சிறப்புக் கட்டுரை

வாழ்வை நடனமாடி அனுபவிக்கும் சுதந்திரத்தை ஏன் நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்

நடனம் வெறும் வேடிக்கைக்கானது என்பதைக் காட்டிலும் அதிகமாக வேறு ஏதேனும் உள்ளதா? ஏன் சிலருக்கு நடனமாடுவது கடினமாகத் தோன்றுகிறது? இந்தியக் கடவுள்கள் நடன மாந்தர்களாக சித்தரிக்கப்பட்டது ஏன்? சத்குரு தனக்கே உரிய தனித்துவமான ஈடு இணையற்ற பாணியில், நடனம் என்னும் தலைப்பில் ஆராய்ந்து உரைக்கிறார்.

சத்குரு: உடல் செய்யக்கூடிய விஷயங்களுக்கும், உடலில் வசிக்கும் தனிப்பட்ட மனிதரின் முன்னேற்றத்துக்கு வழி நடத்தும் விதமான அங்க ஸ்திதி அல்லது உடல் தோரணைகளுக்கும் இந்தியக் கலாச்சாரத்தில் அளவுகடந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தப் புரிதலின் அடிப்படையில், பல்வேறு சாஸ்திரீய நடனங்கள் உருவாக்கப்பட்டன. அதற்கு ஒரு குறிப்பிட்ட கணிதமும், தாளமும் உண்டு. இந்த நடனங்கள் உடலால் செய்யக்கூடியதை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்துகின்றன. ஒரு கழைக்கூத்தாட்டம் என்ற வகையில் இல்லாமல், ஆனால் மென்மையாகவும், ஆழமான உணர்ச்சியின் ஈடுபாட்டுடனும் உடலை அசைக்கும்படியாக உள்ளன.

தெய்வீகத்திற்கான ஒரு அர்ப்பணிப்பு

ஏறக்குறைய சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, நாட்டியங்கள் முக்கியமாக கோவில்களில் நிகழ்த்தப்பட்டன. ஏனெனில் இசைக் கலைஞர்களும், நடனமாந்தர்களும் முக்கியமாக தெய்வத்துக்காக நிகழ்ச்சி நடத்தினர். மக்களும்கூட அதைப் பார்க்க முடிந்தது என்றாலும், அது முதன்மையான நோக்கமல்ல. இது இசை மற்றும் நடனம் குறித்த அடிப்படை மனோபாவமாக இருந்தது. ஏனென்றால் இந்தக் கலைகள் மனிதர்களின் அளப்பரிய இருப்பின் வெளிப்பாடாகப் பார்க்கப்பட்டதுடன், விடுபட்ட நிலைக்கு வருவதற்கான ஒரு வழியாகவும் இருந்தது.

கடவுள்களும்கூட நடனமாட வேண்டிய ஒரே கலாச்சாரம் நம்முடையது மட்டும்தான். நடனமாடாத ஒரு கடவுள் இங்கே கொண்டாடப்படுவதில்லை. ஏனென்றால், நடனம் என்பது ஒரு பொழுதுபோக்காகவோ அல்லது கலை வடிவமாகவோ மட்டும் பார்க்கப்படாமல், படைப்பினுடைய இயல்பின் காட்சிப்படுத்தலாகவே இருக்கிறது. படைப்பு மற்றும் அழிவு இரண்டையும் எப்போதும் தாண்டவம் – ஒரு ரௌத்ரமான நடனம், ஆனால் அற்புதமான ஒத்திசைவுடன் இருப்பது – என்றுதான் யோகா விவரிக்கிறது

ஆதியோகி சிவன் அதன் ஒரு பிரதிநிதியாக இருக்கிறார். அந்தப் பரிமாணத்தின் புரிதலிலிருந்து ஒரு முழுமையான கலாச்சாரம் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மற்ற கலாச்சாரங்களில், நடனத்தை யாரோ ஒருவருடன் நடனமாடுவது என்றுதான் மக்கள் எப்போதும் புரிந்துகொள்கின்றனர். ஆனால் இங்கே, நடனம் என்றால் நாம் கண்களை மூடிக்கொண்டு, பித்துநிலைக்குப் போகிறோம்.

நடனம்

உங்கள் இதயம் ஆனந்தத்தில் தளும்பும்போது

உங்கள் கடினமான எலும்பும் சதையுமான

அங்கங்களும் மென்மையாகிறது

அத்தனை உயிரினங்களும் தம் உணர்வின் உச்சம்

தொடுகையில் நடனத்தில் வெடித்துக் கிளம்புகின்றன

ஒரு கம்பீரமான ராஜநாகம் அல்லது ஒயிலான மயில்

மட்டுமல்ல அழகில் குறைந்த சுவர்க்கோழியும்

நீர்யானையும்கூட அசைந்தாடுகின்றன

இந்த மண்ணின் கடவுள்கள்கூட

முனிவரும் துறவரும் தம் கண்ணியம் எனக் கருதும்

பொய்மை விலக்கி இதயம் நிறைக்கும்

நடனம் ஆடினர்

வாழ்வை அருளின் நடனமாக செய்யுங்கள்

- சத்குரு

உங்கள் தலைக்குள் நீங்களே நிரம்பி இருக்கும்பொழுது, உங்களால் நடனமாட முடியாது

ஏப்ரல் 29 ஆம் தேதி சர்வதேச நடன தினம். நடனத்துக்கென்று ஒரு தினம் இருப்பது மனிதர்களுக்கு ஒரு நல்ல  நினைவூட்டல், ஏனெனில் அவர்கள் பலருக்கும் நடனமாட முடியாது, இது ஏனென்றால், அவர்கள் தங்கள் தலையின் மீது ஒரு மலையைச் சுமந்துகொண்டிருக்கின்றனர். அவர்களது நம்பிக்கை அமைப்புகள், தத்துவங்கள், கருத்தியல்கள் மற்றும் வேதங்கள் ஆகியவை ஒரு முடிவில்லா சுமையாகக் கனக்கிறது. நடனமாடுவதற்கு, நீங்கள் இந்தக் கணத்தில் வேரூன்றும் உயிராக இருக்கவேண்டும், பழமையான உயிராக அல்ல. ஆனால் மக்கள் ஏதோ ஒன்று மதிப்பு மிக்கதாக இருப்பதற்கு, அது பழமை வாய்ந்ததாக இருக்கவேண்டும் என்று எப்போதும் எண்ணுகின்றனர். ஏதோ ஒன்று நல்லதாக இருப்பதற்கு, அது குறைந்தபட்சம் ஆயிரம் வருடங்கள் பழமையானதாக இருக்கவேண்டும் என்று அவர்கள் எண்ணுகின்றனர்.

பழமையானது என்ன என்று மதிப்பீடு செய்வதற்கு எந்த புத்திசாலித்தனமோ அல்லது விழிப்புணர்வோ தேவையில்லை. உதாரணத்துக்கு, 5000 வருடங்களுக்குப் பிறகு, பல மக்களும் கிருஷ்ணனை வழிபடுகின்றனர். ஆனால் அவர் உயிருடன் இருந்தபொழுது, எல்லா விதமான குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்கொண்டார். அவரை இதயத்தில் வைத்திருந்தவர்கள் மட்டும்தான் அவருடன் நடனமாடினார்கள். மற்றவர்கள், எல்லா விதங்களிலும் அவரை குற்றம் சாட்டினர். நடனம் ஆடும் ஒருவர் எந்த விதத்திலோ மக்களின் காரண அறிவுக்குப் பொருந்துவதில்லை, ஆகவே அவரைப் பாராட்டுவதற்கு அவர்களுக்கு ஒரு கால இடைவெளி தேவைப்படுகிறது.

இயல்பாகவே நடனம் இணைத்துக்கொள்கிறது

இது ஒரு குறிப்பிட்ட நபரைக் குறித்து அல்ல – இது உயிரின் ஒரு குறிப்பிட்ட அம்சம் குறித்தது. சிவனோ அல்லது கிருஷ்ணனோ உங்களுக்குள் இப்பொழுது உயிர்ப்புடன் வரவில்லை என்றால், பழமையான ஒருவரை நீங்கள் வழிபடுவது எந்த விதத்திலும் மதிப்பு வாய்ந்தது அல்ல. யாரோ ஒருவரை நீங்கள் தூண்டுகோலாகப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், நல்லதுதான். ஆனால், சில நூறு வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த ஏதோ ஒன்றைப் பாராட்டுவது அல்லது அங்கீகரிப்பது எளிது. அதற்காக, அவர்கள் முன்னிலைப்படுத்திய சாத்தியத்தை நீங்கள் உணர்வீர்கள் என்பது இதற்கு அர்த்தமல்ல.

அதனுடன் உங்களால் அடையாளப்பட மட்டுமே இயலும். உங்களை அதன் ஒரு பாகமாக உணர்வீர்கள்; நீங்கள் சகோதரத்துவத்தை உணர்வீர்கள். உங்களுக்கு சகோதர மனப்பான்மை வேண்டுமென்றால், அது இந்த பூமியின் ஒவ்வொரு உயிரினத்துடனும் இருக்கவேண்டும். ஆனால் உங்களது சகோதரத்துவம் ஒரு குறிப்பிட்ட மக்களிடம் மட்டும் இருந்தால், அது வன்முறையின் துவக்கம். இப்படிப்பட்ட சகோதரத்துவம் அதிகரிக்கும்பொழுது, அது முற்றிலும் கொடுங்கோன்மையாக மாறும். அதனால்தான் பூமியில் வேறு எந்தப் பேரரசுகளைக் காட்டிலும் அதிகமான வன்முறைக்கு, பெரும்பாலான மதங்கள் காரணமாக இருந்துள்ளன. ஏனென்றால் ஒரு எல்லைக்குட்பட்ட அடையாளம் என்பது பேரழிவை ஏற்படுத்தும் ஒரு செயல்முறை. அதனால்தான் நீங்கள் நடனமாட வேண்டும். இது இணைதலின் அடையாளம்.

உங்களது வலையிலேயே சிக்கிக்கொள்ளாதீர்கள்

நீங்கள் நடனமாடினால், உங்களுடைய சகோதரத்துவம் சிறிதளவு விழுந்துவிடுகிறது. இது மிகவும் முக்கியம், ஏனென்றால் உங்கள் தலைக்குள் நீங்கள் சேமித்துவைத்திருக்கும் சின்னஞ்சிறு காரண அறிவின் மீது நீங்கள் கட்டமைத்திருக்கும் எல்லா முட்டாள்தனங்களும், ஒரு சிலந்தி தான் பின்னிய வலையிலேயே சிக்கிக்கொள்வதைப் போல உங்களைச் சிக்கிப்போகச் செய்யும். தன் இரையைப் பிடிப்பதற்கு வலை பின்னும் ஒரு சிலந்தி, புத்திசாலியான சிலந்தி. ஆனால், தான் பின்னிய வலையிலேயே சிக்கிப்போகும் சிலந்தி, ஒரு முட்டாள்தனமான சிலந்தி. அதுதான் உங்களுடைய மனதின் செயல்முறை. இந்த வலையின் அடர்த்தி அதிகரிக்கையில், உங்கள் பாதங்கள் கனத்துவிடுவதால், உங்களால் நடனமாட முடிவதில்லை.

நடனமாடுவதற்கு, உங்களைப் பற்றி நீங்களே சற்று வெட்கமில்லாதவராக இருக்கவேண்டும். இல்லையென்றால், நீங்கள் எப்படித் தோற்றமளிக்கிறீர்கள் என்பதைப் பற்றி எப்போதும் நீங்கள் கவலையில் இருக்கிறீர்கள். ஒரு முட்டாள் போல நீங்கள் தோன்றினால்தான் என்ன? நீங்கள் உண்மையிலேயே புத்திசாலியாக இருந்தால், சிறிது நேரத்துக்கு முட்டாள் போல நடந்துகொள்ள விரும்புங்கள். ஆனால் நீங்கள் முட்டாளாக இருந்தால், அப்போது நீங்கள் அடையாளம் காணப்படுவோம் என்று அஞ்சுகிறீர்கள்.

உலகத்துக்கு நடனமாடுபவர்கள் தேவை

வாழ்வைச் சாராத பல விஷயங்களால் மக்கள் தங்களையே நிரப்பிக்கொள்கின்றனர். அவர்கள் தங்களை காற்று, உணவு, இயற்கை மற்றும் வாழ்வின் எல்லா காட்சிகளாலும், ஒலியாலும் நிரப்பினால், அவர்கள் ஆடவேண்டும் போல் உணர்வார்கள். ஆனால் அவர்கள் தங்களையே தத்துவங்கள், கருத்தியல்கள், வேதங்கள் மற்றும் எல்லா விதமான விஷயங்களாலும் நிரப்பிக்கொள்கின்றனர். மனித வரலாற்றை நீங்கள் உற்று நோக்கினால், கருத்தியல், தத்துவம், நம்பிக்கை முறை, அல்லது ஒரு குறிப்பிட்ட விதமான சடங்கு அல்லது நடைமுறையில் திடமாக நம்பிக்கை கொண்டவர்கள்தான், மற்ற அனைத்தையும் கொன்றுகுவித்த மக்களாக இருக்கின்றனர்.

உங்கள் இதயம் ஆனந்தத்தினால் நிறைந்திருக்கும்போது, யாரையும் கொல்லும் எண்ணம் உங்களுக்கு வருவதில்லை. ஏனென்றால், எதனாலும் அச்சுறுத்தப்படுவதாக நீங்கள் உணர்வதில்லை.

நடனமாடும் மக்கள் ஒருபோதும் எவரையும் கொன்றுகொண்டிருக்கவில்லை. உங்கள் இதயம் ஆனந்தத்தினால் நிறைந்திருக்கும்போது, யாரையேனும் கொல்லும் எண்ணம் உங்களுக்கு வருவதில்லை, ஏனென்றால், எதனாலும் அச்சுறுத்தப்படுவதாக நீங்கள் உணர்வதில்லை. நீங்கள் பாதுகாப்பில்லாமையை உணர்வதில்லை, ஏனெனில் காப்பாற்றுவதற்கு உங்களிடம் எதுவுமில்லை. வாழ்வு என்பது படைப்பின் பெருந்தன்மை; அதை அதிகபட்சம் பயன்படுத்துவது உங்கள் பொறுப்பு. “அதை அதிகபட்சம் பயன்படுத்துங்கள்,” என்று நான் கூறும்போது, சிலர், “நாம் கேளிக்கை செய்யவேண்டும் என்று சத்குரு கூறுகிறார்!” என்று அனுமானிப்பார்கள்.

விழிப்புணர்வான கைவிடல் மற்றும் போதையில் மறதி

நடனமாடும் அளவுக்கு எதையோ நிரப்பிக்கொள்வது என்று அவர்கள் எண்ணுகின்றனர். ஆனால் நான் கூறுவது என்னவென்றால், நடனமாடும் அளவுக்கு உங்களை நீங்களே வெறுமையாக்கிக்கொள்ள வேண்டும். நான் விட்டு விடுதலையாதல் பற்றிப் பேசுகிறேன், ஆனால் அவர்கள் அருந்தும் நோக்கத்துடன் சிந்திக்கின்றனர். நீங்கள் மது போதையில் அல்லது போதைப் பொருளில் இருந்தால், நீங்கள் விடுதலையான நிலையில் இருப்பதைப் போல் பாவனை செய்யலாம், ஆனால் உண்மையில் நீங்கள் உங்கள் விழிப்புணர்வை இழந்துள்ளீர்கள்.

விடுபட்ட நிலைக்கு வருவதும், உங்கள் விழிப்புணர்வை இழப்பதும் இரு வேறு விஷயங்கள். நடனமாடுவதே ஒரு போதையாக இருந்தால், அது மிக நன்று. ஆனால் நீங்கள் போதை உட்கொண்டு, நடனமாடினால், அதற்கு மதிப்பில்லை. நடனம் என்பது இசையுடன் இணைந்து செய்யவேண்டிய அவசியமல்ல. ஒரு நடனம் போல் நீங்கள் பணி செய்ய முடியும்; ஒரு நடனம் போல் நீங்கள் நடந்துசெல்ல முடியும்; ஒவ்வொரு எளிமையான செயலையும் நீங்கள் ஒரு நடனம் போல செய்யமுடியும்.