நாட்பட்ட நோய் மற்றும் தொற்று நோய்
சத்குரு: நோய்களில் இரண்டு வகைகள் உள்ளன - தொற்று நோய் மற்றும் நாட்பட்ட நோய். வெளியிலிருந்து ஏதோ ஒரு உயிரினம் நம் உடலமைப்பை தாக்குவதால் தொற்று நோய்கள் உருவாகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகளை மருந்துகளை உட்கொண்டு கையாள வேண்டும். நாட்பட்ட நோயோ, நம் சொந்த உடலே பிரச்சனைகளை உருவாக்குவதால் ஏற்படுவது. நம் உடலமைப்பிலேயே நோய் உற்பத்தி செய்யப்படுகிறது.
உடலின் ஒவ்வொரு அணுவும் ஆரோக்கியத்திற்காகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே எதனால் அது நோயை உருவாக்குகிறது? ஒன்று, மிக அடிப்படையான ஏதோ ஒன்று சமநிலையை இழந்திருக்கிறது அல்லது நம் உடலமைப்பில் ஒரு குறிப்பிட்ட அளவு தவறான புரிதல் ஏற்பட்டு, அதனாலேயே ஆரோக்கியத்திற்கு பதிலாக நோய் உருவாகிறது. இந்த தவறான புரிதலை நாம் பல்வேறு வழிகளில் அடைகாத்துக் கொண்டிருக்கக்கூடும். இது உங்கள் மனதளவில் நிகழும் தவறான புரிதல் அல்ல, ஆனால் அணுக்களின் நிலையில் மூலப்பொருட்களின் நிலையில் இது நிகழ்கிறது.