வாழ்வின் சூட்சுமங்கள்

உயிர் எப்பொழுது உடலில் நுழைகிறது? இறப்பதற்கான மிகச் சிறந்த வழி எது? மிக மோசமான வழி எது?

கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர் மற்றும் திரைக்கதை எழுத்தாளருமான ப்ரசூன் ஜோஷி, உயிர் எப்பொழுது உடலில் நுழைகிறது என்பதைக் குறித்து சத்குருவிடம் கேட்கிறார். தொடரும் உரையாடல் இயல்பாக மரணம் குறித்த விஷயங்களை நோக்கி ஈர்க்கப்படுகிறது. பல காரணிகளால் நிகழும் மரணம் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை அறியும் ஆவல் எழுகிறதா? மறைஞானியின் வாக்கில் உண்மை கண்டு தெளியுங்கள்.

‘ஆத்மா’ எப்பொழுது உடலில் நுழைகிறது?

ப்ரசூன் ஜோஷி: சத்குரு, ஒரு ஆத்மா எப்பொழுது உடலுக்குள் நுழைகிறது?

சத்குரு: “ஆத்மா” என்ற சொல் பெரிதும் கலப்படம் அடைந்துவிட்டதால், அதற்கு பதில் “உயிர்” என்ற சொல்லை நாம் பயன்படுத்துவோம். நீங்கள் ஒரு உயிராக இருப்பது என்பது நீங்கள் ஒரு நபராக இருப்பதைக் காட்டிலும் வித்தியாசமானது. ஒரு நபராக நீங்கள் இருப்பது என்பது, உங்களைச் சுற்றிலும் நிகழ்ந்துள்ள பல விஷயங்களின் தாக்கத்தினால் விளைந்த ஒரு உருவாக்கம் மற்றும் வார்ப்பு. ஒரு உயிர் என்ற நிலையில், நீங்கள் ஒரு குறிப்பிட்ட தகவல் பதிவுடன் வந்துள்ளீர்கள். அந்த தகவல் தீர்ந்துவிட்டாலோ அல்லது மென்பொருள் இல்லாமல் போனாலோ, அப்போது இந்த உயிர் உடலை விட்டு வெளியேறுகிறது, ஏனென்றால் அதனுடைய காலவரையறை முடிந்துவிடுகிறது.

அதற்கான காலவரையறை இன்னமும் இருக்கும் நிலையில், ஆனால் ஏதோ ஒரு காரணத்துக்காக நீங்கள் உடலை உடைத்துவிட்டால், அப்போது உயிர் வெளியேறுகிறது. இந்த விதமாக அது வெளியேறும்பொழுது, உயிர் உச்சபட்ச அதிர்வில் இருக்கிறது. உயிர் உடலை விட்டு வெளியேறியிருக்கக் கூடாது, ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் வெளியேறிவிட்டது. இந்த குறிப்பிட்ட உயிருக்கு, பல விஷயங்கள் செய்ய வேண்டியுள்ளது, இல்லையென்றால் அது திசை தெரியாத காட்டில் விடப்பட்ட நிலையில், அப்படியே நெடுங்காலம் நீடித்திருக்கும். அந்த உயிர், உடலில் வாழ்ந்திருந்தால், அடுத்த ஐந்து வருடங்களில் அதற்குரிய காலவரையறையை நிறைவு செய்திருக்கலாம். ஆனால் அதற்குள் வெளியேறிவிட்டதால், ஒரு உடல்வடிவம் இல்லாமல், இந்த எஞ்சிய ஐந்து வருடங்கள் ஐந்நூறு வருடங்களாக நீளக்கூடும்.

வாழ்வு மற்றும் மரணம் குறித்த ஒரு கேள்வி

ப்ரசூன் ஜோஷி: “இந்த உயிர் பிரிவதற்கு முடிவெடுத்துவிட்டது” என்று நீங்கள் கூறும்பொழுது, பிரிந்து செல்வதற்கான தேர்வு ஒருவருக்கு இருக்கிறது என்பதைப்போல் நீங்கள் கூறுகிறீர்கள். நமது அன்புக்குரியவர்கள் பிரிந்து சென்றபொழுது, யாரோ ஒருவர் முடிவு செய்ததாக அல்லது ஏதோ ஒரு நிகழ்வு அவர்களது மரணத்தை முடிவு செய்ததாகவே நாம் பார்க்கிறோம். மற்ற பலவிதமான மரணங்களும் இருப்பதாக அறிகிறோம். சமாதி நிலை மற்றும் விழிப்புணர்வாக மரணிப்பது பற்றியும் கேள்விப்படுகிறோம். அநேகமாக அவை இந்த வகையான மரணம் இல்லை என்றே கருதுகிறேன்.

சத்குரு: பலவிதங்களில் நிகழும் மரணங்கள் பற்றி பார்ப்போம். கருச்சிதைவு ஒருவிதமான மரணம். அடுத்தது, இறந்தே பிறப்பது - இது கரு உருவாகிய பின், ஒரு குறிப்பிட்ட காலம் கடந்து நிகழ்ந்திருக்கலாம். கர்ப்பம் நிகழ்ந்த பிறகு, சாதாரணமாக, ஏறக்குறைய நாற்பதிலிருந்து நாற்பத்தியெட்டு நாட்களுக்கு இடையில், உயிர் நுழைகிறது. எனது தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து நான் இதைக் கூறுகிறேன் - அந்த நேரத்தில்தான் நீங்கள் நுழைகிறீர்கள். காலம்தாழ்த்தி நுழையும் சில உயிர்கள் உள்ளன. நாம் சிறிதளவு பயிற்சி அளித்தால், ஒரு தாயால் இதை உணரக்கூடும். நாற்பத்தியெட்டு நாட்கள் கழிந்த பிறகு ஒரு உயிர் நுழைந்திருப்பதை அவர் உணர்ந்தால், உண்மையிலேயே தனிச்சிறப்பு வாய்ந்த யாரோ ஒருவரை அந்த தாய் பிரசவிப்பார், ஏனெனில் அப்படிப்பட்ட ஒரு உயிர் உள்ளே வருவதற்கு சற்று கூடுதலான காலம் எடுத்துக்கொள்கிறது.

கர்ப்பம் நிகழ்ந்த பிறகு, சாதாரணமாக, ஏறக்குறைய நாற்பதிலிருந்து நாற்பத்தியெட்டு நாட்களுக்கு இடையில், உயிர் நுழைகிறது

கௌதமருடைய தாயைப் பார்த்த யாரோ ஒருவர், “நீங்கள் அற்புதமான ஒரு உயிரை பெற்றெடுக்கப் போகிறீர்கள்,” என்று கூறியதாக நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். யாரோ ஒருவர் யசோதையைப் பார்த்து, "ஒரு அற்புதமான உயிரை நீங்கள் ஈன்றெடுக்கப் போகிறீர்கள்" என்றும் கூறியிருக்கிறார்கள். கர்ப்பம் தரித்த நாற்பத்தியெட்டு நாட்களுக்குப் பிறகு உயிர் நுழைவதை நீங்கள் கவனித்தால், அதன் பொருள், பிரமிக்கத்தக்க ஒரு உயிர் இங்கு வருவதை நீங்கள் எதிர்பார்க்க முடியும்.

மரணமடைதலின் பல்வேறு வழிகள்

கருப்பை என்பது இந்த உடலை உற்பத்தி செய்யும் இடம். ஏதோ ஒரு காரணத்தினால், அந்த உயிருக்கு பொருத்தமாக உடல் தன்னை உருவாக்கிக்கொள்ளவில்லை என்றால், அது பிரசவிக்கப்படுவதற்கு முன்னரே, உயிரானது வெளியேறுவதைத் தேர்வு செய்கிறது - இது இறந்து பிறக்கும் குழந்தை. இல்லை, சில நேரங்களில் ஏதோ நிர்ப்பந்தங்களின் காரணமாக, ஒரு தாய் அந்த குழந்தையை கருச்சிதைவு செய்வதற்கு முடிவெடுக்கலாம். சுமாராக எண்பத்து நான்கு நாட்களில் இருந்து தொண்ணூறு நாட்களுக்கு இடையில்தான், உடலுடனான இந்த உயிரின் உறவு உண்மையில் தொடங்குகிறது. அதுவரை, இந்த கருப்பை பொருத்தமானதுதானா என்று அது பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. இது விழிப்புணர்வாக அல்ல - அந்த உயிருக்கே உரித்தான உந்துதலின்படி, அது பொருந்துகிறதா என்று பார்க்கிறது. பாரம்பரியமாக, நாம் இதனை வாசனைகள் என்று அழைக்கிறோம். உங்கள் வாசனையைப் பொறுத்து, ஒரு பொருத்தமான உடலை நீங்கள் தேடுகிறீர்கள்.

கருத்தரித்தலுக்குப் பிறகு எண்பத்து நான்கில் இருந்து தொண்ணூறு நாட்களுக்கு இடையில், உயிரானது உடலுடன் சரிவரப் பொருந்துகிறது. அப்போதிலிருந்து, அது ஒரு முழுமையான குழந்தை, அதை நீங்கள் தொந்தரவு செய்யக்கூடாது.

இந்த உயிர் உடலுடன் அரைகுறையாக சம்மந்தப்பட்டு இருந்தாலும், தொண்ணூறு நாட்களுக்கு முன் அது வெளியேற முடியும். கருத்தரித்தலுக்குப் பிறகு எண்பத்து நான்கில் இருந்து தொண்ணூறு நாட்களுக்கு இடையில், உயிரானது உடலுடன் சரிவரப் பொருந்துகிறது. அப்போதிலிருந்து, அது ஒரு முழுமையான குழந்தை, அதை நீங்கள் தொந்தரவு செய்யக்கூடாது. அது எவ்விதமாக நிகழ்ந்திருந்தாலும், அதற்கு நீங்கள் ஊட்டமளிக்க வேண்டும். ஏதாவது செய்யப்பட்டே ஆகவேண்டும் என்றால், எண்பத்து நான்கு நாட்களுக்கு முன்னதாகவே அது செய்யப்பட வேண்டும். அதற்கு பிறகு, உடலில் ஏற்கனவே வலுவாக வேரூன்றிய நிலையில் இருக்கும் ஒரு உயிரை ஒருவரும் தொடக்கூடாது.

இறப்பதற்கான மிகச் சிறந்த வழியும், மிக மோசமான வழியும்

அடுத்து, ஏதோ ஒருவிதமான விபத்தினால் இறப்பு நிகழக்கூடும். விபத்து என்றால் உடல் உடைந்துவிட்டது என்பது பொருள். உடல் உடைந்துபோனால், உயிர் வெளியேறுகிறது, ஏனென்றால் அந்த உடலில் தன்னை அது நிலை நிறுத்தமுடியாது. அடுத்ததாக, தற்கொலையினால் இறப்பு நிகழலாம். நடைமுறைக்குப் புறம்பான சூழ்நிலையின் காரணத்தால், யாரோ ஒருவர் தமது உயிரை முடித்துக்கொள்ள தீர்மானிக்கிறார். அடுத்த சாத்தியமாக, அமானுஷ்யமான செயல்முறைகளால் மரணம் சம்பவிக்கிறது. இது இறப்பதற்கான மிக மோசமான வழிகளுள் ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட உடலமைப்புடன் உங்களைப் பொருத்திய தகவல் இணைப்பை அது நிலைகுலையச் செய்கிறது.

அந்த குறிப்பிட்ட உயிரின் உந்துதல்கள், பெற்றோர்கள் வழங்கிய மரபுக்கூறுகளுடன் ஒரு இணைப்பைத் தேடுகின்றன. அந்த இணைப்பு குலைக்கப்பட்டால், மக்களுக்கு அதிபயங்கரமான ஒரு மரணம் நிகழும். அந்த தருணத்தில் அவர்கள் அனுபவிப்பது மட்டும்தான் மோசம் என்பதில்லை, அந்த உயிருக்குள் நிகழ்ந்த இந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அது எடுத்துக்கொள்ளக்கூடிய நெடிய காலக்கெடுவும் அதற்கான காரணமாக இருக்கிறது.

அடுத்ததாக, சமாதி நிலை அல்லது விழிப்புணர்வாக உடலிலிருந்து வெளியேறுவது மரணம் நிகழ்வதற்கான சாத்தியமாக இருக்கிறது. உங்கள் விருப்பப்படி மரணமடைவதற்கான தேர்வு உங்களுக்கு இருக்குமேயானால், நீங்கள் விழிப்புணர்வுடன் வெளியேறுவதற்கு விரும்புவீர்களா அல்லது வேறு எந்த வழியிலாவது வெளியேற விரும்புவீர்களா? மரணம் என்பது உங்கள் வாழ்வில் நீங்கள் செய்யும் கடைசி செயல் என்பதோடு, உங்களால் ஒருமுறை மட்டுமே இறக்கமுடியும். ஆகவே, பாராட்டுக்குரிய கம்பீரத்துடன் அதை நீங்கள் நிகழ்த்த வேண்டும்.