பகிர்வுகள்

திகைப்பூட்டும் அனுபவங்களுக்கு உத்தரவாதம்: இமயமலையில் சத்குருவுடன் மோட்டார் சைக்கிள்களில்

செப்டம்பர் மாதத்தில் சத்குருவுடன் இமாலய பயணத்தில் பங்கேற்ற ஆறு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், வாழும் குருவுடன் இமயமலையின் அருளைப் பெற்ற அனுபவத்தையும், பயணத்தின் சில மறக்க முடியாத தருணங்களையும் விவரிக்கிறார்கள்.

ஹெலிகாப்டரிலிருந்து வெளியேறி ஒன்றுமில்லா தன்மையை அடைந்த அனுபவம்

இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர், தான் சரியான நேரத்தில் இமயமலைப் பயணத்திற்கு் சென்றடைந்ததைப் பற்றியும், கேதார்நாத்தில் ஒன்றுமில்லாத அல்லது சிவன் என்னும் தன்மை பற்றிய தனது சக்திவாய்ந்த அனுபவத்தைப் பற்றியும் விவரிக்கிறார்.

கிறிஸ்டோபர்:  இமயமலைப் பயணத்தின் ஒரு பகுதியாக நான் இருந்ததில் மிகவும் பாக்கியவானாக உணர்ந்தேன். இங்கே இமயமலைப் பயணம் தொடங்கி ஒரு வாரம் ஆகியிருந்த போதும் எனக்கு விசா கிடைக்கவில்லை. ஆனால், முதல் வாரத்தை தவறவிட்டாலும் பரவாயில்லை என்று இங்கே வருவதில் நான் உறுதியாக இருந்தேன். ஐந்தே நிமிடங்கள் மட்டுமே என்னால் இங்கே இருக்க முடிவதாக இருந்தாலும், நிச்சயமாக இத்தனை தூரம் பயணித்திருப்பேன். எப்படியாவது வந்து சேர்ந்துவிட வேண்டும் என்று சொந்தமாக ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்தேன். கேதார்நாத்தில் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியதும், அப்படியே நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு ஓடினேன்.

எனது பைகளை கீழே இறக்கிவிட்டு, கோவிலின் படிகளை அடைந்தபோது, ​​​​சத்குரு அங்கே இருந்தார். அப்போதுதான் சத்குரு கோவிலில் இருந்து வெளியே வந்திருந்தார், என்னைப் பார்த்து தலையசைத்தார். அவரது அருள்தான் என்னை இங்கே வர அனுமதித்தது. நான் எனது காலணிகளை கழற்றிவிட்டு, கோவிலுக்குள் சென்று, கைகளை குவித்து நமஸ்காரம் செய்தபடி கண்களை மூடினேன். ஒன்றுமில்லாத ஒரு அசைவற்ற கருப்பு வெற்றிடம் மட்டுமே இருந்தது. நான் சிவனால் தீண்டப்பட்டேன் என்பதை அந்த நேரத்தில் நான் அறிந்துகொண்டேன். இதை நான் முன்பு, மஹாசிவராத்திரியில் அனுபவித்திருக்கிறேன். இந்த பிரபஞ்சத்தில் நான் மிகவும் சிறியவனாக இருந்தாலும், எனது ஆற்றல் வரம்பற்றது என்பதை இது மீண்டும் உணர்த்தியது.

இந்தப் பயணம் எனது பயிற்சி அனுபவத்தையும், என்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் நான் எப்படி உணர்கிறேன் என்பதை ஆழமாக்கியுள்ளது.

பாறைகள் சரிந்தும் மனிதர்கள் அசையாமல் அமர்ந்திருக்கும் இடம்

சத்குருவுடன் பலமுறை சவாரி செய்யும் வாய்ப்பைப் பெற்ற பெங்களூருவாசியான பாலாஜி, இமயமலை பயணத்தின் சிறப்பான தருணங்களை பகிர்ந்துகொள்கிறார்.

பாலாஜி: காவேரி கூக்குரல் மோட்டார் சைக்கிள் பேரணியின் முடிவில், 2020-ல் இமயமலையில் தன்னுடன் சவாரி செய்ய சத்குரு எங்களை அழைத்தார், ஆனால் கொரோனா நோய்தொற்று காரணமாக அது நடக்கவில்லை. எனவே, 2021-ல் அவருடன் சவாரி செய்ய நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். வானிலையின் நிச்சயமற்ற தன்மை மற்றும் நிலச்சரிவுக்கான வாய்ப்புகள் இந்தப் பயணத்தை மிகவும் உற்சாகமாகவும், மறக்கமுடியாததாகவும் ஆக்கியது.

பத்ரிநாத் செல்லும் வழியில், ஒரு ஆழமான, சேறும் சகதியுமான தண்ணீர் குட்டையைக் கண்டோம். எங்களுக்கு முன் பைலட் வாகனத்தில் பயணித்தவர்கள் எங்களை உடனடியாக திரும்பச் சொன்னார்கள். நாங்கள் மேலே பார்த்தபோது, ​​ஒரு பெரிய நிலச்சரிவு எங்கள் மீது இறங்குவதைக் கண்டோம். திரும்புவதற்கு போதிய இடம் இல்லாததால், வாகன ஓட்டிகளும், தன்னார்வலர்களும் மோட்டார் சைக்கிள்களை அப்படியே பின்னுக்குத் தள்ள வேண்டியிருந்தது. அதிர்ஷ்டவசமாக பங்கேற்பாளர்களுக்கும் தன்னார்வலர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. திரும்புவதற்கு இன்னும் இரண்டு நிமிடம் தாமதித்திருந்தால்கூட, சில ஓட்டுநர்களும் அவர்களது மோட்டார் சைக்கிள்களும் அப்படியே அடித்துச் செல்லப்பட்டிருக்கும்.

மற்றொரு சவாலான சவாரியாக குப்தகாசியில் இருந்து சோன்பிரயாக் வரையான பயணம் இருந்தது. தொடர்ந்து, கேதார்நாத் நோக்கி அதற்கு இணையான சவாலான மலையேற்றம் மேற்கொண்டோம். ஆனால் கேதார்நாத்தை தரிசித்த உடன், எங்களின் வலிகள் மற்றும் போராட்டங்கள் அனைத்தையும் மறந்துவிட்டோம். சத்குருவின் முன்னிலையில், கம்பீரமான இமயமலைகளின் பின்னணியில், நாங்கள் கோவிலின் முன் அமர்ந்தோம். வெகுநேரம் அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தோம். முழுப் பயணத்திலும் இது மிகவும் அசாதாரணமான மற்றும் சக்திவாய்ந்த அனுபவமாக இருந்தது.

எகிப்தைச் சேர்ந்த டாக்டர் ஈஷா ‘ரோடீ’ ஆனபோது

எகிப்தைச் சேர்ந்த தீவிர தியான அன்பரான போரிஸ் டாக்டர், இமயமலையில் சத்குருவுடன் சவாரி செய்த பிறகு தனது ஊக்கியை எப்படி மீட்டெடுத்தார் என்பதைப் பகிர்ந்து கொள்கிறார்.

போரிஸ்: நான் 2016 முதல் சத்குருவுடன் இருக்கிறேன். இந்த ஆண்டு பிப்ரவரியில் இந்த பயணத்தைப் பற்றி அறிந்தேன், பயிற்சிக்காக ஹார்லி டேவிட்சன் பைக் ஒன்றை வாங்கினேன். நான் தேர்ந்தெடுக்கப்படுவேனா என்று உறுதியாக தெரியாத போதும் என்னை பதிவு செய்து கொண்டு, அப்படியே கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். இறுதியாக நான் இமயமலை பயணத்திற்கு தேர்வானேன்.

சத்குரு எங்களுடன் சவாரி செய்தார், எங்களுடன் கேலி செய்தார், எங்களுக்குப் பிடித்தமான மோட்டார் சைக்கிள்களைப் பற்றி விரிவாகப் பேசினார். அவர் எங்களையும் எங்கள் மோட்டார் சைக்கிள்களையும் ஆசீர்வதித்தார். நாங்கள் அவரது குழுவில் ஒரு பாகமாக இருப்பதாக உணர்ந்தோம், அவருடைய ரோடிகள் - ஈஷா ரோடீஸ்.

கேதார்நாத் முற்றிலும் மாறுபட்ட ஒரு அனுபவமாக இருந்தது. மற்றவர்கள் குதிரை மீது பயணித்து  கேதார்நாத்தை அடைய முடிவு செய்தனர். சத்குரு ஹெலிகாப்டரில் வருவார் என்பதால் நாங்கள் விரைவாக வந்துவிட விரும்பினோம். ஆனால் நான் என் பையை மறந்துவிட்டதால் மீண்டும் கீழே வர வேண்டியதாயிற்று. நான் தயாராக இல்லாதபோதும், நடந்தே மேலே செல்வது என்று முடிவு செய்தேன். என் தொடைகளும், கெண்டை காலிலும் கடுமையான வலி ஏற்பட்டது, ஆனால் நான் தொடர்ந்து சிவ ஷம்போ உச்சாடனம் செய்தபடியே மேலே நடந்தேன். சத்குருவின் அருளால், தேவையான சக்தியை திரட்டி, மேலே ஏறுவதை சமாளித்தேன்.

நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை உணரவே இந்த மலைகளுக்கு வருகிறோம் என்று நினைக்கிறேன். இந்த பூமியில் நாம் ஒன்றுமே இல்லை. நாம் இங்கு வெறுமே வருகிறோம், அப்படியே நாம் வெறுமே செல்கிறோம். இது எனக்கு வாழ்நாள் அனுபவமாக இருந்தது. நான் மீண்டும் இளமையாக, புத்துணர்ச்சியாக உணர்கிறேன். அதோடு எனது அதிர்ஷ்டம் மீண்டும் ஜேம்ஸ் பாண்ட் வழியில் வந்ததைப் போல் உணர்கிறேன்.

வினோதமான வழிகளில் அருள் செயல்பட்ட விதம்

சத்குருவுடன் சவாரி செய்ய வேண்டும் என்ற தனது ஆழ்ந்த ஏக்கம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு எப்படி நிறைவேறியது என்பதைப் பகிர்ந்துகொண்ட ஹைதராபாத்வாசியும், சவாரி வீரருமான சுனில், இமயமலையில் தற்செயலாக நடந்த ஒரு விசித்திரமான நிகழ்வைப் பற்றியும் விவரிக்கிறார்.

சுனில்: 2017ல், நான் சத்குருவின் வீடியோக்களை யூடியூப்பில் பார்க்க ஆரம்பித்து, உடனே அவரால் ஈர்க்கப்பட்டேன் - அவருடைய ஆன்மீக போதனைகளால் அல்ல, மாறாக மோட்டார் சைக்கிள்கள் மீதான அவரது நேசம் காரணமாக. அதே நேரத்தில், நான் ஒரு புத்தம் புதிய ஹார்லி டேவிட்சன் அயர்ன் 833 ஐ வாங்கி இருந்தேன். அன்றிலிருந்து, சத்குருவுடன் சவாரி செய்ய வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது.

ஜூன் 2021-ல், சாதனா பாதை நிகழ்ச்சிக்கும், சத்குருவுடன் இமயமலை பயணத்திற்கும் விண்ணப்பித்தேன். இரண்டிலும் நான் பங்கேற்க தேர்வானதை உறுதி செய்ய ஈஷா தன்னார்வலர் ஒருவர் எனக்கு போன் செய்தபோது, என் காதுகளையே என்னால் நம்ப முடியவில்லை. அப்போது, சத்குருவின் வார்த்தைகள் என் மனதில் எதிரொலித்தது: “உங்கள் கனவுகள் நனவாகாமல் போகட்டும். நீங்கள் கனவிலும் நினைக்காத விஷயங்கள் உங்களுக்கு நடக்கட்டும்.”

எங்களது இமாலய பயணம் பன்னிரண்டு நாட்கள் நீடித்தது, ஒவ்வொரு நாளும் நாங்கள் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக சவாரி செய்தோம். பயணத்தில் இருந்து குறைந்தது 100 மறக்கமுடியாத நிகழ்வுகளை என்னால் பகிர்ந்துகொள்ள முடியும் என்றாலும், மிகவும் விசித்திரமான மற்றும் நம்பமுடியாத தற்செயலான நிகழ்வு இது. சவாரி தொடங்கிய பத்தாவது நாளில், எனது மோட்டார் சைக்கிளின் முன்பக்க டயர் பஞ்சர் ஆனதால் சக்கரம் காற்றிழந்தது. எனவே, எங்களுடன் பயணித்த இழுவை வண்டியில் எனது மோட்டார் சைக்கிளை ஏற்றிவிட்டு, பின்னால் வந்த காரில் பயணத்தைத் தொடர்ந்தேன்.

பத்ரிநாத் செல்லும் வழியில் ஒரு பெரிய நிலச்சரிவை எதிர்கொண்டோம். அங்கு, நிலச்சரிவை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்த கனடா நாட்டை சேர்ந்த ஒருவரை நாங்கள் சந்தித்தோம்.  சத்குருவைப் பார்த்த கணத்தில், அவருடைய காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். குறிப்பிட்ட திட்டம், நோக்கம் அல்லது வழிகாட்டுதல் எதுவுமின்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் இந்தியாவை ஆய்வு செய்து வருகிறார் என்பது தெரியவந்தது. 'தவறுதலாக' ஏதோ ஒரு பேருந்தில் ஏறிய அப்பெண் இந்த இடத்தை அடைந்திருந்தார். அதுமட்டுமல்ல, அவரும் நான் பங்கேற்ற அதே வகுப்பில் (அக்டோபர் 2019 யில் ஹைதராபாத்தில்) ஷாம்பவி மஹாமுத்ரா தீட்சை பெற்றிருக்கிறார் என்பதை விரைவில் கண்டுபிடித்தேன்.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து சக்திகளும் இணைந்து அப்பெண்ணை கம்பீரமான இமயமலையின் மடியில் சத்குருவின் பாதத்திற்கு கொண்டுவர சதி செய்தது போல் உணர்ந்தேன். அவர் மட்டுமல்ல, ஏறக்குறைய ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் ஏற்பட்டிருந்த விசித்திரமான தற்செயல் நிகழ்வுகள் அவர்களை சத்குருவிடம் கொண்டு வந்து சேர்த்திருந்தன. அவர்களுக்கு நிகழ்ந்தவைகளோடு என்னால் பொருந்திப்போக முடிந்தது, ஏனென்றால் எனக்கும் அதுவே உண்மையாக இருந்தது. இப்போது நான் நகர வாழ்க்கைக்கு திரும்பிவிட்டாலும், என் இதயம் இன்னும் இமயமலையிலேயே இருக்கிறது.

ஞானோதயம் அடைந்த குருவுடன் இருப்பதன் பரவசம்

பெங்களூருவில் வசிக்கும் ஹேமந்த், சத்குருவுடன் இமயமலையில் இருக்க வேண்டும் என்ற தனது கனவு, மூன்று வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு எப்படி நிறைவேறியது என்பதைப் பகிர்ந்து கொள்கிறார்.

ஹேமந்த்: சமீபத்தில், நான் துபாயில் இருந்தபோது, ​​இமயமலையில் சத்குருவுடன் பைக் சவாரி செய்ய வாய்ப்பு இருப்பதாக ஈஷா சேக்ரட் வாக்ஸ் (புனிதப் பயணம்) குழுவிடமிருந்து எனக்கு மின்னஞ்சல் வந்தது. சற்றும் யோசிக்காமல் எனது துபாய் பயணத்தை ரத்து செய்தேன். சத்குருவின் கருணைதான் என்னை இங்கு வரவழைத்தது.

சத்குருவுடன் பன்னிரெண்டு நாட்களைக் கழிக்க வாய்ப்பு கிடைத்ததில் நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்றே நினைக்கிறேன். அவருடன் காலை உணவின் போது, ​​தேநீர் இடைவேளையின் போது, ​​இமயமலையை சுற்றிப் பார்த்ததில், நான் என்றும் மறக்க முடியாத மிகவும் சிறப்பான தருணங்கள் இருந்தன.

கேதார்நாத்தில் சத்குருவுடன் இருந்தது இவ்வுலகை சேராத ஒரு அனுபவம்! கேதார்நாத் கோவிலின் முன் மாலையில் நாங்கள் மஹாமந்திரத்தை உச்சரித்தோம், அப்போது உண்மையில் என் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் பரவசத்தில் வெடிப்பதைப் போல உணர்ந்தேன். இது என் வாழ்க்கையில் நான் பெற்ற மிக உயர்ந்த, மிகவும் இனிமையான அனுபவம்.

எங்கள் பயணத்தின் போது, ​​ஒரு கட்டம் வரை நான் பைக் குழுவிற்கு தலைமை வகித்தேன். ஆனால் நிலச்சரிவு ஏற்படுவதற்கு சற்று முன்பு, மழை பெய்ததால் நான் பின்தங்கினேன். நிலச்சரிவில் இருந்து சில நிமிட இடைவெளியில் தப்பினோம். அது மீண்டும், சத்குருவின் பிரசன்னம் (இருப்பு) காரணமாக தான் என்று நினைக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். சரியாக அப்போது அவர் பொறுப்பேற்றார், நாங்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டோம். அவருடைய கருணையின் கீழ் இதுபோன்ற ஆபத்தான விஷயத்தை சந்தித்து மீள்வது அவருடைய ஆசீர்வாதம் என்றே நான் நினைக்கிறன்.

வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் குருவுடன் சவாரி செய்யும் இந்த அனுபவத்தை வேறு எதுவும் ஈடுசெய்ய முடியாது.