விளம்பரப் பகுதி

நகைச்சுவையில் இருந்து நிலத்திற்கு... - ஒரு நடிகர் ஏன் இயற்கை விவசாயத்தை தேர்ந்தெடுத்தார்

இந்த கட்டுரையில், தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் ராஜேஷ் குமார் நதிகளை மீட்போம் மற்றும் காவேரி கூக்குரல் இயக்கங்கள் எவ்வாறு தன்னை இயற்கை விவசாயம் நோக்கி ஈர்த்தது என்பது குறித்தும், அதன் விளைவாக மண்வளம், நீர்வளம், விவசாயிகளின் நலம் மற்றும் நுகர்வோரின் நலம் ஆகியவை எவ்வாறு மேம்படுகிறது என்பது குறித்தும் விவரிக்கிறார்.

நகைச்சுவை நடிகர் ராஜேஷ் குமார் இந்தியத் தொலைக்காட்சியில் - குறிப்பாக இந்தியாவில் இந்தி மொழி பேசும் மாநிலங்களில் பிரபலமான ஒருவர். ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நகைச்சுவை நாடக தொடர் பா பஹு ஔர் பேபி-யில் சுபோத் தாக்கர் என்ற கதாபாத்திரம், மற்றும் ஸ்டார் ஒன் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சியான சாராபாய்  Vs சாராபாய்-ல் ரோசேஷ் சாராபாய் என்ற கதாபாத்திரம், மற்றும் அதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான சாராபாய் Vs சாராபாய் - டேக் 2 ஆகியவை அவர் நடித்த மிகப்பிரபலமான நகைச்சுவை கதாபாத்திரங்கள். ஆனால் அவரை சிறந்த முறையில் விவரிப்பது அவரின் இன்ஸ்டாகிராம் பதிவு தான் - "தொழில்முறையில் நடிகன், விரும்பி விவசாயி ஆனவன்."

2017-ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக நடந்த நதிகளை மீட்போம் இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் முக்கிய நகரங்களில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடந்த கூட்டங்களில் அவர் தாமாக முன்வந்து நிகழ்ச்சி தொகுப்பாளராக பங்கேற்றார். அந்த ஈடுபாடு அவரை நாட்டின் மண்வளம், நீர்வளம் மற்றும் விவசாயம் ஆகியவற்றை மீட்டு புத்துயிரூட்டும் பணியில் ஆழ்ந்த ஆர்வமும் தீரா விருப்பமும் கொள்ளச் செய்தது. அது அவரை மேரா ஃபேமிலி பார்மர் (என் குடும்ப விவசாயி) என்ற இயற்கை விவசாயம் குறித்த முன்னெடுப்பை மேற்கொள்ளச் செய்தது.

அதிர்ச்சியான உண்மை - மகத்தான நதி வற்றிப் போனபோது

ராஜேஷ் குமார்: ஒரு நடிகனாகவும் நகைச்சுவையாளனுமான எனக்கு மேடைகளில் நிகழ்ச்சிகளை வழங்குவது பயம் அளிப்பதில்லை; உண்மையில் அவை என்னை உற்சாகப்படுத்தும். செப்டம்பர், 2017-இல் நதிகளை மீட்போம் இயக்கத்துக்காக நடைபெற்ற பொது நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்ட போது நான் மிக உற்சாகம் அடைந்தேன். மூன்று பொது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பின்னர், நான் எனது சொந்த ஊரான பீகாரில் உள்ள பர்மாவுக்கு பயணம் செய்தேன்.

என் வீட்டுக்கு அருகாமையில் இருந்த ஒரு வறண்டு போன நிலப்பகுதியில் நான் நின்றிருந்தேன். அங்குதான் பத்து வருடங்களுக்கு முன்னர் வரையிலும் ஃபால்கு நதி தன் முழு மகிமையோடு பாய்ந்து கொண்டிருந்தது. அந்த நதியின் கரைகளில், அங்கு வளர்ந்திருந்த அடர்ந்த வனப்பான பசுமை நிறைந்த பகுதிகளில் நான் வாழ்ந்த நாட்கள் இன்னும் எனக்கு பசுமையாக  நினைவில் உள்ளது. ஆனால் கடந்த பத்து வருடங்களுக்குள்ளாக இந்த மகத்தான, வற்றாத ஜீவநதி முற்றிலுமாக வற்றி, இந்த நிலப்பரப்பே தாகத்திலும், வறண்டும் காட்சியளிக்கின்றது.

துன்பகரமான இந்த காட்சியனுபவம் எனக்குள் ஏதோ ஒன்றை உலுக்கியது. சத்குருவின் வார்த்தைகள் என் மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தன, "உங்கள் மனதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும் - தீர்வின் பாகமாக இருப்பீர்களா அல்லது பிரச்சனையின் பாகமாக இருக்கப் போகிறீர்களா?" அது என்னை சிந்திக்க வைத்தது. "அரசாங்கத்தையோ சமூகத்தையோ குறை சொல்வதில் என்ன பலன்? அல்லது தீர்வுகளைப் பற்றி வெறுமனே விவாதித்துக் கொண்டிருப்பதில் என்ன பலன்?" உடனடியாக நான் என் மனதில் ஒரு தீர்மானம் மேற்கொண்டேன், தீர்வின் பக்கம் நின்றேன் - நதிகளை மீட்போம் இயக்கத்துடன் என்னை இணைத்துக் கொண்டு களம் இறங்கினேன்.

ஒரு நதியை புனரமைப்பது என்பது எளிதில் நடந்துவிடக்கூடிய காரியமல்ல என்று எனக்கு தெரியும். ஒரு ஒட்டுமொத்த தலைமுறையும் உறுதியுடனும், அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து முயற்சிகள் எடுக்க வேண்டிய தேவையுள்ளது. ஆனால் அதற்கான முதற்படியை யாராவது ஒருவர் எடுக்காவிட்டால், அந்த தீர்வை நோக்கி நாம் முன்னே செல்லமாட்டோம் என்பதும் எனக்கு தெரிந்திருந்தது. அந்த தீர்வு பலனளிக்க பல வருடங்கள், ஏன் சகாப்தங்களைக் கூட எடுக்கக்கூடும்.

அதை சாத்தியமாக்கும் தீர்வுகள் குறித்து நான் ஆராய்ந்து கொண்டிருந்தபோது, சத்குருவின் நுண்ணறிவு மறுபடியும் எனக்கு உதவியது. அதை சாத்தியமாக்கும் தீர்வானது, சுற்றுச்சூழலையும் பொருளாதாரத்தையும் இணைக்கும் விதமாக உருவாக்கினால் தான் பலனளிக்கும் என்று அவர் பலமுறை கூறியிருந்தது என் நினைவுக்கு வந்தது. அவ்வாறு செய்யாவிட்டால் பொருளாதார நோக்கம் சுற்றுச்சூழலை எளிதாக வெற்றி பெற்றுவிடும். இதுவே என்னை மேரா பேமிலி ஃபார்மர் (என் குடும்ப விவசாயி) என்ற முன்னெடுப்பை மேற்கொள்ள செய்தது.

மீண்டும் வேர்களை நோக்கி - எவ்வாறு ஒரு மாதிரி பண்ணையை உருவாக்கினோம்

பீகாரில் இருந்த எங்கள் குடும்பத்தின் 17 ஏக்கர் நிலத்தில் மாதிரி பண்ணை ஒன்றை உருவாக்கும் முதல் திட்டத்தை நாங்கள் துவக்கினோம். முதல் இரண்டு வருடங்களில், நாங்கள் 500 எலுமிச்சை மரங்கள், 2000 கொய்யா மரங்கள், 800 பப்பாளி மரங்கள், மாங்காய் மரங்கள் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை பயிரிட்டோம். மேலும் சொட்டு நீர் பாசனத்தின் மூலம் குறைவான தண்ணீர் பயன்பாட்டை உறுதி செய்தோம்.

இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் விவசாயிகளுக்கு சுற்றுச்சூழல் ரீதியாக மட்டுமின்றி, பொருளாதார ரீதியாகவும் பலனளிக்கும் முன்னுதாரணமாக விளங்க இந்த திட்டத்தை நாங்கள் முன்னெடுத்தோம். மேலும், மின்சாரப் பயன்பாட்டையும் நாங்கள் முறைப்படுத்தியுள்ளோம். இரண்டு வருடங்களுக்குள்ளாகவே இந்தப் பண்ணை கணிசமான வருவாயை ஈட்டி தன்னைத் தானே தக்க வைத்துக் கொள்ளும் பொருளாதார நிலையை அடைந்துள்ளது. இது எங்களுக்கு மட்டுமல்ல, எங்கள் பண்ணைக்கு அருகாமையில் உள்ள விவசாயிகளுக்கும் பெரும் ஊக்கத்தை அளித்தது.

இயற்கை விவசாயம் - எல்லா நிலைகளிலும் சாத்தியமாகும் ஒரு தீர்வு

இன்று மக்கள் பலருக்கும் குடும்ப வக்கீல், குடும்ப அக்கௌன்டன்ட், குடும்ப மருத்துவர் என்று வைத்துள்ளனர். அதே விதமாக, நாம் நமது குடும்ப விவசாயியை ஏற்படுத்திக்கொள்ள இதுவே சரியான தருணம் என்று நினைத்தேன். பல சோதனைகள், முயற்சிகள், அவை வழங்கிய வெற்றி தோல்விகள் என சுழன்றோம். விடாமுற்சியுடன் திட்டத்தை மெருகேற்றி, மறு வடிவமைப்பு செய்த பின்னர் நாங்கள் 'என் குடும்ப விவசாயி' என்ற திட்டத்தை முடிவு செய்தோம். இத்தகைய திட்டம் இந்தியாவில் இதுவே முதல் முறை.

இது விவசாயிகளுக்கான சந்தா முறையிலான திட்டம். அவர்கள் இயற்கை விவசாயம் மூலம் விளைவித்த காய்கறிகள் மற்றும் பழங்களை நேரடியாக சந்தாதாரர்களுக்கு ஒவ்வொரு வாரமும் வழங்குவார்கள். மும்பைக்கு அருகில் உள்ள கிராமங்களில் இருக்கும் விவசாயிகளோடு இணைந்து நாங்கள் இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். நாங்கள் இயற்கை விவசாய வழிமுறைகளை மட்டுமே கடைபிடிக்கிறோம். சுபாஷ் பாலேக்கர் மற்றும் சி.வி.ரெட்டி அவர்கள் அறிவுறுத்தியுள்ள இயற்கை விவசாய முறைகளை மட்டுமே நாங்கள் பின்பற்றுகிறோம். இந்திய விவசாயத் துறையில் நிகழ்த்திய புதுமையான செயல்பாடுகளுக்காக திரு.பாலேக்கர் மற்றும் திரு.ரெட்டி இருவரும் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளனர்.

இயற்கை விவசாய முறையில், உயிரின உரங்கள் மற்றும் உயிரினப் பூச்சிக்கொல்லிகளை உபயோகிக்கிறார்கள். ஆனால் நாம் இவை எதையும் உபயோகிப்பதில்லை. அதற்கு பதிலாக, பூஞ்சை எதிர்ப்பு, பூச்சிக்கொல்லி தன்மை கொண்ட இலைகள் மற்றும் மரக்கழிவுகளை நாங்கள் உபயோகிக்கிறோம். உதாரணமாக செடிகளின் மீது மோரை தெளிப்பதன் மூலம் பூஞ்சையை அவைகள் வெல்கின்றன. கூடுதல் நன்மையாக, பழங்கள், மலர்கள் மற்றும் இலைகள் முழு வளர்ச்சி பெறுகிறது. வேப்பிலை மற்றும் வேப்பமரப் பட்டை ஆகியவற்றையும் நாங்கள் பூச்சிக்கொல்லியாக உபயோகிக்கிறோம்.

மும்பைக்கு அருகில் உள்ள பால்கர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஞானேஸ்வர் கூறுகிறார், "என்னுடைய தாத்தா இயற்கை விவசாயம் தான் செய்து வந்தார். ஆனால் என் தந்தை இரசாயன விவசாயத்திற்கு மாறினார். இதனால் ஒட்டுமொத்த சாகுபடி மற்றும் லாபம் குறைந்துவிட்டது. நான் சுபாஷ் பாலேக்கரின் இயற்கை விவசாய முறையை தேர்ந்தெடுத்ததன் மூலம் எங்களுடைய விவசாயம் தற்சார்புடையதாய், லாபம் ஈட்டும் தொழிலாகவும் மாறிவிட்டது. ஒன்று அல்லது இரண்டு பயிர்கள் பொய்த்தாலும் அதனால் எங்களுக்கு பாதிப்பில்லை. ஏனெனில் நாங்கள் பயிரிட்டுள்ள மற்ற பயிர்கள் மூலம் கணிசமான லாபம் கிடைக்கிறது."

எங்களுக்கான மிகப்பெரிய அங்கீகாரம், எங்களது வாடிக்கையாளர்கள் அளிக்கும் வரவேற்பும், தொடர்ந்து அதிகரித்து வரும் அவர்களின் எண்ணிக்கையும் தான். என் குடும்ப விவசாயி வாடிக்கையாளர்கள் தற்போது அதிகளவில் காய்கறிகளை உண்ணத் தொடங்கியுள்ளதாக பகிர்ந்து கொள்கிறார்கள்.  நாள் முழுவதும் அவர்களது  சக்தி நிலையில் நிகழ்ந்துள்ள வரவேற்கத்தகுந்த மாற்றத்தையும் அவர்கள் உணர்கிறார்கள். "காய்கறிகளை சமைக்க இப்போது குறைந்த நேரம் தான் எடுக்கிறது. மேலும், உணுவானது ஊட்டச்சத்தோடு உள்ளது. காய்கறிகளும் பழங்களும் மிகச்சுவையாக இருக்கிறது. கடைகளில் இவற்றை வாங்கியபோது நாங்கள் இந்த சுவையை உணர்ந்ததில்லை," என்று மும்பையைச் சேர்ந்த ஒரு இல்லத்தரசி பகிர்ந்து கொண்டார்.

சமீபத்தில் நாசிக்கை சேர்ந்த விவசாயிகளும் மும்பை குடும்பங்களுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் வழங்க எங்களோடு இணைந்துள்ளனர்.

என் குடும்ப விவசாயி - அனைவருக்கும் வெற்றி

ஒவ்வொரு வாரமும், நாங்கள் சாகுபடி செய்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளின் பட்டியலை எங்கள் வாடிக்கையாளர்களோடு நாங்கள் பகிர்வோம். அவர்களின் தேர்வின்படி, அந்த வாரத்துக்கான 10-12 கிலோ பழங்கள் மற்றும் காய்கறிகளை நாங்களே நேரடியாக எடுததுச் சென்று விநியோகம் செய்கிறோம்.

"முன்பு, எங்கள் உற்பத்தியை விற்பனை செய்ய நல்ல வாடிக்கையாளர்களை அணுக முடியவில்லை. விரைவாக அழுகக்கூடிய பொருட்களான பழங்கள் மற்றும் காய்கறிகளை குறைந்த, கிடைத்த விலைக்கு விற்க வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம். ஆனால் 'என் குடும்ப விவசாயி' அமைப்பின் காரணமாக மும்பை வாடிக்கையாளர்களோடு எங்களுக்கு நேரடி தொடர்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் எங்கள் லாபமும் அதிகரித்துள்ளது," என்று நாசிக்கை சேர்ந்த விவசாயி ஹிதேஷ் படேல் கூறுகிறார்.

எங்கள் உற்பத்தியின் தரம் மற்றும் ஊட்டச்சத்து பற்றிய உறுதியே எங்கள் வாடிக்கையாளர்களை எங்களோடு தொடர்ந்து இருக்க வைக்கிறது. அவர்கள் செலவளிக்கும் பணத்துக்குரிய சரியான மதிப்பு அவர்களுக்கு கிடைக்கிறது. இரசாயனம் இல்லாத விவசாயத்தில் இருக்கும் வித்தியாசத்தை அனைவரையும் உணர வைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.  

விழிப்புணர்வுள்ள ஆயிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உண்மையில் விவசாயிகளுக்கு உதவ விரும்புகின்றனர். பொதுமக்களின் நலனுக்காக, இந்திய விவசாயிகளின் நல்வாழ்விற்காக பங்களிக்க பல இந்தியர்கள் உறுதியோடு இருக்கிறார்கள். கிராமங்களைத் தத்தெடுக்கக்கூட அவர்கள் விரும்புகின்றனர். 'என் குடும்ப விவசாயி' போன்ற திட்டங்கள் அத்தகைய வாய்ப்பை வழங்குகிறது.

வழக்கமான நெல், கோதுமை விவசாயத்திலிருந்து விலக விவசாயிகள் தயங்குவதற்கான காரணம், அவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அந்த பயிர்களில் கிடைக்கிறது. விவசாயிகளின் உற்பத்தி மற்றும் உழைப்புக்கு ஏற்ற நியாயமான விலை உத்தரவாதம் அவர்களுக்கு கிடைத்தால் மட்டுமே அவர்களுக்கு மரப்பயிர் விவசாயம் செய்யும் நம்பிக்கை வரும், அதன் மூலம் அதிக வருவாயும் அவர்கள் ஈட்ட முடியும். விவசாயிகள் மற்றும் விவசாயப் பண்ணைகளைச் சந்தா முறை மூலமாக குடும்பங்கள் தத்தெடுக்க நாங்கள் முயற்சிப்பதற்கான காரணம், மண், நீர், விவசாயிகள் மற்றும் நுகர்வோர் என அனைவருக்கும் பலனளிக்கும் தற்சார்பு திட்டமாக இது இருக்கிறது என்பதுதான்.

மேலும் அதிக தகவலுக்கு: www.merafamilyfarmer.com

தொலைபேசி: 9820120591, 9821035180