மண்ணும் யோகாவும்

மண் மீதான அக்கறையும் மண்ணை காக்கும் உணர்வும் எழ அடிப்படையாகும் யோக உணர்வு

மனிதகுலம் தற்போதைய காலகட்டத்தில் எதிர்கொள்ளும் பெரும் சவாலையும், இந்த பிரச்சனையின் ஆணிவேர் பற்றியும் பேசும் சத்குரு, மனித விழிப்புணர்வுக்கு மட்டுமே இந்த பேரபாயம் நிகழாமல் தடுத்து நிறுத்தும் வல்லமை இருக்கிறது என்பதையும் நமக்கு விளக்குகிறார்.

கேள்வி: இன்றைய உலகம் இருக்கும் நிலை பற்றி உங்களுக்கு கவலையளிப்பது எது?

சத்குரு: நான் எதற்கும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் வகையை சேர்ந்தவனில்லை. இந்த உலகம் எந்த விதமான அபாயத்திலும் இல்லை - ஒரு சில விஷயங்களை கவனமாக பார்த்துக்கொள்ளாவிட்டால் மனிதர்கள்தான் மிக மோசமான அனுபவங்களை கடந்து செல்ல நேரும். அந்த அடிப்படையில் பார்க்கும்போது, இந்த உலகின் மேற்பரப்பு மண் கவனிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. நாம் உட்பட இந்த உலகின் 87% உயிரினங்கள் வாழ்வதற்கு இந்த மண்ணின் மேற்பரப்பே பொறுப்பு. இந்த மேற்பரப்பு மண்ணின் கனிமச்சத்து மற்றும் இதற்குள் எந்தளவு உயிரோட்டம் நடக்க வேண்டும் என்பதில் பெரும் குறைபாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த 50 முதல் 70 ஆண்டுகளில் மேற்பரப்பு மண்ணின் பல்லுயிர்கள் வெகுவாக குறைந்து வருகிறது. மண்ணின் மேற்பரப்பை நாம் கவனித்துக்கொள்ள ஒரே வழி, போதுமான அளவு இயற்கை சத்து இடுவதுதான். இது மரங்களின் இலை கழிவு மற்றும் கால்நடைகளின் கழிவில் இருந்து மட்டுமே கிடைக்கிறது.

நாம் இந்த பிரபஞ்சத்திற்கு மையம் அல்ல

இந்த உலகில் உள்ள பூச்சி இனங்கள் அனைத்தும் மறைந்துவிட்டால், இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களும் அடுத்த 4 முதல் 6 ஆண்டுகளில் முடிவடையும். அதுவே, புழுக்கள் அனைத்தும் காணாமல் போனால், 18 முதல் 24 மாதங்களில் நீங்களும் நானும் உட்பட எல்லா உயிர்களும் மறைந்து விடுவோம். இதுவே, நுண்ணுயிர்கள், வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் மறைந்தது என்றால், அப்போதே எல்லா உயிர்களும் மறைந்துவிடும். ஆனால் மனிதர்கள் அனைவரும் காணாமல் போய்விட்டால், இந்த பூமி செழிக்கும். இந்த பிரபஞ்சத்திற்கு நாம் மையம் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. மனித மனங்களில் நுழைந்துள்ள மிக நாசகரமான ஒரு சிந்தனை இது.

"ஒவ்வொரு உயிரினமும் அதனளவில் முழுமையான ஒரு வாழ்க்கையை வாழ்கிறது. நமக்கு சேவை புரிவதற்காக அவை இங்கில்லை."
- சத்குரு

மதங்களும் தத்துவங்களும், இந்த பூமியில் உள்ள மற்ற உயிர்கள் அனைத்தும் மனிதனுக்கு சேவை செய்யவே இங்குள்ளது, ஏனென்றால் மனிதன் 'கடவுளின் சொந்த உருவத்தில்' படைக்கப்பட்டிருக்கிறான் என்று பரப்பி வருகின்றன. நீங்கள் வேண்டுமானால் ஒரு எறும்பு புற்றிற்கு சென்று, அங்குள்ள எறும்புகளிடம், "நீங்கள் மனிதகுலத்திற்கு சேவை செய்ய விரும்புகிறீர்களா?" என்று கேட்டுப் பாருங்கள். உங்கள் கால்களில் ஏறி வந்து அவை உங்களுக்கு பாடம் புகட்டும். ஒவ்வொரு உயிரினமும் அதனளவில் முழுமையான ஒரு வாழ்க்கையை வாழ்கிறது. நமக்கு சேவை புரிவதற்காக அவை இங்கில்லை. ஆனால் அவைகளின் இருப்பின் இயல்பே நமது இருப்புக்கு சேவையளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

நாம் அவைகளின் மீது நன்றியுள்ளவர்களாக, மதிப்புள்ளவர்களாக, அக்கறையுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் நம்மிடம் ஆக்கவும் அழிக்கவும் ஒரு திறன் உள்ளது. இப்போது நாம் பெரும்பாலும் நம்மிடமுள்ள அழிக்கும் திறனையே பயன்படுத்துகிறோமே தவிர உருவாக்கும் திறனை அல்ல.

ஏன் இயற்கையிடமிருந்து வெகுவாக விலகி இருக்கிறோம்?

இது ஏனெனில், பெரும்பாலான மக்களுக்கு இந்த பூமி பற்றிய அனுபவம் இல்லை. அவர்களது மொத்த அனுபவமும் எப்போதும் 65 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிலேயே உள்ளது, ஏனெனில் அந்த அளவில்தான் 'ஏசி' இயங்குகிறது. அவர்கள் அறிந்திருப்பதெல்லாம் அவர்கள் வாழும் நான்கு சுவர்கள் மட்டுமே. நீங்கள் இப்படி வாழ்ந்தால், மனதளவிலும், உடலளவிலும் நீங்கள் எளிதாக உடைந்துவிடும் நிலை ஏற்படுகிறது. யார் ஒருவர் உண்மையிலேயே வாழ்கிறாரோ, அவர் இன்னும் இயற்கையானவராக, இன்னும் உயிரோட்டமாக இருக்கிறார். துரதிருஷ்டவசமாக, பெரும்பாலான மனிதர்கள் தங்களது சமுதாய மற்றும் மன ஏற்பாடுகளை தங்கள் இருத்தல் தொடர்புடைய உண்மைகள் என்று தவறாக புரிந்துகொண்டு விடுகிறார்கள்.

மழை, சூரியன், வெள்ளம், நதிகள், சமுத்திரங்கள் - இவ்வளவுதான் மொத்த உலகமும். நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் உங்கள் மனரீதியானவை மட்டுமே, அது ஒவ்வொரு நாளும் மாறக்கூடும். நீங்கள் விரும்பினால், நீங்கள் இப்போதே பத்து விதமான மனநிலைகளை அனுபவிக்க முடியும், ஆனால் பெரும்பாலான மக்கள் ஒரேயொரு காட்சி புலத்தில் சிக்கியிருக்கிறார்கள்.

உங்களுக்கு 12 வயதாக இருக்கும்போது என்ன நடந்தது, உலகம் பற்றிய உங்கள் பார்வை எப்படி இருந்தது, அப்போது உங்களுக்கு எது மிக முக்கியமானதாக இருந்தது; உங்கள் 18, 30, 40, 50, 60 வயதுகளில் என்ன நிகழ்ந்தது - இவை எல்லாவற்றையும் ஐந்து நிமிடங்களுக்குள் அனுபவித்து கடக்க முடியும் - உங்களுக்கு விருப்பமிருந்தால். ஐந்து நிமிடங்களுக்குள் 60 வருட அனுபவத்தை கடந்து விரைவாக பரிணமிக்க தேவையான நுண்ணறிவு கட்டமைப்பு ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உள்ளது. விழிப்புணர்வாக பரிணமிப்பது என்றால் இதுதான்.

யோகா ஒரு வாழும் அனுபவமாக

இந்தியாவில் தற்போது பெரும் இயக்கங்களாக வளர்ந்துள்ள பசுமைகரங்கள் திட்டம், நதிகளை மீட்போம், காவேரி கூக்குரல் மற்றும் தற்போது துவங்கியுள்ள விழிப்புணர்வான உலகம் என எல்லாவற்றிற்கும் துவக்கம் இப்படித்தான் இருந்தது. உதாரணத்திற்கு, நமது தென்னிந்திய பகுதிகளில் போதுமான பசுமை பரப்பு இல்லை என்பதை கண்டோம். 33 சதவீத பசுமை பரப்பு இருக்க வேண்டும் என்பது நமது தேசிய விழைவாக இருந்தாலும், அப்போது 16% மட்டுமே பசுமை பரப்பு இருந்தது. ஆரம்பத்தில் மக்களிடம், "இதை பாருங்கள், நாம் மரங்கள் நடவேண்டும்," என பேசி முயற்சி செய்தோம். ஆனால் யாரும் கவனம் கொடுக்கவில்லை. எனவே பகல் 11 மணிக்கு அவர்களை வெட்டவெளியில் வெயிலில் அமர வைத்தேன். பிறகு அவர்களை மரத்தின் நிழலுக்கு அழைத்ததும் அனைவரும் பெரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

யோகாவின் மிக முக்கியமான அம்சம் இதுதான் - அனைத்தையும் தன்னில் ஒரு பாகமாக பார்ப்பதும், வாழ்க்கை எவ்வளவு மகத்தானது என்பதையும் அனுபவபூர்வமாக உணர்வது.

அப்போது நாம் ஏற்படுத்திய குறிப்பிட்ட செயல்முறை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அப்போது மக்களிடம், "வெறுமே சுவாசித்து பாருங்கள் - எது உங்கள் உள்மூச்சாக இருக்கிறதோ, அது மரத்தின் வெளிமூச்சாக இருக்கிறது. எதை மரம் வெளிமூச்சாக வெளியிடுகிறதோ, அதுவே உங்களது உள்மூச்சாக இருக்கிறது," என்று கூறினோம். இதை ஒருவருக்குள் வாழும் அனுபவமாக செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட செயல்முறை இருக்கிறது. இதை ஒருமுறை அவர்கள் அமர்ந்து அனுபவபூர்வமாக பார்த்ததும், அவர்களது ஒரு பாதி நுரையீரல் அங்கே மரத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்தனர். இப்போது அவர்கள் மரம் நடுவதை உங்களால் தடுக்க முடியாது, ஏனென்றால் அது அவர்களின் நுரையீரல் என்பது இப்போது அவர்களுக்கு தெரிந்துவிட்டது.

யோகாவின் மிக முக்கியமான அம்சம் இதுதான் - அனைத்தையும் தன்னில் ஒரு பாகமாக பார்ப்பதும், வாழ்க்கை எவ்வளவு மகத்தானது என்பதையும் அனுபவபூர்வமாக உணர்வது. உயிருக்கு ஆதரவாகவும், பலனளிக்கும் விதத்திலும் மனிதர்கள் இருக்க வேண்டும் என்றால் மக்கள் ஒவ்வொருவருக்கும் இந்த அனுபவம் நிகழ வேண்டும்.

இக்கணமே செயல்படுவோம்!
savesoil.org/join