யோகா & ஞானம்

உக்கிரம் Vs தீவிரம் - ஏன் ஒன்று
உங்களை ஓயச்செய்கிறது, மற்றொன்றோ உங்களை ஒளிரச்செய்கிறது

எந்த யோகப் பயிற்சிகள் உங்களை தீவிரமானவராக மாற்றியமைத்துக் கொள்ள மிகவும் உதவுகிறது என்பதை அறிந்திருக்கிறீர்களா? மேலும், உக்கிரம் ஏன் மேலோட்டமானதாக இருக்கிறது, ஆனால் தீவிரமோ உயிரின் மூலத்தில் இருந்து வருகிறது என்பதையும் இந்த பகுதியில் சத்குரு விளக்குகிறார்.

கேள்வியாளர்: சத்குரு, தீவிரம் மற்றும் உக்கிரம் - இவற்றிற்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன?

சத்குரு:  தீவிரம் மற்றும் உக்கிரம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை கண்டுணர்வது மிகவும் கடினமானது. உங்கள் வீட்டை ஒளிர வைக்கும் நெருப்பு மற்றும் அதையே அழித்துவிடும் நெருப்பு - இரண்டுமே பார்ப்பதற்கு எந்த வித்தியாசமும் இல்லாதது போல தோன்றும். ஆனால் அவை முற்றிலும் வெவ்வேறானவை. உக்கிரமாக இருப்பது என்பது ஒரு அணுகுமுறை - தீவிரமாக இருப்பது என்பது உயிர் சார்ந்த தன்மை. உக்கிரம் என்பது உணர்ச்சி நிலையின் ஒரு குறிப்பிட்ட தீவிரத் தன்மை. இங்கே நாம் பார்க்க இருக்கும் 'தீவிரம்' என்பது உங்கள் உணர்ச்சி நிலையின் தீவிரத்தைப் பற்றி அல்ல, ஆனால் உங்களுக்குள் உள்ள உயிர்சக்தியின் தீவிரத்தைப் பற்றியே நாம் பேசுகிறோம். இவை இரண்டும் வெவ்வேறானவை. ஆனால் வெளியிலிருந்து கவனிப்பவருக்கு இவை இரண்டும் ஒன்றே என்று தோன்றக்கூடும்.

குளுமையான நெருப்பு எதனால் குறிப்பிடத்தக்க ஒன்றாகிறது

ஒருவர் மிகுந்த சாதனா புரிவதால் மட்டுமே தீவிரத்தை சம்பாதிக்க முடியும். தீவிரம் என்பது ஒரு குளுமையான நெருப்பு போன்றது. தீவிரமாக, அதேசமயம் குளுமையாக இருப்பதும் மிக முக்கியமானதாகிறது. உக்கிரம் என்பது தூண்டப்படுவதால் வரக்கூடும். ஆனால் தூண்டப்படுவதால் நீங்கள் தீவிரமாக மாறமுடியாது. வெறுமனே இங்கு அமர்ந்தபடி, ஒரு எரிமலையைப் போல கனல் வீசுவதற்கு உயிர்சக்தியில் குறிப்பிட்ட அளவு முதிர்ச்சி தேவைப்படுகிறது. தப்பிக்க முடியாத ஒரு சூழலுக்கு தள்ளப்படும் போது ஒரு சாதாரண பூனையால் கூட உக்கிரமாக மாற முடியும் - இங்கே நாம் ஒரு புலியை உதாரணம் காட்டி பேசவில்லை.

உயிர்சக்தியின் தீவிரத்தன்மை வாழ்க்கையை மேம்படுத்தும். உக்கிரத்தன்மை உங்களை ஓய்ந்து போகச்செய்யும். நீங்கள் தொடர்ந்து ஒரு பத்து நிமிடங்கள் கோபத்தில் இருந்தால் நீங்களே அதை காண்பீர்கள். ஏதோ ஒரு உக்கிரத்தை உங்களுக்குள் நீங்கள் உணர்ந்தால் அது உங்களை ஓயச் செய்யும். ஆனால் உயிர்சக்தியின் தீவிரம் அப்படிப்பட்டதல்ல. உங்கள் சக்தி தீவிரமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் எல்லா நேரமும் உயிர்ப்போடு இருப்பீர்கள். உணவு, உறக்கம் என எதுவும் உங்களுக்கு ஒரு பொருட்டாக இருக்காது. இந்த உயிர் மற்றும் ஆனந்தம் 24x7 சதாசர்வ காலமும் முழுமையாக இருக்கும். உக்கிரம் என்பது அவ்வாறல்ல. நீங்கள் தொடர்ந்து பத்து நிமிடங்கள் உக்கிரமாக இருந்தால் அது உங்களை அழித்துவிடும். ஏனெனில் உக்கிரம் என்பது உணர்ச்சியைப் பற்றியது, ஆனால் தீவிரம் என்பது உங்கள் உயிர்சக்தியைப் பற்றியது - அது முழுமையாக வேறு ஒரு பரிமாணத்தைச் சார்ந்தது.

தினசரி கிரியாக்கள் எவ்வாறு உங்கள் அடிப்படையான உயிர்சக்தியில் மாற்றம் ஏற்படுத்தும்

சக்தி சலன கிரியா அல்லது ஷாம்பவி மஹாமுத்ரா கிரியாவைப் பயிற்சி செய்ததும்... ஏதோ ஒருவிதமான தீவிரத்தன்மை சிறிது நேரம் இருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அப்போது நீங்கள் பெரிய அளவில் தீவிரமாக சக்தியூட்டப்பட்டு இருப்பீர்கள், அதே சமயம் மிகக் குளுமையாகவும் அமைதியாகவும் இருப்பீர்கள். நீங்கள் உங்கள் கிரியாவை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால், அது மெதுவாக வளர்ந்து வரும். சாதனாவின் முக்கியத்துவம் இதுதான். நீங்கள் அவ்வப்போது பயிற்சிக்கு இடைவெளி விட்டால், அதை உங்களுக்குள் வளர்க்க முடியாது. உங்கள் பயிற்சி தினசரி நடந்து வந்தால், சிறிது காலம் கழித்து திரும்பிப் பார்க்கும் போது, ஐந்து வருடங்களுக்கு முன்னர் நீங்கள் இருந்த விதத்தைப் பற்றி உங்களால் நம்பக்கூட முடியாது.

உயிர்சக்தியின் தீவிரத்தன்மை வாழ்க்கையை மேம்படுத்தும். உக்கிரத்தன்மை உங்களை ஓய்ந்து போகச்செய்யும்.

திடீரென முற்றிலும் வேறு ஒரு தளத்தில் வாழ்க்கை இயங்கிக் கொண்டிருக்கும். இது நீங்கள் மிகவும் மென்மையானவராக, அன்பானவராக மாறுவீர்கள் என்பது பற்றி அல்ல. உங்களுக்குள் இருக்கும் உயிர்த்தன்மை மிக அதிக அளவில் பெருகி இருக்கும். இதை வார்த்தைகளால் விவரிக்கவோ அல்லது வேறு ஒருவரால் அளவிடவோ முடியாது. உங்கள் அனுபவத்தில், உங்களுக்குள் நிகழும் உயிர்த்தன்மை முன்பிருந்ததை விட அதிகமாகி இருப்பதை உங்களால் தெளிவாக பார்க்க முடியும். இது மென்மையான ஓடை போல இருக்காது, ஆனால் ஒரு கர்ஜனையாக இருக்கும்.

வெள்ளியங்கிரியைப் போல மாறுங்கள்

ஒரு சிறு துளியைப் போல நீங்கள் வாழ்ந்து மடிவதை நான் விரும்பவில்லை. நீங்கள் ஒரு எரிமலையைப் போல சீறி வெடித்தெழ வேண்டும். வெளியிலிருந்து பார்ப்பவருக்கு ஒரு எரிமலை உக்கிரமானதாக தோன்றும், ஆனால் அது உக்கிரமானதல்ல. ஒரு எரிமலை என்பது எரிமலையாக இருப்பதற்கு காரணம், அது பூமியின் நடு மையத்தோடு தொடர்பில் இருப்பதால்தான். அதன் வெப்பம் உருவாக்கப்பட்டதல்ல, இயற்கையானது. ஒரு எரிமலையானது பல நூற்றாண்டுகள், பல்லாயிரமாண்டுகள் என நெடுங்காலம் கொதிநிலையில் இருக்கிறது. எப்போதாவது ஒருமுறைதான் அது சிறிதளவு வெளியே உமிழ்கிறது. அவ்வாறு அது வெடித்துக் கிளம்பும்போது அனைவரும் அதனால் பயன் அடைவார்கள். ஆனால் மக்கள்தொகை மிக அதிகமாக இருக்கும் காரணத்தினால் அது ஒரு பேரழிவைப் போல தோன்றுகிறது. ஆனால் அது அவ்வாறு அல்ல. எரிமலை உமிழும் சாம்பலால் இந்த உலகம் இன்னும் வளமாகிறது. ஒரு எரிமலை என்பது நல்ல விஷயம். அது ஒரு தனித்துவமான நிகழ்வு.

வெள்ளியங்கிரி மலைகள் எரிமலையின் தன்மை கொண்டவை, ஆனால் அவை இப்போது குளிர்ந்து விட்டன. அவை எந்த அளவு முதிர்ச்சியடைந்து விட்டன என்றால், இப்போது அவை எதையும் உமிழத் தேவையில்லை. வெள்ளியங்கிரி முற்றிலும் மாறுப்பட்ட விதத்தில் தன் சக்தியை வெளியிட்டு வருகிறது. அது இனிமேல் உமிழ வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில் தற்போது அது முழு கட்டுப்பாட்டில் உள்ளது. தூண்டப்படுவதால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உங்களுக்குள் உக்கிரம் வரலாம். யாரோ ஒருவர் உங்கள் விலா பகுதியில் லேசாக குத்தினாலே, நீங்கள் உக்கிரம் அடையலாம். அதற்கு பெரிதாக எதையும் செய்யத் தேவையில்லை, அது உயிரை சிதறடிக்கும் செயல்முறை. உயிரில் தீவிரத்தை சம்பாதிக்க ஒரு குறிப்பிட்ட காலம் தொடர்ந்து சாதனாவில் ஈடுபட வேண்டியிருக்கிறது. இது உயிரை மேம்படுத்தும் செயல்முறை.