வாழ்க்கையில் இன்னும் அதிகமாக ஏதோ உள்ளது என்று நான் உணர்ந்தபோது
ஜெருசலேமில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த நான், மதம் மற்றும் எல்லாவிதமான ஆன்மீகமும் அதன் அதீத எல்லை வரை எடுத்துச் செல்லப்படுவதை கண்டிருக்கிறேன். எப்போதும் பகுத்தறிவு பார்வையோடு, ஒரு இயற்பியலாளராகவும் இருக்கும் நான், ஆன்மீகம் என்ற பெயரோடு எது வந்தாலும், அதை எப்படியாவது தவிர்த்து விட வேண்டும் என்ற முடிவோடு இருந்தேன். இவை அனைத்துமே எந்த அர்த்தமும் இல்லாத கலாச்சாரங்களும் சடங்குகளுமே என்று நம்பிக்கொண்டிருந்தேன். இருப்பினும், அந்த பழைய நகரத்தின் எல்லையில் எழுப்பப்பட்டுள்ள கற்சுவர்களை சுற்றி சூழ்ந்திருக்கும் அழகு ததும்பும் அமைதியான மலைகள், இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் உங்களுக்குள் நீங்கள் பார்க்கத் துவங்குவதை உறுதி செய்கின்றன.
நான் எங்கே சென்று கொண்டிருக்கிறேன், இதற்கு அப்பால் என்ன செய்வது என்று எதுவும் தெரியாத ஒரு நிலை - அப்படிப்பட்ட ஒரு கட்டம் என் வாழ்வில் வந்தது. நான் பல ஆண்டுகளாக இயற்பியல் மற்றும் கணிதம் படித்துக் கொண்டிருந்தேன், அது தொடர்பான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தேன். அடுத்து என்னுடைய முனைவர் பட்டத்துக்காக தயாராகிக் கொண்டிருந்தேன். எப்போதும் உலகை அறிந்துகொள்வதில் ஆர்வத்துடன், பகுத்தறியும் மனதையும் கொண்டிருந்த எனக்கு, பிரபஞ்சத்தின் பௌதிக விதிகளை ஆராய்வது மட்டுமே ஒரே வழியாகப்பட்டது. நான் ஒரு வெற்றிகரமான விஞ்ஞானியாக இருந்தபோதிலும், இது போதாது என்ற உணர்வு மட்டும் எனக்குள் வளர்ந்துகொண்டே இருந்தது.
ஒவ்வொரு வாரமும் எனக்குள் முடிவில்லாத விவாதங்கள் ஓடிக்கொண்டே இருந்தன - நான் தற்போது இருக்கும் நிலையை அடைய நான் இதுவரை போட்டிருந்த கடின உழைப்பு ஒரு பக்கம், மற்றொரு பக்கத்தில் முன்பின் அறிந்திராத ஒரு பாதை. எந்த பாதையில் நன்மை உள்ளது, எந்த பாதையில் தீமை உள்ளது என்று அறியாமல் இருந்த நான், என் குடும்பம் எதிர்பார்க்காத ஒன்றை செய்தேன், என் வேலையை விட்டுவிட்டேன்.