சத்குரு எக்ஸ்க்ளூசிவ்

ஆன்மீகத் தேடலில் இருப்பவர்கள், மற்றவர்களைவிட அதிக சவால்களை வாழ்வில் எதிர்கொள்ள வேண்டுமா?

உங்களது ஆன்மீகப் பயணத்தைத் துவங்கியதிலிருந்து, உங்களை நோக்கி அதிக சவால்களை வாழ்க்கை வீசுவதாக உணர்கிறீர்களா? அது மோசமான விஷயமாக இல்லாமல் இருக்கலாம்! ஆன்மீகத்துக்கும், வாழ்வின் சவால்களுக்கும் இடையிலிருக்கும் தொடர்பு குறித்து சத்குரு என்ன கூறுகிறார் என்பதை இந்தப் பதிவில் அறியலாம்.

விரிவடையும் விருப்பம் எழும்பொழுது

கேள்வியாளர்: ஆன்மீக செயல்முறையில் ஈடுபட துவங்கியதிலிருந்து, வீட்டில், பணியில் மற்றும் பொதுவாக வாழ்க்கையிலும் நான் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்வது போலவே தோன்றுகிறது, ஏன் இப்படி?

சத்குரு: நீங்கள் எந்தக் காரணத்துக்காக யோகா வகுப்புக்கு வந்திருந்தாலும் - ஆரோக்கியத்துக்காகவோ அல்லது வெளி உலகத்தில் இருக்கும் பிரச்சனைகளுக்காகவோ நீங்கள் வந்திருக்கலாம் - ஆனால், மக்களின் சாமான்யமான ஆசைகளைவிட, இன்னும் அதிகமான ஏதோ ஒன்றை அறிந்துகொள்ளும் பேராவலில் நீங்கள் சிக்கிவிட்டீர்கள். ஒரு விதத்தில், யோகா ஒரு கண்ணிவலையாக செயல்பட்டு, சிறிது காலத்துக்குப் பிறகு, அறிதலுக்கான பேராவல் உங்களையும் விடப் பெரிதாகிவிடும் அளவுக்கு உங்களைப் பக்குவப்படுத்துகிறது.

ஒருவர் ஏதோ ஒன்றை சிறிது உணரத் துவங்கும்பொழுது, அது குறித்து மேலும் அறிந்துகொண்டு, எல்லாவற்றையும் உணரவேண்டும் என்ற விருப்பம் விஸ்வரூபம் எடுக்கிறது. இதனால் மற்ற அனைத்தும் பின்னுக்குச் செல்கின்றன. இது நிகழத் துவங்கும்பொழுது, உங்களது வெளிச்சூழ்நிலைகளை சற்றே சாதுர்யத்துடனும், திறமையுடனும் கையாள நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது முக்கியமாகிறது; இல்லையென்றால், அவைகள் நிலைகுலைந்து விழுந்துவிடும். உங்களைச் சுற்றிலும் இருப்பவர்கள் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு, உங்களுக்குள் ஒரு பேராவல் கொழுந்துவிட்டு எரியும் பொழுது, வெளிச்சூழ்நிலையைக் கையாள்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கான திறமை தேவைப்படுகிறது.

வேகமெடுக்கும் வாழ்க்கை

ஆன்மீகத் தன்மையின் ஏதோ ஒரு அம்சத்தினால் நீங்கள் தொடப்படும்பொழுது, நீங்கள் உங்கள் வாழ்க்கையை ஒருவிதமாக துரிதப்படுத்துகிறீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையை துரிதகதியில் செல்ல உட்படுத்தும்பொழுது, முன்னெப்போதையும் விட அதிக விஷயங்கள் தவறாகப் போகக்கூடும். உங்கள் தேடலின் தீவிரம் அதிகரிக்கையில், சாதாரணமாக, ஒரு பத்து வருட காலத்தில், மெல்லமெல்ல தவணைகளில் உங்களுக்கு வரக்கூடிய துன்பங்கள், ஒரு சில மாதங்களுக்குள் உங்களுக்கு நிகழலாம். இதனால் மனம் தளர்ந்து, “இந்த யோகாதான் எனக்குத் துன்பத்தை வரவழைக்கிறது,” என்று நீங்கள் நினைக்கலாம். யோகா உங்களுக்கு துன்பத்தை அழைத்து வரவில்லை. அது துன்பங்களின் வரவை துரிதப்படுத்த மட்டுமே செய்கிறது. இதனால் உங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட துன்பங்களின் பங்கு, அவ்வளவுக்கு அவ்வளவு விரைவாக முடிந்துவிடும்.

நீங்கள் உங்கள் வாழ்க்கையை துரிதகதியில் செல்ல உட்படுத்தும்பொழுது, முன்னெப்பொழுதையும் விட அதிக விஷயங்கள் தவறாகப் போகக்கூடும்

ஆன்மீக சாதனாவை மேற்கொள்ள துவங்கிய ஆரம்ப கட்டத்தில், மக்கள் முன்னெப்போதையும் விட அதிகமான துன்பத்தை வரவழைத்துக் கொள்ளக்கூடும். ஏனென்றால், வாழ்வின் செயல்முறையே ஃபாஸ்ட் ஃபார்வர்ட்-ல் துரிதமாக நகர்கிறது. ஒருவர் ஆன்மீகப் பாதையைத் தேர்வு செய்வதற்கே, அவர்கள் ஒரு அவசரத்தில் இருப்பதுதான் காரணமாக இருக்கிறது. பரிணாமத்தின் போக்கில் ஒரு கோடி வருடங்கள் செலவிடுவதில் அவர்களுக்கு விருப்பமில்லை. இப்பொழுதே, இந்தப் பிறவியிலேயே அவர்களுக்கு இது நிகழ வேண்டும். பொருள் தேடும் மக்களைக் காட்டிலும், ஆன்மீக மக்கள் மிக அதிகமான அவசரத்தில் இருக்கின்றனர் - அவர்கள் தங்களது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் துரிதகதியில் முன்னோக்கிச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். சிறிய விஷயங்களை விரைவாக முடித்துக்கொண்டு, வேகமாக, இன்னும் வேகமாகச் செல்ல விரும்புகிறார்கள்

துன்பங்கள் வருகையில், முன்னெப்போதையும் விட அதிகமான வேகத்தில் சூழ்நிலைகள் மாறும்பொழுது, அவை எல்லாவற்றையும் கையாள்வதற்கு, ஒருவருக்கு குறிப்பிட்ட அளவு சமநிலையும், திறமையும் தேவைப்படுகிறது. ஏனென்றால், உங்களைச் சுற்றிலும் இருப்பவை தகர்ந்து விழுந்துவிட்டால், பிறகு நீங்கள் உங்களது ஆன்மீக செயல்முறையைக் கைவிடக்கூடும். வெளிசூழ்நிலைகளை நிர்வகிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு விவேகம் தேவை.

அது ஏன் உங்கள் கூர்மையான கவனத்தை தக்கவைத்துக்கொள்வதை பற்றியே இருக்கிறது

ஒருநாள் சங்கரன்பிள்ளை ஒரு குருவிடம் சென்று, “குருவே, நான் என் மனைவியை மிகவும் நேசிக்கிறேன், ஆனால் வீதியில் நான் காணும் ஒவ்வொரு பெண்ணினாலும் கவரப்பட்டு, எழுச்சியடைகிறேன். எனக்கு அவமானமாக உள்ளது, ஆனால் என்னால் அதை நிறுத்த முடியவில்லை, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார். குரு அவரைப் பார்த்துக் கூறினார், “மகனே, உனது பசியை எங்கே அதிகரித்துக்கொள்கிறாய் என்பது ஒரு பொருட்டல்ல, நீ வீட்டில் சாப்பிடும் வரை.”

துன்பங்கள் வருகையில், முன்னெப்போதையும் விட அதிகமான வேகத்தில் சூழ்நிலைகள் மாறும்பொழுது, அவை எல்லாவற்றையும் கையாள்வதற்கு, ஒருவருக்கு குறிப்பிட்ட அளவு சமநிலையும், திறமையும் தேவைப்படுகிறது.

நீங்கள் ஆன்மீக செயல்முறைக்குள் நுழைந்துவிட்டீர்கள், ஆனால் இன்னமும் நீங்கள் அலுவலகம் சென்று, உங்கள் குடும்பத்தை நிர்வகித்து, உங்களைச் சுற்றிலும் இருக்கும் சமூக சூழ்நிலைகளை சமநிலையோடு கையாள வேண்டியுள்ளது. நீங்கள் கோவிலில் இருந்தாலும், உணவகத்தில் இருந்தாலும் அல்லது இமயமலையில் இருந்தாலும், எல்லாவற்றையுமே ஒரு ஆன்மீக செயல்முறையாக உங்களுக்குள் எப்படி பயன்படுத்துவது என்பதை நீங்கள் அறிந்திருக்கும் வரை, உங்கள் உடலுடன் நீங்கள் என்ன முட்டாள்தனம் செய்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல. நீங்கள் கண்ணியமான மனிதர்களுடன் வாழ்கிறீர்களா அல்லது தினமும் தள்ளுமுள்ளு நடத்தும் மனிதர்களுடன் வாழ்கிறீர்களா என்பது ஒரு பொருட்டே இல்லை. நீங்கள் எந்த விதமான சூழ்நிலையில் வாழ்ந்தாலும், நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும், உங்கள் கவனத்தை நிலைநிறுத்தியிருக்கும் வரை, எதுவுமே பொருட்டில்லை.

ஒவ்வொரு சூழலையும் வளர்வதற்குப் பயன்படுத்துதல்

ஒருவர் இந்த திறமையைக் கற்றுக்கொள்ளாமல் இருந்தால், பிறகு உங்களைச் சுற்றிலும் உள்ள சூழல்கள் நிலைகுலையும். உங்களைச் சுற்றிலும் இருக்கும் மக்கள் எவ்வளவு முட்டாளாக இருந்தாலும் பரவாயில்லை. பொதுவாக, விவேகமானவர்களை விட முட்டாள்களுக்கு பூமியில் அதிகமான ஆற்றல் உண்டு. அதுதான் மனிதகுலத்தின் துரதிருஷ்டவசமான சரித்திரமாக இருக்கிறது. அதி விவேகமானவர்களுக்கு தங்களது விவேகத்தினால் எந்த விஷயத்தையும் உருவாக்குவதற்கான ஆற்றல் ஒருபோதும் இருந்ததில்லை. ஏனெனில் அவர்கள் எப்பொழுதும் பொருத்தமான சூழ்நிலைக்காகக் காத்திருக்கின்றனர்.

பொருத்தமான ஒரு சூழ்நிலைக்காக ஒருபோதும் காத்திருக்காதீர்கள். ஒவ்வொரு சூழலும் பொருத்தமானதுதான். அது எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளத் தகுதியில்லாமல் இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதிக பொருத்தமானதாக அது இருக்கிறது. ஒரு செடி நன்றாக வளரவேண்டும் என்றால், நீங்கள் அதை நோக்கி அதிகளவில் கழிவுகளை வீசினால், அதற்கேற்ப அது நன்றாக வளர்கிறது. வாழ்க்கை உங்களை நோக்கி வீசும் கழிவுகள் அதிகரிக்கையில், நீங்கள் மேலும் வேகமெடுத்து விரைவாக வளரவேண்டும். நிகழக்கூடிய ஒவ்வொரு விஷயத்தையும் உங்களது வளர்ச்சிக்கான செயல்முறையாகப் பயன்படுத்த முடியும், அல்லது ஒவ்வொரு நிகழ்வையும் உங்களையே சிக்கலாக்கிக்கொள்ளவும், திணறிப்போகவும் பயன்படுத்த முடியும். நம்மைச் சுற்றி எந்தவிதமான விஷயங்கள் நிகழ்ந்தாலும், அவைகளைத் திறமையாக எப்படி கையாள்வது என்பது உங்களுக்கு தெரிந்துவிட்டால், பிறகு தடையேதும் இல்லை.