ஏழு நாட்கள் கலாச்சார கொண்டாட்டங்கள், ஏழு மறக்க முடியாத கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. மஹாசிவராத்திரி இரவைத் தொடர்ந்து ஒரு வாரம் நடைபெற்ற கொண்டாட்டங்களில், இந்திய பாரம்பரிய & நாட்டுப்புற இசை மற்றும் நடனத்தில் புகழ்பெற்ற கலைஞர்கள் தங்கள் கலை வடிவங்களை ஆதியோகியின் முன்னிலையில் வழங்கினர். கர்நாடக இசையானாலும் நாட்டுப்புற நாடகமானாலும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்களுக்கு திகட்டாமல் அவர்களை ரசிக்க வைத்தன.
பாரம்பரிய கலைகளின் மூன்று நாள் கொண்டாட்டமான யக்ஷாவின் முதல் நாள் இரவில், மூன்று புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் கர்நாடக இசையின் செழுமையையும் அழகையும் வெளிப்படுத்தினர். இந்திய பாரம்பரிய இசையானது உள்நிலை அனுபவத்தை உருவாக்கும் நோக்கில், நுட்பமாக ஒலிகளால் கட்டமைக்கப்பட்டது. கொண்டாட்டத்தின் முதல் நாள் மாலையில், பாடகர் திரு. அபிஷேக் ரகுராம் இசையால் உணர்ச்சியின் ஆழத்தை பார்வையாளர்களுக்கு காட்டினார். அவருடன் திரு. அனந்த ஆர். கிருஷ்ணன் மிருதங்கத்திலும், திரு எச்.என். பாஸ்கர் வயலினிலும் இசைக்குத் துணைநின்றனர். மேளம் இருபுறங்களிலும் தாளத்தை வழங்க, வயலினின் மெல்லிசை இனிமையால் இரவை நிரப்பியது. மூன்று கலைஞர்களும் சேர்ந்து தங்கள் இசையை ஒரு மனமயக்கும் இசைப் போர்வையாக நெய்தனர்.
ஐந்து இந்திய பாரம்பரிய இசைக்கலைஞர்கள் மேடைக்கு வந்து, தங்கள் இசைக்கருவிகளை மென்மையாக சரிபார்த்து, இசைக்கத் தொடங்கினர். அதே நேரத்தில் பார்வையாளர்கள் இனிமையான மாலை நேரத் தென்றலை அனுபவித்தபடி இருந்தனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வழங்கப்பட்ட, முதல் இசைக் குறிப்புகளிலேயே முன்னணி கலைஞர்களின் வியக்கவைக்கும் திறமை தெரிந்தது. வயலின் வாசிக்கும் இசை மேதை ஸ்ரீ சுமந்த் மஞ்சுநாத், தனது 10 வயதில் தனது முதல் கச்சேரியை அரங்கேற்றினார். அவருக்கு வலதுபுறம், இந்திய பாரம்பரிய இசையில் பக்க வாத்தியமாகப் பயன்படுத்தப்படும் புல்லாங்குழலான பன்சூரியில், வளர்ந்துவரும் மேதை திரு. ஹிருஷிகேஷ் மஜும்தார் இருக்கிறார். இவர்களுடன் தாள லயத்துடன் இசைக் கருவிகள் தங்கு தடையின்றி ஒருங்கிணைவதால், இசைத்திறன் உச்சத்தை அடைகிறது. இது இசைக் கலைஞர்களின் தனித்துவத்தையும் திறனையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. உணர்ச்சியின் தீவிரமும் படைப்பாற்றலும் கலைஞர்களின் இசை ஞானத்துடன் ஒன்றிணைந்து, மெல்லிசை இரவு பார்வையாளர்களுக்கு இசை விருந்தாகின.
பாரம்பரிய இந்திய இசையின் பல்வேறு வடிவங்களை அனுபவித்துவிட்ட பின், மூன்றாவது நாள் மாலையில், புண்யா நடன நிறுவனத்தின் ‘பாதா’ எனும் பரத நாட்டிய நிகழ்ச்சி நமது கண்களுக்கு விருந்தாகின. பாரம்பரிய இந்திய நடனத்தை வெளிப்படுத்துவதற்கு நடனக் கலைஞர்கள் மேடையில் ஏறும் போது கூடவே நேரடியாக இசையை வழங்கும் இசைக்குழுவும் ஒன்றிணைந்ததால் ஒரு முழுமையான அனுபவமாக அமைந்தது. மென்மையாக மெதுவாக ஆரம்பித்த நடனத்தின் ஒவ்வொரு அசைவும் அரங்கிலிருந்த கலைஞர்களின் தனித்துவமான நடனத்தை வெளிப்படுத்தின. அவர்களின் நுட்பமான அபிநயமும் தீவிரமும் அங்கு ஒரு அற்புத நாட்டியத்தை அரங்கேற்றின. உயிர்த்துடிப்பும் கலைநுட்பமும் மிகுந்த வண்ணமயமான நடன அசைவுகளும் இசையும், பார்வையாளர்கள் அனைவருக்கும் ஒரு சிறப்பான அனுபவமாக இருந்தது.
திரு. அந்தோணிதாசன் அவர்களின் வழிகாட்டுதலில் இயங்கும் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தின் பல வருட வரலாறும் பாரம்பரியமும் மேடையில் உயிர்ப்பிக்கப்பட்டது. உலகெங்கிலும் தமிழ் நாட்டுப்புற இசையை நிகழ்த்தி, குழுவினர் தங்கள் இசையின் உயிர்ப்பையும் அழகையும் பல்வேறு தேசத்தின் பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்த்தனர். ஈஷா யோக மையத்தில் அன்றைய மாலை, உற்சாகமான இசைக்கலைஞர்கள் ஆத்மார்த்தமான பாடகர்களுடன் தமிழ்நாட்டின் உயிர்த்துடிப்பு மிக்க கலையை வெளிப்படுத்தினர். கிராமப்புறங்களில் வாழ்வில் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இருக்கும் பல்வேறு நாட்டுப்புற கருவிகளின் தனித்துவத்தையும் செழுமையையும் அவர்கள் வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் கலைஞர்கள் மேளம் முழங்க, மக்கள் கூடி எழுந்து நடனமாட, அந்த இடமே கொண்டாட்ட உணர்வால் அதிரவும் செய்தது.
வண்ணமயமான இசையும் கலகலப்பான நடனங்களும் நிறைந்த இந்நிகழ்ச்சியால் மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களின் ஐந்தாவது நாள் மக்கள் உற்சாகத்தில் திளைத்தனர். தமிழ்நாட்டின் பாரம்பரிய தெரு நாடக வடிவமான கட்டைக்கூத்து, வழக்கமாக இந்திய இதிகாசங்களின் பல்வேறு கதைகளை சித்தரிப்பதாக அமையும். இந்நிகழ்ச்சி பொதுவாக சுமார் 8 மணி நேரம் நீடிக்கும், பெரும்பாலும் இரவு முழுவதும்கூடத் தொடரும். ஈஷாவிற்காக ஒரு சிறப்பு நாடக விருந்தை படைக்கும் நோக்கில் கலைஞர்கள் தங்கள் நேர அளவை மாற்றியமைத்து, இரண்டரை மணிநேரம் கலகலப்பான உயிரோட்டமிக்க நடிப்பை வழங்கினர். இந்த கலைவடிவத்தில், நடிகர்கள் ஆடம்பரமான ஆபரணங்களை அணிவார்கள், அவை ஸ்பாட் லைட்களில் மின்னும், பார்வையாளர்களின் கண்களைக் கவரும். இதனுடன் இணையும் நேரடி இசை, நிகழ்ச்சிக்கு வசீகரத்தையும் பிரம்மாண்டத்தையும் சேர்க்கிறது. மேடையில் சிவன் மற்றும் பார்வதியிடம் தஞ்சம் கோரும் பஞ்ச பூதங்களை சித்தரிக்கும் ஒரு நாடகம் அரங்கேறியது. நிகழ்ச்சியின் அனைத்து அம்சங்களும் ஒன்றிணைந்து, மறக்க முடியாத ஓர் அனுபவமாக அமைந்தது.
கஜகஸ்தானிய நடனக் குழுவின் பாரம்பரிய இந்திய நடன நிகழ்ச்சி ஆதியோகியில் அமர்ந்திருந்த பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. ஏனெனில் அனைவரும் தனித்துவமான நடனத்தால் முழுமையாக ஈர்க்கப்பட்டனர். ஒரு நடன மங்கை மேடைக்கு வருகிறார், அவருடைய ஒளிரும் முகம் அவள் அழகாக நடனமாடும்போது பலவிதமான உணர்ச்சிகளை அபிநயமாக வெளிப்படுத்துகிறது. விரைவிலேயே அவளது சகாக்கள் அவளுடன் இணைந்து ஒரு கண்கவர் பரதநாட்டிய நிகழ்ச்சியைப் படைக்கிறார்கள். கஜகஸ்தானில் உள்ள இந்திய பாரம்பரிய நடனங்கள் மற்றும் யோக மையத்திலிருந்து இந்த நடனக் கலைஞர்கள் வந்துள்ளனர். இது மத்திய ஆசியாவின் சர்வதேச அளவிலான முதல் வணிகம் சாராத நிறுவனம். அவர்களின் இதயப்பூர்வமான உயிரோட்டமிக்க நடிப்பும், பாரம்பரிய இந்திய நடனமும் உலகெங்கிலும் உள்ள பலரின் இதயங்களை எவ்வாறு தொடுகிறது என்பதற்கு சாட்சியாகிறது.
மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தின் கடைசி நாளில், அனைத்து வயதிலிருக்கும் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களும் இணைந்து பாரதத்தின் பல்வேறு பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனங்களின் தனித்துவமான நிகழ்ச்சியை வழங்கினர். நடனம், இசை மற்றும் பல பாணிகளை ஒன்றிணைத்து அவர்கள் ஒரு முழுமையான அனுபவத்தை வழங்கினர். இது பார்வையாளர்களின் இதயங்களை கவர்ந்தது. வெண்ணிற ஆடை அணிந்த நடனக் குழுவினர், பரதநாட்டியத்துடன் பக்திப் பாடல்களை இசைத்து, தேவதைகளைப் போல் தீப ஒளி சூழ மேடையில் காட்சி தந்தனர். தொடர்ந்து தடையின்றி நிகழ்ந்த வண்ணமயமான உற்சாகமான நடனங்கள் அவர்களின் அபார திறமையையும் பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்தின. சம்ஸ்கிருதி மாணவர்கள் பாரதத்தின் வளமிக்க கலாச்சாரத்தை நாம் ரசித்து அனுபவிப்பதற்காக வழங்கினர்.