வாழ்வின் சூட்சுமங்கள்

ஒரு விஷமக்கார குழந்தை சிவனை அவர் வீட்டிலிருந்து வெளியேற்றும் தந்திரம் செய்ய, அவர் கேதார்நாத்தை பிரதிஷ்டை செய்கிறார்

சிவனும் பார்வதியும் பத்ரிநாத்தை விட்டு வெளியேறி, காந்த்திசரோவரில் ஏன் குடியேறினார்கள் என்பதையும், மேலும் எதற்காக அவர் கேதார்நாத்தைப் பிரதிஷ்டை செய்தார் என்பதையும் சத்குரு விவரிக்கிறார். மேலும் முதன்முதலாக யோகா நிகழ்ச்சி எவ்வாறு நிகழ்ந்தது, எதனால் மெய்மையான யோக அடிப்படைகள் ஒருபோதும் தொலைந்து போகாது என்றும் விவரிக்கிறார்.

சத்குரு:  சிவன் எப்படி கேதார் வந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா? அவர் கேதார் செல்லும் நிலையை ஏற்படுத்தினர். தற்போதைய பத்ரிநாத் பகுதியில்தான் சிவனும் பார்வதியும் வாழ்ந்து வந்தார்கள். அங்கு பல வெந்நீர் ஊற்றுகள் உள்ளன. எனவே இருவரும் அதில் நல்ல குளியலை முடித்துவிட்டு தங்களின் சிறிய குடிலுக்கு திரும்பினர். குடிலுக்கு உள்ளே மிக அழகான புன்னகையோடு ஒரு சிறு குழந்தை இருப்பதை கண்டார்கள். சிவன், "அதைத் தொடாதே" என்றார். ஆனால் பார்வதியின் தாய்மை உணர்வு மீற, "ஓ! நான் எப்போதும் விரும்பியபடியான குழந்தை எனக்கு கிடைத்துவிட்டது!" என்று கூறினார்.

அடுத்த நாள் அவர்கள் மீண்டும் குளிப்பதற்கு சென்றார்கள். அவர்கள் திரும்பி வந்தபோது அந்த குழந்தை தன்னை வீட்டுக்குள் வைத்து பூட்டிக் கொண்டிருந்தது. பார்வதியினால் அதை நம்பமுடியவில்லை. "இங்கு என்ன நடக்கிறது? சிறு குழந்தை எப்படி தன்னையே உள்ளே வைத்து பூட்டிக்கொள்ள முடியும்?" அவர்கள் வெளியிலிருந்து சத்தமாக குழந்தையை அழைத்தார்கள். "தயவுசெய்து கதவைத் திற! உள்ளே இருக்கும் நீ யார்?" பின்னர் அந்தக் குழந்தை பேசியது, "நீங்கள் வேறு இடத்தை பார்ப்பது நல்லது - இது என்னுடைய இடம்" என்றது.

சிவன் பார்வதியிடம், "நான் முன்பே கூறினேன் - மலை உச்சியில் தானாக வந்து சேர்ந்த குழந்தை ஒரு குழந்தையாக இருக்க முடியாது." பின்னர் 10,000 அடி உயரத்தில் இருந்த பத்ரிநாத்தை விட்டு வெளியேறி, இன்று கேதார்நாத் என்று அழைக்கப்படும் பகுதிக்கு அவர்கள் சென்றார்கள். அங்கே காந்த்திசரோவருக்கு அருகே குடியேறினார்கள் - இது சுமார்‌ 12,800 அடி உயரத்தில் உள்ளது.

ஒலி மற்றும் வடிவம் ஆகியவற்றிற்கு இடையே‌ உள்ள வடிவியல் ஒத்திசைவை வைத்துப் பார்க்கும்போது, கேதார்நாத் 'சிவா' என்ற ஒலிக்கு மிகவும் நெருக்கமானதாக உள்ளது.

ஆனால் அவரைத் தொடர்ந்து வந்த யோகிகளும் மற்றும் பிறரும் கேதார்நாத்தில் குடியேறினார்கள். அவர்கள் எல்லா நேரங்களிலும் காந்த்திசரோவர் வர வேண்டியிருந்ததால் சிவன், "என் சக்தியை நான் இங்கே பிரதிஷ்டை செய்கிறேன். அதனால் நீங்கள் எப்போதும் என் இருப்பை அங்கிருந்தபடியே  உணர்வீர்கள்," என்று கூறி கேதார்நாத்தை பிரதிஷ்டை செய்தார். இன்றும் கூட ஒலி மற்றும் வடிவம் ஆகியவற்றிற்கு இடையே‌ உள்ள வடிவியல் ஒத்திசைவை வைத்துப் பார்க்கும்போது, கேதார்நாத் 'சிவா' என்ற ஒலிக்கு மிகவும் நெருக்கமானதாக உள்ளது.

காந்த்திசரோவரில் சிவன், பார்வதி மற்றும் இன்று சப்தரிஷிகள் என்று போற்றப்படும் அவரின் சீடர்கள் குடியேறி யோக விரிவாக்கம், பயிற்சிகள் மற்றும் அதனோடு கூட நிகழ்ந்த பல சம்பவங்கள் என தங்கள் வாழ்வைத் தொடர்ந்தனர். எனவே காந்த்திசரோவர் என்ற இடத்தில்தான் முதன்முதலாக யோக நிகழ்ச்சி நிகழ்ந்தது. வார இறுதி நாட்களில் நிகழும் குறுகிய கால யோகா நிகழ்ச்சி அல்ல, பன்னெடுங்காலமாக தொடர்ந்து நிகழ்ந்த யோகா நிகழ்ச்சி.

பிரபஞ்சத்தின் முழுமை மற்றும் மனிதர்களுக்கு அதனுடன் இருக்கும் தொடர்பு ஆகியவற்றை சிவன் விரிவாக விவரித்தார் - அதை எவ்வாறு ஆராய்வது, அதற்கான பல வழிமுறைகள், மேலும் எவ்வாறு தனிமனிதர்கள் தங்கள் அனுபவ அடிப்படையில் பிரபஞ்சமாக உணர முடியும் என்பது பற்றி விவரித்தார். எனவே, ஒரு தனிமனிதர்  எல்லா காலத்திற்கும் பொருத்தமான உண்மையாக இருக்கும் நம் இருப்பின் தன்மையை உணர்வதற்கான இந்த முழுமையான செயல்முறையே யோகா என்று அழைக்கப்படுகிறது.

யோகாவை உங்களால் அழிக்க முடியாது. ஏனெனில் அது வாழும் உண்மை.

யோகா பல உருமாற்றம் மற்றும் திரிபுகளை கண்டுள்ளது - பிரபஞ்ச பரிமாணத்தை ஆராய்ந்து அதனோடு ஒத்திருக்கும் செயல்முறை முதல் உடலை வளைப்பது, திருகுவது என மீதமான நூடுல்ஸ் போல காட்சியளிப்பது என்று பல சிதைவுகளை கண்டுள்ளது. ஆனால் யோகாவை உங்களால் அழிக்க முடியாது. ஏனெனில் அது வாழும் உண்மை. ஒருவேளை ஒரு காலகட்டத்தில், யோகப் பாதையை தொடராமல் அனைவருமே கைவிட்டாலும், ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு ஒருவர் அதை மறுபடியும் பார்க்கத் துவங்கினால், அப்போதும் அது அங்கே இருக்கும்.

யோகா வேதத்தில் இல்லை. வேதம் அழிந்து போகக்கூடும். யோகா மனிதரின் நியாபகத்தில் இல்லை. அது அழிந்து போகக்கூடும். யோகா வாழும் உண்மை. உணர்தலில் குறிப்பிட்ட அளவிலான ஆர்வம், மீளுந்தன்மை மற்றும் விடாமுயற்சியோடு ஆராயும் போது அது புலப்படும், ஆனால் அது எப்போதும் அங்கு தான் இருக்கும். எனவே அதை முழுவதுமாக இழந்துவிடுவோம் என்ற பயம் இல்லை. ஆனால் பல தலைமுறை மக்கள் அதை இழந்துவிடுவார்கள்.

இந்த தலைமுறைக்கு மகத்தான ஒரு பொறுப்பு உள்ளது. முதன்முறையாக பூமியில் வாழும் மக்கள் அனைவருக்கும் பரிமாறக்கூடிய விதத்தில் நம்மிடம் கருவிகள் உள்ளன. அதேசமயம், அதே கருவிகள் தான் இதுவரை இல்லாத வகையில் மனிதர்களின் கவனச்சிதறலுக்கு காரணமாக இருக்கிறது.

இந்த கருவிகளை சரியான முறையில் உபயோகித்து, அவை ஒரு வாய்ப்பாக, கவனத்தை சிதறச் செய்யாதவையாக இருக்கும்படி செய்தால், அவை முன்னேற்றும் செயல்முறையாக மாறும். குழப்பமான சூழலுக்கு இட்டுச்செல்லாது - இதுவே இந்த தலைமுறையாக நமக்கு இருக்கும் பொறுப்பு.