பஞ்சவாயுக்கள் குறித்து எடுத்துரைக்கும் சத்குரு, இன்றைக்கு அபான வாயு மீது கவனத்தை ஈர்க்கிறார். வாழ்க்கையை ஒரு தென்றலைப் போல் அனுபவிப்பதற்கு, உங்களது உடல், மனம் மற்றும் சக்தி அமைப்பின் உள்நிலைத் தூய்மை குறித்து நீங்கள் செய்யக்கூடியவைகள் என்ன என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
சத்குரு: பொதுவாக பிராண வாயு நாபியிலிருந்து மேற்புறமாக நகர்கிறது. அதனால்தான் நாபியிலிருந்து தொண்டைக்குழி வரைக்கும் சுவாசம் நிகழ்கிறது. அபான வாயு, நாபிக்கு சற்றே கீழிருக்கும் மணிப்பூரகத்தில் இருந்து, அதற்கு கீழே மூலாதாரம் வரைக்கும் நகர்கிறது.
உடல் நிலையிலும், சக்தி நிலையிலும், மன நிலையிலும் மற்றும் உணர்ச்சி நிலையிலும், உங்களுக்கு ஒரு சமதளம் தேவையாக இருக்கிறது. ஏனென்றால், சமத்தன்மை இல்லையென்றால், உங்கள் புத்திசாலித்தனம், உங்கள் திறமைகள், உங்கள் திறன்கள் போன்ற எதுவும் நிறைவு காணமுடியாது. நமக்கு சமத்தன்மையான வளர்ச்சி வேண்டும் என்பதால், சக்தியின் மேற்புற நகர்வு குறித்து நாம் கவனம் செலுத்துவதைப் போல், சக்தியின் கீழ்ப்புற நகர்வு குறித்தும் நாம் கவனம் செலுத்துகிறோம்.
அபானம் என்பது, செரிமான செயல்முறையில், கழிவகற்றும் உறுப்புகளின் அமைப்பாக மட்டும் இல்லாமல், உடலெங்கும் அணுக்களின் நிலையில் நிகழத் தேவைப்படும் கழிவு நீக்கத்தையும் குறிக்கிறது. இல்லையென்றால், உடல் கனத்துவிட்டதைப் போல் தோன்றுகிறது. உடலை அதன் எல்லா நிலைகளிலும் தூய்மையாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. உங்கள் உடலின் ஒவ்வொரு அணுவும் அதிகபட்ச தூய்மையுடன் இருக்கும் நிலையில், மென்மையான தென்றல் வரும் திசையில் நீங்கள் நின்றால், காற்று உங்களை ஊடுறுவிச் செல்வதைப் போல உணர்வீர்கள். உண்மையில் அது ஊடுறுவவில்லை, ஆனாலும் தென்றல் உங்களைத் தொட்டால், அந்த உணர்வின் பரவல் தோலின் மேற்புறத்தைவிட மிக ஆழமாகச் செல்வதை நீங்கள் உணரமுடியும். வாழ்க்கைக்கு உயிரோட்டமானவராக நீங்கள் உருவாகிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது அதன் பொருள்.
வாழ்க்கைக்கு உயிரோட்டமாக இருப்பது என்றால், சாதாரண மக்களைவிட, மிகப் பெரிய அளவில் வாழ்க்கையை உணர்வது. இது நிகழ்வதற்கு, உங்கள் அபான வாயு நன்கு செயல்படுவதும், உங்கள் ஒட்டுமொத்த உடலும் தூய்மையாகவும் இருப்பது முக்கியம். ஒரு இடத்தின் வெளிப்புறத் தூய்மை முக்கியம். உங்கள் உடலமைப்பை தூய்மையாக வைத்திருப்பது மேலும் அதிக முக்கியமானது. அசுத்தங்கள் பல்வேறு நிலைகளில் – கர்மவினை, மரபியல், சம்ஸ்காரவினை (நீடித்த மரபியலின் தாக்கம்) - இருக்கின்றன.
தினசரி உணவு, நீர் மற்றும் உடல்ரீதியான தொடர்பு ஆகிய பரிவர்த்தனைகள் மூலம் நீங்கள் அசுத்தங்களைச் சேகரிக்கிறீர்கள். இந்த அசுத்தங்கள், உடல்தன்மையில், மனநிலையில் மற்றும் சக்தி உடல்களின் தன்மையில் தங்களையே வெளிப்படுத்திக் கொள்கின்றன. உங்கள் உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் சக்திநிலையின் பாதிப்புகளின் அளவுகள், உங்களுக்கு இருக்கும் அசுத்தங்களின் அளவினால் முடிவு செய்யப்படுகிறது.
தூய்மைப்படுத்துதல் என்பது ஒரு விஷயம் – அதைக் குளறுபடி செய்யாதிருத்தல் என்பது மற்றொரு விஷயம். தூய்மைப்படுத்தும் வேலைகளை அதிகமாகச் செய்யும் மக்கள் இருக்கின்றனர், ஆனால் அவர்கள் தினமும் அதைக் குளறுபடி செய்தவாறே இருக்கின்றனர். ஆகவே முதல் விஷயம், அதைக் குளறுபடி செய்யாமல் இருப்பது, பிறகு தூய்மைப்படுத்துவது. அல்லது அது மிகவும் அசுத்தமாக இருந்தால், முதலில் தூய்மைப்படுத்துவது, அதன் பிறகு அதைக் குளறுபடி செய்யாமல் இருப்பது.
உங்களையே தூய்மைப்படுத்திக் கொள்வதில், பல நிலைகள் உள்ளன. நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், என்ன அருந்துகிறீர்கள்; நீங்கள் எப்படி சுவாசிக்கிறீர்கள், உட்காருகிறீர்கள், நிற்கிறீர்கள் மற்றும் எப்படி மற்றவர்களுடன் பழகுகிறீர்கள், என்ன விதமான ஒலிகளை உச்சரிக்கிறீர்கள் மற்றும் கேட்கிறீர்கள், உங்களுக்கும், உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவருக்கும் என்ன விதமான சூழல்களை உருவாக்குகிறீர்கள் – இந்த எல்லா விஷயங்களும் முக்கியமாக இருக்கிறது. நீங்கள் உங்கள் நேரத்தை ஆனந்தம் அல்லது மனக்கசப்பில்; அன்பு அல்லது ஆத்திரத்தில், வெறுப்பு மற்றும் கோபத்தில் என்று எதில் செலவழிக்கிறீர்களோ – அதைப் பொறுத்து, உங்களது உடல் கட்டமைப்பில் நீங்கள் சேகரிக்கும் அசுத்தங்களின் அளவும் இருக்கும்.
அசுத்தங்கள் பெருமளவுக்கு உடலின் சுரப்புகள் மற்றும் நீர்ச்சத்துகளில் இருக்கின்றன; அவைகள் அமிலத்தன்மையாக அல்லது காரத்தன்மையாக இருக்கக்கூடும். இந்த இரண்டு அம்சங்களும் சமநிலையில் இருக்கவேண்டும். அமிலம் அதிகரித்தால், அது உடலை உள்ளிருந்து எரித்துவிடும். மிக அதிகமான மக்கள் இதை தங்களுக்குத் தாங்களே செய்துகொள்கின்றனர் – தினமும், அவர்கள் தங்கள் மனம், உணர்ச்சிகள் மற்றும் சக்திகளைக் கொண்டு தங்களையே எரித்துக் கொண்டிருப்பதால், உடல் பல விதங்களிலும் துன்பமடைகிறது.
குறிப்பாக, ஆன்மீக வளர்ச்சியை அல்லது மறைஞானத்தையே தங்களது குறிக்கோளாகக் கொண்டிருப்பவர்களுக்கு, ஒரு நல்ல இயந்திரவியல் தேவைப்படுகிறது. ஒரு நல்ல இயந்திரவியல் என்றால் குறைந்தபட்ச அளவுக்கான உராய்வு என்பது பொருள். எதுவும் சேகரிக்கப்படவில்லை என்றால், அனைத்தும் தூய்மையாக இருக்கிறது, அது சுமூகமாக செயல்படுகிறது. பிறகு அந்த இயந்திரத்துடன் நாம் என்ன செய்ய விரும்பினாலும், அது எளிதாகிவிடுகிறது. இந்த உயிர் அதன் மிக உயரிய நிலைகளில் செயல்படுவதை நீங்கள் விரும்பினால், நீங்கள் செய்யும் ஒவ்வொன்றிலும் தூய்மைப்படுத்துதல் தேவைப்படுகிறது.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் எல்லா செயலிலும் உச்சம் தொட்டு வாழ்வது எப்படி? இதற்கான ஒரு கருவிதான், யோகா. எல்லா நேரங்களிலும் உடல் நிலையிலும், மன நிலையிலும், உணர்ச்சி நிலையிலும், சக்தி நிலையிலும் உச்சத்தில் இருப்பதற்கான ஒரு கருவி.
அபான வாயு, பிரம்மாண்டமான ஆற்றல் உடையது. அபான வாயு உடலமைப்புக்குள் பல வெளிப்பாடுகளைக் கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளாமல், அதை அதீதமாக செயல்படுத்தினால், அகற்றக்கூடாத விஷயங்களை அது அகற்றிவிடும். அபானம் சரியாக செயல்படவில்லை என்றால், உங்கள் உடலின் கழிவு நீக்கும் அமைப்பு மோசமாக இருக்கும்.
உங்களது கழிவகற்றும் செயல்முறை மோசமாக இருந்தால், உடலில் அடர்த்தி இருக்கும்; உடலின் எடை மாறாமல் இருந்தாலும், உடல் கனத்துவிட்டதாக நீங்கள் உணர்வீர்கள். உங்கள் உடல் இலேசாக இருப்பதை, ஏதோ சில நாட்களில் நீங்கள் கவனித்திருக்கலாம்; மற்ற நாட்களில் உங்கள் உடல் கனமாக உணர்கிறது. இதற்கு நீங்கள் எடை இழந்ததோ அல்லது அதிகமானதோ காரணம் அல்ல. ஒரு குறிப்பிட்ட அளவுக்கான சுத்தப்படுத்துதல் நிகழ்ந்திருக்கும்பொழுது, உடல் இயல்பாகவே இலேசாக உணரும். உங்கள் உடலே மகிழ்ச்சியாக உணர முடியும்.
தினமும் காலையில் எழும்போது இதை நீங்கள் சோதனை செய்யவேண்டும் – உடல் மகிழ்ச்சியாக இருக்கிறதா மற்றும் அந்த நாளை எதிர்கொள்ளத் தயாராக உள்ளதா? இது உங்கள் மனரீதியான செயல்முறை குறித்த ஒன்று அல்ல. நீங்கள் உடலை உற்று நோக்கினால், அது செயலில் இருக்கிறதா அல்லது செயலற்று இருக்க விரும்புகிறதா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். உடல் செயலற்று இருப்பதற்கு விரும்பினால், அதன் பொருள் மரணம். உடல் சுத்தமாக இல்லையென்றால், அது செயலற்று இருக்க விரும்புகிறது ஏனென்றால், அது உள்ளே மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது.
உங்களுடைய நாசித்துவாரங்கள் அடைபட்டிருக்கும்பொழுது, சுவாசிப்பதற்கு எவ்வளவு கடினம் என்பதும், அது எவ்வளவு மூச்சுத்திணறலாக இருக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியும். அதைப்போலவே, அடைபடக்கூடிய பாதைகள் பல உண்டு. பாதைகளை எளிதாக்கும் விதமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியமானது. உணவு என்பது ஊட்டச்சத்து மட்டுமல்லாமல், சுத்தத்தையும் குறித்ததாக இருக்கிறது. அது உடலில் நீண்ட நேரம் தங்கியிருக்கக் கூடாது. நீங்கள் சாதனா செய்யும்பொழுது, உங்களுக்குள் தேங்கிப்போகாத உணவைச் சாப்பிடுவது முக்கியம். அதன் பணியைச் செய்தபிறகு, அது வெளியேற்றப்பட வேண்டும். அதனுடைய ஒரு துகள்கூட உங்களுக்குள் தங்கியிருக்கக் கூடாது.
சுத்தப்படுத்துதல் என்பது செரிமானப் பகுதியை மட்டும் உள்ளடக்கியதல்ல – சுத்தப்படுத்த வேண்டிய அதிக சிக்கலான இடங்களும் உள்ளன. சுத்தம் செய்வதற்கான மிக எளிமையான விஷயம், உணவுப்பாதை; அது சுத்தமாக இல்லையென்றால், உங்கள் மூளையை எப்படி சுத்தம் செய்வது?
அபான வாயு மீது மட்டும் தனிப்பட்ட கவனம் செலுத்தும் பயிற்சிகள் உள்ளன, ஆனால் பெரும்பாலான மக்களுக்கு அவைகள் ஏற்றதல்ல. நீங்கள் ஒட்டுமொத்த உடலையும் தூய்மையாக வைத்திருக்க விரும்பினால், எல்லா ஐந்து வாயுக்களையும் சரிசெய்யும் சக்தி சலன கிரியாவைக் கற்றுக்கொள்வது சிறந்தது. சக்தி சலன கிரியாவில், முதல் மூன்று கிரியாக்கள் பிராண வாயுவைக் குறித்ததாக இருக்கின்றன. மகத் பிராண கிரியா/கபாலபாதி, சமான வாயு குறித்தது. ஸ்வான கிரியா, அபான வாயுவைக் குறித்தது. அதைப்போல், காகா கிரியா உதான வாயுவையும், நாக கிரியா வியான வாயுவையும் குறித்ததாக இருக்கிறது. சமநிலையான முறையில், வெவ்வேறு வாயுக்களையும் நீங்கள் செம்மைப்படுத்த வேண்டும்.
இவற்றுள் எந்த ஒரு வாயு அதிகரித்தாலும், சமநிலைகளை இழக்க நேரிடும். பெரும்பான்மை ஆற்றல் மையங்களாக இருக்கின்ற பிராண வாயு அல்லது சமான வாயு சற்றே அதிகரித்தால், அது ஒரு பிரச்சனையாக இருக்காது. சூட்சும இயல்புடைய மற்ற மூன்று வாயுக்கள் சிறிதளவு அதிகமாக இருந்தால், அது உடலில் சமனற்ற சூழலை உண்டாக்கக்கூடும். நீங்கள் சற்று விநோதமாக நடந்துகொள்ளலாம் என்பதால், மக்களின் கவனத்தை நீங்கள் ஈர்க்கக்கூடும். இந்த விதமான விஷயங்களை நீங்கள் அதிகரித்தால், சமூக அளவில் நீங்கள் அதிக திறனற்றவராக ஆகிவிடக்கூடும். ஐந்து வாயுக்களும் மிகவும் சமமான விதத்தில் சீர்செய்யப்படுவது முக்கியமாக இருக்கின்றது.
உங்களை எப்படி சுத்தம் செய்துகொள்வீர்கள்? ஒரு எளிமையான விஷயம் என்னவென்றால், குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்கு இரண்டு முறை, இருபத்து நான்கு மணி நேரங்களுக்கு, உணவு சாப்பிடாமல் இருங்கள்; நீர் மட்டும் அருந்துங்கள். ஈஷா யோக மையத்தில் ஒவ்வொரு ஏகாதசி அன்றும் பிரம்மச்சாரிகளும் மற்றும் பலரும் அதைக் கடைபிடிக்கின்றனர். ஏகாதசி, அதைச் செய்வதற்கான சிறந்த நாளாக இருக்கிறது. முந்தைய நாள் மாலை நீங்கள் சாப்பிட்ட பிறகு, அடுத்த நாள் மாலைதான் மீண்டும் சாப்பிடுகிறீர்கள். சிறிது காலத்திற்குப் பிறகு, நீங்கள் அதற்குப் பழகிவிடுவீர்கள். நீங்கள் போதுமான சாதனா செய்கிறீர்கள் என்றால், அது ஒரு பிரச்சனையாக இருக்காது.
இல்லையென்றால், நீங்கள் களைப்பாக உணர்கிறீர்கள் என்றால், தண்ணீரில் ஒரு எலுமிச்சம் பழம் பிழிந்து, தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள் – அது உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். உங்கள் வழக்கமான பயிற்சிகளுடன், மாதம் இருமுறை இதைச் செய்வது, உடல் சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்தும்.
ஆனால் ஆனந்தமான ஒரு நிலையில் இருப்பது, சுத்தம் அடைவதற்கான எளிமையான, அதி அற்புதமான வழியாக இருக்கிறது. நீங்கள் ஆனந்தமாகவும், இனிமையாகவும் இருக்கும்பொழுது, உங்களது உடலின் இரசாயனம் தூய்மையாகிறது என்பதற்கு அறிவியல்பூர்வமான சான்று இருக்கிறது. உங்களது அனுபவம் பல வழிகளிலும், உங்கள் இரசாயனத்தில் வேர் கொண்டுள்ளது. உங்களுக்குள் நீங்கள் உற்பத்தி செய்யும் உணர்வுகளால், உங்கள் இரசாயனம் அசுத்தமடைகிறது என்றால், ஆரம்பத்தில் நீங்கள் மகிழ்ச்சியில்லாமல் இருப்பீர்கள். பிறகு காலப்போக்கில், அது உடல்நலக் குறைவாக மாறும் என்பதுடன், எல்லா விதமான துன்பங்களுக்கும் காரணமாக இருக்கும்.
உங்களுக்கு வேண்டாத ஒரு இரசாயனத்தை உங்கள் உடலும், மனமும் உற்பத்தி செய்யும்பொழுது, காலப்போக்கில், அது அதிகமாக சேர்ந்து சேர்ந்து நிர்ப்பந்தமான ஒரு நடத்தையாக வடிவமெடுக்கிறது. அப்போது, “நான் இப்படித்தான் இருப்பேன், இது என்னுடைய இயல்பு,” என்று நீங்கள் சொல்லக்கூடும். இது உங்களுடைய இயல்பு கிடையாது – இதனை உங்களிடம் இருந்தேதான் நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள்.
ஒரு மனிதராக, நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் உங்களிடம் இருந்து உருவாக்கிக்கொள்ளும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. இதனை நிகழச் செய்வதில் அபான வாயு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பங்காற்றுகிறது. நாம் எதைச் செவிமடுக்கிறோம், என்ன சொல்கிறோம், எப்படி நடந்துகொள்கிறோம், நமக்குள் என்னென்ன எண்ணங்களும், உணர்ச்சிகளும் எழுகின்றன என்பதைக் குறித்தது; அவற்றின் தூய்மையைப் பற்றியது. அவற்றில் நீங்கள் எப்படி கவனம் செலுத்துவீர்கள்? ஈஷா யோகா வகுப்பு – இன்னர் எஞ்ஜினியரிங்.
வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களிலும், வெவ்வேறு விஷயங்கள் நிகழ்கின்றன, ஆனால் அடிப்படைகளைத் தவறவிடாமல் இருப்பது மிகவும் முக்கியம். ஈஷா யோகா வகுப்பின் ஐந்து அடிப்படைகளை தினமும் அல்லது தேவைப்பட்டால் பல முறைகள் உங்களுக்கு நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இது, ஆனந்தமாக இருப்பதற்கான ஒரு எளிமையான வழி.
நீங்கள் இங்குமங்கும் நிலைதடுமாறி விழுந்துகொண்டு இருந்தால், அதற்குக் காரணம் நீங்கள் சமநிலையில் இல்லை. யாராவது உங்களைத் தொடும்பொழுது நீங்கள் கீழே விழுந்தால், அதற்குக் காரணம் நீங்கள் சமநிலையில் இல்லை. அதனால்தான் யோகப் பயிற்சிகள், அதாவது சாதனா – உங்களது உடல் மற்றும் மனதில் சமநிலை கொண்டுவருவதற்கானது. தினசரி பயிற்சிகள், நீங்கள் தள்ளாடாமல் பார்த்துக் கொள்வதற்கானது. எல்லாவற்றுக்கும் மேலாக சமநிலையுடன் இருப்பது.
உங்களது உடலமைப்பை எளிய பயிற்சிகளுடன் நீங்கள் தூய்மைப்படுத்த முடியும், ஆனால் அவைகள் சமநிலையில் செய்யப்பட வேண்டியது முக்கியமானது. ஆனால் அபான வாயுவின் முக்கியத்துவம் என்னவென்றால், அது வலிமையாக கீழ்நோக்கி நகரும் ஒரு ஆற்றல். மேல்நோக்கிச் செல்வதுதான் அதிக முக்கியமானது என்று ஒவ்வொருவரும் எண்ணுகின்றனர், ஆனால் உறுதியாக நிற்பது அதற்கு இணையான முக்கியம் வாய்ந்தது. அபான வாயு அந்த சாத்தியத்தை உருவாக்குகிறது.
ஒரு மாதத்திற்கு இரண்டு நாட்கள், ஏகாதசி விரதம் இருத்தல் நன்று, அந்த நாளில் நீங்கள் நீரை மட்டுமே அருந்தி இரண்டு முறை சக்தி சலன கிரியா செய்தால், தூய்மைப்படுத்தும் செயல்முறையை அது மிகப்பெரிய அளவில் மேம்படுத்தும்.
உடலை முற்றிலும், உள்ளிருந்து வெளியில் வரைக்கும் தூய்மைப்படுத்துவதற்கு வடிவமைக்கப்பட்ட, என்றென்றைக்குமான மாபெரும் கருவி, ஹடயோகா. அது கடினமான வழி, ஆனால் அதற்கு உங்களை முழுமையாகக் கொடுத்தால், சிறிது காலம் கழித்து நீங்கள் அதன் விளைவைப் பார்ப்பீர்கள். நான் என்ன செய்துகொண்டிருந்தாலும் அல்லது எங்கிருந்தாலும், எனது ஹடயோகா மற்றும் அங்கமர்தனா நாள் தவறாமல் நிகழ்ந்துகொண்டிருந்த அந்த சில வருடங்களின் அடிப்படையில், என் சொந்த அனுபவத்தில் இருந்து பேசுகிறேன்
இன்றைக்கு, 64 வயதில், இங்கிருக்கும் பெருவாரியான இளைஞர்களைக் காட்டிலும், உடலளவில் - நான் மற்ற அம்சங்களைக் குறித்தும் கூடப் பேசவில்லை - நான் இன்னமும் மிக அதிகமான நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கிறேன். இது என்னைப் பற்றியே நான் பெருமை பேசுவதைக் குறித்து அல்ல. நான் என்ன கூறுகிறேன் என்றால், நீங்கள் நேரத்தை முதலீடு செய்யவேண்டும். உங்களையே சாதனாவுக்குள் வெறுமனே முதலீடு செய்யுங்கள். பலனளிக்காத ஏதோ ஒன்றைச் செய்வதில் என் வாழ்க்கையை முதலீடு செய்யும் நபர், நான் அல்ல.
இதைப்போல் வேறெதுவும் பலனளிக்கவில்லை என்ற காரணத்தினாலேயே, எமது வாழ்வையும் மற்றும் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் நாங்கள் முதலீடு செய்கிறோம். வாழ்வைப் பற்றிய உங்கள் புரிதலையும், உடல்ரீதியான மற்றும் மனரீதியான ஆரோக்கியம் குறித்து இன்றைய மருத்துவ விஞ்ஞானம் அறிந்திருப்பதையும் கடந்து அது செயல்படுகிறது. வாழ்வு என்பது ஒருவிதமான முழுமை உணர்வு; வாழ்க்கைக்கு உள்ளுறையும் ஒரு ஒருமை இருக்கிறது. அதற்கு வலிமை அளிப்பதைப் பற்றியது, யோகா. அதை நீங்கள் வலிமைப்படுத்தினால், வாழ்வைக் குறித்து நீங்கள் வருத்தப்பட வேண்டியதில்லை.
வாழ்க்கை எந்த விதமாக, எந்த வடிவில் வந்தாலும், நீங்கள் அதைச் சிறப்பாக அடித்து விளையாடுவீர்கள். ஆனால் நீங்கள் தயார்நிலையில் இல்லையென்றால், உங்கள் பாதையில் எப்போதும் இனிமையான பந்து வரவேண்டும் என்றே எதிர்பார்க்கிறீர்கள். உங்கள் வழியில் கடினமான பந்து எதிர்ப்பட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்? மிகக் கடினமான பந்து வரட்டும். அதனால் என்ன – நாம் அதைச் சிறப்பாக அடிப்போம். வாழ்க்கையில் இருப்பதெல்லாம் அவ்வளவுதான். நீங்கள் முனைப்பையும், தீவிரத்தையும் மற்றும் கவனத்தையும் அதன் மீது முதலீடு செய்தால், அங்கே வருத்தம் இருக்காது.