யோகா & ஞானம்

ருத்ராட்சம்: எளிமையான விதைகளில் வேர்பிடித்துள்ள புனிதமும் சக்தியும்

கடந்த வருட மஹாசிவராத்திரி அன்று ஆதியோகி முன்னிலையில் சத்குருவால் பிரதிஷ்டை செய்து சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சங்களைப் பெற்ற மக்கள் சமீபத்தில் ஆன்லைனில் சத்குருவுடன் ருத்ராட்ச தீட்சை செயல்முறையில் பங்கேற்றனர். அப்போது சத்குரு, ருத்ராட்சம் அணிவதன் முக்கியத்துவம் மற்றும் ருத்ராட்சத்தைப் பராமரிப்பதற்கான குறிப்புகளை வழங்கினார். இந்த 2022ம் ஆண்டு மஹாசிவராத்திரி அன்றும் சத்குரு 5 லட்சம் ருத்ராட்சங்களை பிரதிஷ்டை செய்ததை நாம் அறிவோம். இது விரும்பும் மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. நீங்கள் இதில் எப்படி பயனடைய முடியும் என்பதை இந்த பகுதியில் அறியலாம்.

சத்குரு: ருத்ராட்ச மரங்கள் ஒரு குறிப்பிட்ட உயரமுள்ள இடங்களில், குறிப்பாக இமயமலை பகுதிகளில் வளர்கின்றன. தென்னிந்தியாவிலும் அவை வளர்கின்றன, ஆனால் அவை அதே தரத்தில் இல்லை. ருத்ராட்ச மரத்தின் விதைக்கு ஒரு தனித்தன்மையான அதிர்வு உள்ளது. தன்னளவில் இந்த உடல் முழுமையான ஒரு உயிராக இயங்க முயற்சிக்கும் ஒருவருக்கு இது உறுதுணையாக இருக்கிறது. உங்கள் சக்தியை ஒருங்கிணைத்து, அதை உங்களுக்கு ஒரு கவசமாக அமைப்பதையே இது குறிக்கிறது. நீங்கள் எங்கிருந்தாலும், எந்த விதமான சூழ்நிலையில் இருந்தாலும் அல்லது யாருடன் இருந்தாலும், நீங்கள் உங்கள் சக்தியின் பாதுகாப்பு வளையத்திற்குள் நலமாக இருப்பீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, நீங்கள் ஈடுபடுவதில் திறம்பட செயல்படுவீர்கள்.

உங்கள் சக்தியை ஒருங்கிணைக்கும் விதை

வெளிசூழ்நிலைகளால் அலைக்கழிக்கப்படும் ஒரு மனிதர், அவர் உண்மையிலேயே செய்ய விரும்பாத, தேவையற்ற செயல்களை வாழ்க்கையில் செய்யும் நிலைக்கு தள்ளப்படக்கூடும். நீங்கள் உங்களுக்கு நிர்ணயித்துள்ள இலக்கை நோக்கி செல்ல விரும்பினால், உங்கள் சக்தியை ஒருங்கிணைத்து, உங்களது சுய கவசமாக அமைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியமாக இருக்கிறது. இல்லையெனில், சுற்றியுள்ள வாழ்வின் எந்த ஒரு அம்சம் வேண்டுமானாலும் உங்களை அதன் போக்கில் இழுத்துச் செல்லவோ, இடையூறு ஏற்படுத்தியோ, தொந்தரவு செய்தோ உங்கள் பாதையில் இருந்தே உங்களை விலக்கவும் கூடும்.

நீங்கள் ருத்ராட்சத்தை அணிந்ததும், உங்கள் உடலளவில், எண்ணங்களில், உணர்ச்சியளவில் மற்றும் சக்தியளவில் ஒரு குறிப்பிட்ட தூய்மை பராமரிக்கப்பட வேண்டும். ஏனெனில், இன்னும் விழிப்புணர்வான வாழ்க்கைக்கு உங்கள் சக்தியை இது ஒருங்கிணைக்கும்.

ருத்ராட்சத்தில் உள்ள இயற்கையான அதிர்வு உங்களது சுய சக்தியை ஒருங்கிணைக்க உங்களுக்கு உதவுகிறது. இதனாலேயே ருத்ராட்சம் உங்களுக்கு மட்டுமேயான ஒரு தனிப்பட்ட அம்சம். உங்கள் நண்பர்களுக்குள் பரஸ்பரம் மாற்றிக்கொள்ள இது ஏற்றதல்ல. நீங்கள் ருத்ராட்சத்தை அணிந்ததும், ஏதோ ஒரு வகையில், மெதுவாக அது உங்கள் உடலில் ஒரு அங்கமாகிறது. உங்கள் வாழ்வில் நிகழக்கூடிய பல்வேறு தாக்கங்களில் இருந்து தற்காத்துக்கொள்ளும் ஒரு மெல்லிய கவசத்தை நீங்களே அமைத்துக்கொள்ள இது உங்களுக்கு உதவுகிறது.

உங்களுக்கு ஏற்ற ருத்ராட்சம் எது?

ருத்ராட்சங்களில் பல விதங்கள் இருக்கின்றன. பொதுவாக, குடும்ப சூழ்நிலைகளில் இருப்பவர்கள் அல்லது சமூக வாழ்வில் இருப்பவர்கள் பஞ்சமுகி என அழைக்கப்படும் ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சததை அணிவது சிறந்தது. மற்ற ருத்ராட்சங்கள் மற்ற விதமான மக்களுக்கு ஏற்றவை. பன்னிரண்டு வயதுக்கு குறைவானர்கள் ஆறு முகம் கொண்ட ஷண்முகி ருத்ராட்சம் அணியலாம். இது அவர்கள் அமைதியாகவும், கூர்மையான கவனத்துடன் இருக்கவும் உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக, பெரியவர்களிடம் இருந்து சரியான கவனம் அவர்களுக்கு கிடைக்கும் - ஒரு குழந்தையாக இருக்கையில் இது மிக முக்கியமானது. ஒன்று முதல் பதினான்கு முகம் வரை ருத்ராட்சங்கள் உள்ளன.

சாதாரணமாக சமூக சூழலில், குடும்ப சூழ்நிலையில் உள்ள மக்கள் அனைவரும் ஐந்து முக ருத்ராட்சத்தைப் பயன்படுத்த வேண்டும். மற்ற வகையான ருத்ராட்சம் அணிவது என்றால் அது உங்களுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும். நீங்களாகவே ஏதாவது ஒன்றை அணிந்துகொள்வது முறையல்ல. உங்கள் உடலமைப்புடன் அது எப்படி எதிரொலிக்கும் என்பதைப் பற்றி அறிந்த ஒருவரே உங்களுக்கு ருத்ராட்சத்தை வழங்க வேண்டும். ஏதோ ஒரு வகையில் உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எதுவாக இருந்தாலும், அது எப்போதுமே கவனத்துடனும் பொறுப்புடனும் கையாளப்பட வேண்டும். ஏனெனில் நேர்மறை மற்றும் எதிர்மறையான விளைவுகள் என்பது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது - நாணயம் எந்த பக்கமாக விழுகிறது என்பதைப் பொறுத்து அது மாறுபடும். இதுதான் வாழ்வின் இயல்பு.

உங்கள் ருத்ராட்சத்தைப் பராமரித்தல்

உங்கள் ருத்ராட்சத்தை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பது மிக முக்கியமானது. தயவுசெய்து ருத்ராட்சத்தை தரையிலோ, உலோகத்தின் மீதோ அல்லது கல்லின் மீதோ வைக்காதீர்கள். கீழே வைக்க வேண்டியிருந்தால், பருத்தி அல்லது பட்டுத்துணி மீது வைக்கலாம். ருத்ராட்சத்தை நீங்கள் பெற்றதும், அதை ஒரு கயிற்றில் கோர்த்து கழுத்தில் அணிவது சிறந்தது. நீங்கள் ருத்ராட்சத்தை அணிந்ததும், நீங்கள் விடுதலை அடையும் பாதையில் இருப்பதை உங்களுக்கும் உலகிற்கும் அறிவிக்கிறீர்கள். இது வெறும் அடையாளம் அல்ல, இது ஒரு கருவி. எந்த கருவியாக இருந்தாலும், நாம் பயன்படுத்தும் அளவிற்கே அது வேலை செய்யும். நீங்கள் ருத்ராட்சத்தை அணிந்ததும், உங்கள் உடலளவில், எண்ணங்களில், உணர்ச்சியளவில் மற்றும் சக்தியளவில் ஒரு குறிப்பிட்ட தூய்மை பராமரிக்கப்பட வேண்டும். ஏனெனில், இன்னும் விழிப்புணர்வான வாழ்க்கைக்கு உங்கள் சக்தியை இது ஒருங்கிணைக்கும்.

இனிமையும் விழிப்புணர்வும் தரும் ஆசிர்வாதம்

விழிப்புணர்வு என்பதற்கு அடிப்படையான அர்த்தம், நீங்கள் எப்படி இருக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதேவிதமாக நீங்கள் இருப்பது. மற்றவர்கள் எதிர்பார்ப்பது போல நீங்கள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ, அதேவிதமாக நீங்கள் இருக்கிறீர்கள். குறைந்தபட்சமாக இதுவாவது ஒவ்வொருவரின் வாழ்விலும் நிகழ வேண்டும். நீங்கள் விரும்பும்படி நீங்கள் இருப்பதற்கு இந்த ருத்ராட்சம் பக்கபலமாக திகழ வேண்டும் என்பது எனது ஆசையும் ஆசிர்வாதமும். நல்லவேளையாக, ஆனந்தமாக இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொருவருக்குள்ளும் ஆழமாக இருக்கிறது.

இன்னும் இனிமையான மனிதராக இருக்கவே நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். உங்கள் உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்தி இனிமையாக இருந்தால், உங்களைச் சுற்றிலும் இனிமையை உருவாக்குவது என்பது இயல்பான ஒரு வெளிப்பாடாக நடக்கும். நீங்கள் ஒரு இனிமையான மனிதராகவும், உங்களைச் சுற்றியுள்ள உலகம் உங்கள் இருப்பினாலேயே இனிமையடைய வேண்டும் என்பதுமே எனது ஆசையும் ஆசிர்வாதமும்.

மஹாசிவராத்திரி நாளில் ஆதியோகி முன்னிலையில் சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சத்தை உங்கள் இல்லத்திற்கு கொண்டு வரும் வாய்ப்பை வழங்குகிறது ருத்ராட்ச தீட்சை. இப்போதே பதிவு செய்யுங்கள்: isha.co/rd