இந்தப் பதிவில் சத்குரு, முதுகுத்தண்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறார். மேலும், உங்கள் புரிதல் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்துவதற்கு, எந்த யோகப் பயிற்சி குறிப்பாக உங்கள் உடலமைப்பின் முதுகெலும்பை ஆரோக்கியமாக, இலகுவாக மற்றும் புத்துணர்வாக வைத்திருக்கமுடியும் என்பதை பகிர்ந்துகொள்கிறார்.
சத்குரு: ஒரு விதத்தில், இந்த பூமிக்கும், சூரிய மண்டலத்துக்கும், மற்றும் பிரபஞ்சத்துக்கும்கூட என்ன நிகழ்கிறது என்பதையெல்லாம் உடல் அறிந்துகொள்கிறது. நகரங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் உங்களுக்கு, இன்றைக்கு சந்திரனுக்கு எந்த பிறை என்பது தெரியாமல் இருக்கலாம். ஆனால் சமுத்திரம், பறவைகள் மற்றும் தாவரங்கள் எப்படி நிகழ்கின்றன என்பதை நீங்கள் உற்று நோக்கினால், சந்திரனின் பிறையை உங்களால் அறிந்துகொள்ளமுடியும். உதாரணத்துக்கு, ஒரு விதை எந்த அளவுக்கு முளைக்கமுடியும் என்பது அமாவாசைக்கும், பௌர்ணமிக்கும் இடையில் தெளிவாக வித்தியாசப்படுகிறது. தன்னுணர்வில்லாமல் அதனை நீங்கள் அறியாமல் இருந்தாலும், உங்கள் உடல்கூட வெவ்வேறு தினங்களில், வெவ்வேறாக இருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட வழியில் உங்களை வழி நடத்திக்கொண்டால், தன்னுணர்வில்லாமல் நீங்கள் அறிந்துகொள்ளும் அனைத்தையும், விழிப்புணர்வோடும் நீங்கள் அறிந்துகொள்ள முடியும். எல்லாத் தகவலும் இங்கே இருக்கிறது, ஆனால் உங்கள் மூளையில் மிக அதிகமான நிலைத்தன்மை (static) இருக்கும் காரணத்தால், எந்தத் தகவலையும் உங்களால் பெறமுடியவில்லை. உங்கள் முதுகுத்தண்டும் மற்றும் அதை நீங்கள் எந்த நிலைமையில் வைத்திருக்கிறீர்கள் என்பதும் இதனுடன் தொடர்புடைய ஒரு முக்கியமான அம்சமாக இருக்கிறது.
சந்திரனுக்கும், பூமிக்கும் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்வது ஏன் முக்கியமாக இருக்கிறது என்று நீங்கள் வியக்கக்கூடும். அது பூமி மற்றும் சந்திரனைக் குறித்தது அல்ல, - அது உங்களது புரிதலுக்கு தெளிவைத் தருவதைக் குறித்த விஷயம். இறுதியாக, உங்கள் வாழ்வில் நீங்கள் செய்ய விரும்புவது என்னவாக இருப்பினும், அவை அனைத்தும் உங்களுக்குள் எவ்வளவு தெளிவு இருக்கிறது என்பதைச் சார்ந்திருக்கிறது. உங்களுக்குத் தெளிவு இல்லையென்றால், நம்பிக்கை என்ற பெயரில் அதற்கு மேற்பூச்சு செய்ய முயற்சிப்பீர்கள். நம்பிக்கை என்பது தெளிவுக்கான மாற்று அல்ல. அது எப்படியென்றால், போக்குவரத்து மிகுந்த ஒரு சாலையை தெளிவான பார்வைத்திறன் இல்லாமல், ஆனால் அதிகமான நம்பிக்கையுடன் கடக்க முயற்சிப்பதைப் போன்றது.
“நான் தொண்ணூறு வருடங்கள் வாழ்வேன் என்று என் ஜாதகம் கூறுகிறது, ஆகவே எனக்கு எதுவும் நிகழாது”, என்று உங்கள் ஜாதகத்தில் குறிப்பிட்டுள்ளதைக் கூறியபடி நீங்கள் சாலையைக் கடக்கலாம். அல்லது உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் மந்திரங்களைக் உரக்கக் கூறியவாறு சாலையின் குறுக்கே ஓடுவதற்கு நீங்கள் முயற்சிக்கலாம். தற்செயலாகவோ அல்லது ஓட்டுனரின் கருணையினாலோ அது பலனளிக்கலாம். ஆனால், அதையே நீங்கள் தினமும் முயற்சித்தால், உங்களை பிறகு எங்கே சந்திக்கவேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்.
ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் தெளிவைக்கொண்டு வரவேண்டும், ஏனென்றால் தெளிவு என்பது ஒரு குறிப்பிட்ட விஷயத்தைக் குறித்தது அல்ல – அது உங்களுடைய மனதின் இயல்பைக் குறித்தது. நீங்கள் ஒரு டார்ச் உபயோகப்படுத்தினால், அது உங்களுக்கு எல்லாவற்றையும் காட்டும். அதைப்போலவே, ஒரு குறிப்பிட்ட அளவுக்கான தெளிவு வந்தால், எல்லாமே தெளிவாகிறது. தெளிவு என்பது உங்களுக்குள் நீங்கள் வளர்த்துக்கொள்ளும் ஒரு குணம்.
நான் எனது கண்களை மூடி இங்கே அமர்ந்திருக்கும்போது, இந்த அறைக்குள் யாரேனும் வந்தால், வந்திருப்பவர் எந்த விதமான நபர் என்பதை உங்களுக்குக் கூறமுடியும். இது ஏதோ மாபெரும் யோகா அல்ல; உங்கள் நாய்கூட அதைச் செய்யமுடியும். உங்களுக்கு மட்டும்தான் தெரியாது ஏனென்றால் உங்கள் மனதில் முடிவில்லாமல் ஒரு விதமான மனபேதி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. வெற்றிகரமாக ஏதாவது செய்யவிரும்பினால், உங்களுக்கு தெளிவு வேண்டும். உங்களுக்குத் தெளிவு வேண்டுமென்றால், உங்கள் முதுகுத்தண்டு ஒரு குறிப்பிட்ட நிலையில் இருப்பது மிக முக்கியமான விஷயம், ஏனென்றால் உங்களது புரிதல் பெருமளவுக்கு அங்கே கையாளப்படுகிறது.
துரதிருஷ்டவசமாக, மக்கள் பலருக்கும் முதுகு வலி இருப்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. பெரும்பாலும் நாற்காலிகளில் அமர்ந்திருப்பதால், குறைந்து விட்ட உடலின் பயன்பாடு, அதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. உங்கள் கால்களை நீட்டியவாறு குனிந்தால், உங்கள் முதுகுத்தண்டுக்கு என்ன நிகழ்கிறது என்று உங்களால் காணமுடியும். உங்கள் கால்களை மடக்கி, பெரினியம் அல்லது மூலாதாரப்பகுதியை இடது குதிகாலால் அழுத்தம் கொடுத்து அமர்ந்தால், உங்கள் முதுகுத்தண்டு செயல்படும் விதம் மிகவும் வித்தியாசமாக இருக்கும். முதுகுத்தண்டு உடலியல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல – அது உங்கள் உடலமைப்பில் தொடர்புகொள்வதற்கான அடித்தளமாக இருக்கிறது. அதை நீங்கள் இழந்தால் அல்லது அது உணர்வற்றதாக இருந்தால், நீங்கள் மிக அற்புதமான ஒன்றை இழக்கிறீர்கள்.
குத்துக்காலிட்டு அமர்வதற்கு முயற்சியுங்கள். அந்த நிலையில் உங்கள் பாதங்களை சேர்த்து வைக்க முடிந்தால் – இதை மிகச் சிலரே செய்யமுடியும் – சக்தியின் மேல்நோக்கிய நகர்வு இயல்பாக நிகழும். மிக அதிகமான சக்தி பிரவாகம் நமக்கு வேண்டியதில்லை; ஆகவே, உங்கள் பாதங்களை சற்று இடைவெளி விட்டு இணையாக வைத்து, தோளுக்கு இணையான அகலத்தில் நிறுத்துவது சிறப்பானது. உங்கள் பாதங்கள் தரையில் நன்றாக ஊன்றியிருக்கவேண்டும். முதுகுத்தண்டானது, தினமும் நீட்டிக்கத் தேவைப்படுகின்ற, ஒரு சிக்கலான சேர்மானம். அது அழுத்தத்தினால் குறுகிவிட்டால், முதுகுத்தண்டில் இருக்கும் தொடர்புத் திறன் பெரிதும் மறைந்துபோகிறது.
யோக நமஸ்காரம், முதுகுத்தண்டுக்கான அற்புதமான யோகப்பயிற்சியாக இருக்கிறது. நீங்கள் 7 சுற்று பயிற்சியில் தொடங்கி 21 வரை செய்யலாம். ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும், மெல்லமெல்ல நீங்கள் இந்த் எண்ணிக்கையை அதிகரித்தால், சுமார் 40 நாட்களில், நீங்கள் 21 சுற்றுக்கள் செய்வீர்கள். இது மிக நல்ல எண்ணிக்கை. நீங்கள் செயல்படும் விதத்தில் இது வியக்கத்தக்க மாற்றம் கொண்டு வரும். முதுகுத்தண்டை இலகுவாக்கவும், தூண்டவும் நீங்கள் செய்கின்ற ஒரு எளிமையான பயிற்சியின் காரணத்தால், உங்கள் மனதின் கூர்மையில் நீங்கள் ஒரு வித்தியாசத்தைக் காண்பீர்கள்.