சிறப்புக்கட்டுரை

உங்கள் சக்தியை தீவிரமாகவும், உங்கள் வாழ்க்கையை உற்சாகமாகவும் எவ்வாறு வைத்துக்கொள்வது?

வாழ்க்கை உங்களை நோக்கி எதை வீசினாலும், உங்களை உற்சாகமாவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவை எவை, செய்யக்கூடாதவை எவை என்பதைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். உங்கள் உடலமைப்பில் மிக நுட்பமான சக்திகள் எவ்வாறு செயல்படுகின்றன, அவற்றை உங்களின் நல்வாழ்விற்காக செயல்பட வைக்க நீங்கள் மிகச்சரியாக என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்தும் இங்கு விளக்குகிறார் சத்குரு.


சத்குரு: உருவகமாக கூறுவதென்றால், பௌர்ணமி முழு நிலவு என்பது முழுமையான வாழ்க்கை, மகிழ்ச்சி, அன்பு, பேரானந்தம் மற்றும் காரணமற்ற உற்சாகம் ஆகியவற்றை குறிக்கிறது. ஆனால், முழு நிலவு நாளில் மட்டும் நீங்கள் சிறிதளவு மகிழ்ச்சி, அன்பு அல்லது வேறு ஏதேனும் உணர்வோடு இருக்கிறீர்கள் என்றால், மீதமுள்ள இருபத்தெட்டு நாட்களும் என்ன செய்வீர்கள்?

தன் வாழ்வில் எந்த வகையான சுமைகள், துன்பங்கள் இருந்தாலும் அவற்றை மீறி உற்சாகமாகவும் ஆனந்தமாகவும் ஒருசில மனிதர்களால் எப்படி இருக்க முடிகிறது?அதே சமயம், ஏன் வேறு ஒருவருக்கோ முழு நிலவு போன்ற குறிப்பிட்ட ஒரு சூழல் தேவைப்படுகிறது? என்ன காரணத்தினால் ஒரு நபருக்கு எப்போதும் அவரது உள்நிலை முழு நிலவாக ஒளிர்கிறது, மற்றவர்களுக்கோ அவர்களின் மனநிலை, உணர்ச்சிகள், எண்ணங்கள் மற்றும் உடலில் சுரக்கும் சுரப்பிகளும் ஏற்றத்தாழ்வோடு செயல்படுகிறது?


வாயுக்கள் என்றால் என்ன?

உடலுக்குள் பல வகையான ஓட்டங்கள் நடக்கின்றன. நீங்கள் ஒரு மருத்துவராக இருந்தால், உங்கள் மனநிலை மற்றும் அனுபவங்களை தீர்மானிக்கும் இரத்த ஓட்டம் மற்றும் சுரப்பிகளின் செயல்பாடு என்ற வகையில் நீங்கள் சிந்திப்பீர்கள். ஆனால் அவற்றை காட்டிலும் மிக ஆழமான ஒன்று இருக்கிறது. உங்கள் உடல் அமைப்பில், சக்தி மற்றும் பல்வேறு வாயுக்களின் ஓட்டத்துக்கு எந்தவித தடையும் இருக்கக்கூடாது. உடலில், முக்கியமாக தலைப்பகுதியில் முக்கியமான வழித்தடங்கள் உள்ளன. இந்த வழித்தடங்கள் அடைபட்டால், உங்களை நீங்கள் உற்சாமாக வைத்திருப்பது என்பது பெருமுயற்சியாக இருக்கும்.

உங்கள் உடல் அமைப்பில், சக்தி மற்றும் பல்வேறு வாயுக்களின் ஓட்டத்துக்கு எந்தவித தடையும் இருக்கக்கூடாது.

"வாயு" என்ற வார்த்தைக்கான பொருள் "நகர்வது"; அந்த வார்த்தை காற்றையும் குறிக்கிறது. உடலளவில், இது ஐந்து அடிப்படையான வாயுக்களாக வெளிப்படுகிறது. நீங்கள் இதை இன்னும் ஆழமாக அறிந்துகொள்ள விரும்பினால், இந்த எண்ணிக்கை 10 என ஆகும். இதன் ஒவ்வொரு நுணுக்கத்தையும் நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால், இது 84 என்றாகும். ஆனால் அவை மிக சூட்சுமமானவை. பல பிறவிகள் செலவிட்டு கூர்ந்த கவனத்துடன் இருந்தால் இவற்றை நீங்கள் கண்டறியலாம். பஞ்ச வாயுக்கள் அல்லது பஞ்ச பிராணன்களை நீங்கள் சரிவர கையாண்டால், மற்றவை அவற்றை தொடரும்.

பஞ்ச வாயுக்களின் முக்கியத்துவம்

பஞ்ச வாயுக்கள் என்பவை - பிராண வாயு, சமான வாயு, அபான வாயு, உதான வாயு மற்றும் வியான வாயு. உங்கள் ஜீரண நெருப்பு எரிவதற்கு, இரத்த ஓட்டம் நிகழ்வதற்கு, உடலில் ஊட்டச்சத்து பரவுவதற்கு மற்றும் உயிரணுக்களில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கு பஞ்ச வாயுக்களின் ஓட்டம் உங்களுக்கு தேவை. இந்த ஓட்டத்தை நீங்கள் நிறுத்தினால், பின்னர் இந்த உடலால் உங்கள் உயிரை தக்க வைக்க முடியாது.

பஞ்ச வாயுக்களின் மீது ஆளுமை கொண்ட ஒருவருக்கு மட்டுமே அளப்பரிய மன, உடல் மற்றும் சக்திநிலை வலிமை கிட்டும்.

வழித்தடங்கள் முழுமையாக துப்புரவாக இல்லாமல் இருந்தால், பிறகு இந்த வாயுக்கள் தேக்கமடைந்து மந்தநிலையை உருவாக்கும். உடலமைப்பில் பிராண சக்தியின் ஓட்டம் நடக்காமல், துடிப்பாக இருப்பது என்பது சாத்தியமாகாது. குறிப்பிட்ட அளவு புரதச்சத்து மற்றும் மாவுச்சத்தை உட்கொள்கிறீர்கள் என்பதாலேயே நீங்கள் துடிப்பானவராக இருக்க இயலாது. இதனால் நீங்கள் ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள் என்றுகூட சொல்ல முடியாது. பஞ்ச பிராணன்கள் தடையின்றி ஓடாமல் போனால் உங்களுக்கு சக்தி, கவனம் மற்றும் வாழ்வின் உற்சாகம் அனைத்தும் குறைவாக இருக்கும்.

இந்திய கலாச்சாரத்தில், வாயு எப்போதும் வலிமை என்றே பார்க்கப்படுகிறது. பீமன் மற்றும் அனுமன் இருவருமே வாயுவின் புதல்வர்கள். இதில் நிறைய குறியீடுகள் உள்ளன. ஆனால் அனைத்துக்கும் மேலாக, பஞ்ச வாயுக்களின் மீது ஆளுமை கொண்ட ஒருவருக்கு மட்டுமே அளப்பரிய மன, உடல் மற்றும் சக்திநிலை வலிமை கிட்டும்.

துடிப்பான வாழ்க்கைக்கு ஏன் பிராண வாயுவே ஆதாரம்

வாயுக்களில் முதன்மையானதும் முக்கியமானதுமான அம்சம் பிராண வாயு. மற்ற வாயுக்கள் அனைத்தும் வேறுவிதமான செயற்பாடுகளை கொண்டிருக்கின்றன, அவை சமமான அளவு முக்கியத்துவம் கொண்டவை தான். ஆனால் இந்த பிராண வாயு என்பது மிக அடிப்படையான ஒன்று. பிராண வாயு, சுவாசம் மற்றும் எண்ணங்கள் குறித்த செயல்பாட்டிற்கு பொறுப்பானது. நீங்கள் எண்ணும் விதத்தில் தான் நீங்கள் இருக்கும் விதம் இருக்கிறது என்கிற அளவுக்கு பலரும் கூறியிருக்கிறார்கள். நாம் அதை ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், மேலோட்டமாக பார்த்தால் இப்போது நீங்கள் இருக்கும் விதம் நீங்கள் சிந்திக்கும் விதத்தால் உருவாகியுள்ளது. நீங்கள் உங்கள் எண்ண ஓட்டத்தை சரிசெய்ய நினைத்தால், அதனால் சில பலன்களை அடைய முடியும். ஆனால் நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள் என்பதை சரிசெய்தால், உங்களுக்கு 100% பலன் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் நீங்கள் ஒரு முழு நிலவைப் போல இருப்பீர்கள். இது நிகழ்வதற்கு, நீங்கள் எவ்வாறு சுவாசிக்கிறீர்கள் என்பதும், உங்கள் பிராணன் எந்த அளவு செயல்பாட்டில் உள்ளது என்பதும் மிக முக்கியமாகிறது.

நீங்கள் சக்தி சலன கிரியாவை 1008 நாட்கள், ஒருநாள் கூட இடைவெளி விடாமல் தொடர்ந்து பயிற்சி செய்தால், அதன் பிறகு நீங்கள் அயற்சி என்பதையே அறியமாட்டீர்கள்.

உங்களின் சுவாசமானது, உங்கள் தொண்டைக் குழி மற்றும் தொப்புளுக்கு இடையே நிகழும் வகையில் நீங்கள் சுவாசிக்க கற்றுக்கொண்டால், உங்களின் பிராண வாயு தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ளும். இவ்வாறு நிகழ்கையில், உங்கள் எண்ணங்களில் தெளிவு உண்டாகும். மேலும் கூடுதல் நன்மையாக உங்களின் வாசனையை நுகரும் உணர்வு மிகத்துல்லியமாக ஆகும். சக்தி சலன கிரியா பயிற்சியை நீங்கள் கற்றிருந்தால், நிச்சயமாக இது விஞ்ஞான முறைப்படி செய்யும் முறையாகும். நீங்கள் சக்தி சலன கிரியாவை 1008 நாட்கள், ஒருநாள் கூட இடைவெளி விடாமல் தொடர்ந்து பயிற்சி செய்தால், அதன் பிறகு நீங்கள் அயற்சி என்பதையே அறியமாட்டீர்கள்.

சுவாசிப்பதற்கான சரியான வழிமுறை

உங்கள் வயிற்றுப் பகுதி முழுவதிலும் உங்கள் சுவாசம் நடந்தால், உங்கள் உடலில் மந்தநிலை உருவாகும். சில குறிப்பிட்ட ஆன்மீகப் பள்ளிகள், குறிப்பாக தூரக்கிழக்கு தேசங்களில், மந்தநிலையை அவர்களின் அனுகூலத்திற்கு உபயோகிப்பார்கள். அவர்கள் தங்கள் அடிவயிறு வழியாக சுவாசிப்பதன் மூலம், அமர்ந்தால் எழுந்திருக்க தேவைப்படாத வண்ணம் ஒரு நிலை உருவாகும். நீங்கள் அப்படியே வெறுமனே அமர்ந்திருக்க முடியும். இது அந்த கலாச்சாரத்தில் மிக தெளிவாக வெளிப்பட்டுள்ளது. நீங்கள் இந்தியாவில் கௌதம புத்தரின் உருவத்தைப் பார்த்தால், அவர் மிகவும் துடிப்பான உடலோடு இருப்பார். விழிப்புணர்வின் உருவாக வாழ்ந்த ஒரு மனிதர், தேவைக்கு மேல் ஒரு கவளம் உணவைக்கூட உண்ணமாட்டார். ஆனால் தூரக்கிழக்கு ஆசிய கலாச்சாரங்களில், புத்தருக்கு பெரிய வயிறு இருப்பதை நீங்கள் பார்க்க முடியும் - அவர் மிக ஆனந்தமாக இருப்பார், ஆனால் சுறுசுறுப்பாக அல்ல.

குறிப்பிட்ட உணவு பழக்கங்கள் எவ்வாறு பிராண வாயுவின் ஓட்டத்தை தடை செய்கிறது

நீங்கள் குறிப்பிட்ட உணவு வகைகளை - அதிகளவு கிழங்கு வகைகளை உண்டால் - நீங்கள் தொப்புளுக்கு கீழே வாயுவை உருவாக்குவீர்கள். தொப்புளுக்கு கீழே நீங்கள் வாயுவை உருவாக்கத் துவங்கினால், தொப்புள் மற்றும் தொண்டைக்குழிக்கு நடுவே அதன் இயல்பில் உங்கள் பிராணன் சரிவர இயங்காது, உங்கள் உடலின் சுறுசுறுப்பு குறையும். தியானம் செய்பவர்கள், மாணவர்கள் மற்றும் மனநிலையில் கவனத்தோடு நீண்ட நேரம் விழிப்புடன் இருக்கவேண்டிய சூழலில் உள்ளவர்கள் அத்தகைய பொருட்களை உண்ணக்கூடாது என்பதற்கு இது ஒரு காரணம்.

தொப்புளுக்கு கீழே நீங்கள் வாயுவை உருவாக்கத் துவங்கினால், தொப்புள் மற்றும் தொண்டைக்குழிக்கு நடுவே அதன் இயல்பில் உங்கள் பிராணன் சரிவர இயங்காது, உங்கள் உடலின் சுறுசுறுப்பு குறையும்.

மற்றொரு காரணம், முட்டாள்கள் தாங்கள் மிக நவீனமாக மாறுவதாக எண்ணும்போது, அவர்களின் உணவு பழையதாக ஆகிறது. புதிதாக தயார் செய்த உணவு நாகரிகம் அற்றவர்களுக்கானது என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இது உலகெங்கிலும் நிகழ்கிறது. நீங்கள் மிக நாகரிகமானவராக இருந்தால், கட்டாயம் ஒரு பல்பொருள் அங்காடிக்கு சென்று, அங்கு பிளாஸ்டிக் டப்பா அல்லது ஸ்டீல் மற்றும் அலுமினியம் கேனில் அடைக்கப்பட்டு இருக்கும் உணவை வாங்கி, ஒரு மைக்ரோவேவ் அவன்-ல் சூடுபடுத்தி, பிறகு உண்ண வேண்டும். இத்தகைய உணவு குறைந்தபட்சம் 3 மாதங்களாவது பழையதாக இருக்கும். மக்கள், "இல்லை, அது குளிர்சாதனப் பெட்டியில்தான் இருந்தது. மேலும் அவர்கள் அது கெட்டுப் போகாமல் இருக்கும் வண்ணம் பதப்படுத்தும் பொருட்களை சேர்த்துள்ளார்கள்" என்கிறார்கள். இது இரட்டை தவறு.

உங்கள் சுவாசம், எண்ணங்கள் மற்றும் அதிர்வை மேம்படுத்த எவ்வாறு உண்ண வேண்டும்

யோக கலாச்சாரத்தில் நீங்கள் எதை சமைத்தாலும், அடுத்த ஒன்றரை மணிநேரத்திற்குள் நீங்கள் அதை உண்டுவிட வேண்டும். சில குறிப்பிட்ட உணவு வகைகளுக்கு நான்கு மணிநேரம் வரையிலும் பரவாயில்லை. ஆனால் அதற்கு பிறகு, நீங்கள் அந்த உணவை தொடக்கூடாது. ஏனெனில் இதனால் உங்கள் உடலமைப்பில் நீங்கள் வாயுக்களை உருவாக்குவீர்கள். நீங்கள் உங்கள் வயிற்றில் வாயுக்களை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், உங்கள் உடலமைப்பில் பிராண வாயுவிற்கு எதிராக செயல்படும் வாயுக்களையும் உருவாக்குவீர்கள். இதனால் உங்கள் சுவாசம், சிந்திக்கும் செயல்முறை மற்றும் வாசனை உணர்வு நாளடைவில் குறைந்துவிடும். இவை மூன்றும் நீங்கள் துடிப்பான மனிதராக இருப்பதற்கு மிக முக்கியமானவை.