மண் காப்போம் இயக்கம் குறித்து நடிகை மௌனி ராயுடன் ஈஷா யோக மையத்தில் உரையாடினார் சத்குரு. மண்ணின் வளம் குன்றியதால் இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் பரிதாப நிலை பற்றி இருவரின் உரையாடல் அமைந்திருந்தது. மண்ணைப் பற்றி ஆன்மீக தேடலில் உள்ள ஒருவர் ஏன் அக்கறை கொள்ள வேண்டும் என்று மௌனி கேட்க, "ஒருவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டுமே அதுவரை அவர்கள் அறிந்துள்ள எல்லைகளை கடந்து புதிதாக எதையும் பார்க்க விழைவார்கள்" என்று பளிச்சென சத்குருவிடமிருந்து பதில் வந்தது.
பாடகி நீதி மோகன், நடன கலைஞர்கள் சக்தி மோகன் மற்றும் முக்தி மோகன் ஆகியோருடன் சத்குரு ஈஷா ஹோம் ஸ்கூலில் கலந்துரையாடினார். சமுதாயத்தில் வலிமை, பாரபட்சத்தை கையாள்வது, சௌகரியத்திற்கான தேவை மற்றும் மண் காப்போம் இயக்கம் குறித்து சகோதரிகள் கேள்வி எழுப்பினர். சத்குரு தன் பதிலில், இரு நபர்களுக்கிடையேயான உறவுமுறைகளில் மட்டுமின்றி இந்த பூமியுடனும் பண்போடு நடந்துகொள்ள வேண்டும் என்றார்.
பத்ம ஸ்ரீ விருது பெற்ற பிரபல சமையல் கலைஞர் சஞ்சீவ், ஈஷா யோக மையத்திற்கு வருகை தந்து சத்குருவை சந்தித்தார். இருவரும் இணைந்து மையத்தின் விவசாய பூமியிலிருந்து அப்போது பறித்தவைகளைக் கொண்டு சமையல் சூறாவளி நடத்தினர். அக்கி ரொட்டி தயார் செய்தபடியே இருவரும் மண்ணைப் பற்றியும், சமையல் ரகசியங்கள் குறித்தும் உரையாடினர். குழந்தைப் பருவத்தில் தான் சமையலறைக்குள் அனுமதிக்கப்படாதது குறித்து விவரித்த சத்குரு, பிறகு எப்படி சமைக்க கற்றுக்கொண்டார் என்பதைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார். உணவு பிரியர்களுக்கென்றே ஒரு செய்தியை சத்குரு சமையலின் முடிவில் அறிவித்தார். "உங்கள் சமையல் ருசியாக இருக்க வேண்டுமென்றால், மண் நன்றாக இருக்க வேண்டும். எனவே உங்களுக்கென பொறுப்பு இருக்கிறது. அடுத்த நூறு நாட்களுக்கு நீங்கள் மண் பற்றி போதுமான சத்தம் எழுப்ப வேண்டும் என்றார்.
இந்த ஆண்டு நிகழ்ந்த In the Grace of Yoga நிகழ்வின் போது, ஆன்லைன் மற்றும் நேரில் பங்கேற்ற பங்கேற்பாளர்கள் அனைவரும் யோகாவின் சாரத்தை அறிந்துகொள்ள ஏதுவாக அவர்களை சக்திவாய்ந்த தியானத்தில் ஈடுபடுத்தி, விளக்கவுரையும் வழங்கினார் சத்குரு. மஹாசிவராத்திரியன்று தியானலிங்கத்தின் முன்னிலையில், சத்குருவுடன் சக்திவாய்ந்த பஞ்சபூத கிரியா செயல்முறையில் பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.
கரீபியன் தீவுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் முன், அரசு பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆன்லைனில் CARICOM 2022 நிகழ்வில் பங்கேற்று உரையாடினார் சத்குரு. CARICOM என்பது மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள 15 நாடுகளின் கூட்டமைப்பாகும். உரையாடலின் போது, டொமினிக்கா, டிரினிடாட் அண்ட் டொபாகோ, கிரெனடா நாட்டின் பிரதிநிதிகள் மண் காப்போம் இயக்கத்திற்கு தங்களின் உற்சாகமான ஆதரவை வெளிப்படுத்தினர். மண்ணிற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டுவதில் கரீபியன் நாடுகள் உலகின் மற்ற பகுதிகளுக்கு முன்னுதாரணமாக திகழ முடியும் என்று தாம் கருதுவதாக பகிர்ந்து கொண்டார் சத்குரு.
அமெரிக்காவில் பிறந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பொறியாளர், தொழில் முனைவர், சமுதாய நற்பணிகளுக்கு கொடையாளர், ராபின் ரைனா அறக்கட்டளை நிறுவனர், எபிக்ஸ் குழுமத்தின் நிறுவனர், சேர்மன், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ராபின் ரைனா, ரிபப்ளிக் தொலைகாட்சிக்காக சத்குருவை சந்தித்து பேட்டி எடுத்தார். அப்போது, தேசிய அளவிலும் உலக அளவிலும் தொழில் முனைவோர்கள் எதிர்காலத்தில் தலைவர்களாக உருவெடுக்கும் சாத்தியம் குறித்து சத்குருவும் ராபின் ரைனாவும் விவாதித்தனர். இலாப நோக்கத்தில் செலுத்தப்படும் சமூகம் சந்திக்க நேரிடும் புதைகுழிகள் குறித்தும் பேசினர். தலைமை பொறுப்பை ஏற்பதாக இருந்தால், நிறுவனங்கள் இன்னும் சற்று மென்மையாக, அரவணைத்து செல்லும் அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டியிருக்கும் என குறிப்பிட்டார் சத்குரு.
இந்திய வணிக விமானி கேப்டன் ஸோயா அகர்வால் ஈஷா யோக மையத்தில் சத்குருவை சந்தித்து உரையாடினார். விமானத்தில் பறப்பதில் உள்ள ஆனந்தங்கள் மற்றும் சுதந்திரம், எல்லா தடைகளையும் உடைத்தல், மண் காப்போம் மற்றும் வாழ்வின் தனித்தன்மை மற்றும் அழகு குறித்து அவர்களது உரையாடல் அமைந்திருந்தது. தனக்குத் தானே மக்கள் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்வது பற்றி பேசிய சத்குரு, அது உங்களது கனவாக இருந்தாலும், எதுவும், எதற்காகவும் உங்களை குறுகிய எல்லைக்குள் வைக்கவோ, உங்களை தயங்கச் செய்யவோ கூடாது என்றார்.
ஜனநாயகம் நல்ல முறையில் நடப்பதற்கு அனைத்து தரப்பினரின் பங்கேற்பும், கூட்டுறவும் எவ்வாறு தேவையாக இருக்கிறது என்பது குறித்து பேட்டியின் போது பேசிய சத்குரு, பெரிய அளவில் மட்டுமின்றி, குடும்பம் அல்லது நண்பர்கள் வட்டத்திலும் கூட, குறை கூறுவதும் எதிர்மறையான செயல்பாடுகளும் பலனளிப்பதில்லை என்பதை சுட்டிக் காட்டினார். ஒரு பிரச்சனையைப் பற்றி குறிப்பிடும்போது, அதற்கான தீர்விலும் ஒரு பாகமாக இருந்து சரியான வழிகாட்டுதலையும் ஒருவர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார் சத்குரு. மண் பற்றி வேறு ஒரு கோணத்தில் - ஒரு நகரை நிர்மாணிப்பது பற்றி பேசினார் சத்குரு. சுற்றுச்சூழலுக்கு பாதகம் ஏற்படுத்த முனையாமல், தன்னிறைவான ஒரு வாழ்க்கையை இயற்கையுடன் இணைந்து வாழ நாம் முன்வர வேண்டும் என்று குறிப்பிட்ட சத்குரு - இயற்கையாக இந்த நிலப்பரப்பு எப்படி இருக்கிறதோ அதில் நாம் நடப்பதற்கு பழகலாம் என்றார்.
ஆரோக்கியம் குறித்து இலாப நோக்கின்றி இயங்கும் தளமான சாத்விக் மூவ்மெண்ட் -ன் சுபா சாராஃப் மற்றும் ஹர்ஷவர்தன் சாராஃப் சத்குருவுடன் கலந்துரையாடினார்கள். பல்வேறு தலைப்புகளில் நிகழ்ந்த உரையாடலின் போது, மண் மற்றும் உணவு குறித்த பல்வேறு அம்சங்களும் இடம் பெற்றது. பஞ்சத்தின் கொடுமையான தாக்கம் பற்றி பேசிய சத்குரு, எதிர்காலத்தில் அப்படி ஒரு நிலையை தவிர்ப்பதற்கு நாமே பொறுப்பேற்க வேண்டும் என்றார். அதிகளவு சுத்திகரிப்பான்கள் மற்றும் பராமரிக்கப்படும் சூழ்நிலைகளில் வாழ்வது எவ்வாறு மெதுவாக நமது உடலின் இயற்கையான பாதுகாப்பு அம்சங்களில் தொய்வை ஏற்படுத்தும் என்பது குறித்தும் பேசினார் சத்குரு.
முன்னணி சமூக வலைதள பிரபலங்களான நிக்கல் ரஞ்சித் (Brut India), பிரஜக்தா கோலி (MostlySane), ரன்வீர் அல்லாபடியா (BeerBiceps), ரஷ்யாவை சேர்ந்த பிளாக்கர் குசீன் கேசனோவ், அபி & நியு, கௌரவ் தனேஜா (Flying Beast) மற்றும் நகைச்சுவையாளர் தன்மய் பட் ஆகியோர் உட்பட பலருடன் சத்குரு கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கலந்துரையாடினார். சுவாரஸ்யமாக நடைபெற்ற இந்த உரையாடல்களில் உறவுகள் முதல் திருமணம் வரை, தொழில்நுட்பம், வெற்றி மற்றும் மரணம் என பல்வேறு தலைப்புகள் இடம் பெற்றன. இதில் முக்கியமான இடம் பிடித்தது - பரிதாபமான நிலையில் உள்ள இந்த பூமியின் மண்வளம். போதுமான எண்ணிக்கையில் மக்கள் குரல் எழுப்பினால் மட்டுமே அரசுகள் செயலில் இறங்கும் என்பதால் அனைவரும் ஒருமித்து மண் காக்க பேச வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொண்டார் சத்குரு.