பகிர்வுகள்

மஹாசிவராத்திரி 2022:

நடிகை கங்கனா ரணாவத், முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் சிலரும் இந்த வருட கொண்டாட்டத்தை எப்படி உணர்ந்தனர் என்று பகிர்ந்துகொள்கின்றனர்.

ஈஷாவில் நடக்கும் மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் தவறவிடக்கூடாத ஒன்று. கோவிட்-19 காரணமாக விதிக்கப்பட்ட இரண்டு வருட கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, இந்த முறை, சமூகத்தின் எல்லாத் தரப்பிலிருந்தும், உலகின் மூலைமுடுக்குகளிலிருந்தும் எண்ணற்ற மக்கள் இந்த உற்சாகமான இரவில் நேரடியாக இணைந்துகொள்வதற்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுள் சிலரை நாம் சந்தித்தோம். இங்கே பிரபலமான சில கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரையுலகினர், சத்குரு மற்றும் ஆதியோகியின் முன்னிலையில் அவர்களது மஹாசிவராத்திரி அனுபவம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொள்கின்றனர்.

கங்கனா ரணாவத்

விருது வென்ற நடிகை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்

ஈஷாவில் இது எனக்கு முதல் மஹாசிவராத்திரி. இங்கே இருப்பதில் நான் பெருமிதம் அடைகிறேன். ஆசிரமத்துக்கு வருவதற்கு முன்னால், ‘இது எப்படிப்பட்ட ஒரு பெரும்பேறு!’ என்று உண்மையாகவே நான் எண்ணிக்கொண்டு இருந்தேன். நாம் கிருஷ்ணனைத் தவறவிட்டோம்; சிவனைத் தவறவிட்டோம் – ஆனால் நாம் வாழும் காலத்தில் சத்குருஜியை தவறவிடவில்லை. ‘கிருஷ்ணன் இங்கு இருந்தபோது அல்லது ராமன் இங்கு இருந்தபோது நான் ஏன் பிறக்கவில்லை?’ என்று எப்போதும் எனக்குள் ஆச்சரியப்படுவதுண்டு. ஆனால் கடவுளுக்கு நன்றி, நாம் சத்குருஜியை தவறவிடவில்லை.

வழக்கமாக, மக்களை நான் மகிழ்விக்கிறேன். இன்றைக்கு, ஒரு மாற்றமாக, நான் மகிழ்விப்பவராக இல்லாமல், ஆனால் மகிழ்விக்கப்படுபவர்களுள் ஒருவராக இருக்கிறேன். இந்த மஹாசிவராத்திரியில் பார்வையாளர்களின் ஒரு பகுதியாக, மற்றும் இந்த கோலாகலமான விழாவிற்கு ஒரு சாட்சியாக இருக்கிறேன்.

வெங்கடேஷ் பிரசாத்

முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பௌலிங் கோச்

அனைவருக்கும் மகிழ்ச்சியான மஹாசிவராத்திரி வாழ்த்துகள். ஈஷா யோக மையத்தில் இருப்பதற்கு பெருமிதம் அடைகிறேன். இப்போதுதான் முதன்முறையாக இங்கு வருகிறேன். இங்கே இருப்பது கௌரவமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதோடு, அவ்வளவு பிரம்மாண்டமாகவும் இருக்கிறது. இதைப் பற்றி நான் கேள்விப்பட்டிருந்தேன். இதை உணர்வதற்கு மக்கள் இங்கு வரவேண்டும். பார்த்தால்தான் நம்பமுடியும் என்று நினைக்கிறேன்.

இங்கிருப்பதே உண்மையில் எனக்கு சிலிர்ப்பாக இருக்கிறது. இது மகத்தான அனுபவம். நான் சத்குருவை பெரிதும் பின்பற்றுகிறேன். அவருடன் இணைந்து கோல்ஃப் விளையாடக்கூட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு, இங்கு வருவதற்கு விரும்பினேன். என் அட்டவணை என்னவாக இருந்தாலும், அவைகள் ரத்து செய்யப்படுவதில் அல்லது ஒத்திவைக்கப்படுவதில் உறுதியாக இருந்தேன், ஏனென்றால் நான் இங்கு இருப்பதற்கு விரும்பினேன். அதன் விளைவாக இன்றைக்கு நான் இங்கிருக்கிறேன். சத்குரு மற்றும் ஈஷாவின் விருந்தினராக இங்கு இருப்பதை நான் பெருமையாகவும், கௌரவமாகவும் உணர்கிறேன்

நான் நடனமாடுவதில்லை. நான் கிரிக்கெட் மட்டும் விளையாடி, களத்தில் பேட்ஸ்மேனை நடனமாடச் செய்வேன், அவ்வளவுதான். இது எனக்கு முற்றிலும் வித்தியாசமான ஒரு களம். ஆனாலும், மொத்தமான அதிர்வும், இந்த இடத்தின் சக்தியும் இணையில்லாமல் இருக்கிறது. சத்குரு இங்கு நிகழ்த்தியுள்ளது நம்புதற்கரியது என்று நான் நினைக்கிறேன். உலகெங்கும் உள்ள மக்களுக்கு சத்குரு அனுப்பும் செய்தி அற்புதமானது. அவர் மட்டுமல்ல, ஈஷாவின் தன்னார்வலர்களும்கூட அற்புதம்தான். அவர்கள் பிரமாதமான பணி செய்கின்றனர். இந்த இடத்துக்கு அடிக்கடி வருகை தருவதற்கு நான் உண்மையிலேயே மிகுந்த விருப்பத்துடன் இருக்கிறேன்

நித்யாமேனன்

நடிகை மற்றும் பாடகி

ஈஷாவுக்கு நான் வருவது இதுவே முதல்முறை. இங்கு நான் அற்புதமாக உணர்கிறேன். உண்மையாகவே, எல்லா நிகழ்வும் கண்களுக்கு விருந்தாக இருக்கிறது. ஐம்பூதங்களும் எனக்கு மிகவும் விருப்பமானவை. இங்கு ஈஷாவில் அவைகள் எப்போதும் மிக அழகாக பயன்படுத்தப்படுகின்றன. என்னைப் பொருத்தவரை, நெருப்பு நடனம் குறிப்பிடத்தக்கது. எப்போதும் நான் நெருப்பு தத்துவத்துடன் மிக வலிமையாக தொடர்பு கொள்கிறேன். ஆகவே அதைக் காண்பதற்கு அதிகம் விரும்புவேன், இங்கு அதை அணு அணுவாக அனுபவித்தேன். இந்த இடத்தின் சக்தியை ஒரு வார்த்தையில் கூறமுடியாது. கொண்டாடத்தக்கது என்று மட்டும் நான் கூறினால், உண்மையல்லாத ஒன்றை கூறியதாகவே இருக்கும். ஏனென்றால் இங்கு நான் உணரும் உண்மை, அது முற்றிலும் வேறானது.

ராய்லக்ஷ்மி

நடிகை

ஈஷாவுக்கு இது எனது முதல் வருகை. கடந்த இரண்டு வருடங்களாக பல காரணங்களாலும், கோவிட் சூழலினாலும் நான் இந்த நிகழ்வை தவறவிட்டவாறு இருந்தேன். அனைவரும் அச்சத்தில் இருந்தாலும், அதேநேரம் எனக்கு அதைச் செய்ய விருப்பமாக இருந்தது. இறுதியாக இந்த முறை அது நிகழ்ந்துவிட்டது. இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறேன். நீங்கள் அதைச் செய்வதற்கு சிவன் அருள் கிடைக்கும்பொழுது, அது நடந்தேறுகிறது. இங்கிருப்பதற்கு நான் பெரும்பேறு செய்திருக்கிறேன். இது மகத்தான அதிர்வுடன் இருக்கிறது.

நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னால், நான் மிகவும் களைப்பாக இருந்தேன், அங்கு சென்றபிறகு...... அந்த இடம் முழுவதும் அதிர்வால் ஒளியூட்டப்பட்டிருந்தது. இந்த இடம் ஒரு வித்தியாசமான அதிர்வை உடையது. ஒட்டுமொத்த இடத்துக்கும் சத்குரு முற்றிலும் வித்தியாசமான சக்திநிலையைக் கொண்டுவருகிறார். அவர் ஆடுவதைப் பார்த்து, கூட்டம் முழுவதும் அவருடன் ஆடத்தொடங்குகிறது. அதை நேரடியாக நான் பார்ப்பது இதுவே முதல்முறை.

இன்றைக்கு நான் இங்கிருப்பதற்கு, உண்மையில் நான் சத்குருவுக்கு நன்றி பாராட்டுகிறேன். ஒவ்வொரு ஆண்டும், இவ்வளவு பிரம்மாண்ட நிகழ்வுக்கு, அனைவரையும் அவர் பரிவுடன் அழைக்கிறார். மஹாசிவராத்திரி நாளில் நான் இங்கிருக்கும் என் உணர்வை ஒரு வார்த்தையில் விவரிக்க வேண்டுமென்றால், அது நிச்சயம் ‘நன்றி’ என்பதாகவே இருக்கும்.

வேதா கிருஷ்ணமூர்த்தி

கிரிக்கெட் வீரர்

கடந்த சில மாதங்களில், என் வாழ்க்கையில் பல விஷயங்கள் நிகழ்ந்துள்ளன – வருத்தம், ஏமாற்றம் மற்றும் நெருக்கமானவரை இழந்தது குறித்து மனமுடைந்து போனது. அப்படிப்பட்ட ஒரு நிலையில் இந்த மஹாசிவராத்திரி மிக மிக நேர்மறையான ஒன்றாக எனக்கு வாய்த்திருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ, என் வாழ்க்கையில் சத்குரு அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று நான் நினைக்கிறேன். மாட்சுக்குச் செல்வதற்கு முன், உண்மையிலேயே அவரது வார்த்தைகளைக் கேட்கும் பல தருணங்கள் இருக்கின்றன. அது என்னை மிக மிக நன்றாக உணரச் செய்கிறது. அவருக்கு இவ்வளவு அருகில் இருந்துகொண்டு, இந்த அற்புதமான இரவை அவருடன் உணர்வது மிக மிக சுவாரஸ்யமாக இருக்கிறது.

மிக நீண்ட காலமாக நான் இங்கு வருவதற்கு விருப்பமாக இருந்தும், அது நிகழ்ந்திராத காரணத்தால், நான் மிகுந்த ஆர்வமாக இருந்தேன். இந்தமுறை, நான் ஓய்வில் இருந்தபொழுது அழைப்பு வந்தது. நிச்சயம் இதை உணரவேண்டும் என்பது போல இருந்தேன். நான் இங்கு நடந்து வந்து, ஆதியோகியின் திருமுகம் பார்த்த நிமிடத்தில், உண்மையிலேயே மகிழ்ச்சி பெருகியது. இந்த இடத்தை ஆக்கிரமித்துள்ள இசை, மிகவும் நேர்மறையாக உணரச் செய்கிறது. எனக்கு மிகவும் தேவைப்பட்ட ஒன்றாகவே இதை நான் உணர்கிறேன். என் முகத்தில் அமர்ந்திருக்கும் புன்னகையே அதை உணர்த்தக்கூடும். அதை விவரிக்க எனக்கு வார்த்தைகள் தேவையில்லை.