வாழும் மக்களின் உடல்களுக்குள், உயர்ந்த பரிணாமம் அடைந்த உடலற்ற உயிர்களை “தரவிறக்கம்” செய்யும் ஆச்சரியகரமான அதிசய நிகழ்வைப் பற்றி சத்குரு வெளிப்படுத்துகிறார். இந்த அசாதாரணமான செயல்முறைப் பற்றியும், எதிர்காலத்தில் இந்த சாத்தியத்தை ஆராய்வதற்கு சத்குரு எப்படி திட்டமிடுகிறார், மற்றும் அதிலிருந்து ஏன் உலகம் பலன் பெறும் என்பதையும் கூடுதலாக அறிந்துகொள்ளுங்கள்
கேள்வியாளர்: சத்குரு, இங்கே இருப்பவர்களின் உடல்களுக்குள் மேன்மையான உயிர்களை தரவிறக்கம் செய்வது குறித்து நீங்கள் பேசியதாக நான் கேள்விப்பட்டேன். அதன் பொருள் என்ன என்பதை உங்களால் விளக்கமுடியுமா?
சத்குரு: தற்போது, நாங்கள் யோகா கற்றுக்கொடுத்து, ஒரு கட்டமைக்கப்பட்ட முறையில் மற்ற நிகழ்வுகளையும் நடத்திவருகிறோம், ஆனால் முற்றிலும் வித்தியாசமான தளத்தில் இயங்கக்கூடிய மற்ற விஷயங்களையும் எங்களால் செய்யமுடியும். சில சமூகப் பொறுப்புகளை நாம் ஏற்றுக்கொண்ட காரணத்தால், சிறிது காலத்துக்கு அவற்றை நாம் ஒத்திவைத்துள்ளோம். எனது பயணங்களை கூடுமான அளவு குறைத்துக்கொண்டு, வேறொன்றை ஆரம்பத்திலிருந்து தொடங்கும் எண்ணத்தில் இருக்கிறேன். அப்போது நான், இந்தியாவில் இருக்கும் ஈஷா யோக மையத்தில் எனது நேரத்தின் ஒரு பகுதியையும், அமெரிக்க ஆசிரமத்தில் என் நேரத்தின் ஒரு பகுதியையும் கழிப்பேன், ஆனால் அத்தகைய காலகட்டத்தில் பெரும்பாலும் நான் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பேன்.
மேன்மையான உயிர்களை, வாழ்ந்துகொண்டிருக்கும் உயிர்களுக்குள் தரவிறக்கம் செய்வதில் தியாசோஃபிகல் சொஸைட்டியும் பெருமுயற்சியுடன் ஈடுபட்டிருந்தது. குறிப்பிட்ட சில அமானுஷ்யமான சாத்தியங்களை அவர்கள் முயற்சி செய்தனர், ஆனால் அது பிரம்மாண்டமான திட்டமாக இருந்த காரணத்தால் அவர்களது இலக்கை அவர்களால் சாதிக்க இயலவில்லை. பல காலங்கள் கடந்திருந்த, மைத்ரேயன் என்று குறிப்பிடப்பட்ட மிக நுட்பமான ஒரு உயிரை அவர்கள் கீழே எடுத்துகொண்டு வருவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தனர். கருத்தியலின்படி, அது சாத்தியம்; ஆனால் நடைமுறையில், அது மிகவும் கடினமாக இருந்தது; ஆகவே அது நிகழாமல் போனது. அதைப்போன்ற எந்த விஷயத்தையும் நாம் நினைத்துக் கொண்டிருக்கவில்லை.
பல மேன்மையான உயிர்கள் அவர்களுக்கென்று ஒரு உடலைக் கண்டுபிடிப்பதற்காக எப்போதும் என்னைத் தொடர்ந்து வந்துள்ளனர். ஏனென்றால் அவர்கள் தமது கர்மக் கட்டமைப்பை பெருமளவு இழந்துவிட்டதால், அவர்களால் ஒரு உடலைப் பெறமுடியவில்லை. ஒரு உடலைப் பெறுவதற்கு, உயிர்களுக்கு போதிய கர்மா இருக்கவேண்டும். இவர்கள் மிக உன்னதமான உயிர்கள்; ஆனால் அவர்களுக்கு இன்னமும் சிறு பிணைப்புகள் இருக்கின்றன. அவர்கள் இருக்கும் நிலையிலேயே என்னால் அவர்களை விடுவிக்கமுடியும், ஆனால் இந்த உன்னதமான உயிர்களுக்குப் பொருத்தமான உடல்களைக் கண்டுபிடித்து, சில காலம் அவர்களது துணையுடன் நாம் வாழ்வதை நான் விரும்புகிறேன். அப்படிப்பட்ட மக்களுடன் இருப்பது உலகத்துக்கு ஒரு மாபெரும் வரமாக இருக்கும்.
சில காலங்களுக்கு, எனது உடலில் ஒரு சில மேன்மையான உயிர்களுக்கு நான் இடமளித்தேன். விஜி உட்பட, என்னைச் சுற்றி வாழ்ந்திருந்த பலருக்கு சில நேரங்களில் அது முற்றிலுமான குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒரே கணத்தில், நான் இங்கே அமர்ந்திருப்பேன், அவள் திரும்பினால், அது வேறு ஒருவராக இருக்கும். தியானலிங்கம் பிரதிஷ்டைக்கான செயல் கருதி, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நாம் அந்த விஷயங்களைச் செய்தோம்.
எதிர்காலத்தில் ஏதோ ஒரு தருணத்தில், அப்படிப்பட்ட சில உயிர்களை உங்களில் சிலரது உடல்களுக்குள் நாம் தரவிறக்கக்கூடும். அந்த விதமான ஒரு விஷயத்தை மக்களை உள்வாங்கச் செய்வதற்கு மிக அதிகமான முன்னேற்பாடும், சாதனாவும் தேவைப்படும். அவர்கள் போதிய வலிமையுடன், ஆனால் மிதமிஞ்சிய வலிமையுடன் இருக்கக்கூடாது. அதேநேரம் போதிய பலவீனத்துடன், ஆனால் அதிகமான பலவீனத்துடன் இருக்கக்கூடாது. அந்த சமத்தன்மையை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு முற்றிலும் வேறொரு நிலையிலான சாதனா தேவைப்படுகிறது.
கேள்வியாளர்: அப்படியானால் ஏற்கனவே அந்த உடலில் இருந்துகொண்டிருந்த நபருக்கு என்ன நிகழ்கிறது? உடலற்ற உயிர்களைப் போல் அவர்கள் மிதப்பார்களா?
சத்குரு: இல்லை, அந்த முறையில் அல்ல. ஒரு உன்னதமான உயிரை யாரோ ஒருவரது உடலுக்குள் கொண்டுவர வேண்டுமென்றால், அதில் வாழ்ந்துகொண்டிருக்கும் உயிரை நாம் வெளியில் இழுத்து, அவர்களை எங்காவது விடமுடியாது. அவர்களை நாம் கரைக்கவேண்டும். இவர்களைக் கரைப்பதற்கும், மேன்மையான உயிரை உடலுக்குள் கொண்டுவருவதற்கும் இடையில் சுமூகமான மாறுதல் நிகழத் தேவைப்படுகிறது. இல்லையென்றால், முன்னரே குடிகொண்டிருந்த உயிரைக் கரைத்தபிறகு, குறிப்பிட்ட அந்த உடலானது நிலைகுலைந்துவிடும். அபரிமிதமான சக்தியும், ஒழுங்கும் கொண்ட ஒரு சூழல் தேவைப்படுகின்ற அதிநுட்பமான செயல்முறையாக அது இருக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு செயல்முறையைச் செய்வதற்கு, இந்த மேடை நிகழ்வுகள் நிற்கவேண்டும்; குறிப்பிட்ட விஷயங்களைச் செய்வதற்கு நான் நிலையாக ஓரிடத்தில் அமரவேண்டியுள்ளது. நான் வேரூன்ற வேண்டியுள்ளது. நமக்கு என்ன வேண்டும் என்பதைக் குறித்து, நீங்கள் அனைவரும் உங்களது மனதை ஒருங்கிணக்கத் தேவைப்படுகிறது. ஞானமடைவதற்கான ஒரு உற்பத்திக் களத்தை அமைப்பதில் நாம் உண்மையான ஆர்வத்துடன் இருந்தால், தங்களது தனிப்பட்ட நல்வாழ்வைக் குறித்து சிந்திக்காத மக்கள் மிக அதிகமாக தேவைப்படுகின்றனர். அதற்கு வேறொரு விதமான ஈடுபாடு தேவையாக இருக்கிறது.
பொதுவாக, மக்கள் தங்களது தேர்வுகளைத் திறந்த நிலையில் வைக்கின்றனர். அது வசதியாக இருந்தால், அந்த இடத்தில் இருப்பார்கள். வசதியாக இருப்பது தடைபட்டால், எங்களிடம் சொல்லாமல்கூட அவர்கள் மறைந்துவிடுவார்கள். எந்தத் தேர்வுகளையும் திறந்த நிலையில் வைத்திருக்காத நபர்களைக்கொண்ட ஒரு மக்கள்குழு தேவைப்படுகிறது. இல்லையென்றால், அது நானாக மட்டும்தான் இருப்பேன். அதனை நிகழச் செய்வதற்கு வேறு வழியே இல்லை.
உங்கள் தேர்வுகளை நீங்கள் திறந்து வைத்திருக்க விரும்பினால், தற்போது நாம் செய்துகொண்டிருப்பதைப் போல மேடை நிகழ்வுகளை மட்டும் நடத்துவோம் – இப்படி இடம் விட்டு இடம் செல்வது, அவர்களுக்கு அருந்த நீர் தருவதற்காக அல்ல, ஆன்மீக செயல்முறைக்கான தாகத்தை சற்றேனும் அவர்களுக்கு ஏற்படுத்துவதற்காக. ஆனால் ஒரு நீர் ஆதாரத்தை உருவாக்குவதற்கு நாம் விரும்பினால், அப்போது அதற்கு வேறொன்று தேவைப்படுகிறது. ஒரு பொருத்தமான சூழலை அனைவரும் உருவாக்கினால், நிறையவே நிகழும்; இல்லையென்றால், அது குறைவாக இருக்கும்.
எவ்வளவு நிகழும் என்பது பல்வேறு சூழ்நிலைகளை சார்ந்திருக்கிறது. நாமே அதற்கான மக்களை தயார்ப்படுத்த வேண்டுமென்றால், அதற்கு மிக நீண்ட காலம் தேவைப்படும்; அதனால் அப்படிப்பட்ட நோக்கங்களுக்கு, நாம் உயிர்களை இறக்குமதி செய்யலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, இந்தத் திரளான மக்கள் பயிரை ஒரு உயர்ந்த சாத்தியத்துக்கு மேம்படுத்துவது மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது.