மிருதங்க கலைஞரின் வாழ்க்கை
ஈஷா சம்ஸ்கிருதி வளாகத்தை நாம் நெருங்குகையில் மிருதங்கங்களின் தாள லயத்திற்கு பக்கவாத்தியம் போல மாணவர்களின் சிரிப்பொலி சத்தமும் இணைந்தே கேட்கிறது. மஹாசிவராத்திரிக்கு முன் நாம் சென்றிருந்ததால், இளம் கலைஞர்கள் தங்கள் சுவாசமாகவே மாறிவிட்டிருந்த திறனை மெருகேற்றிக்கொண்டு சர்வதேச அளவில் பார்வையாளர்களுக்கு நம் பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தும் முனைப்புடன் இருந்தனர். மாணவர்கள் சற்று இடைவெளி எடுத்துக்கொண்டு பந்து விளையாட கிளம்ப, அந்த இடைவெளியில் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்ள வந்து அமர்ந்தார் ஈஷா சம்ஸ்கிருதி முன்னாள் மாணவர் அஷ்வின்.
இந்திய பாரம்பரிய இசை அல்லது நடன நிகழ்ச்சிகளின் போது, பார்வையாளர்கள் நடன கலைஞர்களின் அழகிய நடன அசைவுகளிலோ அல்லது பாடகர்களின் இனிமையான குரல் வளத்தின் மீதோ தங்கள் கவனத்தை செலுத்தக்கூடும். இருந்தாலும், பார்வையாளர்களின் அனுபவத்தை முழுமையடையச் செய்வதில் ஒரு திறன் வாய்ந்த தேர்ந்த மிருதங்க கலைஞரின் பங்களிப்பு முக்கியமாகிறது.
கர்நாடக வாய்ப்பாட்டு மற்றும் பரதநாட்டிய நடன நிகழ்ச்சிகளுக்கு பக்கபலமாக, 'பக்காவான' பக்கவாத்தியமாக திகழ்வது என்றால் அது மிருதங்கம் தான். "வாத்திய கலைஞர்களின் நேரடியான பங்களிப்பு நடன கலைஞர்கள் அல்லது பாடகருக்கு சக்தி ஊட்டுவதுடன் ஒட்டுமொத்தமாக நிகழ்ச்சியின் உணர்வை மேம்படுத்துகிறது" என பகிர்ந்து கொள்ளும் அஷ்வின் தொடர்கிறார், "உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட காட்சியில் நடன கலைஞர் சோகத்தை வெளிப்படுத்த முயற்சிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த சமயத்தில், மேடையில் ஓரமாக அமர்ந்திருக்கும் வாத்திய கலைஞர் அந்த சோகத்தின் ஆழத்தை அப்படியே பார்வையாளர்களுக்கு எடுத்து செல்லக்கூடியவராக இருக்கவேண்டும்."