இசையில் மூழ்கினேன் – எங்கேயும், எப்போதும்
22 வயதுடைய மா நடாஷா, மிகச் சிறிய வயதிலேயே இசைக்குள் பயணப்பட்டார். அவரது பெற்றோராகிய சேகர் மற்றும் சாந்தி இருவரும் இசையின்பால் பெருவிருப்பமும், திறனும் கொண்டவர்களாக, சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் கச்சேரிகளில் வழக்கமாக பங்கு பெறுகின்றனர். “வீட்டில் எப்போதும் இசை நிறைந்திருக்கும் சூழலாக இருந்ததால், நான் இயற்கையாகவே அதற்கு நாட்டமுடன் இருந்தேன். நான் என் பெற்றோரால் தாக்கத்துக்கு உள்ளானதாக இல்லை; அது ஒரு இயல்பான விருப்பமாகவே என்னுள் எழுந்தது,” என்று மா நடாஷா பகிர்ந்துகொள்கிறார்.
அவர் 2008 ல் ஈஷா சம்ஸ்கிருதிக்கு மாறுவதற்கு முன்பே, அவரது பெற்றோர்கள் 2005ல் “ஹோம் பேரண்ட்ஸ்” ஆக ஈஷா ஹோம் ஸ்கூலில் இணைந்தனர். “அப்போது நடைபெற்ற வகுப்புகளுக்கு முறைப்படியான கட்டமைப்பு இல்லை. வகுப்புகள் இயற்கை சூழலில், வெளி இடங்களில், ஓடைகளுக்கு அருகில், மரங்களின் கீழ், அல்லது எப்போதேனும் நடக்கும் காம்ப் பயணங்களின்போது நிகழ்ந்தன,” என்று ஈஷா ஹோம் ஸ்கூலில் அவரது நாட்களை விருப்பமுடன் நினைவுகூர்ந்தவராகக் கூறுகிறார். “ஒருமுறை நாங்கள் மலைக்கு சென்றபோது, பலமான மழை ஆரம்பித்துவிட்டது. வகுப்பைத் தொடரமுடியாது என்ற வருத்தத்தில் நான் இருந்தபோது, என் ஆசிரியர் சட்டென்று ஒரு குடை விரித்துவிட, நாங்கள் அதன் கீழே நெருக்கி நின்றுகொண்டு இசை கற்றோம்.”
பல ஆண்டுகளாக, மா நடாஷா ஈஷா சம்ஸ்கிருதியில் மற்ற பாடங்களுடன், யோகா, களரிப்பயட்டு, கர்நாடக இசை மற்றும் பரத நாட்டியம் ஆகியவற்றை நுணுக்கமாக உள்வாங்கினார். இறுதியில், அவர் கர்நாடக சங்கீதத்தில் சிறப்புப் பயிற்சி பெறுவதற்கு தேர்வுசெய்தார்.
அவரது பயிற்சிப் பயணத்தின்போது, சத்குருவிடம் இருந்து அவர் நேரடி வழிகாட்டலையும் பெற்றார். வெகு வேகமாக முளைவிட்ட அவரது திறமையை மேலும் தூண்டுவதற்காக, ஈஷா சம்ஸ்கிருதிக்கு வெளியில் உள்ள வெவ்வேறு இசைக்கலைஞர்களின் மேற்பார்வையின் கீழும் கற்றுக்கொண்டு அவரது திறமைகளைப் பட்டை தீட்டுமாறு சத்குரு கேட்டுக்கொண்டார். கர்நாடக சங்கீத ஜாம்பவான் ஏ.எஸ். மூர்த்தி அவர்களிடமிருந்து புதிய பாடல்களைக் கற்றுக்கொள்வதில் ஐந்து மாதங்களுக்கும் மேலாக அவரது வகுப்புகளில் பங்கேற்று, இசையின் முறைப்படியான பயிற்சியை மா நடாஷா தீவிரப்படுத்தினார். அவர் 20 வருடங்களுக்கும் அதிகமாக கற்றுக்கொண்டு, 8 வருடங்களாக ஆசிரியப்பணியில் இருந்துகொண்டிருந்த நிலையில், எதிர்பாராத புதிய வாய்ப்பு ஒன்று அவர்முன் எழுந்தது.