கள் நடக்கும்போது சுவரைப் பிடித்துக்கொண்டு நடப்பதில்லை, உடலில் உறுதியில்லாதவர்களே பிடித்துக்கொண்டு நடப்பார்கள். துடிப்பான, சமநிலையான, ஸ்திரமான உயிர்கள் நிறைந்த ஒரு உலகை உருவாக்க விரும்புகிறோம். எதையும் பிடித்துக்கொண்டு பிணைப்பை உருவாக்குவதற்கான தேவை மறைந்துபோகும்போது, உங்கள் இயல்பான விழைவே முக்தியாக இருக்கும்.

உலகின் எதிர்காலத்திற்காக நாம் தயாராகுகிறோம். வரும் வருடங்களில் நாம் இதுவரை நம்பியிருந்த பல பழைய கட்டமைப்புகள் உடைந்துபோகும். அப்போது முக்திக்கான ஏக்கம் அதிகரிக்கும். தங்களை விடுவிக்க விழைபவர்களுக்கு, அதிமுக்கியமான ஒரு கருவியாக ஆதியோகி திகழப்போகிறார். மக்கள் தவறவிடமுடியாத ஓர் இருப்பு ஆதியோகி – உலகிலேயே மிகப்பெரிய திருமுகம். எதனோடும் ஒப்பிட்டு மிக உயர்ந்தவர் என்று இல்லை, அவர் வழங்கும் சாத்தியங்களால் அவர் மிக உயர்ந்தவர். விடுதலையை நாடுவோருக்கு அவர் ஒரு அற்புதமான நுழைவாயில். உங்களை பிணைத்திருக்கும் எதிலிருந்தும் விடுதலை செய்வதே லிங்கத்தின் தன்மையாக இருக்கும். ஆதியோகியின் இந்த முத்திரை முகம், உலகெங்கும் உள்ள கோடான கோடி மக்களுக்கு ஊக்கசக்தியாக இருக்கும். உங்கள் உச்சபட்ச தன்மையை அடைவதற்கான 112 வழிகளை, மனிதகுலம் முழுவதற்கும் கிடைக்கும் விதமாக நாங்கள் செய்திட விரும்புகிறோம்.

அன்பும் அருளும்,
சத்குரு

    Share

Related Tags

ஆதியோகி

Get latest blogs on Shiva

Related Content

மஹாசிவராத்திரியை ஏன் கொண்டாட வேண்டும்?