அதே பழைய சுழற்சிகள், காட்சிப்புலம் மட்டுமே மாறுகிறது
கேள்வியாளர்: பிரதி எடுத்தது போல் ஒரே விதமான உணர்ச்சிகரமான சூழல்கள் எனக்கு மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. அவற்றிலிருந்து நான் எவ்வாறு வெளிவருவது?
சத்குரு: குறைந்தபட்சம், ஒரே விதமான சூழல்களே உங்களுக்கு மீண்டும் மீண்டும் நிகழ்கிறது என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்கள் என்பதே நல்ல விஷயம் தான். பெரும்பாலானவர்களால் அதை பார்க்கக்கூட முடிவதில்லை. அவர்கள் அதே சுழற்சியை மீண்டும் மீண்டும் வெவ்வேறு காட்சி பின்புலங்களில் நிகழ்த்துகிறார்கள். அதோடு, அவர்கள் சரியாக இருப்பதாகவும் நினைக்கிறார்கள். வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் காட்சி பின்புலன்கள் மாறக்கூடும். நீங்கள் பள்ளியில் இருந்தபோது தேவையற்ற ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கலாம். அது மறுமுறை நிகழ்ந்த போது நீங்கள் கல்லூரியில் இருந்திருப்பீர்கள். எனவே காட்சியின் பின்புலம் மாறுபட்டதாக இருந்திருக்கும். மற்றொரு சமயம், நீங்கள் ஏதோ ஒரு பணியில் சேர்ந்திருப்பீர்கள். அடுத்த முறை நிகழும் போது உங்களுக்கு திருமணமாகியிருக்கும். ஆனால் உங்கள் வாழ்வை கூர்ந்து கவனித்தால் ஒரே மாதிரியான விஷயங்கள் தான் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டிருக்கும். இதற்கு அர்த்தம் நீங்கள் வட்டத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தான்.
நீங்கள் மனித வாழ்வை வெறுமே உடலளவில் பார்த்தால், அது கல்லறைக்கு தான் சென்று கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே வெறும் ஒரு உடல்ரீதியான பொருளாக மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்தால், வாழ்க்கை முதலில் ஒரு நாடகம் போல இருக்கும். பின்னர் அது இன்பமானதாக மாறும். அதற்குப் பிறகு மேலும் பல விஷயங்களாக மாறும். அதன் பின்னர் ஒவ்வொரு மூட்டும் வலிக்க ஆரம்பிக்கும். அதன் பின்னர் அனைத்தும் முடிவுக்கு வருகிறதே என்ற அச்சம் மேலோங்கும். இதுவே உடல் ரீதியான வாழ்க்கையின் வளர்ச்சி. ஆனால் நமது அதிர்ஷ்டம் என்னவென்றால் நாம் வெறும் உடல் ரீதியானவர்கள் அல்ல - நமக்கு மற்றும் பல பரிமாணங்கள் உள்ளன.