மண் காப்போம்

சத்குரு கரிபியன் தீவுகளுக்கு பயணம் - ஆட்சியாளர்கள் மண் காப்போம் இயக்கத்தில் இணைந்தனர்

சத்குரு 21 மார்ச் அன்று லண்டனில் இருந்து தனியாக 30,000 கி.மீ. மோட்டார்சைக்கிள் பயணத்தைத் துவக்குவதற்கு முன்பாகவே கரிபியன் தீவுகளில் மண் காப்போம் இயக்கத்துக்கு ஆதரவு கிடைக்க ஆரம்பித்துவிட்டது. துடிப்பான மகிழ்ச்சியான கரிபியன் மக்கள் சத்குருவை மகிழ்ச்சியோடும், அன்போடும் வரவேற்றனர். மண் சீரழிவை அவசரமாக கையாள வேண்டியது பற்றி சத்குரு அவர்களோடு உரையாடினார்.

சத்குருவின் கரிபியன் தீவுகள் பயணம் மார்ச் 10 அன்று துவங்கியது. அன்று சர் விவ்வியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள். அந்த நிகழ்வில் சத்குருவோடு சர் விவ்வியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் லார்ட் இயன் போதம் உரையாடினர். அப்போது மண் காப்போம் இயக்கத்துக்கு ஆதரவாக பேசினர்.

டிரினிடாடை சேர்ந்த பாடகர் மிச்சேல் மொண்டனோ அந்த போட்டியில் தன் இசை நிகழ்ச்சியை நிகழ்த்தினார். "கிங் ஆப் சோகா" என்று அறியப்படும் அவர், மேற்கிந்திய தீவுகளின் ஆட்சியாளர்கள் இந்த இயக்கத்தை ஆதரிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர். மேலும் தன் இசையை மண் காப்போம் என்ற செய்தியை மக்களிடம் பரப்புவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்துவதாக உறுதியெடுத்துள்ளார்.

மார்ச் 11 அன்று சத்குரு ஆன்டிகுவா மற்றும் பார்புடாவின் பிரதமர் மேதகு கேஸ்டன் பிரௌனியை சந்தித்தார். மார்ச் 12 அன்று அவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். ஆன்டிகுவா மற்றும் பார்புடா நாட்டில் மண் சீரமைப்பிற்கான தேசிய அளவிலான திட்டத்தை செயல்படுத்தும் முதற்படியாக அந்த நிகழ்வு அமைந்தது. மேற்கிந்திய தீவுகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மண் புணரமைக்கும் திட்டத்துக்கான வரைவு ஆவணத்தை சத்குரு அவரிடம் வழங்கியதற்காக மதிப்பிற்குரிய பிரதமர் பெரிதும் நன்றி கூறினார்.

டொமினிகா, செயின்ட் லூசியா, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் அரசாங்கங்களும் அதேநாளில் மண் காப்போம் இயக்கத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். திரு. ரூஸ்வெல்ட் ஸ்கெரிட், டொமினிகா காமன்வெல்த்தின் மதிப்பிற்குரிய பிரதமர்; திரு. திமோதிஹாரிஸ், செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸின் மதிப்பிற்குரிய பிரதமர்; மற்றும் திரு. பிலிப்ஜே. பியர், செயின்ட் லூசியாவின் மதிப்பிற்குரிய பிரதமர் என அனைவரும் மண் காப்போம் இயக்கத்துக்கு தங்களின் வலுவான ஆதரவை நல்கினர். மண் புணரமைப்புக்கு அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பை வெகுவாக பாராட்டிய சத்குரு, மற்ற நாடுகளுக்கு பெரும் உத்வேகத்தை அளிக்கும் என்றும் கூறினார்.

அடுத்த நாளே, மார்ச் 13 அன்று, கயானா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட ஐந்தாவது தேசமாக ஆனது. மேன்மை தங்கிய ஜனாதிபதி டாக்டர். இர்பான் அலி அவர்களின் முன்னிலையில் கயானாவின் விவசாயத்துறை அமைச்சர் மதிப்பிற்குரிய ஸுல்பிகர் முஸ்தபா அவர்கள் சத்குருவோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். கரிபியன் தீவுகளின் உண்மையான பாணியில், அதிகாரப்பூர்வ விழா நிறைவடைந்ததும், அனைவரும் ஒன்றிணைந்து "மண் பாடலை" பாடினர்! ஒவ்வொருவரையும் பாராட்டிய சத்குரு, தொலைநோக்கு பார்வை மற்றும் அர்ப்பணிப்பு கொண்டுள்ள நாட்டின் தலைமையை வெகுவாக பாராட்டினார்.

மார்ச் 14 அன்று, மண் காப்போம் இயக்கத்துக்கு தன் உறுதியை அளித்த ஆறாவது தேசமாக பார்படாஸ் ஆனது. பார்படாஸின் பிரதமர், மதிப்பிற்குரிய மியாமொட்டிலே, தன்னுடைய முழு ஆதரவையும் இந்த இயக்கத்திற்கு தெரிவித்தார். மேலும் உலகிலேயே தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் நாடுகளில் 15வது இடத்தில் இருக்கும் பார்படாஸூக்கு சரியானதொரு தருணத்தில் இந்த திட்டம் கிடைத்திருப்பதாக வலியுறுத்தி கூறினார். விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் மதிப்பிற்குரிய இண்டர். எ. வெயர் மண் காப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.