1. முன்கூட்டியே இரவு உணவை உண்ணுங்கள்
இரவில் வயிறு நிறைய அல்லது இறைச்சி போன்ற ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் உணவை நீங்கள் உண்ண திட்டமிட்டால், தூங்குவதற்கு குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு மணிநேரத்துக்கு முன்னதாகவே நீங்கள் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதால் உறங்க செல்லும் போது, செரிமான செயல்முறை முடிந்துவிடும். இந்த பழக்கம் பல விஷயங்களை சரிசெய்யும்.
2. குளித்து, தண்ணீர் அருந்திவிட்டு தூங்குங்கள்
தூங்குவதற்கு முன் குளிப்பதும், சிறிதளவு தண்ணீர் அருந்துவதும் உங்கள் தூக்கத்தில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். வானிலை காரணமாக குளிர்ந்த நீரில் குளிப்பது கடினமாக இருந்தால், நீங்கள் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். ஆனால் இரவில் சுடுதண்ணீரில் குளிக்கக்கூடாது. நீங்கள் குளித்துவிட்டு தூங்கினால் நல்ல முறையில் உறக்கம் வரும். ஏனெனில் குளிப்பதினால் உடலின் மேற்புற தோலில் உள்ள அழுக்கை மட்டும் நீங்கள் நீக்குவதில்லை.
இதை நீங்கள் கவனித்து இருக்கிறீர்களா? நீங்கள் பதற்றத்துடனோ, கவலையுடனோ இருக்கும்போது குளித்தால், உங்கள் சுமை ஓரளவு குறைந்தது போல நீங்கள் உணர்வீர்கள். உங்கள் உடலின் மீது தண்ணீர் ஓடும்போது, நிறைய விஷயங்கள் நடக்கின்றன. குளிப்பது என்பது மிக அடிப்படையான ஒரு பூதசுத்தி செயல்முறை. ஏனெனில் உங்கள் உடலில் 60 சதவிகிதத்திற்கும் மேலாக நீர்தான் உள்ளது. அதன் மேல் நீங்கள் தண்ணீரை ஓட விட்டால் உங்கள் தோலில் உள்ள அழுக்குகள் நீங்குவதை தாண்டி ஒரு குறிப்பிட்ட சுத்திகரிப்பும் நிகழ்கிறது
3. விளக்கேற்றுங்கள், மந்திர உச்சாடனம் அல்லது யோகப்பயிற்சி செய்யுங்கள்
நீங்கள் செய்யக்கூடிய இன்னொரு விஷயம், நீங்கள் தூங்கும் அறையில் பஞ்சு திரி இட்டு, தாவர எண்ணெய் ஊற்றி விளக்கேற்றுவது. இதற்கு சமையல் எண்ணெய், ஆளிவிதை எண்ணெய், அரிசித் தவிட்டு எண்ணெய், நல்லெண்ணய் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம். இதன் மூலம் எதிர்மறை விஷயங்கள் முற்றிலுமாக மறைந்துவிடுவதை நீங்கள் காண்பீர்கள். தூங்கும் முன் நீங்கள் ஏதாவது ஒரு மந்திர உச்சாடனம் செய்யலாம், அல்லது யோகப்பயிற்சிகள் செய்யலாம். நீங்கள் ஈஷா கிரியா பயிற்சி செய்ய விரும்பினால், இந்த https://www.youtube.com/watch?v=qA8t8c0U8eQ | https://www.youtube.com/watch?v=e7sU5ZWlu1w இணைய தள முகவரியில் இருந்து பெறலாம்.
4. வடக்கே தலை வைத்து தூங்காதீர்கள்
பொதுவாக, வடக்கு பக்கம் தலை வைத்து தூங்கக்கூடாது என்று கூறுவது இந்தியாவில் வழக்கத்தில் உள்ளது. நீங்கள் கிடைமட்டமாக வடக்கு நோக்கி தலை வைத்து படுத்தால், பூமியின் வட காந்த துருவம் காரணமாக மெதுவாக இரத்தம் மூளையை நோக்கி செலுத்தப்படுகிறது. மூளையில் அளவுக்கு அதிகமான இரத்த ஓட்டம் இருக்கும் பட்சத்தில் உங்களால் அமைதியாக தூங்க முடியாது.
5. அன்றைய நாளை திரும்பிப் பார்த்து உங்கள் வாழ்வை பயனுள்ளதாக்குங்கள்
நீங்கள் இளவயதில் இருந்தாலும் சரி, முதுமையில் இருந்தாலும் சரி, நீங்கள் நிலையற்றவர் என்பதையும், இந்த நிமிடமே இறந்து விழக்கூடும் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். நீங்கள் தூங்கப்போவதற்கு முன், உங்கள் படுக்கையில் அமர்ந்து, அது உங்கள் மரணப்படுக்கை என்று கற்பனை செய்து கொள்ளுங்கள் - நீங்கள் வாழ இன்னும் ஒரு நிமிடம் மட்டுமே இருக்கிறது. அன்றைய நாளில், காலையில் நீங்கள் கண் விழித்ததில் இருந்து நிகழ்ந்தவற்றை திரும்பி பார்த்து, நீங்கள் என்ன செய்தீர்களோ அது மதிப்பானதாக இருந்ததா என்று பாருங்கள். இந்த எளிய பயிற்சியை நீங்கள் செய்ய வேண்டும். ஏனெனில் நீங்கள் எப்போது மரணப்படுக்கையில் இருப்பீர்கள் அல்லது மருத்துவமனையில் எல்லா விதமான உபகரணங்கள் சூழ இருப்பீர்கள் என்று உங்களுக்கு தெரியாது. ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த பயிற்சியை நீங்கள் ரசித்து செய்ய முடியும்: இரவு படுக்கையில் அமர்ந்து, கடந்த 24 மணிநேரத்தை நீங்கள் பயனுள்ள விதத்தில் கையாண்டீர்களா என்று பாருங்கள். இதை நீங்கள் செய்தால், பயனுள்ள ஒரு வாழ்க்கையை நீங்கள் வாழ்வீர்கள்.
6. தூங்கும் முன் அனைத்தையும் தள்ளி வையுங்கள்
ஒவ்வொரு இரவும், நீங்கள் சேகரித்துள்ள அனைத்தையும் சற்று தள்ளி வைக்க வேண்டும் - உடல், மனதின் எண்ணங்கள், மற்ற அனைத்தும். "சிறிய" விஷயங்களை கூட புறக்கணித்துவிடாதீர்கள், ஏனெனில் அவையே உண்மையில் பெரிய விஷயங்கள். மக்கள் தங்கள் தலையணைகளை சுமந்து செல்வதை நான் பார்த்திருக்கிறேன். ஏனெனில் அது அவர்களுக்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. தூங்கும் முன், உங்கள் தலையணை, உங்கள் செருப்பு, உங்கள் உறவுகள் மற்றும் நீங்கள் சேகரித்துள்ள அனைத்தையும் சற்று தள்ளி வையுங்கள். இவ்வாறு செய்தால், நீங்கள் அதிக ஒளியோடு, சக்தியோடு, நீங்கள் கற்பனை செய்ததைவிடவும் மேலான சாத்தியங்களோடு கண் விழிப்பீர்கள். வெறும் உயிராக உறங்குங்கள் - ஆணாகவோ, பெண்ணாகவோ, இதுவாகவோ, அதுவாகவோ அல்ல. அனைத்தையும் தள்ளி வையுங்கள்.
இயற்கையாகவே உங்கள் மூளைப்பகுதியில் ஏதேனும் பலவீனம் இருந்தால், அல்லது நீங்கள் வயதானவராக இருந்தால், நீங்கள் தூங்கும் போது இறந்துவிடக்கூடும். இரத்த நாளங்கள் வழியாக அளவுக்கு அதிகமான இரத்தம் மூளையில் செலுத்தப்படுவதால், ஒருவரின் மூளையில் இரத்தக் கசிவு பாதிப்பு ஏற்படக்கூடும். இந்த உண்மை பூமியின் வட அரைக்கோளத்துக்கு மட்டுமே பொருந்தும். நீங்கள் ஆஸ்திரேலியாவுக்கு சென்றால், உங்கள் தலையை தெற்கு பக்கம் வைத்து தூங்கக்கூடாது. வேறு எந்த திசையிலும் வைத்துக் கொள்ளலாம்.
7. நீங்கள் உறங்கும் நேரத்தை தீர்மானியுங்கள், அலாரத்தை அல்ல
அலாரம் அடித்து எழுவது என்பது உங்கள் வாழ்க்கையை சிறந்த முறையில் வாழ்வதற்கான வழி அல்ல. என்னவிதமான ஒலிகளுக்கு நீங்கள் கண் விழிக்கிறீர்கள் என்பது உங்கள் நாளின் சூழலை தீர்மானிக்கும். மேலும் அது உங்கள் எதிர்காலத்தையும் பலவழிகளில் முடிவு செய்கிறது.
நீங்கள் உண்ணும் உணவு வகை, உங்களின் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளின் தன்மை, மற்றும் உங்களுக்குள் இருக்கும் அதிர்வு ஆகியவை உங்களுக்கு எவ்வளவு மணிநேரம் தூக்கம் தேவைப்படுகிறது என்பதை தீர்மானிக்கும். உங்களுக்கு 8 முதல் 12 மணிநேர தூக்கம் தேவைப்பட்டால், நீங்கள் சீக்கிரமாக படுக்கைக்கு செல்ல வேண்டும். அப்போதுதான் உங்களால் இயல்பாக எழ முடியும். கண் விழித்த பின்னர், நாம் விழித்து விட்டோமா இல்லையா என்ற சந்தேகத்தோடு நீங்கள் இருந்தால், வைராக்யா மந்திரங்களில் (https://www.youtube.com/watch?v=zwsqLM5LeNw) உங்களை நீங்கள் தொடர்புபடுத்திக் கொண்ட ஒரு மந்திரத்தை ஒலிக்கச் செய்யலாம்.
8. மந்தமாக இருக்காதீர்கள் - உள்ளங்கைகளை தேய்த்துக் கொள்ளுங்கள்
பாரம்பரியமாக, நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்ற முழுமையான அறிவியல் நமது வாழ்க்கை முறையிலேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. காலையில் கண் விழித்து எழுவதற்கு முன், உங்கள் உள்ளங்கைகளை சேர்த்து தேய்த்துக் கொண்டு அவற்றை உங்கள் கண்களின் மேல் வைக்க வேண்டும் என்று உங்களுக்கு கூறியிருக்கிறார்கள். அதற்கான காரணம், உங்கள் உள்ளங்கைகளில் நரம்பு முடிவுகள் மிக அடர்த்தியாக உள்ளன. உங்கள் உள்ளங்கைகளை தேய்த்துக்கொண்டு அவற்றை உங்கள் கண்களின் மீது வைப்பதன் மூலம், உங்களின் உணர்வுகள் உடனடியாக விழிப்படைவதை உறுதி செய்கிறோம்.
உங்களுக்கு தூக்கம் வருவது போல உணரும்போது, உங்கள் உள்ளங்கைகளை சேர்த்து தேய்த்து பாருங்கள், அனைத்தும் விழிப்படைவதை நீங்கள் உணர்வீர்கள். ஒவ்வொரு நாள் காலையிலும், உங்கள் உடலை நீங்கள் அசைக்கும் முன், உங்கள் உடலும் மூளையும் சுறுசுறுப்பாகி இருக்க வேண்டும். நீங்கள் எழும்போது மந்தமாக எழக்கூடாது என்பதே இதன் நோக்கம். எனவே நீங்கள் உள்ளங்கைகளை தேய்த்து கைகளை கண்களில் ஒற்றி விட்டு, உங்கள் வலதுபக்கமாக திரும்பி, பின்னர் எழுந்திருக்கிறீர்கள்.
9. வலது பக்கமாக எழுங்கள்
மிக முக்கியமான உடற்கூறு யாதெனில், உடலமைப்பின் இடது பக்கத்தில் அமைந்திருக்கும் உங்கள் இதயம், உடல் முழுவதும் இரத்தத்தை செலுத்துகிறது. இந்தியாவில், நாம் கண் விழித்து எழும்போது, வலதுபக்கம் திரும்பி எழ வேண்டும் என்று நமக்கு கூறியிருக்கிறார்கள். நம் உடல் ஒரு குறிப்பிட்ட நிலையிலான தளர்வில் இருக்கும்போது, வளர்சிதைமாற்ற செயல்பாடு குறைவாக நிகழும். நீங்கள் உறக்கத்தில் இருந்து எழுகையில் அந்த செயல்பாடு திடீரென அதிகரிக்கும். உங்கள் இடது பக்கம் திரும்பி எழுவதினால் நீங்கள் அதை தடை செய்ய முடியும் என்பதால், தூக்கத்தில் இருந்து எழும்போது, வலது புறமாக திரும்பி எழவேண்டும் என்றார்கள்.
10. புன்னகையோடு துயில் எழுங்கள்.
ஒவ்வொரு நாளும், இந்த உலகில் உறங்கச் செல்லும் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் இயற்கை மரணம் காரணமாக அடுத்த நாள் கண் விழித்து எழுவதில்லை. எந்தவிதமான உத்திரவாதமும் இல்லாவிட்டாலும், நாளை காலை நீங்கள் கண் விழிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அது குறைந்தளவாவது கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதானே. நீங்கள் அதற்காக எழுந்து ஆட வேண்டாம், குறைந்தபட்சம் ஒரு புன்னகையாவது புரியலாம்! அடுத்து, உங்களுக்கு முக்கியமானவர்களைப் பற்றி நினைத்துக் கொள்ளுங்கள், அவர்களும் இன்று உயிரோடு இருக்கிறார்கள். இன்னும் பெரிதாக ஒரு புன்னகை செய்ய இந்த காரணம் போதுமே! உங்கள் ஆன்மீக செயல்முறைக்கு இதுவே மிக எளிய முதற்படி.