ஆசிரமத்தில் இருந்து கிளம்புவதற்கு முன்பு, எனது கைலாய தரிசன யாத்திரையின் (நிகழவிருக்கும்) அனுபவத்தைக் குறித்து ஒரு கட்டுரை எழுத முடியுமா என்று என்னிடம் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு நானும் சம்மதித்திருந்தேன் - ஆனால் ஆசிரமம் திரும்பி பல தினங்களான பிறகும், என்ன எழுதுவது என்று தெரியாமல் வெள்ளைத்தாளை வெறுமனே பார்த்தவாறு நான் அமர்ந்திருந்தேன். கிரகித்துக்கொள்ள இயலாத அந்த இரண்டு வாரங்களை உள்வாங்கும் முயற்சியில், என் இதயத்தையும் மனதையும் ஊடுருவிப் பார்த்ததில், உண்மையிலேயே முக்கியத்துவமான ஏதோ ஒன்று நிகழ்ந்திருந்தது எனக்குத் தெரிந்தது, ஆனால் அதிலிருந்து எதையும் பிரித்தறிய இயலாமல் இருந்தேன்.
பயணக் குழுவில், ரஷ்யா, உக்ரைன், ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, செக் குடியரசு, ஈரான், லெபனான், நேபாளம் மற்றும் இந்தியா உள்ளிட்ட உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் முப்பது பங்கேற்பாளர்களும், பதினைந்து தன்னார்வலர்களும் இணைந்திருந்தனர். கோவிட் கட்டுப்பாடுகளினால், இந்த வருடம் ஈஷாவிலிருந்து சத்குருவுடன் யாத்திரை மேற்கொண்டிருந்த ஒரே குழுவினராக நாங்கள் இருந்தோம். மேலும், இந்த முறை சீனாவுக்குள் நுழைவதற்கும் நாங்கள் அனுமதிக்கப்படவில்லை, எனவே நாங்கள் முழுக்க முழுக்க நேபாளத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு, சுமார் ஐம்பது மைல் தொலைவில், நேபாள மலைகளின் ஒரு உயரமான சமவெளியில் இருந்து கைலாய மலையை தரிசிக்க வேண்டியிருந்தது.
சத்குருவுடனான சத்சங்கத்திற்கான ஒலி அமைப்பு ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்புடன், இசைக்குழுவின் ஒரு பாகமாக செயல்படும்படியும் நான் பணிக்கப்பட்டிருந்தேன். எனவே, நான் ட்ரம்ஸ் வாசிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது - அதிகாலையில் பங்கேற்பாளர்களை கண் விழிக்கச் செய்யவும், மாலையில் அவர்களை நடனமாடச் செய்யவும்!
திடகாத்திரமான ஷெர்பா இன மக்களின் துணையுடன் நடைப் பயணத்திலும், வாகனப் பயணத்திலும் ஒரு வாரத்துக்கும் அதிக காலம் எடுத்து நேபாள மலைகளைக் கடந்தோம். இதுவரை என் வாழ்நாளில் நான் பார்த்திராத, அசர வைக்கும் அழகான மலைப் பகுதிகளினூடே எங்கள் பயணம் நடந்தது. பெரிதாக பசுமை வெளிகள் இல்லாத, ஆனால் ஆங்காங்கே கிளர்ந்து பரவிய பசும்பரப்பு கொண்ட இந்த நில அமைப்பு, வித்தியாசமான ஒரு அழகிற்கு சொந்தமாக இருந்தது - கரடுமுரடான நிலப்பரப்பில் ஆங்காங்கே சிறுசிறு பாறை திட்டுக்கள் மற்றும் அமானுஷ்யமான ஏகாந்தமுமாக அதில் ஒரு ஆழம் இருந்தது. அங்கிருந்த பாறைகள், நீரோடைகள் மற்றும் அந்த மலைவெளியின் காற்றில் இருந்தும்கூட உயிர்சக்தியின் மூலக்கூறுகள் கசிந்து பரவுவதை நீங்கள் உணர முடியும். இந்த இயற்கைச் சூழலின் அதே விதமான அம்சங்கள், உள்ளூர் நேபாள பழங்குடியின மக்களிடமும் பிரதிபலித்தது வியப்பை ஏற்படுத்தியது.
அவர்களின் ஒரு சிறு குழுவை புகைப்படம் எடுப்பதற்காக ஒருமுறை சத்குரு வாகனத்தை நிறுத்தியபொழுது, அவர்கள் நடந்துகொண்ட விதத்தினால் நான் திகைத்து நின்றது எனக்கு நினைவிருக்கிறது. அங்கு நிலவும் கடுமையான வானிலையினால் செதுக்கப்பட்ட முகங்களில் துடிப்பும் உயிரோட்டமும் பொங்க, எளிமையும் அடக்கமும் இணைந்த ஒரு ஆழ்ந்த சமநிலையான உணர்வை அங்கு வாழும் ஆடவரும் பெண்டிரும் வெளிப்படுத்தினர். யாருடைய கேமரா லென்ஸ் வழியாக அவர்கள் புகைப்படமாக பதிவாகும் பேறு பெற்றிருக்கிறார்கள் என்பதை அந்தக் கணத்தில் அறியாதவர்களாகவே அவர்கள் இருந்தனர் என்றே நான் எண்ணுகிறேன்!
மலையேற்றப் பாதையில் முன்னேறிச் சென்ற மக்கள் மெல்ல தங்களது எல்லைகளின் கட்டுப்பாட்டை உதிர்க்கத் தொடங்கினர். மிக அடிப்படையான வசதிகளுடன் மட்டும் வாழப் பழகிக்கொண்ட அவர்களின் உற்சாகத்தை குளிரோ அல்லது மழையோ எதுவும் செய்ய இயலவில்லை! ஒரு சில தினங்களிலேயே பங்கேற்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு இடையில் இருந்த வேறுபாடு மறைந்து, செய்யவேண்டிய செயல் எதுவாக இருந்தாலும் அனைவரும் இணைந்து அதில் ஈடுபாடு காட்டினர். நாகரிகத்தின் சிறு சுவடுகளும் எங்களுக்குப் பின்னே நின்றுவிட, மலைகளின் மடியில் நாங்கள் தொடர்ந்து முன்னேறிச் செல்கையில், ஆனந்தத்தின் ஊற்றும், விட்டு விடுதலையான ஒரு உணர்வும் குழுவினரிடையே பற்றிப் படர்ந்ததை என்னால் உணரமுடிந்தது.
சத்குருவின் இருப்பு எங்களைப் போர்த்தி அரவணைத்ததில், எங்கள் அனைவருக்கும் இடையிலும் ஒரு விதமான பந்தம் பின்னலாய் படர்ந்து வளர்ந்தது. மெல்ல மெல்ல, இந்தப் பயணத்தில் தங்களை இணைத்துக்கொள்ளும் பேறு பெற்றிருந்த குழுவினருடன் நான் மிக ஆழமாக ஒன்றிப்போனேன். அவர்கள் எதையோ தேடிக்கொண்டிருந்தனர், ஆனால் அது என்ன என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களுள் பலரும், அவரவரது துறைகளில் வெற்றியின் உச்சம் தொட்டவர்களாக இருந்தனர், ஆனால் அவர்களது வாழ்க்கையில் அடிப்படையான ஏதோ ஒன்றை இன்னமும் காணாமல் இருந்ததை உணர்ந்திருந்தனர். அந்தப் பரிமாணத்தை அணுகுவதற்கான ஒரு வாழும் சாத்தியமாக சத்குருவை அவர்கள் ஒருமனதாக ஏற்றிருப்பதாகத் தோன்றியது. அறிந்துகொள்ள வேண்டும் என்ற அவர்களின் தாகம் எனக்குள் ஏதோ ஒன்றை மீண்டும் ஊதிக் கிளறிவிட்டது - 24 வயதினனாக முதன்முதலாக ஆசிரமத்திற்கு வந்தபொழுது மிக வலிமையாக எனக்குள் நான் உணர்ந்திருந்த ஒன்று, வருடங்களின் ஓட்டத்தில் மெதுவாகத் தணிந்து தற்போது நீறுபூத்த நெருப்பாகி இருக்கலாம்.
இறுதியாக, கைலாய மலையின் தரிசனம் எங்களுக்கு கிடைக்கக்கூடிய அந்த குறிப்பிட்ட இடத்திற்கு நாங்கள் வந்தடைந்தவுடன், சத்குரு உடனடியாக தீட்சை செயல்முறையைத் துவங்கினார். முதலில் வானம் மேகமூட்டமாக இருந்தது. சத்குரு அமர்ந்து, தொலைதூர வெளியில் பார்வையை நிலைநிறுத்த, மெதுவாக மேகக்கூட்டங்கள் விலகி வழிவிட, கைலாய மலை தன்னை வெளிப்படுத்தி தரிசனம் தந்தது. ஆனால் சட்டென நிகழ்ந்த தரிசனம் போலவே, வானிலை வேகமாக மாறிக்கொண்டிருப்பதாகவும், செயல்முறையைத் தொடர்வதற்கு நாம் உடனடியாக சத்சங்க கூடாரத்துக்குள் செல்லவேண்டும் என்றும் சத்குரு அறிவித்தார். தீட்சை செயல்முறையை சத்குரு நிறைவு செய்கையில், என் கண் முன்னே அங்கே பனிப்பொழிவு துவங்கியிருந்தது.
கைலாய மலையை தரிசிக்கும் அப்பகுதியில் மூன்று மணி நேரங்கள் மட்டுமே தங்கியிருக்கும் வகையில் முதலில் எங்களது பயணத் திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது. சாதகமற்ற வானிலை காரணமாக, அங்கேயே ஒரு இரவு முழுவதும் தங்கியிருக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என்று சத்குரு கூறினார். இரவு நேர வெப்பநிலை பூஜ்ஜியத்துக்கும் கீழே சென்ற நிலையில், வழக்கமான எங்களது பெரும்பாலான கூடாரங்களும் இல்லாமல் இருந்தோம். அனைவரும் அன்றைய இரவை சத்சங்கக் கூடாரத்தில் பகிர்ந்துகொள்ள பணிக்கப்பட்டோம். குளிரை தாங்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்த தரைவிரிப்பைப் பகிர்ந்துகொண்டு நெருக்கியடித்தபடி அமர்ந்து, சூழலுக்கு இதமான இரவு உணவை எடுத்துக்கொண்டோம். வசதியின்மையும், தோழமையும் சந்தித்துக்கொண்ட இந்தப் புள்ளியில், எங்கள் உணர்வுகள் வாழ்நாள் சாதனைப் பயணம் மேற்கொள்ளும் உற்ற பள்ளித் தோழர்கள் கூட்டம் போல ஆகியிருந்தது.
அதிகாலை சுமார் 3:30 மணியளவில், மந்திர உட்சாடணையின் ஒலியில் உறக்கம் கலைந்து விழிப்பு ஏற்பட்டது. நான் கூடாரத்தை விட்டு வெளியில் வந்தேன் - பனிமூட்டத்தின் அடர்த்தி அதிகமாக இருந்ததால், தூரத்தில் இருந்தவற்றை தெளிவாகப் பார்க்க இயலவில்லை, ஆனால் சத்குருவின் கூடாரத்தில் இருந்து ஒளிக்கீற்று வெளிவருவதை என்னால் பார்க்க முடிந்தது. உரத்தக் குரலில் சத்குருவின் உட்சாடணையும் பனிப்படலத்தை ஊடுருவிக்கொண்டு என் செவிகளை வருடியது:
சிவனாகி பந்தானோ யோகேஷ்வரா
சிவனாகி வந்தானே யோகேஷ்வரன்
சிவனாகி பந்தானோ பூதேஷ்வரா
சிவனாகி வந்தானே பூதேஷ்வரன்
சிவனாகி பந்தானோ காலேஷ்வரா
சிவனாகி வந்தானே காலேஷ்வரன்
சிவனாகி பந்தானோ ஜகதீஷ்வரா
சிவனாகி வந்தானே ஜகதீஷ்வரன்
பந்தானோ மஹாதேவா பஹூ ரூபியா
வந்தானே மஹாதேவன் பல ரூபத்தில்
கண்டானோ கண்டானோ ஈஜீவிய
கண்டானே கண்டானே இவ்வுயிரை
என் ஜீவ உண்டானோ சிவ ரூபியா
என் உயிரை உண்டானே, சிவ ரூபமாய்
தந்தானோ தந்தானோ ஞானாம்ருதா
தந்தானே தந்தானே ஞானாமிர்தம்
அந்தப் புனிதமான வேளையில் மலை மீது நின்றுகொண்டு, பனியில் மிதந்து வந்த கன்னட வார்த்தைகளைக் கேட்கையில், அந்த வெளியில் இருப்பதற்கு நான் சொல்லொணா பாக்கியம் செய்திருப்பதாக உணர்ந்தேன்.
17 வருடங்களாக நான் ஒரு பிரம்மச்சாரியாக இருந்த நிலையில், கைலாய புனிதப் பயணத்தில் தன்னார்வத்தொண்டு செய்வதற்கு எனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு இது. பல வருடங்களுக்கு முன், எனக்கான நேரம் எப்பொழுது வரும் என்று சில தருணங்களில் நான் எதிர்பார்த்ததுண்டு. ஆனால் எனக்குள் நானே இப்படி சமாதானம் செய்துகொண்டேன், “ஷிவா, நான் தயார்நிலை அடையும்பொழுதுதான், என்னை நீ அழைக்கவேண்டும்; இல்லையென்றால் தகுதியான ஒருவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு வீணாகிவிடக்கூடும்.” ஆதலால், யாத்திரையில் இணைய எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டபொழுது, நான் அதிகம் உணர்ச்சிவசப்படவில்லை, பதிலாக நான் சற்றே திகைத்து நின்றேன். இப்பொழுது நான் தயாராக இருக்கிறேனா?
என்னால் அதற்கு பதில் அளிக்க முடியவில்லை, ஆனால் ஒரு வாய்ப்பு என்னால் வீணாகவில்லை என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகக் கூறமுடியும். கைலாயத்தை தரிசித்து நாங்கள் கீழே இறங்கிய இரவு, எங்களுக்கு திறந்த வெளியின் நடுவே நெருப்பு மூட்டி இசையும், உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு முன் நான் உணர்ந்திராத விட்டு விடுதலையான ஒரு உணர்வுடன், இசையின் தாளத்திற்கு ஏற்ப நடனமாட என்னை முழுமையாக விடுவித்தேன், என்னிலிருந்து ஏதோ ஒன்றை நான் கைவிட்டு வந்ததை அறிந்துகொண்டேன் - ஆனால் காரணரீதியாக என்னால் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாக அது இருந்தது. அந்தக் கணத்தில், சத்குரு மற்றும் கைலாய மலையின் அருட்பார்வையின் கீழ், தேடுதல் கொண்ட இந்த சக குழுவினருடன் நான் பகிர்ந்துகொண்ட பந்தம் எப்பொழுதும் என்னுடன் தங்கியிருக்கும் என்பதை நான் அறிந்தேன்.
ஆசிரமத்துக்கு திரும்பிய பிறகு, இரவு ஓய்வுக்காக பிரம்மச்சாரிகள் தங்குமிடமான சங்கா¹ நோக்கி மற்றொரு சுவாமியுடன் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தேன். “கைலாயத்தில் இருந்து திரும்பிய பிறகு நீங்கள் பிரகாசமாக இருக்கிறீர்கள்,” என்று அவர் குறிப்பிட்டார். அவர் அப்படி எண்ணியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது, எனக்குள் ஏதோ வித்தியாசமாக உணரமுடிந்தாலும், என்னால் அதை அவ்வளவு தெளிவாக பார்க்க இயலவில்லை. “இது விசித்திரம்தான், கடந்த இரண்டு வாரங்களில் என்னால் எவ்வளவு சாதனா செய்ய முடிந்தது என்பதே எனக்குத் தெரியவில்லை, மேலும் கைலாய தரிசனம்கூட சரிவர எனக்கு நிகழ்ந்ததா என்ற திகைப்பும் எனக்கு இருக்கிறது, ஏனெனில் அது அவ்வளவு தொலைவில் இருந்தது. தவிர, ஒலி அமைப்பு நன்றாக செயல்படுவதற்கான முயற்சியில்தான் நான் அதிகமான கவனம் செலுத்தினேன்!” என்றேன்.
பிறகு அவர் சிரித்துவிட்டு, அவரது சொந்த அனுபவத்தைக் கூறினார், ”நாம் இல்லாத அந்தக் கணங்களில், அப்போதுதான், அவர் உள்ளே இறங்கி, அந்த இடத்தை நிரப்புகிறார்.” இறுதியாக, எனக்கு ஏதோ ஒன்று புரிபடுவதுபோல் தோன்றியது.
[1] பிரம்மச்சாரிகள் தங்கும் பகுதி
மலைக்கள்வன்
மறைந்திருந்து மௌனமாக
பார்க்கிறான் மலைக்கள்வன்
என் அகம் ஏதுமற்றதாகையில்
என்னிலிருந்து கொள்ளைகொள்ள இறங்கி வருகிறான்
எண்ணில்லா சேகரங்களிலிருந்து
எடுத்துக்கொள்கிறான் சிலவற்றை
குழம்பிய நான், ஏதோ அகன்றுவிட்டதை அறிகிறேன்
ஆனால் அது எதுவென்பதை துல்லியமாக அறியாதிருக்கிறேன்
திட்டங்கள் பல வைத்திருக்கும்
சிந்தையற்ற கள்வனவன்
விநோதமான குறும்புகளின் சொந்தக்காரன்
என் அகம் இருண்டிருந்ததாக அயலார் கூற்றிருக்கிறது
ஆனால் இப்போது ஒரு அகல் ஏற்றப்பட்டிருக்கிறது
மலைக்கள்வன் வாய்விட்டு சிரிக்கிறான்
ஓ, நீ பிரியக் கூடுமென்றால்
தவணைகளில் உன்னை கொள்ளையிடாமல்
இவன் கொள்ளை கொள்வானே உன் இதயத்தை!