சத்குரு, இயேசு கிறிஸ்துவின் மூன்று அடிப்படையான போதனைகளின் அர்த்தம் மற்றும் குறியீடு குறித்த ஆழமான விளக்கத்தை அளிக்கிறார்.
கேள்வியாளர்: இயேசு கிறிஸ்து ஒரு அப்பத்தை எடுத்து, பங்கிட்டு, தன் சீடர்களிடம் வழங்கி, "நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது," என்று கூறிய வார்த்தைகள் குறித்து எனக்கு எப்போதுமே குழப்பமாக இருக்கிறது. இது பற்றி உங்களின் கருத்து என்ன?
சத்குரு: அப்பத்தைப் பங்கிட்டு, "இது என் சரீரம்" என்று இயேசு கூறுகையில், அது யோகக் கலாச்சாரத்தின் மையக்கருவைப் பிரதிபலிக்கிறது - உங்கள் தகப்பனாரின் மரபணுக்கள் முழுவதுமாக அழிக்கப்பட வேண்டும். இந்த காரணத்தினால் தான் யோக அமைப்பு வளர்ந்தது, இத்தனை காலமும் உயிர்ப்போடும் துடிப்போடும் நிலைத்திருக்கிறது. நாம் அப்பத்தைத் துண்டிடுவதில்லை - நம்மிடம் அதற்கு வேறு வழிகள் உள்ளன. அடிப்படையான சக்தியை எவ்வாறு மாற்றுவது என்று நாம் பார்க்கிறோம்.
சூரிய கிரியா போன்ற எளிமையான யோகப் பயிற்சியாக இருந்தாலும்கூட, தினமும் பயிற்சி செய்யும்போது, ஆறு மாத காலத்தில் நீங்கள் முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதராக இருப்பீர்கள். உங்கள் சக்தியின் அடிப்படையில் மாற்றம் ஏற்பட்டதுமே, உங்கள் இரசாயனம், மூளை நரம்பியல் இணைப்பு மற்றும் மரபணுக்கள் தானாகவே மாற்றம் கொள்ளும். நீங்கள் மரபணுவில் இருந்து விலகி இருக்காவிட்டால், நீங்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி, பழைய சுழற்சிகளும் பாங்குகளும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்.
இது உங்களில் பலருக்கும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உங்களுக்கு 18 வயது இருக்கும்போது நீங்கள் ஒரு புரட்சியாளராக இருக்கின்றீர்கள். உங்கள் தாய் மற்றும் தந்தையை காணும்போது, "இல்லை, நான் இவர்களைப் போல ஆகப்போவதில்லை," என்று எண்ணிக்கொள்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு 45 வயது ஆகும்போது உங்கள் தாய் அல்லது தந்தையைப் போலவே நடப்பீர்கள், பேசுவீர்கள், செயல்படுவீர்கள். இதற்கு காரணம் உங்களின் சக்தி உடல் அந்த தகவலை தாங்கிக்கொண்டிருக்கிறது. அதில் அடிப்படையான மாற்றத்தை நாம் உருவாக்கினால், பின்னர் அந்த தகவல் செயல்படும் விதமே முற்றிலுமாக மாறிவிடும். நீங்கள் முற்றிலும் புதிதான ஒரு உயிராக உருவாக வேண்டும் என்று விரும்பினால், நீங்கள் சற்று இடைவெளி ஏற்படுத்த வேண்டும். ஒருமுறை இயேசு கிறிஸ்து போதனை வழங்கிக்கொண்டிருந்த போது அவரது தாயார் அங்கு வர, யாரோ ஒருவர் இயேசுவிடம், "உங்கள் தாயார் வந்திருக்கிறார்," என்று கூறினார். அதற்கு இயேசு, "யார் என் தாய்?" என்று கேட்டார். ஏனெனில் அவர் சில குறிப்பிட்ட பயிற்சிகளை செய்து கொண்டிருந்ததால் அவரது பெற்றோர் மற்றும் முன்னோர்களுடன் கர்ம பந்தமாக அவருக்கு ஏற்பட்டிருந்த மரபணுரீதியான கர்மா அகன்றுவிட்டது.
கேள்வியாளர்: ஒருவர் உனது ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று இயேசு கூறினார். இத்தகைய போதனை இன்றைய காலத்துக்கு பொருத்தமானதா?
சத்குரு: இது பொதுவான ஒரு போதனையல்ல. இயேசு தன் சீடர்களிடம் பேசும்போது இப்படி கூறியிருந்தார், "ஒருவர் உங்களை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள்." இதை உலகம் முழுவதற்கும் அவர் கூறவில்லை. அந்த மனிதர் வாழ்ந்த விதம், அவர் மற்றொரு கன்னத்தைக் காட்டக்கூடிய தன்மை கொண்டவரில்லை. கோவிலுக்குள் சென்ற அவர், அங்குள்ள வியாபார நிலையங்கள் அனைத்தையும் வெளியே தள்ளினார். "சரி, நீங்கள் இங்கே ஒரு கடை வைத்திருக்கிறீர்கள், அங்கே மற்றொரு கடையையும் வைத்துக்கொள்ளுங்கள்," என்று அவர் கூறவில்லை. அவ்வாறு கூறினாரா? வெறும் கைகளினாலேயே அந்த கடைகளை அவர் அடித்து நொறுக்கினார்.
அவர் தன் சீடர்களிடம் இப்படி கூறினார், "என்னுடைய நற்செய்தியை நீங்கள் எடுத்துச் செல்ல விரும்பினால், நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்: உங்களுக்குள் எந்த விதமான எதிர்ப்பும் இருக்கக்கூடாது. மக்கள் என்ன செய்தாலும், நீங்கள் உங்கள் பாதையில் இருந்து விலகக்கூடாது." ஏனெனில் இந்த கலாச்சாரங்களில் விவேகமான சொல்லாட்சி மிகுதியாக இருந்ததால் அனைத்துமே உட்பொருள் பொதிந்து, உவமையை வைத்தே கூறப்பட்டது. அவர் என்ன கூறுகிறார் என்றால், ஒருவர் உங்களை ஒரு கன்னத்தில் அறைகிறார் என்றால், நீங்கள் அவரை பதிலுக்கு அறைய முயற்சிக்கும் போது, அன்பு மற்றும் அமைதி என்ற உங்கள் பாதையில் இருந்து நீங்கள் விலகுகிறீர்கள். இயேசு, "நீங்கள் உங்கள் பாதையை கடைபிடியுங்கள், மற்றவர்கள் என்ன செய்தாலும் சரி," என்கிறார். வேறு வார்த்தைகளில் கூறினால், உங்கள் வாழ்க்கையை நீங்கள் நடத்த வேண்டுமானால், நீங்கள் எதிர்வினையாற்றக் கூடாது. எதிர்வினையாற்றினால் நீங்கள் வேறொருவருக்கு அடிமையாகிவிடுவீர்கள்.
கேள்வியாளர்: இயேசு, "உண்மையில் நான் கூறுகிறேன், நீங்கள் சிறு குழந்தைகளைப் போல மாறாவிட்டால், பரலோக ராஜ்ஜியத்தில் நீங்கள் நுழைய முடியாது" என்றார். இன்றைய உலகில் நாம் பெற்றுள்ள கல்வி அனைத்தையும் மீறி ஒரு குழந்தையைப் போல அப்பாவியாக நம்மால் எப்படி இருக்க முடியும்?
சத்குரு: கபடமற்று இருப்பது என்றால் அறியாமையில் இருப்பது என்று பொருள் இல்லை. உங்கள் அறியாமையை நீக்குவதற்காக தான் கல்வி கட்டமைக்கப்பட்டது, உங்களின் மாசற்ற அப்பாவித் தன்மையை நீக்குவதற்கு அல்ல. அப்பாவித்தனம் என்பதற்கான அர்த்தம் எதைப் பற்றியும் முன்கூட்டியே முடிவெடுக்காமல் இருப்பது தான். ஒரு குழந்தை ஓரளவுக்கு அப்படித்தான் இருக்கிறது, ஆனால் குழந்தைகளின் அப்பாவித்தனம் அவர்களின் அறியாமையில் இருந்து வருகிறது. வாழ்வின் எல்லா விதமான சிக்கல்களைப் பற்றி அறிந்திருந்த போதும், நீங்கள் அதற்கு அடிமையாகாமல் இருந்தால் அதுவே களங்கமற்று அப்பாவியாக இருப்பது.
இந்த உலகில் எந்த ஒரு மனிதரும் செய்யக்கூடிய எல்லாவிதமான களங்கமான செயல்கள் பற்றியும் நான் அறிவேன். மற்ற எவரைக் காட்டிலும் நான் அவற்றிற்கு மிகவும் திறந்த நிலையில் இருக்கிறேன், ஆனால் அவற்றில் நான் பங்கெடுப்பதில்லை. இது அப்பாவித்தனம், ஆனால் அறியாமை அல்ல. எவராலும் என்னை மடக்கி, அவர்களுக்காக என்னைப் பயன்படுத்திக்கொள்ள முடியாது. அப்பாவித்தனத்துக்கும் அறியாமைக்குமான இந்த வித்தியாசம் நிறுவப்பட வேண்டும். இல்லையெனில் அறியாமையில் இருப்பவர்கள் தங்களை அப்பாவிகள் என்று கூறிக்கொள்ள முடியும்.
அப்பாவியாக மாறுவது எப்படி? நீங்கள் யார் என்பதற்கும் நீங்கள் சேகரித்த விஷயங்களுக்கும் இடையே ஒரு இடைவெளியை உருவாக்கினால் மட்டுமே நீங்கள் உண்மையில் அப்பாவியாக இருப்பீர்கள். உங்கள் மனதுக்கும் உங்களுக்கும் இடையே சிறிது இடைவெளி இருந்தால், உங்கள் உடலுக்கும் உங்களுக்கும் இடையே சிறிது இடைவெளி இருந்தால், பின்னர் நீங்கள் அப்பாவிதான். உங்கள் வாழ்க்கை குறித்த அனைத்தையும் நான் அறிந்திருக்கக்கூடும்; நீங்கள் செய்யும் அனைத்தையும் நான் அறிந்திருக்கக்கூடும், ஆனாலும் ஒரு மனிதராக உங்களோடு என்னால் இருக்க முடியும்; என்னால் உங்களை அன்பு செய்ய முடியும், உங்களோடு நல்ல முறையில் பழக முடியும் - இதுவே அப்பாவித்தனம். ஏதோ ஒன்றை, வெறுமே அதை செய்வதால் கிடைக்கும் மகிழ்ச்சிக்காக செய்யும்போது, அதனால் நமக்கு என்ன கிடைக்கும் என்ற கணக்கீடு இல்லாதபோது - அதுவே அப்பாவித்தனமாகிறது. உங்கள் செயல் குறித்து எந்த எதிர்பார்ப்பும் உங்களுக்கு இல்லாதபோது அதுவே அப்பாவித்தனமாகிறது. என்ன செய்யத் தேவையோ அதை நீங்கள் வெறுமனே செய்யும்போது அதுவே அப்பாவித்தனமாகிறது. "எனக்கு என்ன கிடைக்கும்?" என்ற கேள்வியை நீங்கள் உதிர்க்கும்போது அதுவே அப்பாவித்தனமாகிறது. எவர் ஒருவர் அப்பாவியாக இருக்கிறாரோ, அவரே இறைவனின் ராஜ்ஜியத்தை அடையக்கூடியவராக இருப்பார்.