புராஜெக்ட் சம்ஸ்கிருதி

புராஜெக்ட் சம்ஸ்கிருதி: மக்களைத் தேடி வரும் ஈஷா சம்ஸ்கிருதி

பகுதி 1: நிர்வாண ஷடகம் கற்பித்தலின் பின்புல முனைப்புகள்

ஐந்து பகுதிகள் அடங்கிய இந்தத் தொடரில், சம்ஸ்கிருதி திட்டத்தின் பின்புலத்தில் நிகழும் முனைப்பான செயல்பாடுகளை, ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களின் பார்வையில் உங்களுக்கு வழங்குகிறோம்

20 வருடங்களாக பட்டை தீட்டப்படும் ஒரு திட்டம்

ஈஷா யோகா மையத்தில் உள்ள ஈஷா சம்ஸ்கிருதி வளாகத்தின் 200 – 300 மீட்டர் சுற்றுக்குள் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், நடனமாடும் பாதங்களின் தாள அதிர்வு, சிறுமணிகளாய் சிதறும் சிரிப்புகள், மந்திர உச்சாடனங்கள், கர்நாடக இசை, ராகங்கள் மற்றும் பாடல்கள் மென்மையாக உங்கள் செவிப்பறைகளில் உரசிச் செல்வதை உங்களால் தவறவிட முடியாது. கடந்த ஆறு மாதங்களாக, இதனுடன் புதிதாய் ஒரு உற்சாகத் துள்ளலும் ஈஷா சம்ஸ்கிருதி வளாகக் காற்றில் கலந்துள்ளது.

சத்சங்கங்களிலும், பொது வெளிகளிலும் மற்றும் தனிப்பட்ட சந்திப்புகளிலும், இந்திய பாரம்பரிய கலைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதைப் பற்றி சத்குரு பேசியுள்ளார். 20 வருடங்களுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்தாலும், சமீபத்தில் 2021 குரு பௌர்ணமி திருநாள் அன்று புராஜெக்ட் சம்ஸ்கிருதி திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

எளிமையாகக் கூறுவதென்றால், புராஜெக்ட் சம்ஸ்கிருதி திட்டமானது, நுட்பமான இந்திய பாரம்பரிய கலைகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு வழங்கும் ஒரு முயற்சியாக இருக்கிறது. இதன் மூலமாக, இலட்சக்கணக்கானவர்களின் வாழ்வை மெல்லமெல்ல மாற்றத்துக்கு உட்படுத்தும் ஒரு சாத்தியம் ஏற்படுகிறது. அந்த அடிப்படையில், 39 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பித்த, தன்னை உணர்தலுக்கான அமைதிப் புரட்சியின் மற்றுமொரு இழையாக புராஜெக்ட் சம்ஸ்கிருதி விளங்குகிறது.

அரியதொரு தனிச்சிறப்பு

தற்போது 24 வயதாகும் சம்ஸ்கிருதியின் முன்னாள் மாணவரான ஆதர்ஷ் கிரண், பல விஷயங்களிலும் தன்னை பேறு பெற்றவராகக் கருதுகிறார். 1996ம் ஆண்டு, அவர் 1 வயது குழந்தையாக ஆசிரமத்திற்கு வருகை தந்தபோது சத்குருவுடனான அவரது முதல் சந்திப்பு நேர்ந்தது. அவருக்கு 7 வயதாக இருந்தபோது, அவரது தாய் முழுநேர தன்னார்வலராக ஆசிரமம் வந்தார். 1999-ல் தியானலிங்க வளாக கட்டுமானத்திற்கான செங்கற்களை அளவெடுக்கும் செயலில் குழந்தையான ஆதர்ஷ் ஈடுபட்டது இப்போதும் அவரது தாயின் நினைவில் பசுமையாக இருக்கிறது. இப்போது வாலிப வயதில், இளைஞராக, தீவிரமான யோகா மற்றும் களரிப்பயட்டு பயிற்சி செய்பவராக சமநிலையுடன், நிச்சலனமாக அமர்ந்தபடி, சத்குரு எப்பொழுதும் அவரை எப்படி “ஹேய்!” என்றே அழைப்பார் என்பதை நினைவுகூர்கிறார் ஆதர்ஷ். “இன்றைக்கும்கூட அவர் அதே பரிவுடன் என்னுடன் பேசுகிறார்,” என பகிர்ந்து கொள்கிறார் ஆதர்ஷ்.

ஆதர்ஷ், 2005 ஆம் வருடத்திய ஈஷா ஹோம் ஸ்கூலின் முதல் பாட்ச் மாணவர்களுள் ஒருவர்.  2008 ஆம் வருடத்தில் சத்குருவினால் ஈஷா சம்ஸ்கிருதி அறிவிக்கப்பட்டபொழுது, மற்ற பலரையும் போலவே அவரது பெற்றோரும் தங்கள் குழந்தையை ஈஷா ஹோம் ஸ்கூலில் இருந்து ஈஷா சம்ஸ்கிருதிக்கு மாற்ற ஆர்வம் கொண்டனர். ஆறு மணி நேரம் தொடர்ந்த அவரது தாயின் சமாதானத்துக்குப் பிறகு, ஆதர்ஷ் மற்ற 13 பேருடன் ஈஷா சம்ஸ்கிருதியில் இணைய சம்மதித்தார். “அன்றிலிருந்து, தடையற்ற முன்னேற்றம்தான் இருந்து வந்துள்ளது,” என்கிறார் ஆதர்ஷ். ஈஷா சம்ஸ்கிருதியின் முதல் 14 பால பிரம்மச்சாரிகளுள் இவரும் ஒருவர் என்பதுடன், இன்றைக்கு ஈஷா ஹடயோகா ஆசிரியர்களுள் மிக இளவயது ஆசிரியரும் இவரே. “கடந்த இருபது வருடங்களில் சம்ஸ்கிருதியில் நாங்கள் உள்வாங்கியதை வழங்கவும், வெளிப்படுத்தவும் புராஜெக்ட் சம்ஸ்கிருதி திட்டத்தைக் காட்டிலும் வேறொரு சிறந்த களத்தை எங்களால் நினைத்துப் பார்க்க முடியவில்லை” என்றபடியே, புராஜெக்ட் சம்ஸ்கிருதி பற்றிய தன் பார்வையை வெளிப்படுத்தத் துவங்கினார் ஆதர்ஷ். உலகிற்கு சம்ஸ்கிருதி திட்டத்தின் முதல் அர்ப்பணிப்பான, நிர்வாண ஷடகம் கற்பித்தல் தொகுதி சமீபத்தில் நிறைவடைந்ததைப் பற்றி அவர் மேற்கொண்டு விவரிக்கிறார்.

பல 'முதல்'களை சேகரித்திருக்கும் ஆதர்ஷ், “புராஜெக்ட் சம்ஸ்கிருதியின் ஆரம்பம் முதலே, அதன் ஒரு பாகமாக இருக்கும் பேறும் இப்பொழுது எனக்கு இருக்கிறது,” என புன்னகைக்கிறார். 7 கண்டங்களைச் சேர்ந்த, 50 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, 800 க்கும் அதிகமான பங்கேற்பாளர்களுக்கு, நிர்வாண ஷடகம் உச்சாடனம் கற்பித்தலை சமீபத்தில் நிறைவு செய்த 14 அங்கத்தினர் குழுவின் ஒரு பாகமாக ஆதர்ஷ் இருந்ததை, அவரது முதன்மைகளில் இன்னொன்றாகப் பட்டியலிடுகிறார்.

சக்திமிக்க நிர்வாண ஷடகம் கற்பிக்கையில் வரும் சவால்கள்

ஆதிசங்கரர் பொது யுகம் 8 ஆம் நூற்றாண்டில் இயற்றிய நிர்வாண ஷடகத்தின் ஆறு சமஸ்கிருத பத்திகள் ஒரு ஆன்மீக சாதகரின் விருப்பத்தை வீரியத்துடன் வெளிப்படுத்துவதாக உள்ளது. விழிப்புணர்வு மற்றும் பரவசத்தின் ஒரு வடிவமாகவே ஆகிவிடும், அல்லது வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், சிவனுடனே ஒன்றிவிடும் பேராவலை அது விவரிக்கிறது. நிர்வாண ஷடகத்தின் ஆற்றல் அதன் அர்த்தத்தில் (ஆழமானதாக இருந்தாலும்கூட) இல்லை. அதனுடைய உச்சரிப்பு உருவாக்கும் அதிர்வில்தான் இருக்கிறது.

பல்வேறு மொழிகள் மற்றும் பின்புலங்களைச் சேர்ந்த, 50 க்கும் மேற்பட்ட நாடுகளின் பங்கேற்பாளர்களுக்கு சமஸ்கிருத பாடல்களைக் கற்றுக்கொடுப்பதே, புராஜெக்ட் சம்ஸ்கிருதி குழுவினர் முன்பு மிகப்பெரும் சவாலாக இருந்தது, ஆனால் அயராமல், அதை அவர்கள் நேரே சந்தித்தனர். பங்கேற்பாளர்களுக்கு, உச்சாடனையில் திருத்தங்கள் செய்வதற்கான ஒரு உறுதுணையான அமைப்பை உருவாக்கும் பொருட்டு, வெவ்வேறு நகரங்களிலிருந்து தன்னார்வலர்கள் குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டது. மற்ற தன்னார்வலர்களின் உச்சாடனைகளை திருத்த, தினமும் ஒரு மணி நேரம் என‌ ஒரு மாத கால தீவிரமான பயிற்சி அவர்களுக்கு் தேவைப்பட்டது என்று திருத்துபவர்களின் தலைமைப் பொறுப்பாளர் கூறுகிறார். “எனது கூருணர்வு மற்றும் முனைப்பை அது பெரிதும் மேம்படுத்தியது. இது ஒலிகளுக்கு மட்டுமல்ல, எனது சாதனா மற்றும் பெரிதும் சிறிதுமான எனது எல்லா செயல்பாடுகளுக்கும் இது பொருந்தும்,” என்று செயல்முறை குறித்து மேலும் அவர் பகிர்ந்து கொள்கிறார்.

புராஜெக்ட் சம்ஸ்கிருதி திட்டத்தின் முதல் கட்டம் முழுக்க முழுக்க ஆன்லைனில் வழங்கப்பட்டதால், சுவாரஸ்யமும், கவனத்தை ஈர்க்கக்கூடியதுமான விஷயங்களை உருவாக்குவது, மற்றொரு பெரும் சவாலாக இருந்தது. ஈஷா ஆவணக்காப்பகம் மற்றும் இணையத்தை அலசி ஆராய்ந்து, கதைகளையும், காணொளிகளுக்கான ஆர்வமூட்டும் நிகழ்வுகளையும் தேடிக் கண்டெடுத்து வழங்கிய தன்னார்வலர் சித்தார்த் சாச்சாரியா, இந்த மெகா திட்டத்துக்கான பணியில் அவர் உணர்ந்த உற்சாகத்தைப் பற்றி் பகிர்ந்துகொள்கிறார். “அனைவரும் எளிதாக தொடர்பு படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக, விளக்கமான காணொளிகளோடு வகுப்பை ஆர்வமூட்டும் ஒன்றாக உருவாக்க விரும்பினோம். தொழில்நுட்பங்கள், அழகியல்கள், உரைகள் மற்றும் பொருத்தமான உள்ளடக்கங்கள் என்று ஒவ்வொரு அம்சத்துக்குள்ளும் நாங்கள் ஆழமாக மூழ்கி இதை வடிவமைக்க முயற்சித்தோம்.”

பங்கேற்பாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஏழு சுவாரஸ்யம் ததும்பும் காணொளிகளை தயார் செய்வதற்காக சளைக்காமல் தொடர்ந்து செயல்பட்ட சித்தார்த், சம்ஸ்கிருதி மாணவர்களுக்கு என்று பிரத்யேகமாக புகழாரம் சூட்டுகிறார், “பயிற்சிக்கு அவர்கள் தங்களை முழுமையாக அளிப்பதைப் பார்ப்பதும், வகுப்புகளை அவர்கள் நடத்துவதைப் பார்ப்பதும் உற்சாகமளிப்பதாக இருந்தது. இவ்வளவு கூர்மையான படைப்புத்திறனும், சுறுசுறுப்பும், ஆர்வமும் பிரவாகமாகப் பொங்கும் இளம் மக்கள் குழுவுடன் பணி செய்வதை நான் பெரும்பேறாக உணர்கிறேன்.”

மூன்றாவது பெரிய சவால், நேருக்கு நேர் பார்வையாளர்களைப் பார்த்து உரையாடும் பழக்கத்திலிருந்து, மணிக்கணக்காக ஜடப்பொருளான கேமரா லென்ஸைப் பார்த்து உயிர்ப்போடு பேச கற்றுக்கொள்வது. “ஆரம்பத்தில் நான் என்னைப்பற்றி மிகவும் கவனத்துடன் இருந்தேன், ஆனால் வகுப்பு முடியும் தருவாயில், பங்கேற்பாளர்களை நான் வெகுகாலம் அறிந்திருந்ததைப்போல ஒரு உணர்வு ஏற்பட்டிருந்தது. நான் அவர்களது முகங்களைக்கூடப் பார்க்கவில்லை, ஆனால் அவர்களை ஏதோ தனிப்பட்டமுறையில் நான் அறிந்திருப்பதைப் போன்ற உணர்வு இருக்கிறது. உலகத்துக்கே ஒரு தாயாக இருப்பதன் ஒட்டுமொத்த அம்சமும் எனக்குள் அடிநாதமாக ஓடிக்கொண்டே இருந்ததுடன், நிர்வாண ஷடகம் வகுப்பு குறித்த என் முழு பார்வையும் முற்றிலுமாக மாறியது. "நான் அங்கே அமர்ந்திருந்த பொழுது, அது நான்தான் என்பதையே நான் உணரவில்லை. வார்த்தைகள் பிரவாகமாக வந்து விழ, அந்த அனுபவம் என்னை நெகிழ வைத்துவிட்டது,” என்றபடியே, மீண்டும் அந்தக் கணங்களில் இலயிக்கிறார் ஆதர்ஷ்.

சம்ஸ்கிருதி வழங்கும் கடுமையான பயிற்சி

மற்ற பல ஆசிரியர்களைப்போலவே, ஆதர்ஷுக்கும் இதை நம்புவது சற்று கடினமாகத்தான் இருக்கிறது. அதாவது ஒரு சில வருடங்களுக்கு முன்பு, சுவாமி அதிரூபாவின் பின்னாலேயே வாத்துக் குஞ்சுகளைப்போல இவர்கள் சுற்றி வருவார்கள், அல்லது ஆசிரமத்துக்கு அருகில் இருக்கும் ஒரு சிற்றோடையில் அமர்ந்தபடி, நிர்வாண ஷடகத்தை இடைவிடாமல் உச்சாடனம் செய்துகொண்டு இருப்பார்கள் – இவர்கள் இன்றைக்கு, அதையே உலகெங்கும் உள்ள மக்களுக்குப் பயிற்றுவித்துக்கொண்டு இருக்கின்றனர்.

“பொதுமக்களுக்கு என்று வடிவமைக்கப்பட்ட ஒரு தொகுதியை நாங்கள் கற்றுக்கொடுப்பதால், அதைச் செய்வதற்கான ஒரு குறிப்பிட்ட முறை எங்களுக்கு உண்டு. ஒவ்வொரு வார்த்தையின் அளவும் நிர்ணயிக்கப்படுகிறது என்பதுடன், எப்படி் பேசுவது, எப்படி அதை சுவாரஸ்யமாக்குவது என்பதில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம்,” என்று தமது கற்பித்தல் அனுபவம் பற்றி மேலும் பகிர்ந்து கொள்கிறார்.

நிர்வாண ஷடகம் தொகுதியை வழங்கும் பெரும்பாலான ஆசிரியர்கள், பால பிரம்மச்சாரிகளாக ( ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் 15 வது வயதில் அளிக்கப்படும் 30 மாத துறவுக்காலம்), 18 வயதுக்கும் குறைவானவர்களாக இருப்பவர்கள். மேலும் பொதுமேடையில் இதுவரை  பேசிய முன்அனுபவமும் இல்லாதவர்கள். இருப்பினும், அவர்களைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு வயதுடைய பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர். “பாலபிரம்மச்சாரிகள் தங்களை வழி நடத்திக்கொண்டு, தங்களது செயலில் மேம்பட்டு நிற்பதைக் கண்டபிறகு, வழக்கமாக அவர்களிடம் விளையாட்டாக கேலிபேசும் நான், அவர்களுக்குத் தலைவணங்கும் ஒரு நபராக மாற்றமடைந்துள்ளேன்,” என்று மனம் திறக்கிறார் ஆதர்ஷ்.

புராஜெக்ட் சம்ஸ்கிருதி திட்டத்தின் ஒவ்வொரு படியையும், அதன் மாணவர்களும், முன்னாள் மாணவர்களும் வழிநடத்தி, நிர்வகித்து எடுத்துச் செல்வது அதன் குறிப்பிடத்தக்க பகுதியாக இருக்கிறது.

பக்தியில் நனைந்தேன்

“சம்ஸ்கிருதியில் நாங்கள் ஈடுபடும் அனைத்திலும் பக்தியின் அம்சம் பூரணமாக இருக்கிறது,” எனும் ஆதர்ஷ் தொடர்ந்து “அதைத்தான் எங்கள் அனைவருக்குள்ளும் சத்குரு பதியமிட்டிருப்பதாக நான் எண்ணுகிறேன். எங்களால் பார்க்கக்கூட முடியாத ஆயிரக்கணக்கான மக்களைத் தொடும் ஒரு விஷயத்தை இப்பொழுது நாங்கள் செய்துவருகிறோம். அவர்களது பெயர்கூட எனக்கு் தெரியாது, ஆனால் அவர்கள் அவ்வளவு அற்புதமான விதத்தில் இந்த வகுப்பை உணர்கின்றனர். இப்பொழுது இது என்னைக் குறித்ததே அல்ல. நாங்கள் வழங்கும் உச்சாடணை மற்றும் பங்கேற்பாளர்களைக் குறித்ததாகவே இது இப்போது இருக்கிறது. ‘நான்’ என்ற ஒருவன் இருக்கிறேனா இல்லையா என்பதும் ஒரு பொருட்டே இல்லை என்பதாக தோன்றுகிறது,” என்கிறார்.

“இந்தக் கலை வடிவங்களைக் கற்றபடியே நாங்கள் வளர்ந்தோம். இத்தனை ஆண்டுகள் நாங்கள் உணர்ந்ததை, முன்னெடுத்துச் சென்று மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிவது எங்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருக்கிறது என்பதுடன், இது ஒரு மகத்தான ஆசிர்வாதமும்கூட. பத்து வருடங்களாக சத்குருவும், மற்ற பலரும் எனது வளர்ச்சியில் அவர்களது வாழ்வை முதலீடு செய்துள்ளனர் என்பதுதான் என்னை இங்கே வைத்திருக்கிறது. எனக்கு விருப்பமான ஏதோ ஒரு விஷயத்தில் என் வாழ்க்கையை முதலீடு செய்வதற்கான நேரம் இது. நான் இப்போது யாராக இருக்கிறேனோ, அதற்கு ஈஷா சம்ஸ்கிருதியே காரணம், மேலும் நான் ஈஷா சம்ஸ்கிருதிக்கும், இந்த ஆழமான கலைகளுக்கும் கைமாறு செய்ய விரும்புகிறேன். சத்குருவும், எங்களுக்காக தங்கள் வாழ்வை முதலீடு செய்துள்ள மற்ற அனைவருமே இதற்கான காரணமாக இருக்கின்றனர்,” என்று முத்தாய்ப்பாக கூப்பிய கரங்களுடன் விடைபெற்று  சம்ஸ்கிருதி வளாகத்துக்குள் நுழைந்து நம் பார்வையிலிருந்து மறைகிறார் ஆதர்ஷ்.