சுய அடையாளம் மாறும்பொழுது, அதிசயங்கள் நிகழ்கின்றன. இந்த உண்மையை நிலைநிறுத்தும் சான்றாக, படுபாதகச் செயல்களை இழைத்தற்காக தண்டனை பெற்று, தன்னிலை மாற்றத்தின் புதிய பாதையைத் தேர்வு செய்த பலரும் வாழும் உதாரணங்களாக திகழ்கிறார்கள். குற்றவாளிகள் வாழ்வில் மாயம் செய்த ஈஷா யோகாவின் மந்திரத் தொடுதலுக்கு நன்றிகள்.
அவப்பெயருடன், சட்டத்துக்குப் புறம்பானவராக இருந்த ஒருவரிடம், தன்னிலை மாற்றம் ஏற்படுத்தி வால்மீகி முனிவராக தீட்சை வழங்கினார் நாரத முனிவர். அதைப்போன்ற ஒரு மாற்றம் ஈஷாவினால் அரங்கேறியுள்ளது. 'அண்ணா நகர் ரமேஷ்' என்றழைக்கப்பட்ட ஒரு குற்றவாளி, தனது வாழ்வின் அடித்தளத்தையே மாற்றியமைத்து, இப்பொழுது 'எழுத்தாளர் ரமேஷ்' என்று மதிப்புடன் அழைக்கப்படுகிறார். வாருங்கள், சிறையில் பூத்த மலரை சந்திப்போம்.
சிறைவாசிகளுக்குப் புத்துணர்வூட்டும் வகையில் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணம் கொண்ட சிறை அதிகாரி ஒருவர், சிறைச்சாலையில் யோகா வகுப்புகளை வழங்க முடிவு செய்தார். முதன்முதலாக 1999/2000 ஆண்டுகளில் குற்றவாளிகளுக்காக யோகா வகுப்புகளை மதுரை சிறைச்சாலையில் ஈஷா நடத்தியபொழுது, ஒரு அதிசயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.