கல்வி

தங்கள் கனவுகள் மற்றும் எதிர்காலம் குறித்த பிரகாசமான பார்வைகளை பகிர்ந்து கொள்கிறார்கள்
ஈஷா வித்யா மாணவர்கள்

ஈஷா வித்யா மாணவர்கள் தங்கள் படிப்பிலும் அதை கடந்தும் தொடர்ந்து நிலையான அர்ப்பணிப்பைக் காட்டி வருகிறார்கள். பலதரப்பட்ட தங்களின் திறமைகளை தொடர்ந்து வெளிப்படுத்தி, தேசிய அளவிலும் மாநில அளவிலும் நிகழ்ந்த பல்வேறு போட்டிகளிலும் பலரும் போற்றத்தக்க வெற்றிகளை ஈட்டியுள்ளனர். இன்னும் சிலர் பணியில் சேர்ந்து சமுதாயத்துக்கு தங்களின் திறமையால் பயனளித்து வருகிறார்கள். இதயத்திற்கு இதமளிக்கும் ஈஷா வித்யா வெற்றிக்கதைகள் சிலவற்றை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

ஆர்த்தி: "மக்களுக்கு நன்மை தரும் புதுமையான பாணிகளை வடிவமைக்கும் கட்டிடக்கலை வடிவமைப்பாளராக விரும்புகிறேன்"

சேலத்தில் உள்ள ஈஷா வித்யா பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஆர்த்தி. சில வருடங்களுக்கு முன், தஞ்சாவூர், தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் ஆலயத்துக்கு பள்ளியில் இருந்து சுற்றுலா பயணம் சென்றபோது கட்டிட வடிவமைப்பு மற்றும் உட்புற வடிவமைப்பு துறையின்பால் ஈர்க்கப்பட்டார். "கோவில்களில் உள்ள மிக நுட்பமான வேலைப்பாடுகள் மற்றும் கலைநயம் மிளிரும் வடிவமைப்புகளை கண்டு நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். இந்த துறையில் ஈடுபட வேண்டும் என்று அப்போதே முடிவு செய்தேன்," என கட்டிடக்கலை மீது தனக்கு ஆர்வம் பிறந்த கதையை பகிர்ந்து கொள்கிறார் ஆர்த்தி. பள்ளி சுற்றுலா முடிந்த பிறகு இணையதளத்தில் கோவில்கள் தொடர்பான தகவல்களை தேடத் துவங்கி மகாபலிபுரம் கோவில்களை கண்டவர் வியந்து போகிறார். கட்டிட வடிவமைப்பாளராக ஆக வேண்டும் என்ற ஆர்த்தியின் ஆசையை அது உறுதி செய்தது.

படிப்பிலும் முதன்மையான மாணவராக திகழும் ஆர்த்தி, மண்டல அளவிலான எறிபந்து மற்றும் டென்னிகாய்ட் (ரிங் டென்னிஸ்) போட்டிகளிலும் பரிசுகளை வென்றுள்ளார். "உன்னால் முடியும்! உன்னிடம் நல்ல திறமைகள் உள்ளது!" என்ற தனது ஆசிரியர்களின் ஊக்கமளிக்கும் வார்த்தைகள் படிப்பில் நல்ல முறையில் தான் தேர்ச்சி பெற உத்வேகமளிக்கிறது என்று கூறுகிறார் ஆர்த்தி. பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல முறையில் தேர்ச்சி பெறும் முனைப்போடு பயின்று வரும் ஆர்த்தி, அடுத்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு முடித்து புதுமையான பாணிகள் மூலம் மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் ஒரு கட்டிட வடிவமைப்பாளராக வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறார். ஏழை மக்கள் பயனடையும் விதமாக குறைந்த செலவிலான வீடுகள் கட்டவும் ஆர்த்தி விருப்பம் கொண்டுள்ளார்.

புனித் ராஜ்குமார்: புகுந்து விளையாடும் போல்ட்!

புனித் ராஜ்குமார், தருமபுரியில் உள்ள ஈஷா வித்யா பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவர். கடந்த சில வருடங்களாக உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் போன்ற பல போட்டிகளிலும் மாவட்ட அளவில் தொடர்ந்து பல பரிசுகளை வென்று வருகிறார். 2019-ஆம் ஆண்டு நடந்த பள்ளி அளவிலான விளையாட்டு போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவரும் இவரே!

தினக்கூலி வேலை செய்பவரின் மகனான புனித் ராஜ்குமாருக்கு வெற்றி அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. பள்ளி முடிந்த பிறகு, தொடர்ந்து பல மணிநேர பயிற்சியில் ஈடுபட்டதன் மூலம் வெற்றியை ஈட்டியுள்ள புனித் ராஜ்குமார், தன் வெற்றிக்கு ஆசிரியர்கள் தொடர்ந்து அளித்த ஆதரவும் ஊக்கமுமே காரணம் என்று கூறுகிறார்.

கல்வியோடு சேர்த்து விளையாட்டுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்படுவதே, ஈஷா வித்யா பள்ளியில் தான் சேர்ந்ததற்கான காரணம் என்று உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டார் புனித் ராஜ்குமார். தனது உத்வேக நாயகனாக உசைன் போல்டை குறிப்பிடும் புனித் ராஜ்குமார், முதலில் தேசிய அளவில் வெற்றிகரமான தடகள சாம்பியனாக வேண்டும், அடுத்து நாட்டுக்காக உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வெல்ல வேண்டும் என்றும் விருப்பம் கொண்டுள்ளார்.

சூர்யா: "வடிவமைப்பில் நான் ஆர்வமாக உள்ளேன்; அதற்கு காரணம் ஸ்டீவ் ஜாப்ஸ்"

வனவாசியில் உள்ள ஈஷா வித்யா பள்ளியை சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவர் சூர்யா, 12-ஆம் வகுப்பு தேறிய பின்னர் 'பேஷன் டிசைனிங்' துறையில் ஈடுபட வேண்டும் என்று விருப்பம் கொண்டுள்ளார். வடிவமைப்பு குறித்து ஸ்டீவ் ஜாப்ஸ், "வடிவமைப்பு என்பது வெறுமே பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது, உணர எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியது மட்டுமல்ல. வடிவமைப்பு என்பது அது எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப் பற்றியது" என்று கூறியுள்ளது, தனக்கு உத்வேகம் கொள்ளச் செய்துள்ளதாக குறிப்பிட்டார் சூர்யா.

தன் சகோதரியோடு சேர்ந்து படம் வரைவதில் விருப்பம் கொண்டிருந்த சூர்யாவுக்கு, ஈஷா வித்யாவில் சேர்ந்த பின்னர் கலை மற்றும் கைவினை வகுப்புகள் மிக பிடித்தமானவையாக இருக்கின்றன. ஓவியங்கள் வரைவது தனக்கு அமைதியை அளிக்கிறது என்றும், ஈஷா வித்யாவின் கலை மற்றும் கைவினை வகுப்புகள் புதுமையாகவும், படைப்பாற்றலுடனும் திகழ உதவுகிறது என்றும் பகிர்ந்து கொண்டார். ஆயில் பேஸ்டல்ஸ் கொண்டு ஓவியங்கள் வரைவதில் மிகுந்த ஆர்வமுள்ள சூர்யா, பள்ளி, மாவட்டம், மண்டலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பல விருதுகளை வென்றுள்ளார்.

தேசிய அளவில் நடந்த குழந்தைகளுக்கான சர்வதேச கலை திறன் போட்டியில் மூன்றாம் இடம் மற்றும் ரூ.1000 ரொக்க பரிசாக வென்றபோது, முதலில் அவரால் அதை நம்ப முடியவில்லை. சூர்யாவின் சாதனைகள் அவரது பெற்றோருக்கு மிகுந்த பெருமை அளிப்பதற்கான காரணங்களில் ஒன்று, அவர்களது குடும்பத்தில் இதுவரை யாரும் கலைத்துறையில் ஈடுபடவில்லை.

அஜய்குமார்: "ஜெட் போர் விமானியாகி என் தேசத்தை பாதுகாக்க விரும்புகிறேன்"

சேலம், ஈஷா வித்யா பள்ளியில் 12-ஆம் வகுப்பு முடித்துள்ள அஜய்குமார், தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைவதற்கான தேர்வை எழுதிவிட்டு, முடிவுகளுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறார். இந்திய விமானப்படையில் இணைந்து ஜெட் போர் விமானியாக வேண்டும் என்று அஜய்குமாருக்குள் கனவை விதைத்தவர் யார் தெரியுமா? உங்கள் ஊகம் சரிதான்! இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக இருந்தபோது ஆற்றிய வீரச் செயலுக்காக இந்திய அரசின் வீர் சக்ரா விருது பெற்றவரும், தற்போது குரூப் கேப்டனாக பதவி உயர்வு பெற்றுள்ளவருமான அபிநந்தன் வர்தமான்!

"என்னுடைய தாய்நாட்டை தீவிரவாதம் மற்றும் போர்களில் இருந்து காப்பது என் கடமை. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சுயசரிதையை படித்தது, 'கார்கில்' மற்றும் 'பார்டர்' போன்ற திரைப்படங்களை பார்த்தது எனக்கு ஊக்கம் அளித்தது" என்கிறார் அஜய்குமார்.

கல்வி உதவித்தொகை பெற்று படித்த மாணவரான அஜய்குமாருக்கு கணிதம், இயற்பியல் மற்றும் கணினி அறிவியலிலும் மிகுந்த ஆர்வம் உள்ளது. வகுப்பில் முதன்மை மாணவராக இருந்தவர், மண்டல அளவிலான கபடி போட்டிகளிலும் பரிசுகளை வென்றுள்ளார். தேசத்தை காக்க விமானப் படையில் இணைய வேண்டும் என்ற அஜய்குமாரின் லட்சியம் குறித்து அவரது பெற்றோர்கள் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறார்கள்.

தீபா: இயற்கை காட்சிகளை கணினியோடு இணைத்தல்

சிறுவயது முதலே தீபா எப்போதும் எதாவது வரைவது மற்றும் வண்ணம் தீட்டுவது என தனித்திறமையோடு இருந்தவர். அவரது குடும்பத்தில் அதுவரை எவரும் கலைத்துறையில் ஈடுபடாத நிலையிலும் தீபாவின் பெற்றோர் அவரை ஊக்குவித்தனர். இயல்பாகவே ஈஷா வித்யாவின் கலை மற்றும் கைவினை வகுப்பு அவருக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கிறது, அவருக்கு மிகவும் பிடித்த ஓவியர் ராஜா ரவி வர்மா.

மாவட்டம் மற்றும் தேசிய அளவிலான ஓவியப் போட்டிகளில் பல பரிசுகளை வென்றுள்ளார் தீபா. மேலும், ஸ்வச் பாரத் அபியானுக்காக சென்னை விமானநிலைய சுவர்களில் வண்ண ஓவியங்கள் தீட்டுவதற்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல திறமைகளை கொண்டுள்ள இந்த மாணவி, அறிவியல் மற்றும் விளையாட்டு போட்டிகளிலும் கூட பல பரிசுகளை வென்றுள்ளார். பள்ளியிலும் மற்றும் பிற இடங்களில் நிகழ்ந்த பல ஓவிய போட்டிகளில் பங்கேற்றது தன் திறமையை வளர்த்துக்கொள்ள உதவியதாக கூறும் தீபா, தனது ஆசிரியர்களின் தொடர் ஊக்குவிப்பும் தனக்கு உத்வேகமளிப்பதாக பகிர்ந்து கொண்டார்.

விழுப்புரம் ஈஷா வித்யா பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியான தீபா, 10-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றதால், தற்போது தகுதி அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற்றுள்ளார். கணினி அறிவியலில் மேற்படிப்பு படிக்க விரும்பும் அவர் கூடவே தன் மனதுக்கு விருப்பமான ஓவியத்திறனையும் தொடர்ந்து வளர்க்க வேண்டும் என்றும் எண்ணம் கொண்டுள்ளார்.

சாந்தன்: பசுமை பூமிக்கான விதையைத் தூவுகிறார்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காடு வளர்ப்பு மேற்பார்வையாளராக சாந்தன் பணிபுரிந்து வருகிறார். திருவண்ணாமலை, சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திர பொறியியல் துறையில் 96% மதிப்பெண்களுடன் டிப்ளமோ பட்டம் பெற்றிருந்தாலும், இந்தப் பணியில் சேர்ந்து காடு வளர்ப்பை ஊக்குவிக்கும் ஒரு கருவியாக தான் இருக்க வேண்டும் என்று சாந்தன் விருப்பம் கொண்டார்.

இந்த பாதையில் சாந்தன் நடையிடுவதற்கான விதை, கடலூர் ஈஷா வித்யா பள்ளியில் அவர் மாணவராக இருந்தபோது நடப்பட்டது. தற்போது மகாத்மா காந்தி பசுமை இந்தியா இயக்கமாக உருவெடுத்திருக்கும் ஈஷா அறக்கட்டளையின் சுற்றுச்சூழல் இயக்கமான பசுமைக்கரங்கள் இயக்கத்தின் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் வளர்க்கும் முன்னெடுப்பில் அப்போது சாந்தன் ஈடுபட்டிருந்தார்.

சாந்தன் கூறுகிறார், "எங்கள் பள்ளி ஆசிரியர்கள், நம் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டுள்ள நண்பர்கள் போல இருந்தார்கள். நம்முடைய வெற்றிகளை கொண்டாடுவதும் அவர்கள் தான். நாம் நன்றாக படிக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் நோக்கம் அல்ல, நேர்மறையான வகையில் சமுதாயத்துக்கு பங்களிக்கும் நல்ல மனிதர்களாக நாம் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் விருப்பத்தோடு இருந்தனர்."

பெருமாள் மற்றும் அண்ணாமலை: வில்லாளி சகோதரர்கள்

வனவாசி ஈஷா வித்யா பள்ளியைச் சேர்ந்த சகோதரர்கள் பி.டி.பெருமாள் மற்றும் அண்ணாமலை இருவரும் தீவிரமான வில்லாளிகள். பள்ளியில் மற்ற மாணவர்கள் வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்டிருப்பதை வேடிக்கை பார்த்து, விளையாட்டாக இதில் ஈடுபட்ட அன்று துவங்கியது மூத்தவரான பெருமாளின் பயணம். விரைவில் இது தீவிரமான முயற்சியாக மாறியது. மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை பெருமாள் வென்றுள்ளார்.

அண்ணாமலை வில்வித்தையை தேர்ந்தெடுப்பதற்கான காரணம் அதே பள்ளியை சேர்ந்த பல பரிசுகளை வென்ற கார்த்திகேயன் என்ற மற்றொரு மாணவர். இப்போது அண்ணாமலையும் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார்.

அவர்களது பெற்றோர்கள் கல்வி கற்காதவர்களாக இருந்தபோதிலும், தங்கள் பிள்ளைகள் நல்ல கல்வியைப் பெறவேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்தனர். ஆனால் அதற்கான நிதிவசதி அவர்களிடம் இல்லை. குழந்தைகள் இருவரும் கல்வி உதவித்தொகை மூலம் ஈஷா வித்யா பள்ளியில் சேர, அவர்களின் கனவு நிறைவேறியது. ஈஷா வித்யாவில் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் சத்தான மதிய உணவு அவர்களது பெற்றோருக்கு கூடுதல் பயனாக இருந்தது.

சகோதரர் இருவரும் இணைபிரியாதவர்களாக இருக்கின்றனர். பள்ளிக்கு சேர்ந்து நடந்து செல்வார்கள், மதிய உணவு வேளையில் சந்தித்துக் கொள்வார்கள், தொடர்ந்து ஒருவரையொருவர் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். 11-ஆம் வகுப்பு மாணவரான பெருமாள், சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆக வேண்டும் என்று விருப்பம் கொண்டுள்ளார். 8-ஆம் வகுப்பு படிக்கும் அண்ணாமலை பொறியாளராக வேண்டும் என்று எண்ணியுள்ளார்.