உலகம் முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் 2022 மஹாசிவராத்திரி இரவை சத்குருவுடன் கொண்டாட இணைந்திருந்தபொழுது, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட சத்குரு, உலகத்தின் மண் ஒரு அபாயகரமான நிலையில் இருப்பதைப் பற்றியும், வரவிருக்கும் ஆண்டுகளில் நமக்கு காத்திருக்கும் பேரழிவான பின்விளைவுகள் குறித்தும் ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கை விடுத்தார். நாம் அனைவரும் நமது உறுதியை வெளிப்படுத்தி, தேவையான செயல் செய்வதற்கு ஒற்றுமையுடன் கைகோர்க்கும் நேரம் இது என்பதை வலியுறுத்தினார்.
சத்குரு: ஒரு உலகளாவிய நாகரிகமாக, அடுத்த 20 முதல் 25 வருடங்களில், நாம் ஒரு ஆபத்தான உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளக்கூடிய கட்டத்தை எட்டியிருப்பதாக, இந்தத் துறையின் ஒவ்வொரு பொறுப்பான விஞ்ஞானியும் சுட்டிக்காட்டுகின்றனர். துரதிருஷ்டவசமாக, நமது ஞாபகசக்தி மிகவும் குறைவாக உள்ளது. 1950 க்கு முன்பு, இந்த நாட்டில் இலட்சக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கிய பஞ்சங்கள் ஏற்பட்டன. 1943 ஆம் வருட பஞ்சம் 30 இலட்சம் உயிர்களைக் காவு கொண்டன – பசியினால் இறந்துபோனவர்களின் எண்ணிக்கை அது. திடீரென்று நிகழும் குண்டு வெடிப்பைப் போன்றதல்ல இது.
பசியினால் இறப்பது ஒரு கொடுமையான செயல்முறை. அதை நாம் மறப்பதுடன், மீண்டும் அந்தத் திசையில் நம்மைச் செலுத்திக்கொண்டிருக்கிறோம். 2045 ம் வருடவாக்கில், தற்போது நாம் உற்பத்தி செய்துகொண்டிருக்கும் உணவைவிட 40% குறைவாக உற்பத்தி செய்வோம் என்றும், அப்போது உலக மக்கள்தொகை 900 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்றும், உலகம் முழுவதிலும் இருக்கும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நீங்கள் வாழ விரும்பும் உலகம் அது அல்ல. உங்கள் குழந்தைகள் வாழ்வதற்கு, நீங்கள் விரும்பும் உலகம் அது அல்ல.
நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவும், நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மண்ணும் நமக்கு சொந்தமானது அல்ல. இன்னமும் பிறக்காத குழந்தைகளின் மண்ணை நாம் துஷ்பிரயோகம் செய்துகொண்டு இருக்கிறோம். இது ஒரு குற்றம். ஆகவே, முன்னதாகவே, நாம் ஒரு இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம். கடந்த எட்டு மாதங்களில், உலகெங்குமுள்ள பல்வேறு மாநிலங்களின் தலைமைகள் மற்றும் சுற்றுச்சூழல் மந்திரிகளிடம் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். எல்லா இடங்களிலும், ஒவ்வொருவரும் இது நிகழவேண்டும் என்பதை அறிந்துள்ளனர், ஆனால் மக்கள் இன்னமும் பேசாமல் இருப்பதுதான் பிரச்சனையாக இருக்கிறது.
மக்கள் தம் வாழ்வின் நீண்ட கால நோக்கங்களை வெளிப்படுத்தாமல் இருக்கின்றனர். அவர்கள் அற்பமான பொருட்களுக்காக வேண்டுகோள் விடுக்கின்றனர், ஆகவே அரசாங்கங்கள் அவர்களுக்கு அற்பப் பொருட்களை வழங்குகின்றனர். நமது வாழ்வில் நமக்கு நீண்ட கால நோக்கம் இருக்கிறது என்பதை ஒவ்வொரு பொறுப்புணர்வான பிரஜையும் வெளிப்படுத்துவதற்கான நேரம் இது. நாம் நம்மைக் குறித்து மட்டும் சிந்திக்கவில்லை, எதிர்காலத் தலைமுறைகளுக்காகவும் சிந்திக்கிறோம் என்பதை நாம் வெளிப்படுத்த வேண்டும்.
இதன் ஒரு பகுதியாக பல விஷயங்கள் நிகழ்ந்துகொண்டுள்ளன. 170 நாடுகள் பங்கேற்கவிருக்கும் யுஎன் பயோடைவர்சிடி கான்ஃபரன்ஸ் (UN Biodiversity Conference (COP-15)ல் நான் இது குறித்து பேச இருக்கிறேன். ஒரு விரிவான மண் கொள்கையை நாம் தயார்செய்துள்ளோம். உலகத்தின் 730 அரசியல் கட்சிகளுக்கு நாம் எழுதியுள்ளோம். ஏனென்றால் அவர்களது தத்துவங்கள், கருத்தாக்கங்கள் மற்றும் அவர்களின் பல்வேறு நம்பிக்கைகள் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, ஒவ்வொரு அரசியல் கட்சியும் மண்ணையும், சூழலியல் குறித்த பிரச்சனைகளையும் தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் தெளிவுபடுத்துவது மிகவும் முக்கியமானது.
துரதிருஷ்டவசமாக, இது ஒரு மௌனமான ஜனநாயகம். ஜனநாயகம் அந்த விதமாக செயல்படுவதில்லை. ஜனநாயகம் என்பது மக்களின் ஆட்சி. அரசாங்கத்துக்கு மக்கள் தங்கள் தேவையை வலிமையாகத் தெரிவிக்கவில்லை என்றால், அரசாங்கங்கள் எப்படி நீண்ட கால முதலீடுகளை செய்யும்? மக்கள் நீண்டகால உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினால், அரசாங்கங்கள் அதையே செய்யும்.
மார்ச் 21 ல் இருந்து, நான் மோட்டார் சைக்கிளில் தனியாக லண்டனிலிருந்து 30,000 கிமீ தொலைவுக்கு, 100 தினங்களில் 26 தேசங்களுக்கு பயணம் செய்கிறேன். இந்த நூறு நாட்களில், நீங்கள் அனைவரும், தினமும் குறைந்தபட்சம் ஐந்திலிருந்து பத்து நிமிடங்களுக்கு, மண் குறித்து ஏதேனும் ஒரு விஷயத்தைக் கூறவேண்டும், இது முக்கியம். உங்கள் சமூக ஊடகம், ட்விட்டர், முகநூல், உங்கள் டெலிக்ராம் போன்ற தளங்களை அதற்காக பயன்படுத்துங்கள். இந்தத் தளங்களை எப்படி பயன்படுத்துவது என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால், இந்தக் கணக்குகளை எப்படி துவங்குவது மற்றும் எப்படி கையாள்வது என்பதை விளக்கும் டூல்கிட்களை நாங்கள் வெளியிட்டுள்ளோம். உங்களுக்கு தேவையான எல்லாத் தகவல்களும் SaveSoil.org. என்ற எங்களது வலைதளத்தில் வழங்கப்படும். அந்த நூறு நாட்களில் ஒட்டுமொத்த உலகமும் மண் குறித்துப் பேசவேண்டும்.
மண்ணைப் பற்றியும், மண்ணுக்கான நமது அக்கறை, மற்றும் இன்னமும் பிறக்காத குழந்தைகளுக்கான நமது கவனம் குறித்தும் பேசுவதற்கு 30 கோடி முதல் 40 கோடி மக்கள் நம்மிடையே இருந்தால், எந்த அரசாங்கமும் அதை அலட்சியம் செய்யமுடியாது. இது எதிர்ப்பு தெரிவித்தல் அல்ல. இது அழுத்தம் கொடுக்கும் ஒருவிதமான தந்திரம் அல்ல. மக்களுடைய விருப்பத்தின் ஒரு வெளிப்பாடு இது. ஒரு ஜனநாயக சமூகத்தில், ஒரு பொறுப்பான வெளிப்பாடு நிகழ்வது மிகவும் முக்கியமானது.
நாம் மண்ணிலிருந்து வருகிறோம்; மண்ணிலிருந்து வருவதை நாம் சாப்பிடுகிறோம், மற்றும் நாம் இறக்கும்போது, மண்ணுக்கே திரும்பிச் செல்கிறோம். இறந்துபோனதை புதைத்தால், அது உயிர்ப்பாக முளைக்கும் ஒரே மாயாஜாலம் மண்தான். உலகமெங்கும் மண்ணை மறு உருவாக்கம் செய்வது முக்கியமானது. உங்களுக்கே தெரியும், இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஆனால் பொதுவாக அது எப்போதும், “ஓ, விவசாயிகள் வங்கிக் கடன் பெற்றிருந்தனர், ஆகவே அவர்கள் அதைத் திருப்பிச் செலுத்தவும் முடியாமல், விளைச்சலும் இல்லாமல் பசிக்கொடுமையால் தற்கொலை செய்துகொண்டனர்,” என்ற ஒற்றை விளக்கத்துடன் ஒதுக்கப்படுகிறது. நான் உங்களைக் கேட்கிறேன்: உங்களுக்கு ஒரு நிலம் இருந்து, வங்கிக் கடனும் இருந்தால், ஆனால் உங்களுக்கு வளமான மண் இருந்தால், குறைந்தபட்சம் உங்கள் குடும்பத்துக்கு உணவு விளைவிக்க முடிகிறது என்றால் – உங்களை நீங்களே கொன்றுகொள்வீர்களா? நீங்கள் அதைச் செய்யமாட்டீர்கள்.
மக்கள் தங்களையே கொன்றுகொண்டிருக்கின்றனர், ஏனென்றால் வயலில் விளைவிப்பது நம்பிக்கை இல்லாத ஒன்றாகிக்கொண்டு இருக்கிறது. மண் பலவீனமாகிவிட்டது. இங்கே 50-100 வருடங்களுக்கு முன்னால் மக்கள் சாப்பிட்டதை விட, நீங்கள் சாப்பிடும் உணவில் இருக்கும் ஊட்டச்சத்து மிகவும் குறைவாக இருக்கிறது. மண்ணின் சிறிய குறைபாடு குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கவில்லை – மண் இறந்துகொண்டிருப்பதைக் குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். அந்த இடத்தை நோக்கித்தான் நாம் சென்றுகொண்டிருக்கிறோம். அடுத்த 60-70 அறுவடைகளுக்கு மட்டும்தான் இந்த பூமியின் மீது நம்மிடத்தில் மண் இருக்கிறது என்று ஐக்கிய நாடுகளின் ஏஜென்சிகள் கூறுகின்றன. உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் என்ன கொடுக்கப்போகிறீர்கள்? எந்த விதமான உலகை அவர்களுக்காக நீங்கள் விட்டுச் செல்லப்போகிறீர்கள்?
ஆகவே, தயவுசெய்து, இந்த 100 நாட்களுக்கு, உங்களை உயிர்ப்புடன் வைத்திருங்கள் – உங்களின் ஐந்து, பத்து நிமிட நேரம் உலகைக் காப்பாற்றக்கூடும்.