விளையாட்டுத்தனம் எப்படி பக்திக்கு இட்டுச் செல்லும்? தியானத்திற்கும் அன்புக்கும் பொதுவாக இருப்பது எது? ஒருவர் எப்படி உண்மையான, நிலையான நிறைவைக் கண்டறிய முடியும்? தைப்பூசத்தன்று (18 ஜனவரி 2022) நிகழ்ந்த 'முழு நிலவில் அருள் மடியில்' தொடரின் இறுதி சத்சங்கத்தில் சத்குரு இந்த கேள்விகளுக்கும் இன்னும் பலவற்றுக்கும் பதிலளித்தார்.
சத்குரு: யோகாவின் எட்டு அங்கங்களில் அல்லது அஷ்டாங்க யோகாவில், தாரணம், தியானம், சமாதி ஆகியவையே இறுதி மூன்று நிலைகள் - நீங்கள் உங்கள் விழிப்புணர்வால் இதை அணுகுகிறீர்கள் என்றால். இதே அம்சங்களை நீங்கள் உணர்ச்சிமயமாக அணுகுகிறீர்கள் என்றால், அங்கே விளையாட்டுத்தனம், காதல் நிலை மற்றும் பக்தி நிலை இருக்கும். தாரணம் என்றால் அங்கே இரண்டு இருக்கிறது, இரண்டும் பரஸ்பரம் சீண்டிக்கொள்ளும் தன்மையில் இருக்கின்றன. நீங்கள் யாருடன் சீண்டி விளையாடினாலும், நீங்கள் என்ன பேசுகிறீர்கள், உங்கள் உடலசைவு மொழி எப்படி இருக்கிறது, நீங்கள் எப்படி அமர்கிறீர்கள், எப்படி நிற்கிறீர்கள் என எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும். எல்லாமே அளவு எடுத்தாற்போல இருக்க வேண்டும். ஒரு தவறான அசைவு தெரிந்தாலும் மொத்தமும் முடிந்தது. பொதுவாக இந்த சீண்டி விளையாடுவது என்பது குறுகிய காலமே நீடிக்கும். ஏனென்றால் யாராவது ஒருவர் எப்படியும் தவறான ஒரு அடியை எடுத்துவைத்து விடுவார்கள்.
காதல் நிலை என்பது இன்னும் சற்று நீண்ட காலம் நீடிக்கக்கூடியது, மேலும் இங்கே கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் சற்று குறைவு. இது தியானம் போன்றது. ஒருவர் மற்றொருவரிடத்தில் கரைகிறார். எது இரண்டாக இருந்ததோ, அது ஏதோ ஒரு விதத்தில் இப்போது ஒன்றாகிவிட்டது. உணர்ச்சி நிலையில் நிகழும்போது, நாம் அதை காதல் என்கிறோம். தியான நிலை என்பது தற்காப்பு அற்ற ஒரு நிலை, இதுவே காதலிலும் பொருந்தும். இங்கே பாதுகாப்பு என்பதே இல்லை. ஏனெனில் நீங்கள் தற்காப்பு இன்றி, மற்றவரின் விருப்பத்திற்கு உங்களையே விட்டுக் கொடுக்கும் தன்மையில் இருக்கிறீர்கள். இன்னொருவர் எப்படி விரும்புகிறாரோ, அப்படி நடந்து கொள்வதே உங்களுக்கு முக்கியமாக இருக்கிறது. இங்கே இணைந்திருக்கும் ஆனந்தம் இருந்தாலும், யாரோ ஒருவர் உங்கள் மீது மிதித்து செல்லும் வலியும் இருக்கிறது. பெரும்பாலான காதலர்கள் ஆரம்பத்தில் மட்டுமே ஆனந்தமாக இருக்கிறார்கள். அதற்கு பிறகு, பல வழிகளிலும் இது வலியான ஆனந்தமாகவே இருக்கிறது.
சமாதி என்றால் இரண்டும் இரண்டற கரைந்துவிட்டது. பக்தி நிலையிலும் இது உண்மையாகிறது. நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள், உங்கள் அனுபவத்திற்கு எது அடிப்படையாக இருக்கிறது என அனைத்தும் உங்களில்தான் நடக்கிறது, மற்றவரிடம் இல்லை. இதை நீங்கள் கரைத்துக்கொண்டால், அனைத்தும் கரைந்து விடுகிறது. மற்றொன்று என்பது இல்லாமல் போகிறது. அனைத்தும் ஒன்றாகி விடுகிறது.
காதலில் இருந்து பக்திக்கு நகரும்போது, மக்கள் திடீரென்று வினோதமானவர்களாக தெரிவார்கள். இங்கே ஈஷா யோக மையத்தில் பல 'வினோதமான' மக்களை நீங்கள் பார்க்கலாம். அவர்களை இரவு பகல் என வாரத்தின் ஏழு நாட்களும் வேலையில் ஈடுபடச் செய்தாலும், அவர்கள் அப்போதும் ஆனந்தமாகவே இருக்கிறார்கள். இதுதான் பக்தியின் இயல்பு. வெளிசூழ்நிலைகளால் இனியும் நீங்கள் யார் என்பதை நிர்ணயிக்க முடிவதில்லை. வாழ்வில் நிகழும் கொடுக்கல் வாங்கல்கள் எதுவும் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை நிர்ணயிக்க முடியாது. எனவே இந்த பன்னிரண்டு மாத விளையாட்டு போதும். நான் உங்களை சீண்டி விளையாடிக்கொண்டு இருந்தேன் என்று அர்த்தமில்லை. நான் உங்களை அறிந்திருந்தாலும் அறியவில்லை என்றாலும், உங்கள் முகத்தைப் பார்த்திருந்தாலும் பார்க்கவில்லை என்றாலும், நான் உங்களுக்கு அர்ப்பணிப்பாக இருக்கிறேன். என் முழு வாழ்க்கையுமே உங்களுக்காகத்தான். நீங்கள் தான் என்னை சீண்டி விளையாட்டு காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.
இத்துடன் சீண்டலை நிறுத்திக்கொண்டு வாழ்வின் அடுத்தடுத்த நிலைகளுக்கு நகர்வதற்கான நேரம் வந்துவிட்டது. அது இன்னும் சற்று சவாலாக இருக்கக்கூடும், ஆனால் அது இன்னும் ஆழமானது. மேற்புறத்தில் சிறு சவாலைகூட சந்திக்காமல் வாழ்வில் ஆழமான தன்மை கிட்டாது. இதுவே வாழ்வின் இயல்பு. உங்களுக்கு ஆழமான ஏதோ ஒன்று நிகழவேண்டும் என்றால், உங்கள் தலையைச் சுற்றி ஒளிவட்டம் வளர்க்க தேவையில்லை, அல்லது சிறப்பாக ஏதும் செய்யவும் தேவையில்லை. நீங்கள் வெறுமனே ஒரு மனிதராக இருக்க வேண்டும். உங்கள் உயிர்தன்மை என்பது உங்கள் உடல் மற்றும் மனதின் வரையறைக்கு உட்பட்டதல்ல - அது எங்கும் இருக்கிறது. உங்கள் மூக்கையும் வாயையும் மூடியபடி இரண்டு நிமிடங்கள் இருந்து பாருங்கள், உயிர் இன்னும் பெரிய அளவில் நிகழ்கிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் இங்கே வெறுமனே ஒரு உயிராக இருந்தால், ஆழமான விஷயங்கள் நிகழும்.
யோகாவில், உத்தராயண காலத்தை கைவல்ய பாதை என்கிறோம். பூமியின் வட கோளத்தில், குறிப்பாக மகர சங்கராந்தி அல்லது பொங்கல் பண்டிகை காலத்திலிருந்து, உயிர் உற்சாகம் அடைகிறது. இது ஏன் என்ற காரணம் அறியாமலே மனிதர்களும் அவ்விதமே ஆகிறார்கள். மக்கள் விழிப்புணர்வாக இருந்தால், அற்புதமான முறையில் இது நிகழும். இந்த பூமிக்கு ஏதோ ஒன்று நிகழும்போது, அது உங்களுக்கு இன்னும் அதிகமாகவே நிகழும், ஏனெனில் நீங்கள் தான் இந்த பூமியிலேயே மிக உணர்திறனுள்ள பாகம். ஒரு அழகான மெல்லிய மலரை விடவும் நீங்கள் இன்னும் பல மடங்கு நுட்பமாக, உணரக்கூடியவராக இருக்கிறீர்கள். இது உங்கள் அனுபவத்தில் வராமல் இருப்பதற்கு காரணம், உங்களிடம் இடைவிடாத மன ஓட்டம் நடக்கிறது. இது ஏனெனில், தற்போதைய நமது கல்விமுறை அறிவுசார்ந்த திறனின் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறது. நமக்குள் புத்திசாலித்தனத்தின் பல்வேறு பரிணாமங்கள் இருக்கிறது.
ஒரு சமயம், எனக்கு சுமார் பத்தொன்பது வயதிருக்கும்போது, என்னை மருத்துவராக்கி பார்க்க வேண்டும் என்ற முயற்சியை எனது தந்தை அப்போதுதான் கைவிட்டிருந்தார். எனவே எனக்கு பிடிக்கும் என்ற எதிர்பார்ப்புடன், பெங்களூருவில் பட்டு நெசவில் ஈடுபட்டிருந்த உறவினர் ஒருவரின் வீட்டிற்கு என்னை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் பட்டு நெய்தல், சாயம் ஏற்றுதல், அச்சு கோர்த்தல் என எல்லாமும் செய்தார்கள்.
எனக்கு எல்லாவற்றையும் அறிந்துகொள்வதில் ஆர்வம், எனவே அவர்களின் கைத்தறி பட்டு நெசவு கூடத்திற்கு சென்றேன். அங்கே, கிட்டத்தட்ட கல்வியறிவு அற்ற ஒருவர், கைத்தறியில் அமர்ந்திருந்தார். அவர் எதிரிலேயே அமர்ந்திருந்தும், இயல்பாகவே நுட்பமான பார்வை திறம் இருந்தும், அவர் என்ன செய்கிறார் என்பதை அறிந்துகொள்வதற்கு நான் முயற்சி செய்ய வேண்டியிருந்தது. அவர் நெசவு செய்து கொண்டிருந்த பட்டு துணியில் முதலில் ஒரு பூ, பிறகு ஒரு மயில், அடுத்து ஒரு பச்சை கிளி என வரிசையாக தோன்றியது. அவரிடம் எந்த ஒரு அச்சு பிரதியோ, அவர் உருவாக்கிக் கொண்டிருந்த வடிவம் உள்ள காகிதமோ, கம்பியூட்டரோ எதுவுமே இல்லை. துல்லியமான வடிவியலோடு சித்திர உருவங்களை அவர் பட்டுத்துணியில் சாதாரணமாக உருவாக்கிக் கொண்டிருந்தார்.
எனவே சிந்திப்பது மட்டுமே புத்திசாலித்தனம் அல்ல. சிந்தனை என்பது புத்திசாலித்தனத்தின் ஆரம்ப நிலை. ஏனென்றால், இது நீங்கள் சேகரித்துள்ள மிக குறைவான தகவல்களை மட்டுமே முழுவதுமாக நம்பியிருக்கிறது. அந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு சாத்தியமுள்ள மாறுபாடுகள் மற்றும் கலவையான எண்ணங்களை உருவாக்கியபடி, வாழ்வில் புதிதாக ஏதோ ஒரு பரிணாமத்தில் நுழைந்ததாக நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள். ஆனால் நீங்கள் உண்மையில் அதே விஷயங்களையே மறுசுழற்சி செய்கிறீர்கள். பொருள்தன்மையில் எது இருந்தாலும் அதை மறுசுழற்சி செய்வது நல்லது, ஏனெனில் வாழ்வில் பொருள்தன்மையிலான அனைத்தும் வரையறைக்கு உட்பட்டவை. ஆனால் ஒரு மனிதராக இருப்பது என்றால், நீங்கள் பொருள்தன்மையைக் கடந்தவராக இருக்கிறீர்கள். அந்த பரிணாமம் மறுசுழற்சி செய்யப்பட தேவையில்லை. உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அது புதிய தளங்களில் கால்பதித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
நீங்கள் மறுசுழற்சி செய்கிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு தேங்கிய உயிராகிவிட்டீர்கள் என்றே பொருள். நீங்கள் தேங்கி நிற்கிறீர்கள் என்றால், உங்களிடம் துர்நாற்றம் கிளம்பும். திரும்பத் திரும்ப அதே விஷயங்களை செய்வது உங்களுக்கு ஒருபோதும் நிறைவைத் தராது. நீங்கள் ஏதோ ஒரு சிகரத்தை அடைந்துவிட்டீர்கள் என்பதாலோ, அதற்கு மேலே செல்ல இனி வேறு எந்த இடமும் இல்லை என்பதாலோ உங்களுக்கு நிறைவு ஏற்படாது; தொடர்ந்து புதிய புதிய பரப்பில் நீங்கள் காலடி வைத்துக் கொண்டிருந்தால் உங்களுக்கு நிறைவு ஏற்படும். தியானம் என்பது நீங்கள் கூரையை அடைந்து விட்டீர்கள் என்று அல்ல; இது வெறுமே நீங்கள் எல்லையற்றவராக மாறிவிட்டீர்கள் என்பதையே குறிக்கிறது. நீங்கள் தொடர்ந்து பரிணமிக்கும் போதுதான் நிறைவை உணர்கிறீர்கள், ஏதோ ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்து அங்கேயே நின்றுவிடுவதால் அல்ல.
பொருள்தன்மையிலானது எதுவாக இருந்தாலும், அது ஒரு எல்லைக்கு உட்பட்டதாகவே இருக்க முடியும். பொருள்தன்மையின் இயல்பு அப்படிப்பட்டது. நாம் உங்கள் உடலைப் பற்றி மட்டும் பேசவில்லை. நீங்கள் கையாள்வது அனைத்துமே பொருள்தன்மையானதே. அதை முடிந்தளவு குறைந்தபட்சமாக வைத்துக்கொண்டு மறுசுழற்சி செய்வது நல்லது தான். ஆனால் விழிப்புணர்வு என்று வரும்போது, அது மறுசுழற்சி அல்ல - இது தொடர்ந்து நிகழும் தேடுதல் பயணம். ஒவ்வொரு கணமும் நீங்கள் புதிய தளங்களில் காலடி வைத்துக் கொண்டிருந்தால், பிறகு நீங்கள் நிறைவாக இருப்பீர்கள்.